1 சாமுவேல் 25:1-44

25  சில காலம் கழித்து சாமுவேல்+ இறந்துபோனார். இஸ்ரவேலர்கள் எல்லாரும் ஒன்றுகூடி அவருக்காகத் துக்கம் அனுசரித்தார்கள். ராமாவிலிருந்த அவருடைய வீட்டுக்குப்+ பக்கத்தில் அவரை அடக்கம் செய்தார்கள். அதன்பின், தாவீது பாரான் வனாந்தரத்துக்குப் போனார்.  மாகோன்+ நகரத்திலே ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். அவன் கர்மேலில்*+ தொழில் செய்துவந்தான். அவனுக்கு 3,000 செம்மறியாடுகளும் 1,000 வெள்ளாடுகளும் இருந்தன. அந்தச் சமயத்தில் அவன் கர்மேலில் தன்னுடைய செம்மறியாடுகளுக்கு மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.  அவன் ஒரு காலேபியன்.+ அவன் பெயர் நாபால்,+ அவனுடைய மனைவி பெயர் அபிகாயில்.+ அவள் புத்திசாலி, அழகானவள். ஆனால், அவளுடைய கணவன் ஒரு முரடன், ரொம்ப மோசமானவன்.+  நாபால் தன்னுடைய செம்மறியாடுகளுக்கு மயிர் கத்தரித்துக்கொண்டிருப்பதாக வனாந்தரத்திலிருந்த தாவீது கேள்விப்பட்டார்.  அதனால், தன்னுடைய ஆட்களில் பத்துப் பேரைக் கூப்பிட்டு, “நீங்கள் கர்மேலுக்குப் போய் நாபாலைப் பார்த்து, அவரை நான் நலம் விசாரித்ததாகச் சொல்லுங்கள்.  பின்பு அவரிடம், ‘நீங்கள் நீடூழி வாழ வேண்டும்! நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷமாக வாழ வேண்டும்! உங்களுடைய சொத்து பெருக வேண்டும்!  இப்போது உங்களுடைய ஆடுகளுக்கு நீங்கள் மயிர் கத்தரிப்பதாகக் கேள்விப்பட்டேன். உங்களுடைய மேய்ப்பர்கள் எங்களோடு இருந்தபோது, நாங்கள் அவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை.+ கர்மேலில் அவர்கள் இருந்த நாளெல்லாம் அவர்களுக்குச் சொந்தமான எதுவும் தொலைந்துபோகவில்லை.  வேண்டுமானால், உங்களுடைய ஆட்களிடமே கேட்டுப் பாருங்கள், அவர்கள் சொல்வார்கள். நீங்கள் எல்லாரும் சந்தோஷமாக இருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய ஆட்கள் உங்களிடம் வந்திருக்கிறார்கள். அதனால் கொஞ்சம் கருணை காட்டி, உங்கள் ஊழியர்களாகிய இவர்களுக்கும் உங்கள் மகன் தாவீதுக்கும் உங்களால் முடிந்ததைத் தயவுசெய்து கொடுத்தனுப்புங்கள்’+ என்று சொல்லுங்கள்” என்றார்.  அதன்படியே, தாவீதின் ஆட்கள் நாபாலிடம் போய் தாவீது சொல்லி அனுப்பிய எல்லாவற்றையும் சொன்னார்கள். 10  உடனே நாபால் அவர்களிடம், “யார் அந்த தாவீது? யார் அந்த ஈசாயின் மகன்? இந்தக் காலத்தில் எத்தனையோ வேலைக்காரர்கள் எஜமானைவிட்டு ஓடிப்போய்விடுகிறார்கள்.+ 11  நான் எதற்காக என்னுடைய ரொட்டியையும், என்னுடைய தண்ணீரையும், என் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கிற ஆட்களுக்காக வெட்டி வைத்த இறைச்சியையும் எடுத்து ஊர் பேர் தெரியாத ஆட்களுக்கெல்லாம் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டான். 12  அதனால், தாவீதின் ஆட்கள் திரும்பிப் போய் அவரிடம் இதையெல்லாம் சொன்னார்கள். 