Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எரிக், ஏமி

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—கானாவில்

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—கானாவில்

தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்யும் சகோதர சகோதரிகள் யாரையாவது உங்களுக்கு தெரியுமா? அப்படியென்றால் உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: “அப்படி சேவை செய்ய எது அவங்கள தூண்டுச்சு? அதுக்காக அவங்க என்னவெல்லாம் செஞ்சாங்க? என்னாலயும் அந்த மாதிரி சேவை செய்ய முடியுமா?” இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள தேவையுள்ள இடத்தில் சேவை செய்யும் சகோதர சகோதரிகளிடமே அதைப் பற்றி கேட்கலாம்.

எது அவர்களை தூண்டியது?

தேவையுள்ள இடத்தில் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு எப்படி வந்தது? அமெரிக்காவை  சேர்ந்த ஏமி என்ற சகோதரிக்கு சுமார் 35 வயது. அவர் சொல்கிறார்: “தேவையுள்ள இடத்துல சேவை செய்யணும் என்ற ஆசை எனக்கு ரொம்ப வருஷமா இருந்துச்சு. ஆனா என்னால அப்படி சேவை செய்ய முடியாதுனு நினைச்சேன். 2004-ல பெலிஸ்ல சேவை செஞ்சிட்டு இருந்த ஒரு தம்பதி, ஒரு மாசத்துக்கு அவங்களோட சேர்ந்து ஊழியம் செய்றதுக்கு என்னை கூப்பிட்டாங்க. நானும் அங்கே போனேன், அவங்களோடு சேர்ந்து ஊழியம் செஞ்சது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஒரு வருஷத்துக்கு அப்புறம் கானாவுல நான் பயனியர் செய்ய ஆரம்பிச்சேன்.”

ஆரோன், ஸ்டெஃபினி

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டெஃபினிக்கு இப்போது கிட்டத்தட்ட 28 வயது. சில வருஷங்களுக்கு முன்பு தேவையுள்ள இடத்தில் சேவை செய்வதைப் பற்றி அவர் யோசித்துப் பார்த்தார். அவர் சொல்கிறார்: “நான் நல்ல ஆரோக்கியத்தோட இருக்கேன், குடும்பத்தை கவனிச்சுக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இல்லை. அதனால நான் இப்போ செஞ்சிட்டு இருக்கிறதைவிட இன்னும் அதிகமா செய்ய முடியும்னு புரிஞ்சிக்கிட்டேன்.” தன்னுடைய சூழ்நிலையைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்த்ததால் அவரால் இப்போது கானாவில் பயனியர் செய்ய முடிகிறது. டென்மார்க்கை சேர்ந்த ஃபிலிப் மற்றும் ஐடா தம்பதி நடுத்தர வயதை சேர்ந்த பயனியர்கள். தேவையுள்ள இடத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு எப்போதுமே இருந்தது. அதற்காக அவர்கள் முயற்சி எடுத்துக்கொண்டே இருந்தார்கள். “எங்களுக்கு வாய்ப்பு கிடைச்சப்போ யெகோவாவே எங்ககிட்ட ‘போங்க’னு சொன்ன மாதிரி இருந்துச்சு” என்கிறார் ஃபிலிப். 2008-ல் அவர்கள் கானாவுக்கு போய், அங்கே 3 வருஷங்களுக்கும் அதிகமாக சேவை செய்தார்கள்.

புரூக், ஆன்ஸ்

ஆன்ஸ் மற்றும் புரூக் தம்பதிக்கு சுமார் 30 வயது. அவர்கள் அமெரிக்காவில் சேவை செய்கிறார்கள். 2005-ல் கட்ரீனா புயல் வந்த சமயத்தில் நிவாரண உதவிகளை செய்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் சர்வதேச கட்டுமான சேவையை செய்ய விண்ணப்பித்தார்கள். ஆனால், அவர்களுக்கு எந்த அழைப்பும் கிடைக்கவில்லை. ஆன்ஸ் சொல்கிறார்: “மாநாட்டுல கேட்ட ஒரு பேச்சு எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தது. தாவீதுக்கு ஆலயத்தை கட்டுறதுக்கான வாய்ப்பு கிடைக்காதப்போ அதை ஏத்துக்கிட்டார், அவரோட குறிக்கோளையும் மாத்திக்கிட்டார். நாங்களும் எங்களோட குறிக்கோளை மாத்திக்கிறதுக்கு இந்த குறிப்பு ரொம்ப பிரயோஜனமா இருந்துச்சு.” (1 நா. 17:1-4, 11, 12; 22:5-11) அவருடைய மனைவி புரூக் சொல்கிறார்: “யெகோவா எங்களை வேறொரு சேவையில பயன்படுத்த விரும்புறாருனு புரிஞ்சிக்கிட்டோம்.”

