Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என்னையே காயப்படுத்திக்கொள்கிற பழக்கத்தை விடுவது எப்படி?

என்னையே காயப்படுத்திக்கொள்கிற பழக்கத்தை விடுவது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர் . . .

என்னையே காயப்படுத்திக்கொள்கிற பழக்கத்தை விடுவது எப்படி?

“என்னோட வேதனையை தாங்கவே முடியல. அந்தச் சமயத்தில் என்னை காயப்படுத்திக்கொள்வதை தவிர எனக்கு வேற வழியே தெரியல.”​—⁠ஜெனிஃபர், 20. a

“மனசு கஷ்டமாக இருந்தால் சிலர் அழுவாங்க, ஆனால் நான், என்னையே கீறிக்கொள்வேன். அதுக்கப்புறம் எப்போதும் போல சந்தோஷமாகிவிடுவேன்.”​—⁠ஜெஸிக்கா, 17.

“இரண்டு வாரமா என்னை நான் கீறிக்கொள்ளவில்லை. இத்தனை நாளாக இப்படிக் கீறாமல் தாக்குபிடிச்சு இருக்கிறேன்னா அது ஒரு பெரிய சாதனைதான். ஆனால் அந்தப் பழக்கத்தை சுத்தமா விட்டுவிடுவேன்னு என்னால சொல்ல முடியாது.”​—⁠ஜேமி, 16.

ஜெனிஃபர், ஜெஸிக்கா, ஜேமி​—⁠இந்த மூன்று பேரும் ஒருவரையொருவர் பார்த்ததே கிடையாது. ஆனால் நிறைய விஷயங்களில் இவர்களிடம் ஒற்றுமை இருந்தது. இவர்கள் மூன்று பேரும் தீயில் விழுந்த புழு போல மனவேதனையில் துடித்தார்கள். அந்த வேதனையை மூவருமே ஒரே விதத்தில் சமாளித்தார்கள். அவர்கள் மூவரும் தங்களைக் காயப்படுத்திக்கொள்வதன் மூலம் அந்நேரத்திற்கு நிம்மதி அடைந்தார்கள். b

தங்களைக் காயப்படுத்திக்கொள்கிற விசித்திரமான இந்தப் பழக்கம் பருவ வயதினர் மத்தியிலும் இள வயதினர் மத்தியிலும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் அதிகரித்திருக்கிறது. இந்தப் பழக்கம், “பெற்றோர்களை அதிரவைக்கிறது, [பள்ளிக்கூட] ஆலோசகர்களைத் திணற வைக்கிறது, மருத்துவர்களுக்குச் சவாலாக இருக்கிறது” என்று கனடாவின் நேஷனல் போஸ்ட் என்ற செய்தித்தாள் குறிப்பிடுகிறது. “மற்ற பழக்கங்களிலிருந்து விடுபடுவதைவிட இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதே மிகமிகக் கடினம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்” என்றும் அது சொல்கிறது. நீங்களோ உங்களுக்கு நெருங்கிய ஒருவரோ இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டீர்களா? அப்படியென்றால் நீங்கள் என்ன செய்யலாம்?

முதலாவதாக, நீங்கள் ஏன் உங்களைக் காயப்படுத்திக்கொள்ள துடிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். காயப்படுத்திக்கொள்வது, வெறுமனே மனநோயின் காரணமாக செய்யப்படுகிற ஒரு பழக்கமல்ல என்பதை நினைவில் வையுங்கள். பொதுவாக, ஏதோ அழுத்தத்தைச் சமாளிக்கும் வழியாகவே அது இருக்கிறது. தன்னைக் காயப்படுத்திக்கொள்பவர் மன வேதனையிலிருந்து விடுதலை பெற உடலுக்கு வேதனையைத் தேடிக்கொள்கிறார். எனவே உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னையே காயப்படுத்திக்கொள்வதனால் எனக்கு என்ன லாபம்? என்னைக் காயப்படுத்திக்கொள்ள நான் துடிக்கும்போது என் மனதில் என்ன ஓடுகிறது?’ உங்கள் வாழ்க்கையில்​—⁠உங்கள் குடும்பம் அல்லது நண்பர்கள் சம்பந்தமாக​—⁠உங்களை வேதனைப்படுத்துகிற விஷயம் ஏதாவது இருக்கிறதா?