13  உடனே, தாவீது தன்னுடைய ஆட்களிடம், “எல்லாரும் வாளை இடுப்பில் கட்டிக்கொள்ளுங்கள்!”+ என்றார். அதனால், அவர்கள் எல்லாரும் வாளை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்கள். தாவீதும் தன்னுடைய வாளை இடுப்பில் கட்டிக்கொண்டார். சுமார் 400 பேர் தாவீதோடு போனார்கள், 200 பேர் மூட்டைமுடிச்சுகளைக் காவல் காப்பதற்காக இருந்துவிட்டார்கள். 14  இதற்கிடையில், நாபாலின் வேலைக்காரர்களில் ஒருவன் அவனுடைய மனைவி அபிகாயிலிடம் போய், “நம்முடைய எஜமானுக்கு வாழ்த்து செய்தி சொல்ல தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பியிருந்தார். ஆனால், இவர் அவர்களைக் கண்டபடி திட்டி அனுப்பிவிட்டார்.+ 15  நாங்கள் வெளிநிலங்களில் இருந்தபோது அந்த ஆட்கள் எங்களுக்கு ரொம்ப ஒத்தாசையாக இருந்தார்கள். எங்களுக்கு ஒரு கெடுதலும் செய்யவில்லை. நாங்கள் ஒன்றாக இருந்த நாளெல்லாம் எங்களுக்குச் சொந்தமான எதுவும் தொலைந்துபோகவில்லை.+ 16  நாங்கள் ஆடுகளை மேய்த்துவந்த சமயம் முழுவதும் அவர்கள் ராத்திரி பகலாக எங்களைச் சுற்றிப் பாதுகாப்பான மதில்போல் இருந்தார்கள். 17  இப்போது என்ன செய்யப்போகிறீர்கள் என்று முடிவுசெய்யுங்கள். ஏனென்றால், நம் எஜமானுக்கும் நம் எல்லாருக்கும் பெரிய ஆபத்து வந்துகொண்டிருக்கிறது!+ நம் எஜமான் ஒன்றுக்கும் உதவாதவர்,+ அவரிடம் யாரும் வாய் திறக்கவே முடியாது” என்று சொன்னான். 18  உடனே, அபிகாயில்+ 200 ரொட்டிகளையும், இரண்டு பெரிய ஜாடி நிறைய திராட்சமதுவையும், ஐந்து ஆடுகளின் இறைச்சியையும், ஐந்து படி* வறுத்த தானியங்களையும், 100 திராட்சை அடைகளையும், 200 அத்திப்பழ அடைகளையும் அவசர அவசரமாக எடுத்து கழுதைகள்மேல் ஏற்றினாள்.+ 19  பின்பு, தன்னுடைய வேலைக்காரர்களிடம், “நீங்கள் முன்னால் போங்கள், நான் உங்களுக்குப் பின்னால் வருகிறேன்” என்றாள். ஆனால், இதைப் பற்றி அவளுடைய கணவன் நாபாலிடம் அவள் எதுவும் சொல்லவில்லை. 20  அவள் ஒரு கழுதைமேல் ஏறி, மலையின் மறைவில் வந்துகொண்டிருந்தாள். அப்போது, தாவீதும் அவருடைய ஆட்களும் எதிரில் வந்துகொண்டிருந்தார்கள். கடைசியில், அவள் அவர்களைச் சந்தித்தாள். 21  அதற்கு முன்புதான் தாவீது தன் ஆட்களிடம், “நான் அந்த ஆளுக்குச் செய்ததெல்லாம் வீண். அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் வனாந்தரத்தில் காவல் காத்தேன். அவனுக்குச் சொந்தமான எதுவும் தொலைந்துபோகவில்லை.+ நான் அவனுக்கு நல்லது செய்தும் அவன் எனக்குக் கெட்டதுதான் செய்திருக்கிறான்.+ 22  நாளை விடிவதற்குள் அவனுடைய ஆட்களில் ஒருவனைக்கூட உயிரோடு விட்டுவைக்க மாட்டேன். அப்படியே நான் விட்டுவைத்தாலும் கடவுள் என் எதிரிகளுக்கு* கடுமையான தண்டனை கொடுக்கட்டும்” என்று சொல்லியிருந்தார். 23  தாவீதைப் பார்த்தவுடன் அபிகாயில் கழுதையைவிட்டு அவசர அவசரமாக இறங்கி, அவருக்கு முன்னால் போய் மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து வணங்கினாள். 