Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பணத்தை ஞானமாகப் பயன்படுத்துவது எப்படி?

பணத்தை ஞானமாகப் பயன்படுத்துவது எப்படி?

பைபிளின் கருத்து

பணத்தை ஞானமாகப் பயன்படுத்துவது எப்படி?

“வரவு எட்டணா என்றால், செலவு பத்தணாவாக இருக்கிறது. குடும்பத்தை எப்படி ஓட்டுவது என நினைத்து நினைத்து நிறைய நாள் தூங்காமலேயே இருந்திருக்கிறேன்.”—ஜேம்ஸ்.

“கையில் சுத்தமாகக் காசு இருக்கவில்லை, என்ன செய்வது ஏது செய்வதென்றே தெரியாமல் திண்டாடினேன்.”—ஷெரி.

பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கும் இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட வார்த்தைகள் நம் காதில் விழுவது சகஜம்தான். உலகமுழுவதும் சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைக் குறித்து சர்வதேச தொழிளாலர் சங்கத்தின் தலைமை இயக்குநர் ஹவான் சொமாவியா கருத்துத் தெரிவித்தார்; இந்தப் பிரச்சினை, அரசன் முதல் ஆண்டிவரை எல்லாரையுமே பாதித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு நபருக்குத் திடீரென்று வேலை பறிபோகும்போதோ அன்றாட பிழைப்பை ஓட்டுவது கஷ்டமாகும்போதோ அந்த நபர் நிலைகுலைந்து போய்விடலாம்; நம்பிக்கை இழந்துவிடலாம். பைபிள் எழுத்தாளரான தாவீது தன் வாழ்நாளில் ஒருமுறை இதேபோல் உணர்ந்தார். “என் வேதனைகள் பெருகிவிட்டன; என் துன்பத்தினின்று என்னை விடுவித்தருளும்” என்று அவர் ஜெபித்தார். (சங்கீதம் [திருப்பாடல்கள்] 25:17, பொது மொழிபெயர்ப்பு) அப்படியானால், நம் நாளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? பைபிளிலுள்ள ஞானம் நம் கவலைகளைப் போக்கவும், மன நிம்மதியைப் பெறவும் உதவுமா?

கொடிய காலத்திற்கேற்ற ஞானம்

இந்த உலகத்தின் “கடைசி நாட்களில்,” ‘பிரசவ வேதனை போன்ற வேதனைகளும்’ ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களும் வருமென்று’ பைபிள் முன்னறிவித்தது. (2 தீமோத்தேயு 3:1; மத்தேயு 24:8, அடிக்குறிப்பு) இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை! ஆனாலும், நாம் நம்பிக்கையிழக்க வேண்டிய அவசியமில்லை. பொருளாதார நெருக்கடிமிக்க இந்தக் காலத்தைச் சமாளிக்கத் தேவையான ஞானத்தைத் தம்முடைய வார்த்தையாகிய பைபிளின் மூலம் கடவுள் நமக்குத் தந்திருக்கிறார்.

உதாரணமாக, பணத்தைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க பைபிள் நமக்கு உதவுகிறது. பிரசங்கி (சங்கத் திருவுரை ஆகமம்) 7:13 (கத்தோலிக்க பைபிள்) இவ்வாறு சொல்கிறது: “ஞானமும் கேடயம்; பணமும் கேடயம். ஆனால், ஞானம் தன்னை உடையவர்களுக்கு வாழ்வு தரும்; . . . பணமோ அதைத் தராது.” ஆம், பணம் நமக்கு ஓரளவுதான் பாதுகாப்பு தரும்; கடவுளுடைய வார்த்தையிலிருந்து கிடைக்கும் தெய்வீக ஞானமோ உண்மையான பாதுகாப்பை எல்லா நேரத்திலும் கொடுக்கும். சில உதாரணங்களைக் கவனியுங்கள்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளித்தல்

ஊக்கமாக உழையுங்கள். ‘சோம்பேறிகள் உண்ண விரும்புகிறார்கள், உணவு இல்லை; ஊக்கமுள்ளவரோ உண்டு கொழுக்கிறார்.’ (நீதிமொழிகள் 13:4, பொ.மொ.) இந்த வசனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்? நேர்மையானவர், கடின உழைப்பாளி என்றெல்லாம் நாம் பெயரெடுக்க வேண்டும். கடின உழைப்பாளிகளெனப் பெயரெடுத்தவர்களை முதலாளிகள் உயர்வாய் மதிப்பார்கள்; அப்படிப்பட்டவர்களுக்கு வேலை தானாகத் தேடிவரும், அவ்வளவு சீக்கிரம் தொலைந்துபோகாது.—எபேசியர் 4:28.

