Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர் என்னை காதலிக்கவில்லை என்றால்?

அவர் என்னை காதலிக்கவில்லை என்றால்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

அவர் என்னை காதலிக்கவில்லை என்றால்?

ஆரம்பத்தில் அவரை ஒரு நண்பராகத்தான் கருதினீர்கள். ஆனால் மெல்ல மெல்ல அவரிடம் ஈர்க்கப்பட்டு காதல் வயப்பட்டீர்கள். ஒருவேளை அவருடைய நல்ல பழக்கவழக்கங்களோ உங்களிடம் பேசுகையில் அவருடைய புன்முறுவலோ உங்களை வசீகரித்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி, நாட்கள் உருண்டோடுகின்றன. அவர் தன் காதலை வெளிப்படுத்துகிற வழியைக் காணோம். அதனால் நீங்களே அவரை அணுகி கேட்டுவிட தீர்மானிக்கிறீர்கள். ஆனால், தனக்கு இஷ்டமில்லை என்பதை அவர் கனிவாகவும் அதே சமயம் உறுதியாகவும் தெரிவித்துவிடுகிறார். உங்களுக்கு ஒரே ஏமாற்றம். a

நீங்கள் புண்பட்டிருப்பீர்கள் என்பது உண்மைதான். அதற்காக உணர்ச்சிவசப்படாதீர்கள்; காரியங்களைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க முயலுங்கள். அந்த நபர் உங்கள் காதலை நிராகரித்தது என்னமோ உண்மைதான். ஆனால், அவர் மறுத்துவிட்டார் என்பதற்காக உங்களுடைய மதிப்பு குறைந்துவிட்டதென்று நினைத்துவிடாதீர்கள். அதே சமயம் மற்றவர்கள் உங்களை இன்னமும் நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள் என்ற உண்மையை மறந்துவிடாதீர்கள். சொல்லப்போனால், அவருடைய சொந்த இலக்குகளையும் முன்னுரிமைகளையும் மனதில் வைத்தே அவர் அந்த முடிவுக்கு வந்திருக்கலாம், உங்களை மனதில் வைத்து அல்ல.

நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்றால், ‘உங்கள் கிரியையையும் . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல’ என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். (எபிரெயர் 6:10) சான்யா b இவ்வாறு சொல்கிறாள்: “இன்னமும் நீங்க பாசத்துக்கும் நேசத்துக்கும் உரியவர்தான். ஒத்தையா இருக்கிற உங்களை யெகோவா ரொம்ப அருமையானவரா நினைக்கிறார்.” சர்வலோகத்தின் உன்னதரும் மற்றவர்களும் உங்களை உயர்வாக கருதும்போது, நீங்கள் ஏன் உங்களையே தாழ்வாக நினைத்துக்கொள்ள வேண்டும்?

தோல்வி அடைந்துவிட்டது போன்ற உணர்வு அல்லது ஏற்ற துணைவியாக இருக்க லாயக்கற்றவள் என்ற எண்ணம் உங்களை இன்னமும் வாட்டி வதைக்கலாம். ஆனால் அந்த நபருடைய பார்வையில் நீங்கள் ஒரு “பொருத்தமான ஜோடியாக” இல்லை என்பதற்காக, வேறு எவருக்குமே நீங்கள் “பொருத்தமான ஜோடியாக” இருக்க மாட்டீர்கள் என்று அர்த்தமல்ல. (நியாயாதிபதிகள் 14:3, NW) அதனால், பொருத்தமான துணைவரைத் தேடுவதில் தோல்வி அடைந்துவிட்டதாக நினைக்காதீர்கள். மாறாக, உங்கள் முயற்சிகளால் நல்ல ஒரு பலன் கிடைத்திருக்கிறது என்றே நினைத்துக்கொள்ளுங்கள், ஆம், அவர் உங்களுக்கு ஏற்ற ஒரு ஜோடியல்ல என்பதை நீங்கள் இப்போது புரிந்துகொண்டதே அந்தப் பலன். ஏன் இப்படிச் சொல்கிறோம்?

அவர் உங்களுக்குப் பொருத்தமானவரா?

