Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—மைக்ரோனேசியாவில்

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—மைக்ரோனேசியாவில்

கேத்ரின் அமெரிக்காவில் வளர்ந்தார், 16 வயதில் ஞானஸ்நானம் எடுத்தார். ஆர்வமாக ஊழியம் செய்தார்; ஆனால், நிறைய பேர் சத்தியத்தைக் கேட்கவில்லை. “கடவுள பத்தி தெரிஞ்சிக்கணும்னு ஜெபம் செஞ்சவங்கள பத்தி நிறைய அனுபவங்களை படிச்சிருக்கேன். அந்த மாதிரி ஒருத்தர ஊழியத்துல சந்திக்கணும்னு ரொம்ப நாளா ஆசப்பட்டேன். ஆனா அந்த ஆசை நிறைவேறவே இல்லை” என்று கேத்ரின் சொல்கிறார்.

கேத்ரின் இருந்த ஊரில் நிறைய பேர் சத்தியத்தை ஆர்வமாகக் கேட்கவில்லை. அதனால், வேறு ஊருக்குக் குடிமாறிப் போக நினைத்தார். ஆனால், அவர் அப்பா-அம்மாவை ஒரேயொரு முறை மட்டுமே பிரிந்திருந்தார்; அதுவும் இரண்டு வாரங்களுக்குதான். அந்த இரண்டு வாரமும் வீட்டு ஞாபகம் அவரை வாட்டியது. அதனால், அப்பா-அம்மாவை விட்டு எப்படிப் பிரிந்திருப்பது என கவலைப்பட்டார். இருந்தாலும் வேறு இடத்திற்குப் போக முடிவெடுத்தார். ஏனென்றால், நிறைய பேருக்கு சத்தியத்தைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. எந்த இடத்திற்குப் போவது என்று விசாரிக்க ஆரம்பித்தார்; கடைசியாக, குவாம் கிளை அலுவலகத்திற்குக் கடிதம் எழுதினார். ஜூலை 2007-ல், பசிபிக் பெருங்கடலில் இருக்கும் சைபான் தீவுக்குச் சென்றார். அப்போது அவருக்கு 26 வயது. அந்தத் தீவு அவருடைய ஊரிலிருந்து சுமார் 10,000 கி. மீ. (6,000 மைல்) தூரத்தில் இருந்தது. அவருடைய ரொம்ப நாள் ஆசை அங்கு போனபிறகு நிறைவேறியதா?

இருவரின் ஜெபத்திற்குப் பதில்

புதிய சபைக்குப் போன கொஞ்ச காலத்திலேயே, டாரிஸ் (சுமார் 45 வயது) என்ற பெண்ணுக்கு கேத்ரின் பைபிள் படிப்பு ஆரம்பித்தார். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து முதல் மூன்று அதிகாரங்களை நடத்திய பிறகு அவருடைய மனதில் ஒரு கவலை வந்தது. கேத்ரின் சொல்கிறார்: “டாரிஸ் ரொம்ப அருமையா படிச்சாங்க. ஆனா, நான் இதுவரைக்கும் யாருக்கும் தொடர்ந்து பைபிள் படிப்பு நடத்துனதே இல்லை. என்னால அவங்களுக்கு ஒழுங்கா படிப்பு நடத்த முடியாதோனு பயந்தேன். அதனால, அனுபவமுள்ள ஒரு சகோதரி டாரிஸுக்கு படிப்பு நடத்துனா நல்லா இருக்கும்னு நினைச்சேன்.” டாரிஸுக்கு படிப்பு நடத்த சரியான நபரைக் காட்டும்படி கேத்ரின் யெகோவாவிடம் ஜெபம் செய்தார். டாரிஸிடமும் விஷயத்தைச் சொல்ல நினைத்தார்.