தேவையுள்ள இடத்தில் சேவை செய்த தங்களுடைய நண்பர்கள் சொன்ன உற்சாகமான அனுபவங்கள் வேறு நாட்டில் சேவை செய்ய ஆன்ஸையும் புரூக்கையும் தூண்டியது. 2012-ல் அவர்கள் கானாவிற்கு போனார்கள். அங்கிருந்த சைகை மொழி சபையில் 4 மாதங்கள் சேவை செய்தார்கள். அவர்கள் திரும்பவும் அமெரிக்காவுக்கு போகவேண்டியிருந்தது. இருந்தாலும், கானாவில் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்கள் வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்ற ஆசையை அதிகமாக்கியது. அதன்பின் அவர்கள் மைக்ரோனேசியா கிளை அலுவலகத்தின் தலைமையில் நடந்த கட்டுமான வேலையில் கலந்துகொண்டார்கள்.

என்ன முயற்சிகளை எடுத்தார்கள்?

தேவையுள்ள இடத்தில் சேவை செய்ய அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள்? ஸ்டெஃபினி சொல்கிறார்: “தேவையுள்ள இடத்துல சேவை செய்றதை பத்தி காவற்கோபுரத்துல வந்த கட்டுரைகளை நான் படிச்சேன். * அதோடு, என்னோட விருப்பத்தை பத்தி சபை மூப்பர்கள்கிட்டயும் வட்டார கண்காணி மற்றும் அவரோட மனைவிகிட்டயும் பேசுனேன். எல்லாத்துக்கும் மேல யெகோவாகிட்ட இதை பத்தி அடிக்கடி ஜெபம் செஞ்சேன்.” அதேசமயம் ஸ்டெஃபினி ரொம்ப சிக்கனமாக இருந்தார். இதன்மூலம் தேவையுள்ள இடத்தில் சேவை செய்வதற்கு பணத்தை சேமித்து வைத்தார்.

ஆன்ஸ் சொல்கிறார்: “யெகோவாதான் எங்களை வழிநடத்தணும்னு நாங்க ஆசைப்பட்டோம். அதனால உதவிக்காக அவர்கிட்ட ஜெபம் செஞ்சோம். எந்த தேதியில இருந்து நாங்க சேவை செய்ய போறோம்னும் ஜெபத்துல சொன்னோம்.” இவர்கள் 4 கிளை அலுவலகங்களுக்கு கடிதம் எழுதினார்கள். கானா கிளை அலுவலகத்தில் இருந்து அவர்களுக்கு பதில் வந்ததும் அங்கே 2 மாதம் சேவை செய்ய முடிவு செய்தார்கள். “சபையில இருந்தவங்களோட சேர்ந்து ஊழியம் செஞ்சது எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால இன்னும் கொஞ்ச நாள் அங்க ஊழியம் செய்ய முடிவு செஞ்சோம்” என்கிறார் ஆன்ஸ்.

ஏட்ரியா, ஜார்ஜ்

கனடாவை சேர்ந்த ஜார்ஜ் மற்றும் ஏட்ரியா தம்பதிக்கு சுமார் 38 வயது. யெகோவா நம்முடைய ஆசைகளை மட்டுமல்ல அதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளையும் ஆசீர்வதிக்கிறார் என்பதை அவர்கள் எப்போதும் நினைவில் வைத்தார்கள். அவர்களுடைய குறிக்கோளை அடைய உடனடியாக சில தீர்மானங்களை எடுத்தார்கள். கானாவில் தேவையுள்ள இடத்தில் சேவை செய்துகொண்டிருந்த ஒரு சகோதரிக்கு ஃபோன் செய்தார்கள். அவர்களுக்கு இருந்த சந்தேகங்களை எல்லாம் கேட்டார்கள். கனடா மற்றும் கானா கிளை அலுவலகங்களுக்கு கடிதம் எழுதினார்கள். “நாங்க ஏற்கெனவே எளிமையாதான் வாழ்ந்துட்டு இருந்தோம். ஆனா இன்னும் எளிமையா வாழ்றதுக்கு முயற்சி செஞ்சோம்” என்கிறார் ஏட்ரியா. இந்த முயற்சிகளை எல்லாம் எடுத்ததால் 2004-ல் அவர்கள் கானாவுக்கு சென்றார்கள்.

சவால்களை எப்படி சமாளித்தார்கள்?

