Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏன் என்னை நானே காயப்படுத்திக்கொள்கிறேன்?

ஏன் என்னை நானே காயப்படுத்திக்கொள்கிறேன்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

ஏன் என்னை நானே காயப்படுத்திக்​கொள்கிறேன்?

“என் மணிக்கட்டை நானே பயங்கரமாக கிழிச்சுக்கிட்டேன், நிலைமை தையல் போடற அளவு ஆயிடுச்சு. அப்போ டாக்டர்கிட்ட சொன்னேன், லைட் பல்பு என் கையை கிழிச்சிடுச்சுன்னு, அது நிஜந்தான். ஆனா வேணும்னுதான் அப்படி செஞ்சேன்னு அவர்கிட்ட சொல்லல.”​—⁠ஸாஷா, 23.

“அப்பா, அம்மா என்னுடைய வெட்டுக்காயங்களை பார்த்திருக்காங்க, ஆனா அவங்க பார்த்ததெல்லாம் ஜஸ்ட் ஒரு கீறலா இருக்குமே தவிர ஸீரியஸா எதுவும் இருக்காது. . . . சில சமயம், புதுசா ஒரு காயத்தை அவங்க பார்க்கும்போது, அதுக்கு ஏதாவது காரணம் சொல்லி சமாளிச்சிடுவேன். . . . இதெல்லாம் அவங்களுக்கு தெரியவே கூடாது.” —⁠ஏரியெல், 13.

“என்னை நானே காயப்படுத்திக்கிற பழக்கம் 11 வயசிலிருந்தே ஆரம்பிச்சிடுச்சு. கடவுள் நம்ம உடலை ரொம்ப மதிப்புள்ளதா கருதுறாருன்னு எனக்கு தெரிஞ்சிருந்தாலும், அப்படி செய்யாம இருக்க முடியல.” ​—⁠ஜெனிஃபர், 20.

ஸாஷா, ஏரியெல், ஜெனிஃபர், போன்ற ஒரு நபரை உங்களுக்கும்கூட ஒருவேளை தெரிந்திருக்கலாம். a அந்த நபர் பள்ளியில் உங்களுடன் படிப்பவராக இருக்கலாம், உங்கள் கூடப்பிறந்தவராக இருக்கலாம், ஏன் நீங்களாகவேகூட இருக்கலாம். அமெரிக்காவில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள்​—⁠அதில் அநேகர் இளைஞர்கள்​—⁠பல்வேறு விதங்களில் வேண்டுமென்றே தங்களைக் காயப்படுத்திக்கொள்கிறார்கள், உதாரணத்திற்கு தங்களைக் கீறிக்கொள்கிறார்கள், சூடுவைத்துக்கொள்கிறார்கள், அடித்துப் புண்ணாக்கிக்கொள்கிறார்கள், அல்லது தோலை சிராய்த்துக்கொள்கிறார்கள். b

என்ன! வேண்டுமென்றே காயப்படுத்திக்கொள்கிறார்களா? அந்தக் காலத்திலெல்லாம் அநேகர் இப்படிப்பட்ட பழக்கத்தை விசித்திரமான ஒரு பாணியோடும், ஒரு போலி மதத்தோடும்தான் சம்பந்தப்படுத்திப் பேசுவார்கள். ஆனால் இப்போதோ, அதைப் பற்றி அறிந்திருப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அவ்வாறே, இந்தப் பழக்கம் தங்களுக்கு இருப்பதாக ஒத்துக்கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது, ஆதாரங்கள் இதைக் காட்டுகின்றன. “இந்தப் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே போவதாக எல்லா டாக்டர்களுமே சொல்கிறார்கள்” என அமெரிக்காவிலுள்ள ஒரு சிகிச்சை மையத்தின் இயக்குநரான மைகல் ஹாலன்டர் குறிப்பிடுகிறார்.