“அதப்பத்தி நான் சொல்றதுக்கு முன்னாடி, டாரிஸ் அவங்களுக்கு இருந்த ஒரு பிரச்சினைய பத்தி என்கிட்ட சொன்னாங்க. அதேமாதிரி ஒரு பிரச்சினை எனக்கு வந்தப்போ அதை சமாளிக்க யெகோவா எப்படி உதவினாருனு டாரிஸ்கிட்ட சொன்னேன்.” அதைக் கேட்டதும் டாரிஸ் ரொம்ப சந்தோஷப்பட்டார். டாரிஸ் கேத்ரினிடம்  சொன்னார்: “யெகோவா உன் மூலமாதான் எனக்கு உதவி செய்றார். நீ என் வீட்டுக்கு முதல்தடவ வந்தப்போ நான் பைபிள் படிச்சிட்டிருந்தேன். பைபிள பத்தி கத்துக்கொடுக்க யாரையாவது அனுப்புங்கனு கடவுள்கிட்ட அழுது ஜெபம் செஞ்சேன். அப்பதான் நீ கதவ தட்டுன. உன் மூலமா யெகோவா என்னோட ஜெபத்துக்கு பதில் கொடுத்தார்.” கேத்ரின் சொல்கிறார்: “டாரிஸ் சொன்னது என்னோட ஜெபத்துக்கு கிடைச்ச பதில்னு புரிஞ்சுகிட்டேன். அந்த படிப்பை நானே தொடர்ந்து நடத்தணும்னு யெகோவாவே என்கிட்ட சொன்ன மாதிரி இருந்தது.” இதைச் சொல்லும்போது கேத்ரினின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது.

2010-ல் டாரிஸ் ஞானஸ்நானம் எடுத்தார். இப்போது நிறைய பைபிள் படிப்புகளை நடத்துகிறார். கேத்ரின் சொல்கிறார்: “என்னோட ரொம்ப நாள் ஆசை நிறைவேறினத நினைச்சு சந்தோஷப்படுறேன்.” கேத்ரின் இப்போது பசிபிக் தீவுகளில் ஒன்றான கோஸ்ரே தீவில் விசேஷ பயனியராகச் சேவை செய்கிறார்.

சவால்களைச் சமாளிப்பது சுலபம்

மைக்ரோனேசியாவில் ஊழியம் செய்ய ஆட்கள் தேவைப்படுவதால் மற்ற நாடுகளிலிருந்து நிறைய சகோதர சகோதரிகள் (19-க்கும் 79-க்கும் இடைப்பட்ட வயதினர்) அங்கு சென்று சேவை செய்கிறார்கள். அங்கு போனதைப் பற்றி இவர்கள் என்ன நினைக்கிறார்கள்? 2006-ல் குவாம் தீவுக்கு மாறிச் சென்ற 19 வயது எரிக்கா சொல்வதைக் கவனியுங்கள்: “சில இடங்கள்ல மக்கள் சத்தியத்தை ஆர்வமா கேட்குறாங்க. அந்த மாதிரி இடத்துல பயனியர் செய்யும்போது கிடைக்கிற சந்தோஷமே தனிதான். இந்த பாக்கியத்த கொடுத்த யெகோவாவுக்கு கோடி நன்றி. இதுல கிடைக்கிற திருப்தியும் சந்தோஷமும் வேற எதுலயும் கிடைக்காது.” இப்போது, மார்ஷல் தீவுகளில் ஒன்றான ஈபை தீவில் எரிக்கா விசேஷ பயனியராக இருக்கிறார். இப்படி மாறிச் செல்வதில் நிறைய சவால்கள் இருக்கின்றன. அதில் மூன்று சவால்களை இப்போது பார்க்கலாம். மைக்ரோனேசியாவுக்குச் சென்றவர்கள் அவற்றை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம்.