கணவர்கள் “தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்” என்று பைபிள் கட்டளையிடுகிறது. (எபேசியர் 5:28) மேலும், தங்கள் மனைவிகளுக்குக் ‘கனத்தைச் செய்யுமாறும்’ அவர்களுக்குக் கட்டளையிடுகிறது. (1 பேதுரு 3:7) அந்த இளைஞர் உங்கள் நட்பை பெரிதும் விரும்பலாம். ஆனால் மனைவியாக ஏற்றுக்கொண்டு, உங்களை நேசிக்கவும் கனப்படுத்தவும் தான் தயாராக இல்லை என்பதை உங்கள் காதலை நிராகரிப்பதன் மூலம் அவர் காட்டியுள்ளார். அப்படித் தீர்மானிக்க அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இப்படி நினைப்பவர் உங்களுக்குப் பொருத்தமான கணவராக இருப்பார் என்று நினைக்கிறீர்களா? பைபிள் தராதரத்தின்படி உங்களை நேசிக்காதவரையும் மதிக்காதவரையும் மணந்து கொண்டால், என்னென்ன கஷ்டங்களை எதிர்ப்பட வேண்டியிருக்கும் என சற்று கற்பனை செய்து பாருங்கள்!

உங்கள் காதல் நிராகரிக்கப்பட்டுவிட்ட இச்சமயத்தில் அவரை வேறொரு கோணத்தில் பார்ப்பது உங்கள் மனதைத் தேற்றிக்கொள்ள உங்களுக்கு உதவலாம். சில சமயம் மோகத்தின் காரணமாக, அந்த நபருடைய குணத்திலும் ஆன்மீகத்திலும் உள்ள குறைபாடுகள் மற்றவர்களுக்குப் பளிச்சென தெரிவது போல் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உதாரணத்திற்கு, அந்த இளைஞன் உங்கள் உணர்ச்சிகளை உண்மையிலேயே புரிந்துகொள்ளாமல் இருந்தாரா அல்லது உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்காக வேண்டுமென்றே உங்களிடம் பழகிக் கொண்டிருந்தாரா? இரண்டாவதாக சொல்லப்பட்டது உண்மையென்றால், கரிசனையும் அனுதாபமும் உடைய நல்லவொரு கிறிஸ்தவ கணவராக அவர் இருக்க மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது அல்லவா? இந்த உண்மை உங்களுக்குச் சற்று வருத்தத்தை அளித்தாலும், நல்லவேளை அதை இப்போது தெரிந்துகொண்டீர்கள்!

ஓர் இளைஞன் மார்சியா என்ற பெண்ணிடம் அக்கறை காட்டியபோது அவளுடைய உணர்வுகள் மலர்ந்தன. அவனுடைய உள்நோக்கத்தை அறிய தன்னை மணக்க விருப்பமாவென அவள் கேட்டபோது, விருப்பமில்லை என்று சொல்லிவிட்டான். இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள எது அவளுக்கு உதவியது? அவள் இவ்வாறு சொல்கிறாள்: “என்னுடைய உணர்ச்சிகளைச் சமாளிக்க என் அறிவைப் பயன்படுத்தினேன், என் இருதயத்தை அல்ல.” கணவர்களுக்குரிய பைபிள் தராதரங்களை அவள் சிந்தித்துப் பார்த்தபோது, அதெல்லாம் அவருக்கு இல்லை என்பதைப் புரிந்துகொண்டாள்; இப்போது கவலையிலிருந்து மீண்டிருக்கிறாள்.

அன்ட்ரீயாவுடைய அனுபவமும் இதுபோலத்தான் இருந்தது. தன்னிடம் ஒரு வாலிபன் பழகிய விதத்திலிருந்து அவன் முதிர்ச்சியில்லாதவன் என்பதைப் பின்னர் அவள் தெரிந்து கொண்டாள். அவனுக்குத் திருமணம் செய்துகொள்வதற்கான பக்குவம் இல்லை என்பதையும் புரிந்துகொண்டாள். இந்த உண்மையை உணர்த்தியதற்காக அவள் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறாள். “புண்படுத்தும் சூழ்நிலைகளிலிருந்து யெகோவாவால் உங்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் அவர் நம்மைக் காப்பாற்ற வேண்டுமானால் நாம் அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க வேண்டும்” என கூறுகிறாள். என்றாலும், சில இளைஞர்கள் கண்ணியமாகவே நடந்துகொள்கிறார்கள், எதார்த்தமான காரணங்களுக்காகவே காதலை நிராகரிக்கிறார்கள். எது எப்படியிருந்தாலும், உங்களுடைய உணர்ச்சிப் போராட்டத்தை நீங்கள் எப்படிச் சமாளிக்கலாம்?