வாங்குவதற்குமுன் செலவைக் கணக்கிட்டுப் பாருங்கள். “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், அதைக் கட்டி முடிக்கப் போதுமான வசதி தனக்கு இருக்கிறதா என்று முதலில் உட்கார்ந்து செலவைக் கணக்கிட்டுப் பார்க்காமல் இருப்பானா?” என்று இயேசு கேட்டார். (லூக்கா 14:28) தம்முடைய சீடராக ஆவதற்கு ஒருவர் என்னவெல்லாம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இயேசு அந்த உதாரணத்தைச் சொன்னார்; என்றாலும், நேரடியான அர்த்தத்திலும் அவருடைய வார்த்தைகள் உண்மையாக இருக்கின்றன. எனவே, உங்கள் தேவைகளையும் அதற்கு ஆகும் செலவுகளையும் பட்ஜெட் போடுங்கள்.

கெட்ட பழக்கங்களில் காசைக் கரியாக்காதீர்கள். சூதாடுவது, புகைப்பிடிப்பது, போதைப்பொருளைப் பயன்படுத்துவது, மதுபான துஷ்பிரயோகம் செய்வது ஆகியவற்றைக் கடவுள் வெறுக்கிறார்.—நீதிமொழிகள் 23:20, 21; ஏசாயா 65:11; 2 கொரிந்தியர் 7:1.

‘பண ஆசையை’ தவிருங்கள். (எபிரெயர் 13:5) பண ஆசையுள்ளவர்கள் கடைசியில் துன்பத்தையும் ஏமாற்றத்தையுமே சந்திப்பார்கள். ‘பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக்கொள்வார்கள்.’ (1 தீமோத்தேயு 6:9, 10) அதுமட்டுமல்ல, பண ஆசை எனும் தீராத மோகத்திற்கு அடிமைகளாகிவிடுவார்கள்; எவ்வளவுதான் கிடைத்தாலும் திருப்தி அடையவே மாட்டார்கள்.—பிரசங்கி 5:10.

திருப்தியாயிருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். “நாம் இந்த உலகத்தில் எதையுமே கொண்டு வரவில்லை; நாம் இங்கிருந்து எதையுமே கொண்டு போகவும் முடியாது. அதனால், நமக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் இருந்தால், அதுவே போதும் என்று திருப்தியுடன் வாழ வேண்டும்.” (1 தீமோத்தேயு 6:7, 8) உள்ளதை வைத்துத் திருப்தியாய் இருக்கிறவர்கள் பொருளாதாரச் சரிவு ஏற்படும்போது, கவலையில் மூழ்கிவிட மாட்டார்கள். எனவே, உங்களிடம் இருப்பதை வைத்துத் திருப்தியாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.—வலப்பக்கம் இருக்கும் பெட்டியைக் காண்க.

நாளைக்கு என்ன நடக்கும் என்று நம் யாருக்குமே தெரியாது. “எதிர்பாராத வேளைகளில் அசம்பாவிதங்கள் எல்லாருக்கும் நேரிடுகின்றன” என்று பிரசங்கி 9:11 (NW) சொல்கிறது. எனவே, ஞானமுள்ள நபர்கள் ‘நிலையற்ற செல்வங்கள்மீது நம்பிக்கை வைக்காமல் . . . கடவுள் மீதே நம்பிக்கை வைக்கிறார்கள்.’ அவர் தம்முடைய உண்மையுள்ள மக்களுக்கு இவ்வாறு வாக்குறுதி அளித்திருக்கிறார்: “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்.”—1 தீமோத்தேயு 6:17; எபிரெயர் 13:5. (g10-E 05)

நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

● நம்முடைய காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?—2 தீமோத்தேயு 3:1-5.

● நம்பகமான வழிநடத்துதல் இன்று எங்கே உள்ளது?—சங்கீதம் 19:7.