எரிக்கா

வாழும் விதம்: 22 வயதான சைமன் 2007-ல் பாலௌ தீவுக்கு மாறிச் சென்றார். இங்கிலாந்தில் அவருக்குக் கிடைத்த சம்பளத்தைவிட அங்கு ரொம்பக் குறைவாகத்தான் கிடைத்தது. “இப்போ நான் நினைச்சதை எல்லாம் வாங்குறதில்லை. இப்பெல்லாம், சமைக்கிறதுக்கு என்ன வாங்கறதுனு முன்னாடியே யோசிக்கிறேன். குறைஞ்ச விலைல எங்க கிடைக்கும்னு தேடிப்பாத்து வாங்கறேன். வீட்ல ஏதாவது ரிப்பேர் ஆயிடுச்சினா, செகென்ட்-ஹேன்ட் பொருளை வாங்கி, சரி பண்றதுக்கு யார்கிட்டயாவது உதவி கேட்பேன்.” இந்த எளிமையான வாழ்க்கை அவருக்கு எப்படி உதவியது? “இப்படி வாழ்றதால முக்கியமான விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்க முடியுது. இருக்கிறத வச்சு வாழ கத்துக்கிட்டேன். யெகோவா என்கூடவே இருக்கிறத என்னால உணர முடியுது. இந்த 7 வருஷத்துல சாப்பாடு இல்லாம, தூங்க இடம் இல்லாம ஒருநாள்கூட இருந்ததே இல்ல.” கடவுளுடைய அரசாங்கத்திற்கு முதலிடம் கொடுப்பதற்காக வாழ்க்கையை எளிமையாக்கும் ஒவ்வொரு நபரையும் யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார்.—மத். 6:32, 33.

வீட்டு ஞாபகம்: வீட்டு ஞாபகத்தை எரிக்கா எப்படிச் சமாளித்தார் என்று கவனியுங்கள். “என் குடும்பத்த விட்டு எப்படி பிரிஞ்சி இருக்கப்போறேன்னு கவலைப்பட்டேன். இதே சவாலை சமாளிச்சவங்களோட அனுபவங்களை காவற்கோபுரத்துல படிச்சேன். அது எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. ஒரு கட்டுரையில தன்னோட மகள்கிட்ட ஒரு அம்மா சொன்னாங்க, ‘என்னைவிட யெகோவா  உன்னை நல்லா பாத்துக்குவாரு.’ அந்த வார்த்தைகள் என்னை ரொம்ப பலப்படுத்துச்சு.” இன்னொரு உதாரணத்தைக் கவனியுங்கள். மார்ஷல் தீவுகளில் ஒன்றான மஜூரோ தீவில் பேட்ரிக்-ஹேனா தம்பதி சேவை செய்கிறார்கள். சபையிலிருக்கும் சகோதர சகோதரிகளை ஹேனா தன்னுடைய குடும்பத்தாராக நினைக்கிறார். இதன்மூலம் அவர் வீட்டு ஞாபகத்தை மேற்கொள்கிறார். “ஒரு உலகளாவிய குடும்பத்தை தந்ததுக்கு யெகோவாவுக்கு தினம் தினம் நன்றி சொல்றேன். இவங்களோட உதவி இல்லாம என்னால ஒரு நாள்கூட இங்க இருந்திருக்க முடியாது” என்று ஹேனா சொல்கிறார்.

சைமன்

புதிய நண்பர்கள்: சைமன் சொல்கிறார்: “புது இடத்துக்கு குடிமாறி போனப்போ எல்லாமே புதுசா இருந்துச்சு. என்னோட பழைய நண்பர்கள பிரிஞ்சி இருக்குறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நான் அடிச்ச ஜோக்குகள ரசிக்க யாருமே இல்ல, ஏன்னா இங்க இருக்குறவங்களுக்கு அது புரியவே புரியாது.” பாலௌன் மொழியைக் கற்றுக்கொள்ள சைமன் கடும் முயற்சி எடுத்தார். அந்த பாஷையைக் கற்றுக்கொண்டார். அங்கிருந்த சகோதரர்களுடைய நெஞ்சில் இடம் பிடித்தார். இதன்மூலம், அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். (2 கொ. 6:13) எரிக்கா இந்தச் சவாலை எப்படிச் சமாளித்தார்? “ஆரம்பத்துல நான் ரொம்ப தனிமையா உணர்ந்தேன். ஆனா, நான் இங்க எதுக்காக வந்திருக்கேன்னு யோசிச்சு பாத்தேன். எனக்காக வரல யெகோவாவுக்காக வந்திருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டேன். சீக்கிரத்துலேயே அருமையான புதிய நண்பர்கள் கிடச்சாங்க.” புதிதாக குடிமாறிச் செல்பவர்களும் அங்கிருக்கும் சகோதரர்களும் சேர்ந்து உழைக்கும்போது நிறைய பலன்கள் கிடைக்கின்றன, நல்ல நண்பர்களாகவும் ஆகிறார்கள். ஊழியம் செய்ய ஆட்கள் தேவைப்படும் இடங்களுக்கு மாறிச் செல்பவர்கள் வேறென்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள்?