உணர்ச்சிப் போராட்டத்தை எப்படிச் சமாளிப்பது

உங்கள் காதலை அவர் நிராகரித்துவிட்டார் என்ற உண்மையை ஜீரணிக்க கொஞ்ச நாள் ஆகும். அவர் மீது உங்களுக்கு இருந்த பாசம் எப்படி மெல்ல மெல்ல அதிகரித்ததோ அதேபோல அந்தப் பாசம் மெல்ல மெல்லத்தான் குறையும். லைட்டை அணைப்பது போல் காதல் உணர்ச்சிகளைப் பட்டென்று அணைத்துவிடுவது கடினம். சில சமயம் அத்தகைய உணர்ச்சிகள் உங்களைத் திணறடிக்கவும் வைக்கலாம்! அப்போது பொறுமையாக இருங்கள். போகப் போக அந்த உணர்ச்சிகள் தணிந்துவிடும். கொளுந்துவிட்டெறியும் அவ்வுணர்ச்சிகளை வேகமாக அணைத்துவிட வேண்டுமானால், அவற்றை தூண்டிவிடுகிற காரியங்களைத் தவிர்த்திடுங்கள்.

உதாரணத்திற்கு, நான் அவரிடம் அப்படிப் பேசியிருக்கலாமோ இப்படிச் செய்திருக்கலாமோ என்றெல்லாம் யோசிப்பதை நிறுத்துங்கள். ஆம், உங்கள் உணர்ச்சிகளை அவரிடம் வெளிப்படுத்தியபோது நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் செய்த செயல்களையும் மறுபடியும் சிந்தித்துப் பார்ப்பதை நிறுத்துங்கள். இல்லாவிட்டால், அவர் உங்கள் காதலை உண்மையில் நிராகரிக்கவில்லை என்று நினைக்க ஆரம்பித்துவிடுவீர்கள் அல்லது வேறு விதத்தில் அவரை அணுகியிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். எனவே, அவருடைய உணர்ச்சிகளை உங்களால் மாற்ற முடியாது என்பதை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள். அவரை நீங்கள் எப்படி அணுகியிருந்தாலும், பெரும்பாலும் அவர் அப்படித்தான் பதிலளித்திருப்பார்.

பகல் கனவுகளில் மிதப்பது மற்றொரு கண்ணியாகும். திருமணத்திற்குப் பின் எல்லாமே சுபமாக இருக்கும் என்பது போலவும் நீங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்வது போலவும் கற்பனையில் கோட்டை கட்ட ஆரம்பித்துவிடலாம். இதுபோன்ற பகல் கனவுகள் மனதிற்கு ரம்மியமாக இருந்தாலும் அவை நிஜம் அல்ல. கனவுகள் கலைந்த பின், பறிகொடுத்த உணர்வு மீண்டும் மீண்டும் தலைதூக்கி உங்களை அலைக்கழிக்கும். சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வருவதைத் தடுத்து நிறுத்த நீங்கள் முயற்சி எடுக்காவிட்டால், அந்த வேதனை நீண்ட காலத்திற்கு உங்களை ஆட்டிப்படைத்து விடலாம்.

பகல் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சியெடுங்கள். மனத்திரையில் அவை தலைகாட்டும்போது, அந்த இடத்தைவிட்டு எழுந்து கொஞ்சம் காலார நடக்க ஆரம்பியுங்கள். உங்கள் எண்ணங்களைத் திசைதிருப்புவதற்காக ஓடியாடி ஏதாவதொரு வேலையைச் செய்யுங்கள். உங்களைச் சோர்வடையச் செய்கிற காரியங்களில் அல்ல, ஆனால் உங்களை உற்சாகமூட்டுகிற காரியங்களிலேயே கவனம் செலுத்துங்கள். (பிலிப்பியர் 4:8) முதலில் இது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் காலப்போக்கில், இந்தப் போராட்டத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், மன அமைதியை அனுபவிப்பீர்கள்.