என்ன மாதிரியான சவால்களை நீங்கள் சந்தித்தீர்கள், அதை எப்படி சமாளித்தீர்கள்? ஏமிக்கு எப்போதும் வீட்டு ஞாபகமாகவே இருக்கும். அங்கு வாழ்க்கையே ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அதை சமாளிக்க அவருக்கு எது உதவியது? “வீட்டுல இருக்கிறவங்க அடிக்கடி ஃபோன் பண்ணுவாங்க. நான் செய்ற ஊழியத்தை அவங்க எவ்ளோ மதிக்கிறாங்கனும் சொல்லுவாங்க. ஊழியத்தை தொடர்ந்து செய்ய இது எனக்கு உதவியா இருந்துச்சு. அதுக்கு அப்புறம் நாங்க வீடியோ கால் பண்ணி பேச ஆரம்பிச்சோம். அதுல அவங்கள அடிக்கடி பார்க்குதுனால வீட்டைவிட்டு ரொம்ப தூரத்துல இருக்கிற மாதிரியே எனக்கு தோணாது” என்கிறார் ஏமி. கானாவில் இருந்த ஒரு அனுபவமுள்ள சகோதரி அவருக்கு நல்ல நண்பராக இருந்தார். அந்த நாட்டின் பழக்கவழக்கங்களை புரிந்துகொள்ள அவருக்கு உதவி செய்தார். “ஊழியத்துல ஜனங்க நடந்துக்கிற விதம் எனக்கு புரியலன்னா நான் உடனே அவங்ககிட்டதான் போய் கேட்பேன். அப்போ எப்படி நடந்துக்கணும், எப்படி பேசணும்னு எல்லாம் அவங்க எனக்கு சொல்லிக்கொடுப்பாங்க. இதனால ஊழியத்தை என்னால சந்தோஷமா செய்ய முடிஞ்சது” என்கிறார் ஏமி.

ஜார்ஜும் ஏட்ரியாவும் கானாவுக்கு போனபோது ஏதோ பழங்காலத்துக்கு போனதுபோல் உணர்ந்தார்கள். “வாஷிங் மிஷின் எல்லாம் இல்ல, வெறும் பக்கெட்டுதான் (Bucket) இருந்துச்சு. ஒரு வேளை சாப்பாடு செய்றதுக்கே ரொம்ப நேரம் ஆகும். ஆனா கொஞ்ச நாளைக்கு அப்புறம் இதெல்லாம் ஒரு பெரிய கஷ்டமா எங்களுக்கு தெரியலை. வாழ்க்கையில கிடைச்ச நல்ல அனுபவமா இருந்துச்சு” என்கிறார் ஏட்ரியா. “எங்களுக்கு சில விஷயங்கள் சவாலா இருந்தாலும் நாங்க ரொம்ப திருப்தியா, சந்தோஷமா இருந்தோம். எங்களுக்கு கிடைச்ச நல்ல நல்ல அனுபவங்களை எல்லாம் நாங்க மறக்கவே மாட்டோம். அது எங்களுக்கு பொக்கிஷமா இருக்குது” என்கிறார் புரூக்.

பலன்தரும் ஊழியம்

மற்றவர்களும் இந்த சேவை செய்ய ஏன் உற்சாகப்படுத்துகிறீர்கள்? “இங்க எல்லாரும் பைபிளை பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க. தினமும் பைபிள் படிப்புக்கு தயாரா இருக்காங்க. இந்த மாதிரி இடத்துல ஊழியம் செய்றதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. தேவையுள்ள இடத்துல ஊழியம் செய்யணும்னு நான் எடுத்த தீர்மானம் ஒரு நல்ல தீர்மானம்னு சொல்லுவேன்” என்கிறார் ஸ்டெஃபினி. 2014-ல் இவர் ஆரோன் என்ற சகோதரரை கல்யாணம் செய்தார். இப்போது கானா கிளை அலுவலகத்தில் இருவரும் சேவை செய்கிறார்கள்.

ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ்டீன் என்ற பயனியருக்கு சுமார் 32 வயது. இவர் கானாவுக்கு வருவதற்கு முன்பு பொலிவியாவில் சேவை செய்தார். கிறிஸ்டீன் சொல்கிறார்: “வேறொரு நாட்டுல வந்து சேவை செய்றது ஒரு நல்ல அனுபவமா இருக்கு. என் குடும்பத்தைவிட்டு நான் ரொம்ப தூரத்துல இருக்குறதுனால எல்லா விஷயத்துக்கும் நான் யெகோவாவையே நம்பி இருக்கேன். முன்னாடி இருந்ததைவிட இப்போதான் அவர் எனக்கு ஒரு நிஜமான நபரா இருக்கார். யெகோவாவோட ஜனங்க மத்தியில இருக்கிற ஒத்துமைய என்னால ருசிக்க முடியுது. இந்த சேவை என் வாழ்க்கைக்கு அர்த்தத்தை சேர்த்திருக்கு.” கிறிஸ்டீன் சமீபத்தில்தான் கிடியன் என்ற சகோதரரை கல்யாணம் செய்தார். அவர்கள் இருவரும் இப்போது கானாவில் சேவை செய்கிறார்கள்.