‘ஏராளமான அறுவடை’

“ஏராளமாக விதைப்பவர் ஏராளமாக அறுவடை செய்வார்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (2 கொ. 9:6) ஊழியத்தில் அதிகம் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த வார்த்தைகள் நிச்சயம் பொருந்தும். மைக்ரோனேசியாவில் எப்படி ‘ஏராளமாக அறுவடை செய்கிறார்கள்?’

பேட்ரிக்-ஹேனா

மைக்ரோனேசியாவில் இன்னும் நிறைய பேர் பைபிளைப் பற்றி கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். கற்றுக்கொள்ளும் சத்தியத்தை வாழ்க்கையில் கடைப்பிடித்து, ஆன்மீக முன்னேற்றம் செய்ய மக்கள் தயாராயிருக்கிறார்கள். 320 பேர் மட்டுமே இருக்கும் அங்கோர் என்ற ஒரு சிறிய தீவில் பேட்ரிக்-ஹேனா தம்பதி ஊழியம் செய்தார்கள். கணவன் இல்லாமல் தன் மகனைத் தனியாக வளர்த்த ஒரு பெண்ணை அங்கு சந்தித்தார்கள். அவர் உடனடியாக பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார். ஆர்வமாகப் படித்து, வாழ்க்கையில் அதிரடி மாற்றங்களைச் செய்தார். ஹேனா சொல்கிறார்: “ஒவ்வொரு நாளும் அவருக்கு படிப்பு நடத்திட்டு சைக்கிள்ல வீட்டுக்கு வரும்போது நாங்க இரண்டு பேரும் யெகோவாவுக்கு நன்றி சொல்வோம். யெகோவா அந்த பெண்ணுக்கு எப்படி வேணாலும் சத்தியத்த தெரிவிச்சிருக்க முடியும். ஆனா, நாங்க அங்க போனதுனாலதான் அந்த வாய்ப்பை யெகோவா எங்களுக்கு கொடுத்திருக்கார். ஊழியத்தில கிடைச்ச அனுபவங்கள்லயே இது மறக்க முடியாத அனுபவம்.” ஊழியத்தில் கிடைக்கும் சந்தோஷத்தைப் பற்றி எரிக்கா சொல்கிறார்: “ஒருத்தருக்கு யெகோவாவ பத்தி சொல்லிக்கொடுக்கும்போது எல்லையில்லா சந்தோஷம் கிடைக்குது.”

உங்களால் போக முடியுமா?

இன்னும் நிறைய இடங்களில் ஊழியம் செய்ய ஆட்கள் தேவை. உங்களால் குடிமாறிச் செல்ல முடியுமா? உங்களுக்கு அப்படி ஆசை இருந்தால் யெகோவாவிடம் ஜெபத்தில் சொல்லுங்கள். சபையில் இருக்கும் மூப்பர்களிடமும் வட்டார கண்காணியிடமும் குடிமாறிச் சென்ற மற்றவர்களிடமும் அதைப்பற்றிப் பேசுங்கள். நீங்கள் போக விரும்பும் இடத்தை மேற்பார்வை செய்யும் கிளை அலுவலகத்திற்கு, கூடுதல் தகவல் கேட்டு எழுதுங்கள். * இளைஞர்கள், வயதானவர்கள், திருமணம் ஆகாதவர்கள், தம்பதிகள் என ஆயிரக்கணக்கானோர் தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்து சந்தோஷமாகச் சேவை செய்கிறார்கள். நீங்களும் அவர்களோடு சேர்ந்து “ஏராளமாக அறுவடை” செய்ய விரும்புகிறீர்களா?

^ பாரா. 17 ஆகஸ்ட் 2011 நம் ராஜ்ய ஊழியத்தில் மக்கெதோனியாவுக்கு வந்து உதவி செய்ய’ முடியுமா? என்ற கட்டுரையைப் பாருங்கள்.