உற்ற நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு உதவியாக இருக்கும். (நீதிமொழிகள் 17:17) என்றாலும், சான்யா இப்படி எச்சரிக்கிறாள்: “மணமாகாதவர்கள், உங்கள் வயதுக்காரர்கள், மணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள் ஆகியோர் மட்டுமே உங்கள் நண்பர்களாக இருந்தால் பிரயோஜனமில்லை. உங்களைவிட வயதில் மூத்தவர்கள் உங்களுக்கு நண்பர்களாக இருக்க வேண்டும். காரியங்களைச் சரியான கோணத்திலிருந்து பார்க்க அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.” ஆனால், மன வேதனையிலிருந்து உங்களை விடுவிக்க இவர்கள் எல்லாரையும்விட மிகப் பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.

யெகோவா​—⁠பக்கபலமான நண்பர்

பூர்வ காலத்தில் வாழ்ந்த ஓர் உண்மையுள்ள நபர் ஏமாற்றத்தைச் சந்தித்தபோது, யெகோவாவின் உதவிக்காக ஜெபித்தார். பலன்? அவர் இவ்வாறு எழுதினார்: “எப்பொழுதெல்லாம் நான் கவலையோடும் வருத்தத்தோடும் இருக்கிறேனோ, அப்போதெல்லாம் நீர் என்னை ஆறுதல்படுத்தி, மகிழ்விக்கிறீர்.” (சங்கீதம் 94:19, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) விசுவாசத்தோடு யெகோவாவிடம் ஜெபித்தால் அவர் உங்களையும் ஆறுதல்படுத்திக் காத்திடுவார். அன்ட்ரீயாவும் விசுவாசத்தோடு ஜெபித்தாள். அவள் இவ்வாறு சொல்கிறாள்: “வலியைச் சமாளிக்கவும் தொடர்ந்து மற்ற வேலைகளில் கவனம் செலுத்தவும் ஜெபம் மிக முக்கியம்.” ஜெபத்தைப் பற்றி சொல்கையில் சான்யாவும் இவ்வாறு சொல்கிறாள்: “மற்றவர்கள் உங்களை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்து உங்கள் சுயகௌரவம் இல்லை. சுயகௌரவத்தோடு இருக்க ஜெபம் உதவுகிறது.”

உங்கள் உள்ளக் குமுறலை எந்தவொரு மனிதனாலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் யெகோவாவால் புரிந்துகொள்ள முடியும். மணத்துணையுடன் பரஸ்பர அன்பைப் பகிர்ந்துகொள்ளும் உணர்வோடு நம்மை அவர் படைத்துள்ளார். காதலின் வலிமை அவருக்குத் தெரியும் அதோடு அதைக் கட்டுப்படுத்துகிற விதமும் அவருக்குத் தெரியும். புண்பட்ட இதயத்தின் ரண வேதனையைச் சமாளிக்க அவர் உங்களுக்கு உதவுவார், ஏனெனில் 1 யோவான் 3:20 சொல்கிறபடி: “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.”