24  பின்பு அவருடைய காலில் விழுந்து, “என் எஜமானே, இந்தப் பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்களிடம் பேச இந்த அடிமைப் பெண்ணை அனுமதியுங்கள், இந்த அடிமைப் பெண் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். 25  என் எஜமானே, ஒன்றுக்கும் உதவாத அந்த நாபால்+ பேசியதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நாபால்* என்ற பெயருக்கு ஏற்ற மாதிரிதான் அவர் நடக்கிறார். அவர் புத்தியில்லாதவர். எஜமானே, உங்கள் ஆட்கள் வந்ததை இந்த அடிமைப் பெண் பார்க்கவில்லை. 26  எஜமானே, உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* உங்கள் உயிர்மேல் ஆணையாகவும் சொல்கிறேன்,* நீங்கள் கொலைப்பழிக்கு*+ ஆளாகாதபடிக்கும் பழிக்குப்பழி வாங்காதபடிக்கும் யெகோவாதான் உங்களைத் தடுத்திருக்கிறார்.+ உங்களுடைய எதிரிகளும் உங்களுக்குக் கெடுதல் செய்ய நினைக்கிறவர்களும் நாபாலைப் போல ஆகட்டும். 27  எஜமானே, இந்த அடிமைப் பெண் கொண்டுவந்த அன்பளிப்பைத்+ தயவுசெய்து ஏற்றுக்கொண்டு, உங்களுடைய ஆட்களுக்குக்+ கொடுங்கள். 28  தயவுசெய்து இந்த அடிமைப் பெண் செய்த குற்றத்தை மன்னித்துவிடுங்கள். என் எஜமானாகிய உங்கள் வம்சத்துக்கு யெகோவா என்றென்றும் ஆட்சியைக் கொடுப்பார்.*+ ஏனென்றால், நீங்கள் யெகோவாவின் போர்களைத் தலைமைதாங்கி நடத்துகிறீர்கள்,+ இந்த நாள்வரை நீங்கள் எந்தக் கெட்ட காரியத்தையும் செய்தது இல்லை.+ 29  எஜமானே, உங்களைப் பிடித்துக் கொன்றுபோட யாராவது வந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுடைய உயிரைத் தன்னுடைய பொக்கிஷப் பையில் வைத்துப் பாதுகாப்பார். ஆனால் எதிரிகளின் உயிரை, கவணில் வைத்து எறியும் கல்போல் எறிந்துவிடுவார். 30  எஜமானே, யெகோவா உங்களுக்குத் தந்த அருமையான வாக்குறுதிகளை நிறைவேற்றி உங்களை இஸ்ரவேலின் தலைவராக நியமிக்கும்போது,+ 31  காரணமில்லாமல் இரத்தம் சிந்தியதற்காகவும் பழிவாங்கியதற்காகவும்+ நீங்கள் வருத்தப்படவோ வேதனைப்படவோ வேண்டியிருக்காது. எஜமானே, யெகோவா உங்களை ஆசீர்வதிக்கும்போது, இந்த அடிமைப் பெண்ணை நினைத்துக்கொள்ளுங்கள்” என்றாள். 32  அப்போது தாவீது அபிகாயிலிடம், “இன்றைக்கு உன்னை என்னிடம் அனுப்பிய இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும்! 33  புத்திசாலியாக நடந்துகொண்ட உன்னைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்! கொலைப்பழிக்கு+ ஆளாகாதபடிக்கும் பழிக்குப்பழி வாங்காதபடிக்கும் இன்று என்னைத் தடுத்த உன்னை அவர் ஆசீர்வதிக்கட்டும்! 34  நீ உடனே என்னிடம் புறப்பட்டு வராமல் இருந்திருந்தால்,+ காலைக்குள் நாபாலின் ஆட்கள் அத்தனை பேரையும் வெட்டிச் சாய்த்திருப்பேன்.+ உனக்கு எந்தக் கெடுதலும் செய்யாதபடி என்னைத் தடுத்த+ இஸ்ரவேலின் உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாக இதைச் சொல்கிறேன்”* என்றார். 