இப்படி நீங்கள் உங்களையே சோதித்து பார்ப்பதற்கு தைரியம் தேவைப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அப்படி செய்வதனால் கிடைக்கும் பலன்களோ அதிகம். அநேக சமயங்களில், காயப்படுத்திக்கொள்ளும் பழக்கத்தை விட்டொழிப்பதற்கு இதுவே முதல் படியாக இருக்கிறது. ஆனால், இப்பழக்கத்தின் ஆணி வேரைக் கண்டுபிடிப்பதோடு பிரச்சினை தீர்ந்துவிடுவதில்லை, அதில் இன்னும் அதிகம் உட்பட்டிருக்கிறது.

மனம்விட்டு பேசுவது அவசியம்

நீங்கள் ஒருவேளை இந்தப் பழக்கத்திற்கு ஆளாகி இருந்தால், உங்கள் மனதை அலைக்கழிக்கிற உணர்ச்சிகளை நம்பகமான, முதிர்ச்சியுள்ள நண்பரிடம் சொல்லுங்கள், அப்போது பயனடைவீர்கள். பைபிள் நீதிமொழி ஒன்று இவ்வாறு சொல்கிறது: “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.” (நீதிமொழிகள் 12:25) மற்றொரு நபரிடம் நீங்கள் மனம்விட்டு பேசும்போதுதான் உங்களுக்குத் தேவைப்படுகிற ஆறுதலான, அன்பான வார்த்தைகளைப் பெற முடியும்.​—⁠நீதிமொழிகள் 25:11.

நீங்கள் யாரிடம் போய் பேசலாம்? உங்களைவிட வயதில் மூத்தவரை, ஞானத்துடனும் முதிர்ச்சியுடனும் கரிசனையுடனும் நடந்துகொள்பவரை தேர்ந்தெடுப்பது நல்லது. கிறிஸ்தவர்களுக்கு உதவ சபை மூப்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” இருக்கிறார்கள்.​—⁠ஏசாயா 32:2.

உங்களைப் பற்றிய ரகசியத்தை மற்றவரிடம் சொல்ல நீங்கள் பயப்படலாம், அது நியாயம்தான். சாரா என்ற பெண் உணர்ந்தது போலவே நீங்களும் உணரலாம். “முதலில் எனக்கு யாரையும் நம்ப பயமாக இருந்தது. என் சுயரூபம் மற்றவர்களுக்குத் தெரியவந்தால் அவர்கள் அருவருப்போடும் வெறுப்போடும் என்னைவிட்டு விலகிப் போவார்களென பயந்தேன்” என அவள் சொல்கிறாள். ஆனால் சாரா, மனம்விட்டு பேசிய பிறகு, பைபிளில் நீதிமொழிகள் 18:24-⁠ல் சொல்லப்பட்டிருப்பது எவ்வளவு உண்மை என்பதைப் புரிந்துகொண்டாள். “சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு” என அந்த வசனம் குறிப்பிடுகிறது. அவள் சொல்கிறாள்: “நான் எப்படியெல்லாம் என்னைக் காயப்படுத்திக்கொள்வேன் என்பதைப் பற்றி முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்களிடம் சொன்னேன். ஆனாலும் அவர்கள் ஒருபோதும் என் மனது நோகப் பேசவில்லை. அதற்குப் பதிலாக நடைமுறையான ஆலோசனைகளைத் தந்தார்கள். வசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசினார்கள். நான் ரொம்பவே சோர்வடைந்து, தகுதியற்றவளாக உணர்ந்தபோது அவர்கள் பொறுமையுடன் பேசி எனக்கு தைரியமூட்டினார்கள்.”

