Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

எருசலேம் ஆலயத்தில் மிருகங்களை விற்றுக்கொண்டிருந்த வியாபாரிகளை இயேசு ‘கொள்ளைக்காரர்கள்’ என்று சொன்னது ஏன் சரியாக இருக்கிறது?

மத்தேயு சுவிசேஷத்தில் இப்படி வாசிக்கிறோம்: “இயேசு ஆலயத்துக்குள் போய், அங்கே விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டும் இருந்த எல்லாரையும் வெளியே துரத்தினார்; காசு மாற்றுபவர்களின் மேஜைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். பின்பு அவர்களிடம், “‘என் வீடு ஜெப வீடு என்று அழைக்கப்படும்’ என எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் அதைக் கொள்ளைக்காரர்களின் குகையாக்குகிறீர்கள்” என்று சொன்னார்.”—மத். 21:12, 13.

தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக மிக அதிகமான விலைக்கு விற்றதன் மூலம் ஆலயத்திலிருந்த வியாபாரிகள் அநியாயமாக நடந்துகொண்டார்கள் என்பதைச் சரித்திரம் காட்டுகிறது. உதாரணத்துக்கு, புறாக்கள் மிக மலிவான விலைக்குக் கிடைத்ததால், இவற்றை வாங்கித்தான் ஏழைகள் பலி செலுத்தினார்கள். ஆனால், முதல் நூற்றாண்டில் 2 புறாக்கள் ஒரு தங்க தினாருக்கு விற்கப்பட்டதாக பூர்வகால யூத புத்தகங்கள் சொல்கின்றன. ஒரு தங்க தினாரைச் சம்பாதிக்க ஒருவர் 25 நாட்கள் வேலை செய்ய வேண்டும்! புறாக்கள் மிகவும் அதிகமான விலைக்கு விற்கப்பட்டதால் இனிமேலும் ஏழைகளால் அதை வாங்க முடியவில்லை. (லேவி. 1:14; 5:7; 12:6-8) இதைப் பார்த்து சைமன் பென் கமாலியேல் என்ற ரபீ மிகவும் கோபப்பட்டு, யூதர்கள் செலுத்த வேண்டிய பலிகளின் எண்ணிக்கையைக் குறைத்தார். உடனே, 2 புறாக்களின் விலை ஒரு தங்க தினாரில் நூறில் ஒரு பங்காகக் குறைந்தது.

ஆலயத்தில் இருந்த வியாபாரிகள் பேராசை பிடித்தவர்களாக இருந்தார்கள், தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கொள்ளையடித்தார்கள். அதனால்தான், இயேசு அவர்களை ‘கொள்ளைக்காரர்கள்’ என்று சொன்னது சரியாக இருக்கிறது.