தங்களையே காயப்படுத்திக்கொள்ளும் பழக்கம் எப்போதுமே மரண வாசலுக்கு அழைத்துச் செல்லாது என்பதென்னவோ உண்மைதான், ஆனாலும் அது ஆபத்தின் கதவுகளைத் திறந்துவிடும் என்பது உறுதி. பெத் என்ற பெண்ணின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர் இவ்வாறு சொல்கிறார்: “பிளேடினால் என்னையே கிழித்துக்கொள்வேன். இரண்டு முறை ஹாஸ்பிட்டலில் என்னை அட்மிட் செய்தார்கள். ஒரு சமயம் ரொம்ப ஆழமாக அறுத்துக்கொண்டதால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.” மற்ற அநேகரைப் போல இவருக்கும்கூட இந்தப் பழக்கத்தை விட முடியாமல் இருக்கிறது. “15 வயதிலிருந்தே தொடங்கிய இந்தப் பழக்கம் இப்போது 30 வயதைத் தாண்டிய பிறகும்கூட இருக்கிறது” என்கிறார் அவர்.

காயப்படுத்திக்கொள்ளும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? அல்லது உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது இருக்கிறதா? அப்படியானால், நம்பிக்கை இழக்காதீர்கள். உதவி பெற வழி இருக்கிறது. விழித்தெழு!-வின் அடுத்த இதழ், தங்களையே காயப்படுத்திக்கொள்ளும் நபர்களுக்கு எப்படி உதவலாம் என்பதைப் பற்றிக் கலந்தாலோசிக்கும். c முதலாவதாக, இந்தப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளும் ஆட்களைப் பற்றியும் அவர்கள் எதற்காக அப்படிச் செய்கிறார்கள் என்பதைப் பற்றியும் சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கும்.

பலதரப்பட்ட பின்னணிகள்

தங்களைக் காயப்படுத்திக்கொள்கிற எல்லா ஆட்களும் ஒரே ரகம் என்று சொல்லிவிட முடியாது. சிலர் பிரச்சினைகள் நிறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், இன்னும் சிலரோ சந்தோஷம் நிறைந்த ஸ்திரமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஒருசில இளைஞர்கள் படிப்பில் சைபராக இருக்கிறார்கள், ஆனால் மற்ற அநேக இளைஞர்களோ படிப்பில் சூப்பராக இருக்கிறார்கள். இப்படிக் காயப்படுத்திக்கொள்பவர்கள் அந்தப் பழக்கம் தங்களுக்கு இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியையும் பெரும்பாலும் வெளிக்காட்ட மாட்டார்கள். ஏனென்றால், கஷ்டப்படுகிறவர்கள் அநேகமாகக் கஷ்டத்தை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள் அல்லவா? “நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு” என பைபிள் சொல்கிறது.​—⁠நீதிமொழிகள் 14:13.

மேலும், தன்னையே காயப்படுத்திக்கொள்ளும் இந்தப் பிரச்சினை ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. உதாரணமாக, சிலர் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தங்களை வெட்டிக் காயப்படுத்திக்கொள்கிறார்கள், மற்றவர்களோ சராசரியாக ஒரு நாளைக்கு இருமுறை அப்படிக் காயப்படுத்திக்கொள்கிறார்கள் என ஓர் ஆய்வு காண்பிக்கிறது. முன்பைவிட இப்போது அநேக ஆண்கள் தங்களைக் காயப்படுத்திக்கொள்கிறார்கள் என்பது கவனத்திற்குரிய விஷயம். ஆனாலும் இந்தப் பிரச்சினை பருவப் பெண்களிடமே அதிகமாகக் காணப்படுகிறது. d

தங்களையே வெட்டிக் காயப்படுத்திக்கொள்பவர்கள் பலதரப்பட்ட பின்னணிகளிலிருந்து வந்திருந்தாலும் இவர்களில் சிலர் ஒரேவிதமான சில குணங்களைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. இளைஞர்களைப் பற்றிப் பேசும் என்ஸைக்ளோப்பீடியா ஒன்று இவ்வாறு சொல்கிறது: “தங்களையே காயப்படுத்திக்கொள்ளும் இளைஞர்கள் தங்களை வக்கற்றவர்களாக நினைக்கிறார்கள், மற்றவர்களிடம் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படையாகச் சொல்ல சங்கடப்படுகிறார்கள், தனிமையில் இருப்பதாக அல்லது ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாக உணருகிறார்கள், பயப்படுகிறார்கள், அதோடு தங்களைத் தாழ்வாகக் கருதுகிறார்கள்.”