காயப்படுத்திக்கொள்ளும் பழக்கத்தினால் நீங்கள் எதிர்ப்படுகிற கஷ்டத்தை யாரிடமாவது ஏன் சொல்லக்கூடாது? நேருக்கு நேர் உட்கார்ந்து ஒருவரிடம் இதைப் பற்றி பேசுவது கடினமாக இருந்தால் கடிதத்திலோ தொலைபேசியிலோ தொடர்புகொள்ள முயற்சி செய்யுங்கள். இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஒருவரிடம் மனம்விட்டு பேசுவது உதவலாம். ஜெனிஃபர் இவ்வாறு சொல்கிறாள்: “என்மீது அக்கறை காட்ட ஒருவர் இருக்கிறார் என்பதையும் சோர்வாயிருக்கும்போது அவரிடம் பேச முடியும் என்பதையும் தெரிந்துகொண்டதுதான் ரொம்பவே உதவி செய்தது.” c

ஜெபம் செய்வதன் முக்கியத்துவம்

டானா என்பவள் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாத நிலையில் இருந்தாள். கடவுள்தான் தனக்கு உதவ வேண்டுமென அவள் நினைத்தாள். அதே சமயத்தில் இந்தப் பழக்கத்தை விடவில்லை என்றால் கடவுள் தனக்கு உதவ மாட்டாரென்றும் நினைத்தாள். டானாவிற்கு எது உதவியது? 1 நாளாகமம் 29:17-ஐத் தியானித்தது அவளுக்கு உதவியது; யெகோவா ‘இருதயத்தைச் சோதிக்கிறவர்’ என அவ்வசனம் சொல்கிறது. “காயப்படுத்திக்கொள்ளும் பழக்கத்தை விட்டுவிடவே உண்மையில் ஆசைப்பட்டேன் என்பது யெகோவாவிற்குத் தெரியும். அவரிடம் உதவி கேட்டு ஜெபித்தபோது ஆச்சரியம் தாங்க முடியவில்லை. என்னுடைய தீர்மானம் நாளுக்குநாள் உறுதியாகிக்கொண்டே வந்தது” என்று டானா சொல்கிறாள்.

அதிகமதிகமான துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்த சங்கீதக்காரன் தாவீது இவ்வாறு எழுதினார்: “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்.” (சங்கீதம் 55:22) ஆம், நீங்கள் படுகிற கஷ்டங்களெல்லாம் யெகோவாவுக்குத் தெரியும் என்பதில் நீங்கள் நிச்சயமாக இருக்கலாம். ஆனால் அதைவிட முக்கியமாக, ‘அவர் உங்கள்மீது அக்கறையாக இருக்கிறார்.’ (1 பேதுரு 5:7, NW) உங்கள் இருதயம் உங்களைக் குற்றவாளியென சொல்கிறதென்றால், ‘தேவன் உங்களுடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்’ என்பதை நினைவில் வையுங்கள். ஆம், நீங்கள் ஏன் உங்களைக் காயப்படுத்திக்கொள்கிறீர்கள் என்பதையும் அதை விடுவது ஏன் உங்களுக்குக் கடினமாக இருக்கிறது என்பதையும் அவர் புரிந்துகொள்கிறார். (1 யோவான் 3:19, 20) நீங்கள் அவரிடம் ஜெபம் செய்வதோடுகூட இந்தப் பழக்கத்தை விட்டுவிட முயற்சி செய்தால் அவர் நிச்சயம் ‘உங்களுக்கு சகாயம் பண்ணுவார்.’​—⁠ஏசாயா 41:10.

ஒருவேளை மறுபடியும் அந்தப் படுகுழியில் விழுந்துவிட்டீர்கள் என்றால் என்ன செய்வது? நீங்கள் முற்றிலும் தோற்றுவிட்டீர்கள் என்று அர்த்தமா? நிச்சயம் இல்லை! “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்” என நீதிமொழிகள் 24:16 சொல்கிறது. “நான் ஏழுக்கும் அதிகமான முறை விழுந்தேன், ஆனால் சோர்ந்துவிடவில்லை” என டானா சொல்கிறாள். விடாமுயற்சி மிகவும் அவசியம் என்பதை டானா உணர்ந்தாள். கரன் என்ற பெண்ணும் அப்படியே உணர்ந்தாள். “நான் மறுபடியுமாக அந்தப் பழக்கத்தில் விழுந்தபோது அதைத் தோல்வியாக நினைக்காமல் தற்காலிக பின்வாங்குதலாகவே நினைத்தேன். அதனால் பல முறை விழுந்தபோதிலும் மறுபடியும் எழுந்தேன்” என அவள் சொல்கிறாள்.