● என் குடும்பம் பாதுகாப்பான எதிர்காலத்தை அனுபவிக்க நான் என்ன செய்ய வேண்டும்?—பிரசங்கி 7:12.

[பக்கம் 21-ன் பெட்டி/படம்]

பணத்தைச் சேமிக்க. . .

ஷாப்பிங்: பட்டியலிடுங்கள். பார்ப்பதையெல்லாம் வாங்க வேண்டுமென்று நினைக்காதீர்கள். தரமாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும் இடத்தில் பொருளை வாங்குங்கள். சலுகைச் சீட்டுகளையும் தள்ளுபடிகளையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பொருள்களை நேரடி விற்பனையிலும் சீஸன் இல்லாதபோதும் வாங்குங்கள். முடிந்தால், மொத்தமாக வாங்குங்கள்.

வீட்டுச் செலவுகள்: அபராதம் கட்டுவதைத் தவிர்க்க, பில்’களைச் சரியான சமயத்திற்குள் கட்டிவிடுங்கள். உணவுப் பதார்த்தங்களையும் பானங்களையும் வீட்டிலேயே தயாரியுங்கள்; உணவு, மதுபானம் போன்றவற்றில் அளவோடு இருங்கள். மின்விளக்குகளையும் மின்சாதனங்களையும் உபயோகத்தில் இல்லாதபோது அணைத்துவிடுங்கள். முடிந்தால், மின்சாரத்தை மிச்சப்படுத்தும் கருவிகளை வாங்குங்கள். ஏ.சி. பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ளுங்கள், அதற்குப் பதிலாக காற்றோட்டத்திற்காக அவ்வப்போது ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். இப்போது இருப்பதைவிடச் சிறிய வீடு போதுமானதாக இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்.

போக்குவரத்து: உங்களுக்கு ஒரு வாகனம் தேவைப்பட்டால் நன்கு உழைக்கிற, எரிபொருளை மிச்சம் செய்கிற வாகனத்தையே வாங்குங்கள். அது புதிதாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. எல்லா வேலைகளையும் ஒரு தடவை வெளியே செல்லும்போதே முடித்துவிட்டுவர முயற்சி செய்யுங்கள்; முடிந்தபோதெல்லாம் உங்கள் காரில் மற்றவர்களை ஏற்றிச் செல்லுங்கள் அல்லது நீங்கள் மற்றவர்களுடைய காரில் செல்லுங்கள். இல்லையென்றால், பொது வாகனங்களைப் பயன்படுத்துங்கள் அல்லது நடந்துசெல்லுங்கள் அல்லது மோட்டார் பைக்கைப் பயன்படுத்துங்கள். சுற்றுலா செல்லத் திட்டமிட்டால், சீஸன் இல்லாத சமயங்களில் செல்லுங்கள், அதுவும் அருகிலுள்ள இடங்களுக்குச் செல்லுங்கள்.

போன் மற்றும் பொழுதுபோக்கு: வீட்டு போன், செல்போன் இரண்டுமே உங்களுக்குத் தேவைப்படுமா? உங்கள் பிள்ளைகளிடம் செல்போன் இருந்தால் அதை அடிக்கடி பயன்படுத்தாமல் இருக்கச் சொல்ல முடியுமா அல்லது அது இல்லாமலேயே அவர்களால் சமாளிக்க முடியுமா? நீங்கள் கேபிள் டி.வி.-க்குப் பணம் கட்டிக்கொண்டிருந்தால், சேனல்களைக் குறைப்பதன் மூலம் கட்டணத்தைக் குறைக்க முடியுமா? * புத்தகங்களையும் சினிமா சி.டி.–களையும் புதிதாக வாங்குவதற்குப் பதிலாக நூலகத்திலிருந்து அல்லது வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்த முடியுமா?

[அடிக்குறிப்பு]

^ கூடுதலான தகவல்களுக்கு, ஏப்ரல்-ஜூன் 2009 விழித்தெழு!-வில் “சிக்கனமாய்ச் செலவு செய்யுங்கள்” என்ற கட்டுரையையும், ஜூன் 2006 விழித்தெழு!-வில்இளைஞர் கேட்கின்றனர் . . . பணத்தை சிக்கனமாக செலவு செய்வது எப்படி?” என்ற கட்டுரையையும் காண்க.