வளரும் பருவத்தில் சவால்களையும் பாதுகாப்பற்ற உணர்வுகளையும் எதிர்ப்படுகிற எல்லா இளைஞர்களும் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் எனச் சிலர் சொல்வது உண்மைதான். என்றாலும், தன்னையே காயப்படுத்திக்கொள்ளும் இளைஞர்களுக்கு இது ஒரு பெரிய போராட்டமாக இருக்கிறது. தன்னை வாட்டி வதைக்கிற உணர்ச்சிகளை, நெருங்கிய ஒருவரிடம் வாய்திறந்து சொல்ல முடியாமல் அப்படிப்பட்ட ஒரு இளம் பெண் தவிக்கிறாள், அதனால் ஸ்கூலில் எதிர்ப்படுகிற அழுத்தங்களோ ஆபீஸில் எதிர்ப்படுகிற சவால்களோ வீட்டில் ஏற்படுகிற சண்டைச் சச்சரவுகளோ அவளுக்கு மலைப் போன்ற பிரச்சினையாக தோன்றுகிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாமல் தவிக்கிறாள், மனந்திறந்து பேச யாருமே இல்லையென உணருகிறாள். பிறகு, இதற்கு மேல் பொறுக்க முடியாது என நினைத்து ஒரு முடிவுக்கு வருகிறாள். ஆம், தன்னுடைய உடலைக் காயப்படுத்திக்கொள்கிறாள். அதன் மூலம் மன உளைச்சலிலிருந்து விடுபட்டு கொஞ்சம் விடுதலை கிடைத்ததுபோல உணருகிறாள். இப்படியே வாழ்க்கையை ஓட்டலாம் என அந்த நேரத்திற்காவது அவள் நினைக்கிறாள்.

மன வேதனையிலிருந்து விடுபட அவள் ஏன் தன் உடலை வேதனைப்படுத்த வேண்டும்? இதைப் புரிந்துகொள்ள இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஊசி போடுவதற்காக டாக்டர் உங்கள் அருகே வருகிறார்; ஊசியை உங்கள் உடம்பில் ஏற்ற ஆரம்பிக்கிறார்; அந்தச் சமயத்தில் வலி தெரியாமலிருக்க நீங்களே உங்களைக் கிள்ளிக்கொண்டதுண்டா அல்லது நகத்தால் உங்கள் சதையை அழுத்திக்கொண்டதுண்டா? தன்னையே காயப்படுத்திக்கொள்கிற பெண்ணும் இது போன்ற ஒன்றையே செய்கிறாள். ஆனால் ஆபத்தான முறையில் செய்கிறாள். தன்னைக் காயப்படுத்துவதன் மூலம் மன வேதனையிலிருந்து விடுபட்டதுபோல உணருகிறாள். அவளுடைய மன வேதனை அவ்வளவு அதிகமாக இருப்பதால் உடலில் ஏற்படும் வேதனையை அவள் தாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறாள். அதனால்தான் தன்னையே காயப்படுத்திக்கொள்வதை ஒரு பெண், “பயத்தைப் போக்குகிற மருந்து” என்று விவரித்தாள்.

“மன அழுத்தத்தைச் சமாளிக்க ஒரு வழி”

இந்தக் கோளாறைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்களுக்கு இது ஒரு தற்கொலை முயற்சிபோல் தோன்றலாம். ஆனால் அது உண்மை அல்ல. “பொதுவாகப் பார்த்தால் இந்த மாதிரியான ஆட்கள் தங்கள் வேதனைக்கு முடிவு கொண்டுவர முயற்சி செய்கிறார்களே தவிர, வாழ்க்கைக்கு அல்ல” என்று ஸப்ரினா ஸோலின் வைல் என்பவர் சொல்கிறார். இளைஞர்களுக்கான ஒரு பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் இவர். அதனால்தான், இப்பழக்கத்தை “உயிரைப் பறிக்கும் பழக்கம் எனக் குறிப்பிடாமல் ‘உயிரைக் காக்கும் பழக்கம்’” என ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. அதோடு, “மன அழுத்தத்தைச் சமாளிக்க ஒரு வழி” எனவும் குறிப்பிடுகிறது. சரி, மன அழுத்தம் என்றால் அது எந்த மாதிரியான அழுத்தம்?

தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்கிறவர்கள் ஏதோவொரு வேதனையை தங்கள் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறார்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, அவர்கள் சிறியவர்களாக இருக்கும்போது கொடுமைப்படுத்தப்பட்டிருக்கலாம், அல்லது கைவிடப்பட்டிருக்கலாம். சிலர் வீட்டில் நடக்கிற சண்டைகளால் மனம் நொந்து போயிருக்கலாம், அல்லது அப்பாவோ அம்மாவோ குடிப்பதைச் சகித்துக்கொள்ள முடியாதிருந்திருக்கலாம். இன்னும் சிலருக்கு மனக்கோளாறு இருந்திருக்கலாம்.

இதுபோக மற்ற பிரச்சினைகளும் காரணமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, சாரா என்பவள் எதையுமே ‘பக்காவாக’ செய்ய வேண்டுமென நினைப்பவள். அப்படிச் செய்ய முடியாமற்போனால் தன்னையே தண்டித்துக்கொள்வாள். வினைமையான தவறுகளைச் செய்து கிறிஸ்தவ மூப்பர்களிடமிருந்து உதவி பெற்றபோதிலும், தினம்தினம் தான் செய்கிற தவறுகளுக்காக அளவுக்கு மீறிய குற்றவுணர்வில் தத்தளித்துக்கொண்டிருந்தாள். “என்னையே நான் ரொம்ப ‘கறாராக’ நடத்த வேண்டும் என நினைத்தேன். என்னை நானே காயப்படுத்திக்கொள்வதை, சுய-சிட்சை என்று கருதினேன். நானே என் முடியைப் பிய்த்துக்கொள்வேன், என் மணிக்கட்டுகளையும் கைகளையும் கிழித்துக்கொள்வேன், என்னையே நான் அடித்துக்கொண்டு பயங்கரமாகக் காயப்படுத்திக்கொள்வேன், எனக்கு நானே தண்டனை விதித்துக்கொண்டு கொதிக்கிற தண்ணீருக்குள் கையை வைத்துக்கொள்வேன், ஸ்வெட்டர் எதுவும் போட்டுக்கொள்ளாமல் கடுங்குளிரில் வெளியே போய் உட்கார்ந்துகொள்வேன், அல்லது ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமலேயே இருப்பேன்” என்று சாரா சொல்கிறாள்.

சாராவின் விஷயத்தில், தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டதற்குக் காரணம் அவள் தன்னையே பயங்கரமாக வெறுத்ததுதான். அவள் சொல்கிறாள்: “நான் செய்த தவறுகளை யெகோவா மன்னித்துவிட்டார் என்று எனக்குக் தெரிந்தாலும் அவர் என்னை மன்னிக்கக் கூடாது என்றே சிலசமயம் நான் விரும்பியிருக்கிறேன். என்னை அந்தளவு வெறுத்ததால் நான் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். கிறிஸ்தவமண்டலம் போதிக்கிற நரகத்தைப் போன்ற வதைக்கிற இடம் ஒன்றை யெகோவா நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார் என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும், எனக்கென்றே அவர் அதைப் படைக்க வேண்டுமென விரும்பினேன்.”

“கொடிய காலங்கள்”

நிம்மதியைக் குலைக்கிற இப்படிப்பட்ட பழக்கங்கள் சமீப பத்தாண்டுகளில் மாத்திரமே வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருப்பது ஏன் எனச் சிலர் கேட்கலாம். நாம் வாழ்வது “கொடிய காலங்கள்” என்பதை பைபிள் மாணாக்கர்கள் அறிந்திருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1) அதனால்தான் விளக்கமளிக்க முடியாத இப்படிப்பட்ட பழக்கம் மனிதர்களுக்கு இருப்பதை​—⁠இளைஞர்களுக்கும்கூட இருப்பதை​—⁠பார்த்து அவர்கள் ஆச்சரியப்படுவதில்லை.

“இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்” என பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 7:7) பருவ வயதில் எதிர்ப்படுகிற சவால்கள்​—⁠சிலருடைய விஷயத்தில், வாழ்க்கையில் ஏற்படுகிற துயரமான சம்பவங்களும்கூட​—⁠இளைஞர்கள் தங்களுக்குத் தாங்களே கேடு விளைவித்துக்கொள்ள காரணமாக இருக்கலாம். தங்களையே காயப்படுத்திக்கொள்கிற பழக்கமும் இதில் உட்படுகிறது. கைவிடப்பட்டவளாக உணருகிற ஓர் இளம் பெண் மனந்திறந்து பேசுவதற்கு யாருமே இல்லையென்ற நினைப்பிலிருந்து விடுபட தன்னையே வெட்டிக் காயப்படுத்திக்கொள்ளலாம். ஆனாலும், விடுபட்டது போன்ற உணர்வு சீக்கிரமே மறைந்துவிடுகிறது. ஏதோவொரு சமயத்தில் மறுபடியும் பிரச்சினை எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. அதுபோலவே, காயப்படுத்திக்கொள்ளும் எண்ணமும் மீண்டும் தலைகாட்டத்தான் செய்கிறது.

தங்களையே காயப்படுத்திக்கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள் பொதுவாக அதை விட்டுவிடத்தான் நினைக்கிறார்கள், ஆனால், அது அவர்களுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட சிலர் என்ன செய்திருக்கிறார்கள்? விழித்தெழு!-வின் பிப்ரவரி, 2006 வெளியீட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . . என்னையே காயப்படுத்திக்கொள்கிற பழக்கத்தை விடுவது எப்படி?” என்ற கட்டுரையில் இது கலந்தாலோசிக்கப்படும்.

சிந்திப்பதற்கு

◼ சில இளைஞர்கள் தங்களையே காயப்படுத்திக்கொள்ளும் பழக்கத்தில் ஈடுபடுவதற்குக் காரணம் என்ன?

◼ இந்தக் கட்டுரையை வாசித்த பிறகு, மனவேதனை அளிக்கிற உணர்ச்சிகளைச் சமாளிப்பதற்குரிய நல்ல வழிகள் ஏதேனும் உங்களுக்குத் தோன்றுகின்றனவா?

[அடிக்குறிப்புகள்]

a இந்தக் கட்டுரையில் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b உடம்பில் துளைபோட்டுக்கொண்டு ஆபரணம் அணிவதும், பச்சைக் குத்திக்கொள்வதும் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்கிற செயலுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால் அவை ஃபேஷனுக்காகச் செய்யப்படுகிறதே தவிர கட்டுப்படுத்த முடியாத உள்தூண்டுதலால் அல்ல. விழித்தெழு!, ஆகஸ்ட் 8, 2000, பக்கங்கள் 18-19-ஐப் பார்க்கவும்.

c லேவியராகமம் 19:28 இவ்வாறு சொல்கிறது: “செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமல் இருப்பீர்களாக.” செத்தவர்களைக் கண்காணிப்பவர்களாகக் கருதப்படுகிற கடவுட்களைப் பிரியப்படுத்துவதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட ஒரு பொய் மதப் பழக்கம் இது. இந்தப் பழக்கத்திற்கும் இக்கட்டுரையில் சிந்திக்கப்படுகிற பழக்கத்திற்கும் வித்தியாசம் உள்ளது.

d இந்தக் காரணத்திற்காக இக்கட்டுரையில் தன்னைத்தான் காயப்படுத்திக்கொள்ளும் நபரை ஒரு பெண்ணாகக் குறிப்பிடுகிறோம். என்றாலும், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகள் ஆணுக்கும் பொருந்தும்.

[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]

“நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு.”​—⁠நீதிமொழிகள் 14:13

[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]

“பொதுவாகப் பார்த்தால் இந்த மாதிரியான ஆட்கள் தங்கள் வேதனைக்கு முடிவு கொண்டுவர முயற்சி செய்கிறார்களே தவிர, வாழ்க்கைக்கு அல்ல”

[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]

நாம் “கொடிய காலங்களில்” வாழ்கிறோம்.​—⁠2 தீமோத்தேயு 3:1