கூடுதல் உதவி தேவைப்படும்போது

‘நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை’ என இயேசு அறிந்திருந்தார். (மாற்கு 2:17, பொது மொழிபெயர்ப்பு) அநேக சந்தர்ப்பங்களில், ஏதாவது உடற்கோளாறு அல்லது மனக்கோளாறு காரணமாகக் காயப்படுத்திக்கொள்ளும் பழக்கம் இருக்கிறதா என்பதை தகுதியான ஒரு மருத்துவ நிபுணரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, பிறகு சிசிச்சை பெறுவது அவசியம். d ஜெனிஃபர் அப்படித்தான் செய்தாள். அன்பான கிறிஸ்தவ கண்காணிகள் அளித்த உதவியோடு இதுவும் அவளுக்கு உதவியது. “மூப்பர்கள் டாக்டர்கள் கிடையாது, ஆனால் அவர்கள் ரொம்ப உதவியாக இருந்தார்கள்” என அவள் சொல்கிறாள். “என்னைக் காயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இப்போதும்கூட சில சமயங்களில் என் மனதில் வரும். ஆனால் யெகோவாவின் உதவியுடனும் சபையிலுள்ளவர்களின் உதவியுடனும் நான் அதைக் கட்டுப்படுத்துகிறேன். அதை மேற்கொள்ள நான் கற்றுக்கொண்ட வழிகளையும் பயன்படுத்துகிறேன்.” e

இந்தப் பழக்கத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக அதை விட்டுவிட்டு பயனுள்ள விதங்களில் பிரச்சினைகளைச் சமாளிக்க உங்களால் கற்றுக்கொள்ள முடியும் என்பதில் நம்பிக்கையுடன் இருங்கள். சங்கீதக்காரனைப் போலவே நீங்களும் இவ்வாறு ஜெபம் செய்யுங்கள்: “உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் [அதாவது, காயமேற்படுத்தும் எதுவும்] என்னை ஆளவொட்டாதேயும்.” (சங்கீதம் 119:133) இந்தப் பழக்கம் உங்களைக் கட்டுப்படுத்தாதபடி அதைக் கட்டுப்படுத்த நீங்கள் கற்றுக்கொண்ட பிறகு மன திருப்தியையும் சுயமரியாதையையும் பெறுவீர்கள்.

சிந்திப்பதற்கு

◼ நீங்கள் மனச்சோர்வினால் கஷ்டப்படும்போது காயப்படுத்திக்கொள்வதற்குப் பதிலாக வேறு என்ன செய்யலாம்?

◼ காயப்படுத்திக்கொள்கிற பழக்கம் உங்களுக்கு இருந்தால் யாரிடம் மனம்விட்டு பேசலாம்?

[அடிக்குறிப்புகள்]

a இந்தக் கட்டுரையில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b காயப்படுத்திக்கொள்ளும் பழக்கத்தில் உட்பட்டிருப்பது என்னென்ன, அதன் காரணங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஜனவரி, 2006 விழித்தெழு! இதழில் “இளைஞர் கேட்கின்றனர் . . . ஏன் என்னையே காயப்படுத்திக்கொள்கிறேன்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

c சில சமயங்களில் உங்கள் உணர்ச்சிகளை எழுத்துக்களில் வடிக்க பழகுங்கள். பைபிளிலுள்ள சங்கீதங்களை எழுதியவர்கள் ஆழ்ந்த உணர்ச்சிகளை உடையவர்களாய் இருந்தார்கள். தங்கள் குற்றவுணர்வையும் கோபத்தையும் விரக்தியையும் சோகத்தையும் எழுத்துக்களில் வடித்தார்கள். சில உதாரணங்களை, சங்கீதங்கள் 6, 13, 42, 55, மற்றும் 69-⁠ல் நீங்கள் காணலாம்.