கிறிஸ்டீன், கிடியன்

பைபிள் மாணாக்கர்கள் நன்றாக முன்னேறுவதற்கு ஃபிலிப்பும் ஐடாவும் என்ன செய்தார்கள் என்று சொல்கிறார்கள். “ஆரம்பத்துல எங்களுக்கு 15-க்கும் அதிகமா பைபிள் படிப்புகள் இருந்துச்சு. ஆனா பைபிள் மாணாக்கர்கள் மேல இன்னும் நல்லா கவனம் செலுத்தணும்னு நினைச்சோம். அதனால இப்போ 10 பைபிள் படிப்புகள்தான் நடத்துறோம்.” இப்படி செய்ததால் கிடைத்த நன்மைகளை பற்றியும் ஃபிலிப் சொல்கிறார்: “மைக்கேல் என்ற ஒரு வாலிபருக்கு நான் பைபிள் படிப்பு எடுத்தேன். அவர் தினமும் பைபிள் படிப்பு படிக்க ஆசைப்பட்டார், அதுக்காக நல்லா தயாரிப்பார். இப்படி படிச்சதுனால பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை ஒரே மாசத்துலயே முடிச்சிட்டோம். அப்புறம் அவர் ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியா ஆனார். முதல் நாள் ஊழியத்துக்கு வந்தப்போ, ‘என்னோட பைபிள் படிப்புக்கு வர முடியுமா’னு கேட்டார். எனக்கு ஒரே ஆச்சரியமா இருந்துச்சு. 3 பேருக்கு பைபிள் படிப்பு நடத்துறதாவும் அதுக்கு நான் உதவி செய்யணும்னு சொன்னார்.” பைபிள் மாணாக்கர்களே பைபிள் படிப்பு எடுக்கிறார்கள் என்றால் அங்கே எவ்வளவு தேவை இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்!

ஐடா, ஃபிலிப்

கானாவுக்கு போன கொஞ்ச நாளிலேயே அங்கே எவ்வளவு தேவை இருக்கிறது என்பதை ஏமி புரிந்துகொண்டார். “கானாவுக்கு வந்த புதுசுல நாங்க ஒரு சின்ன கிராமத்துல ஊழியம் செஞ்சோம். அங்க காது கேட்காதவங்க ஒருத்தராவது இருப்பாங்களானு தேடினோம். ஆனா ஒரு கிராமத்துலயே நாங்க 8 பேரை பார்த்தோம்” என்கிறார் ஏமி. கொஞ்ச நாளிலேயே எரிக் என்ற சகோதரரை ஏமி கல்யாணம் செய்தார். அவர்கள் இருவரும் இப்போது சைகை மொழி சபையில் விசேஷ பயனியர்களாக சேவை செய்கிறார்கள். அந்த நாட்டில் 300-க்கும் அதிகமான சைகை மொழி பிரஸ்தாபிகளும் ஆர்வமுள்ளவர்களும் இருக்கிறார்கள். ஜார்ஜும் ஏட்ரியாவும் கானாவில் சேவை செய்ததால் மிஷனரி ஊழியத்தை அவர்களால் ருசிக்க முடிந்தது. 126-வது கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள அவர்களுக்கு அழைப்பு வந்தபோது எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்! இப்போது அவர்கள் மொசாம்பிக்கில் மிஷனரிகளாக சேவை செய்கிறார்கள்.

அன்புதான் அவர்களை தூண்டியது

கானாவில் இருக்கும் சகோதர சகோதரிகளோடு சேர்ந்து மற்ற நாட்டில் இருக்கும் சாட்சிகள் இந்த அறுவடை வேலையை செய்வதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. (யோவா. 4:35) அங்கே ஒவ்வொரு வாரமும் சராசரியாக 120 பேர் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். கானாவில் சேவை செய்கிற 17 பேரைப் போலவே உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சாட்சிகள் தேவையுள்ள இடத்தில் சேவை செய்ய ‘மனப்பூர்வமாய் தங்களையே அர்ப்பணிக்கிறார்கள்.’ இதற்கு யெகோவாமீது அவர்களுக்கு இருக்கும் அன்புதான் காரணம். இப்படி மனதார சேவை செய்கிறவர்களைப் பார்க்கும்போது யெகோவாவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! —சங். 110:3, NW; நீதி. 27:11.

^ பாரா. 9 ஏப்ரல் 15 மற்றும் டிசம்பர் 15, 2009 காவற்கோபுரங்களில், தேவை அதிகமுள்ள இடங்களில் சேவைசெய்ய உங்களால் முடியுமா?” மற்றும் ‘மக்கெதோனியாவுக்கு வந்து உதவி செய்ய’ முடியுமா? என்ற கட்டுரைகளை பாருங்கள்.