சமநிலையைக் காத்துக்கொள்ளுங்கள்

திருமணம் என்பது மிகுந்த மகிழ்ச்சி தரும் ஒன்று, என்றாலும் அது மட்டுமே மகிழ்ச்சியைத் தருகிறது என்று சொல்லிவிட முடியாது. யெகோவாவைச் சேவிக்கும் ஆட்கள் அனைவருமே சந்தோஷத்தைக் கண்டடைகின்றனர், மணமானவர்கள் மட்டுமல்ல. ஒருவிதத்தில், மணமானவர்களைவிட மணமாகாமல் இருப்பவர்கள் அநேக நன்மைகளை அனுபவிக்கின்றனர். 1 கொரிந்தியர் 7:28-⁠ல் குறிப்பிட்டுள்ளபடி, ‘சரீரத்தின் உபத்திரவத்திற்கு’ அவர்கள் ஆளாவதில்லை. இந்த உபத்திரவம் மணமானவர்கள் எதிர்ப்படுகிற அழுத்தங்களையும் மன உளைச்சல்களையும் குறிக்கிறது. மணமாகாதவர்கள் சுதந்திரப் பறவைகளாக இருப்பதால் தங்கள் வாழ்க்கையை யெகோவாவின் சேவையில் பெருமளவு உபயோகிக்கலாம். எனவே பைபிள் இவ்வாறு போதிக்கிறது: “திருமணம் செய்பவர் நல்லதையே செய்கிறார். எனினும் திருமணம் செய்யாமல் இருப்பவர் அதைவிட நல்லதையே செய்கிறார்.” (1 கொரிந்தியர் 7:38, பொது மொழிபெயர்ப்பு) நீங்கள் திருமணம் செய்துகொள்ள அதிக ஆசைப்பட்டாலும், இந்த பைபிள் நியமங்களைக் குறித்து தியானிப்பது உங்கள் சமநிலையை இழக்காமலிருக்க உதவும். அதோடு, உங்கள் தற்போதைய சூழ்நிலைகளை முடிந்தளவுக்கு பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவும் உதவும்.

நல்ல நண்பர்கள் சிலர் இவ்வாறு சொல்லலாம்: “கவலைப்படாதே, இன்றைக்கு இல்லையென்றாலும் என்றைக்காவது ஒரு நாள் உனக்குன்னு பொருத்தமான ஒருவர் கிடைப்பார்.” உண்மைதான், ஒருவர் உங்களை நிராகரித்துவிட்டதால் நீங்கள் எப்போதும் தனிமையில் காலத்தைக் கழிக்க வேண்டும் என்றில்லை. கான்டஸ் என்ற ஓர் இளம் கிறிஸ்தவப் பெண் இவ்வாறு நினைக்கிறாள்: “நான் யெகோவாவை நம்புவது உண்மைதான். அதற்காக என்னை சந்தோஷப்படுத்த ஒரு கணவரை அவர் தர வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் என் மனதிலுள்ள வெறுமையை நிரப்ப எனக்கு எது தேவையோ அதை நிச்சயம் அவர் எனக்குத் தருவார்.” தன் காதலை நிராகரித்தபோது ஏற்பட்ட ஏமாற்றத்தைச் சமாளிக்க இத்தகைய நல்ல மனப்பாங்கு அவளுக்கு உதவியது.

இவ்வுலகில் காதல் முயற்சிகள் அடிக்கடி தோல்வியடைகின்றன. அதுபோலத்தான் திருமணங்களும் முறிவடைகின்றன. யெகோவா மேல் நம்பிக்கை வைத்து அவருடைய ஆலோசனையைப் பின்பற்றினால், நம்முடைய சோகத்தை அவர் சந்தோஷமாக மாற்றிவிடுவார். அப்போது தாவீது ராஜாவைப் போலவே நீங்களும் உணருவீர்கள்: “ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை. கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறு உத்தரவு கொடுப்பீர்.”​—சங்கீதம் 38:9, 15. (g04 12/22)

[அடிக்குறிப்புகள்]

a “இளைஞர் கேட்கின்றனர் . . . என் மனசில் இருப்பதை எப்படி அவரிடம் சொல்வேன்?” (நவம்பர் 8, 2004) என்ற கட்டுரையில், ஒரு பெண் வலியப் போய் ஓர் ஆணிடம் காதலிப்பதாக சொல்வதை சில நாட்டு கலாச்சாரங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பழக்கத்திற்கு பைபிள் கண்டனம் தெரிவிக்காவிட்டாலும், மற்றவர்கள் இடறலடையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டுமென்று கிறிஸ்தவர்களை பைபிள் உற்சாகப்படுத்துகிறது. எனவே கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற விரும்புகிறவர்கள் பைபிளின் ஆலோசனையை மனதில் வைத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.​—⁠மத்தேயு 18:6; ரோமர் 14:13; 1 கொரிந்தியர் 8:13.

b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 14-ன் படங்கள்]

கடவுள் அளிக்கிற உதவியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்