d சில சமயங்களில், காயப்படுத்திக்கொள்ளும் பழக்கம் ஏற்படுவது மற்றொரு கோளாறின் பக்கவிளைவாக இருக்கலாம். உதாரணத்திற்கு மனச்சோர்வு, மனநிலைக் கோளாறுகள் (bipolar disorder, obsessive-compulsive disorder) அல்லது உணவு பழக்கத்தில் கோளாறு போன்ற ஏதாவது ஒன்றின் பக்கவிளைவாக இருக்கலாம். எந்த ஒரு குறிப்பிட்ட சிகிச்சையையும் விழித்தெழு! சிபாரிசு செய்வதில்லை. கிறிஸ்தவர்கள் எந்தச் சிகிச்சையைப் பெற்றுக்கொண்டாலும் அது பைபிள் நியமங்களுக்கு விரோதமாக இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

e காயப்படுத்திக்கொள்ளும் பழக்கத்திற்குப் பின் மறைந்திருக்கிற விஷயங்களைப் பற்றி முந்தின விழித்தெழு! கட்டுரைகள் ஆராய்ந்தன. உதாரணத்திற்கு, “மனநிலைக் கோளாறுகளைப் புரிந்துகொள்வது” (ஜனவரி 8, 2004 [ஆங்கிலம்]), “மனச்சோர்வடைந்த டீனேஜர்களுக்கு உதவி” (செப்டம்பர் 8, 2001 [ஆங்கிலம்]), “அழகா ஆரோக்கியமா?” (ஜனவரி 22, 1999), அதோடு, “இளைஞர் கேட்கின்றனர் . . . குடிப்பழக்கமுடைய பெற்றோர்​—⁠நான் எப்படி சமாளிப்பது?” (ஆகஸ்டு 8, 1992 [ஆங்கிலம்]) ஆகியவற்றைக் காண்க.

[பக்கம் 20-ன் பெட்டி/படம்]

காயப்படுத்திக்கொள்ளும் ஒருவருக்கு உதவுதல்

உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கோ நண்பர் ஒருவருக்கோ இந்தப் பழக்கம் இருக்கிற​தென்றால் நீங்கள் எப்படி உதவலாம்? இந்தப் பழக்கம் உடையவர்கள் தங்கள் கஷ்டத்தை யாரிடமாவது சொல்ல ஏங்குவார்கள், அதனால் நீங்கள் அவர்கள் சொல்வதை காதுகொடுத்துக் கேட்கலாம். ‘இடுக்கணில் உதவ பிறந்திருக்கும் சிநேகிதனைப்போல’ இருக்க முயலுங்கள். (நீதிமொழிகள் 17:17) அவர்கள் சொல்வதைக் கேட்டு நீங்கள் ஒருவேளை கதிகலங்கிப் போகலாம்; அப்பழக்கத்தை உடனே நிறுத்தும்படி சொல்லலாம். ஆனால் அப்படிச் செய்தால் அவர் உங்களிடமிருந்து விலகித்தான் செல்வார். அப்பழக்கத்தை நிறுத்தச் சொன்னால் மட்டும் போதாது. பிரச்சினைகளை சமாளிக்க புதுப்புது வழிகளைக் கற்றுக்கொடுத்து ஞானமாக அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். (நீதிமொழிகள் 16:23) அதற்கு நேரமெடுக்கும். என்றாலும் பொறுமையுடன் இருங்கள். ‘பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருங்கள்.’​—⁠யாக்கோபு 1:19.

நீங்கள் ஓர் இளைஞராக இருந்தால், தங்களைக் காயப்படுத்திக்கொள்ளும் பழக்கமுள்ள ஒருவரை நீங்களே சரி செய்துவிட முடியும் என நினைத்துக்கொள்ளாதீர்கள். ஏதாவது பிரச்சினையோ கோளாறோ இருப்பதன் காரணமாக அந்த நபருக்கு சிகிச்சை தேவைப்படலாம் என்பதை நினைவில் வையுங்கள். தற்கொலை செய்துகொள்ள நினைத்து அவர் தன்னைக் காயப்படுத்தியிருக்கமாட்டார், ஆனாலும் அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்ட சமயங்களில் அவருடைய பிரச்சினையை முதிர்ச்சிவாய்ந்த, கரிசனையுள்ள ஒரு நபரிடம் சொல்லுமாறு நாம் அவரை அறிவுறுத்துவது ஞானமான செயல்.

[பக்கம் 19-ன் படங்கள்]

நீங்கள் நேசிக்கிற ஒருவரிடம் பிரச்சினையை எடுத்து சொல்வதன் முக்கியத்துவத்தையும் ஜெபம் செய்வதன் முக்கியத்து வத்தையும் லேசாக நினைக்காதீர்கள்