Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“புத்திசாலியாக நடந்துகொண்ட உன்னைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!”

“புத்திசாலியாக நடந்துகொண்ட உன்னைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!”

தான் சந்தித்த ஒரு பெண்ணைப் புகழ்ந்து, பூர்வ இஸ்ரவேலைச் சேர்ந்த தாவீது சொன்ன வார்த்தைகள்தான் இவை! அவளுடைய பெயர் அபிகாயில். தாவீது ஏன் அவளைப் புகழ்ந்தார்? அவளிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

சவுல் ராஜாவிடமிருந்து தப்பித்து ஓடிய சமயத்தில்தான், தாவீது அபிகாயிலைச் சந்தித்தார். இவள் நாபால் என்ற ஒரு பெரிய பணக்காரனின் மனைவி. தெற்கு யூதாவைச் சேர்ந்த மலைப்பகுதியில் அவனுக்கு நிறைய மந்தைகள் இருந்தன. தாவீதும் அவருடைய ஆட்களும், நாபாலின் மேய்ப்பர்களுக்கும் மந்தைகளுக்கும் “பாதுகாப்பான மதில்போல்” இருந்தார்கள். பிற்பாடு, தாவீது தன் ஆட்களை நாபாலிடம் அனுப்பி, சாப்பிடுவதற்கு அவனால் “முடிந்ததை” கொடுத்தனுப்பும்படி கேட்டார். (1 சா. 25:8, 15, 16) தாவீதும் அவருடைய ஆட்களும் நாபாலின் மந்தைகளைக் கவனித்துக்கொண்டதை வைத்துப் பார்க்கும்போது, தாவீது கேட்டது நியாயமற்றது அல்ல!

ஆனால் தன் பெயருக்கு ஏற்றபடி நாபால், நடந்துகொண்டான். நாபால் என்பதற்கு “புத்தியில்லாதவன்” அல்லது “முட்டாள்” என்று அர்த்தம். தாவீது தயவோடு கேட்டதை அவன் கொடுக்கவில்லை. கடுமையாகவும் அவமானப்படுத்தும் விதத்திலும் அவர்களுக்குப் பதில் சொல்லி அனுப்பினான். அவன் இப்படி முரட்டுத்தனமாகவும், நியாயமற்ற விதத்திலும் பதில் சொன்னதால், தாவீது அவனைத் தண்டிக்க முடிவு செய்தார். அவனுடைய முட்டாள்தனத்துக்கு அவனும் அவனுடைய வீட்டாரும் பதில் சொல்ல வேண்டியிருந்தது!—1 சா. 25:2-13, 21, 22.

அவசரப்பட்டு எடுத்த அந்த முடிவால் வரப்போகிற மிக மோசமான விளைவுகளைப் பற்றி அபிகாயில் உணர்ந்திருந்ததால், அவள் தைரியமாகச் செயல்பட்டாள். யெகோவாவோடு தாவீதுக்கு இருக்கும் பந்தத்தின் அடிப்படையில், தாவீதிடம் அவள் மரியாதையோடு கேட்டுக்கொண்டாள். அதோடு, அடுத்த ராஜாவான தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் ஏராளமான உணவையும் கொடுத்தாள். யெகோவாவுக்கு முன்னால் தான் குற்றவாளியாக ஆகாதபடி, அவர்தான் அபிகாயிலை அனுப்பி தன்னைப் பாதுகாத்தார் என்பதைத் தாவீது புரிந்துகொண்டார். “புத்திசாலியாக நடந்துகொண்ட உன்னைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்! கொலைப்பழிக்கு ஆளாகாதபடிக்கும் பழிக்குப்பழி வாங்காதபடிக்கும் இன்று என்னைத் தடுத்த உன்னை அவர் ஆசீர்வதிக்கட்டும்!” என்று அபிகாயிலிடம் தாவீது சொன்னார்.—1 சா. 25:18, 19, 23-35.

நாம் நாபாலைப் போல இருக்க விரும்ப மாட்டோம்; மற்றவர்கள் நமக்குச் செய்த நன்மைக்காக நன்றியோடு இருப்போம். அதோடு, மோசமான சூழ்நிலை வருமென்று தெரிந்தால், அதைச் சமாளிக்க நம்மால் முடிந்ததையெல்லாம் செய்வோம். “எனக்கு நல்ல புத்தியையும் அறிவையும் கொடுங்கள்” என்று சங்கீதக்காரன் கடவுளிடம் கேட்டது போலவே நாமும் கேட்போம்.—சங். 119:66.

நம் செயல்களில் பளிச்சிடும் ஞானத்தை அல்லது நல்ல புத்தியை மற்றவர்கள் கவனிப்பார்கள். அப்போது, மற்றவர்கள் அதைப் பற்றி நம்மிடம் வெளிப்படையாகச் சொல்கிறார்களோ இல்லையோ, அவர்கள் தாவீதைப் போலவே இப்படி உணர்வார்கள்: “புத்திசாலியாக நடந்துகொண்ட உன்னைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!”