35  பின்பு, அவள் கொண்டுவந்ததை ஏற்றுக்கொண்டு, “நிம்மதியாக உன் வீட்டுக்குப் போ. நீ சொன்னதைக் கேட்டு, உன் விருப்பப்படியே செய்கிறேன்” என்றார். 36  அதன்பின், அபிகாயில் நாபாலிடம் திரும்பிப்போனாள். அப்போது, அவன் தன்னுடைய வீட்டில் குஷியாக ராஜபோக விருந்து சாப்பிட்டுக்கொண்டும், போதை தலைக்கேறும் அளவுக்குக் குடித்துக்கொண்டும் இருந்தான். அதனால், அடுத்த நாள் காலைவரை அவள் எதைப் பற்றியும் அவனிடம் சொல்லவில்லை. 37  காலையில், அவனுக்குப் போதை தெளிந்த பிறகு அவள் எல்லா விஷயங்களையும் சொன்னாள். அப்போது, அவன் இதயம் செத்தவனுடைய இதயத்தைப் போல ஆனது, ஒரு கல்லைப் போல அவன் அசையாமல் இருந்தான். 38  கிட்டத்தட்ட பத்து நாட்கள் கழித்து யெகோவா நாபாலைத் தாக்கினார், அவன் செத்துப்போனான். 39  நாபால் செத்துப்போன விஷயத்தை தாவீது கேள்விப்பட்டதும், “யெகோவாவுக்கு நன்றி, என்னை அவமானப்படுத்திய நாபாலைத்+ தண்டித்து எனக்கு நீதி வழங்கியிருக்கிறார்.+ அவருடைய ஊழியனாகிய நான் எந்தத் தவறும் செய்யாதபடி தடுத்திருக்கிறார்.+ நாபால் செய்த கெடுதல் அவனுக்கே திரும்பி வரும்படி யெகோவா செய்துவிட்டார்” என்றார். பின்பு, அபிகாயிலைக் கல்யாணம் செய்துகொள்ள அவளுடைய சம்மதத்தைக் கேட்டு வரும்படி ஆட்களை அனுப்பினார். 40  அவர்கள் கர்மேலில் இருந்த அபிகாயிலிடம் வந்து, “தாவீது எங்களை அனுப்பினார், உங்களைக் கல்யாணம் செய்துகொள்ள அவர் ஆசைப்படுகிறார்” என்றார்கள். 41  அவள் உடனடியாக எழுந்து மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து, “இதோ, உங்கள் அடிமைப் பெண்! என் எஜமானுடைய ஊழியர்களின் பாதங்களைக் கழுவக்கூட+ நான் தயார்” என்றாள். 42  பின்பு, அபிகாயில்+ சட்டென்று எழுந்து கழுதைமேல் ஏறிப்போனாள், அவளுடைய பணிப்பெண்களில் ஐந்து பேர் அவளுக்குப் பின்னால் நடந்துபோனார்கள். அவள் தாவீதின் ஆட்களுடன் போய், அவருக்கு மனைவியானாள். 43  தாவீது ஏற்கெனவே யெஸ்ரயேலைச்+ சேர்ந்த அகினோவாமைக்+ கல்யாணம் செய்திருந்தார். இந்த இரண்டு பெண்களும் அவருக்கு மனைவிகளாக இருந்தார்கள்.+ 44  ஆனால், சவுல் தன்னுடைய மகளும் தாவீதின் மனைவியுமாகிய மீகாளை+ காலீமைச் சேர்ந்த லாயீசின் மகன் பல்த்திக்குக்+ கொடுத்திருந்தார்.

அடிக்குறிப்புகள்

இது யூதாவில் இருந்த ஒரு நகரம், கர்மேல் மலை அல்ல.
நே.மொ., “ஐந்து சியா அளவு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அல்லது, “எனக்கு.”
அர்த்தம், “புத்தியில்லாதவன்; முட்டாள்.”
வே.வா., “இரத்தப்பழிக்கு.”
வே.வா., “நீங்கள் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
நே.மொ., “யெகோவா என் எஜமானுக்கு நிரந்தரமான வீட்டைக் கண்டிப்பாகக் கட்டுவார்.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாக இதைச் சொல்கிறேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா