Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இன்டர்நெட் அதன் ஆபத்துக்களைத் தவிர்த்தல்

இன்டர்நெட் அதன் ஆபத்துக்களைத் தவிர்த்தல்

பைபிளின் கருத்து

இன்டர்நெட் அதன் ஆபத்துக்களைத் தவிர்த்தல்

இந்தியாவிலுள்ள ஒதுக்குப்புறமான கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாயி, அ.ஐ.மா., சிகாகோவில் சோயா பீன்ஸின் விலை என்ன என்று பார்க்கிறார்; அதற்கு ஏற்றவாறு தனது பயிர்களை எப்போது விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என தீர்மானிக்கிறார். அதே நேரத்தில், தனது பேரன் அனுப்பிய ஈ-மெயிலை வாசித்த ஒரு மூதாட்டியின் உதடு புன்முறுவல் பூக்கிறது. ஒரு பயணி, தான் போகப்போகும் இடத்தில் வானிலை எப்படியிருக்கப் போகிறது என்பதை ஆராய்கிறார். ஒரு தாய், தனது குழந்தை வீட்டுப்பாடம் செய்ய உதவும் விஷயங்களை கண்டுபிடிக்கிறார். இவர்கள் அனைவருமே இன்டர்நெட் உதவியால் இவற்றை சாதிக்கிறார்கள். உலகம் முழுவதிலும் 60 கோடிக்கும் அதிகமானோர் இன்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டிருப்பதாக கணிக்கப்படுகிறது. இந்த இன்டர்நெட் யுகம், மக்கள் தொடர்புகொள்ளும் விதத்தையும், வியாபாரம் செய்யும் விதத்தையும் பெருமளவு மாற்றியுள்ளது.

சைபர் சந்ததி என்று சில சமயங்களில் அழைக்கப்படும் இளைய தலைமுறையினருக்கு இன்டர்நெட்டில் ஆர்வம் அதிகம். செய்திகள் திரட்டவும், ஆராய்ச்சி செய்யவும் மாணவர்கள் இப்போது நூலகம் செல்வதில்லை, மாறாக ஏராளமானோர் இன்டர்நெட்டை நாடுகிறார்கள். “சுருங்க சொன்னால், இந்த மாணவர்களின் . . . படிப்பு முழுவதுமே இன்டர்நெட்டை உபயோகித்துதான்” என்று டீயென்னா எல். டில்லிஷ் கூறினார். இவர், ஐக்கிய மாகாணங்களில் காலேஜ் படிப்பை முடிக்கவிருக்கும் மாணவர்களை வைத்து நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியின் இயக்குநர் ஆவார். ஆம், இன்டர்நெட் என்பது இன்றைய சமுதாயத்தில் மதிப்புமிக்க ஒன்றாகிவிட்டது.

பொதுவாக, ஒரு கருவி அதிக சக்தி வாய்ந்ததாக இருந்தால் அதிக ஆபத்தானதாகவும் இருக்கும். சாதாரண ரம்பத்தைவிட எரிவாயுவில் செயல்படும் ரம்பம் அதிக சக்தி வாய்ந்தது. ஆனால், அதை மிகவும் ஜாக்கிரதையாக உபயோகிக்க வேண்டும். அதைப் போலவே, இன்டர்நெட்டும் அதிக வலிமை வாய்ந்தது, அதிக பிரயோஜனமும் உள்ளது. ஆனால், அதை உபயோகிக்கையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; ஏனெனில், அதில் பயங்கர ஆபத்துக்களும் இருக்கின்றன. இந்த ஆபத்துக்கள் பற்றிய கவலையால்தான் ஐரோப்பிய பேரவையில் அங்கம் வகிக்கும் 40-⁠க்கும் அதிகமான நாடுகள் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை தயார் செய்தன. சைபர் குற்றச்செயல்களிலிருந்து சமுதாயத்தைப் பாதுகாப்பதே அந்த ஒப்பந்தத்தின் குறிக்கோளாகும்.

ஏன் இந்தளவுக்குக் கவலைப்படுகின்றனர்? முக்கியமாக கிறிஸ்தவர்கள் அதிக எச்சரிப்புடன் இருக்க வேண்டிய சில ஆபத்துக்கள் யாவை? இந்த ஆபத்துக்கள் காரணமாக இன்டர்நெட் உபயோகிப்பதையே நிறுத்திவிட வேண்டுமா? பைபிள் என்ன ஆலோசனை அளிக்கிறது?

எச்சரிப்பு தேவை

‘தீவினை செய்ய உபாயஞ்செய்யும் துஷ்டர்கள்’ என விவரிக்கப்படும் நபர்களால் வரும் ஆபத்துக்கள் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பைபிள் எச்சரித்தது. (நீதிமொழிகள் 24:8) அவர்கள் “துன்மார்க்கர்” என்றும் அவர்களுடைய “வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது” என்றும் எரேமியா தீர்க்கதரிசி விவரித்தார். வேடர்களைப் போல மனுஷரைப் பிடிப்பதற்காக அவர்கள் “கண்ணிகளை” வைத்து “ஐசுவரியவான்களாகிறார்கள்” என்றும் சொன்னார். (எரேமியா 5:26, 27) தொழில்நுட்பத்தின் பலனாக நவீன நாளைய ‘துன்மார்க்கரின்’ கைகளில் புதிய புதிய கண்ணிகள் கிடைத்திருக்கின்றன. கிறிஸ்தவர்களுக்குப் பெரும் ஆபத்தாய் முடியும் சில திட்டங்களை இப்போது ஆராய்வோம்.

இன்டர்நெட் ஆபாசம் என்பது வருடத்திற்கு சுமார் 12,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் வியாபாரமாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில், கிட்டத்தட்ட 1,800 சதம் என்ற மலைக்க வைக்கும் விகிதத்தில் ஆபாச வெப்-சைட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அத்தகைய வெப்-சைட்டுகள் தற்போது 26 கோடிக்கும் அதிகம் இருப்பதாக கணக்கிடப்படுகிறது. அதுமட்டுமா, அந்த எண்ணிக்கை என்றுமில்லா வேகத்தில் அதிகரித்து வருகிறது. “இன்டர்நெட்டில் ஆபாசம் பெருமளவு மலிந்து கிடப்பதால் எதேச்சையாக அதைப் பார்த்துவிடுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏராளம். இதனால்தான், சைபர் செக்ஸுக்கு அடிமையாகும் வாய்ப்பும் மிக அதிகமுள்ளது” என்று டாக்டர் கிம்பர்லீ எஸ். யங் கூறினார். இவர், இன்டர்நெட் அடிமைத்தன மையத்தின் நிர்வாக இயக்குநர்.

“அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்” என்று பைபிள் கூறுகிறது. (யாக்கோபு 1:14) ஆபாச வியாபாரிகளைப் பொறுத்தவரை கம்ப்யூட்டர் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்களுடைய பலியாட்களே. அதனால்தான், அவரவருடைய ‘சுய இச்சையை’ அதாவது, ‘மாம்சத்தின் இச்சையையும், கண்களின் இச்சையையும்’ தூண்டிவிட பல்வேறு சூழ்ச்சிகளை உபயோகிக்கிறார்கள். (1 யோவான் 2:16) இன்டர்நெட் உபயோகிக்கும் அனுபவமற்றோரைக் கவருவதே, அல்லது பைபிள் வார்த்தைகளுக்குரிய வைனின் விளக்க அகராதி (ஆங்கிலம்) விவரிக்கிறபடி, “கண்ணி வைத்து கவர்ந்திழுப்பதே” இந்தத் துஷ்டர்களின் குறிக்கோள். அவர்களை “நயங்காட்டி” ஏமாற்றவே இந்தத் துஷ்டர்கள் விரும்புகிறார்கள்.​—நீதிமொழிகள் 1:10.

பைபிள் காலங்களில் இருந்த துஷ்டரைப் போலவே ஆபாச வியாபாரிகள் அடிக்கடி தந்திரத்தை உபயோகிக்கிறார்கள். புதிய வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் தீவிர முயற்சியில் ஒவ்வொரு நாளும் சுமார் 200 கோடி ஆபாச ஈ-மெயில்கள் அனுப்பப்படுவதாக கணக்கிடப்படுகிறது. பொதுவாக, தேவையற்ற இப்படிப்பட்ட ஈ-மெயில்களின் தலைப்பைப் பார்த்தால் ஆபத்தற்ற விஷயங்கள் இருப்பது போல தோன்றும். ஆனால், அதில் ஒரு மெயிலைத் திறந்தாலே போதும் மடை திறந்த வெள்ளம் போல ஆபாச காட்சிகள் பெருக்கெடுக்கும், அதற்கு அணை போடுவது கடினம். ஈ-மெயில் அனுப்பும் பட்டியலிலிருந்து நம் பெயரை நீக்கச் சொன்னாலோ இன்னும் ஏராளமான தேவையற்ற ஆபாச மெயில்கள் வந்து குவியலாம்.

பறவை பிடிக்கும் ஒருவன் பாதை நெடுக விதைகளைக் கவனமாகப் போட்டு வைக்கிறான். அனுபவமற்ற ஒரு பறவை ருசியான விதைகளை ஒவ்வொன்றாக கொத்திக்கொண்டே வருகையில் திடீரென்று கண்ணியில் சிக்கிக்கொள்ளும். அதைப் போலவே, பாலுணர்வுகளைத் தூண்டும் படங்களைக் கொஞ்சம் ருசித்துப் பார்க்க சிலருக்கு ஆர்வம் ஏற்படலாம். தங்களை யாருமே பார்க்கவில்லை என்றும் அவர்கள் நினைத்துக்கொள்ளலாம். அது அவர்களுக்குக் கிளர்ச்சியூட்டுவதால் இந்த சுண்டியிழுக்கும், கவர்ச்சிப் படங்களை சிலர் மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள். அதனால் வெட்க உணர்வும் குற்றவுணர்வும் அவர்களை பீடிக்கலாம். முதலில் அதிர்ச்சியளித்த விஷயங்கள் காலப்போக்கில் சர்வசாதாரணமானவையாக மாறிவிடலாம். ஆபாசத்தைப் பார்க்க விரும்புவோரின் ஆசைகளுக்கு இன்டர்நெட் உரம் போடுகிறது; அந்த ஆசைகள் பாவமுள்ள செயல்களாக வேகமாய் வளர வைக்கிறது. (யாக்கோபு 1:15) கடைசியில், அத்தகைய நபர்கள் ‘கேவலமான நடத்தையை’ வளர்த்துக்கொள்ளக்கூடும். “ஒழுக்கநெறி துளியும் இல்லாத, சமூக விரோத காமவெறியே அவர்கள் முக்கிய குணமாகிவிடும்” என்று டாக்டர் விக்டர் கிளைன் கூறுகிறார். இவர், இந்தக் கண்ணியில் சிக்கிய நூற்றுக்கணக்கானோருக்கு சிகிச்சையளித்த மனோதத்துவ மருத்துவ நிபுணர்.

சாட் ரூம்களின் ஆபத்துக்கள்

இன்டர்நெட் சாட் ரூம்கள் நேரத்தை வீணடிப்பது மட்டுமல்ல குடும்ப உறவுகளை முறிப்பதற்கும் முக்கிய காரணமாகின்றன. தன் மனைவி இன்டர்நெட்டில் மணிக்கணக்காக நேரம் செலவிடுவதால் வெறுத்துப்போன ஒரு கணவன் இவ்வாறு எழுதினார்: “அவள் வீட்டிற்கு வந்த கையோடு கம்ப்யூட்டரை ஆன் பண்ணுகிறாள்; ஐந்து, ஆறு மணிநேரம் கழித்துத்தான் அதை ஆஃப் பண்ணுகிறாள். இதனால் எங்கள் மணவாழ்க்கை ஆட்டம் கண்டுவிட்டது.” ஆம், இன்டர்நெட்டில் நேரம் செலவிடுகையில் அது உங்கள் துணையிடமிருந்தும் குடும்பத்திடமிருந்தும் உங்களைப் பிரித்து வைக்கிறது.

இன்டர்நெட், “மற்ற உறவுகளுக்குப் பாலமாக அமைகிறது. அந்த உறவுகள் அவ்வளவு பலமாக இருப்பதால் தற்போதைய உறவுகளைக்கூட முறித்துப் போட்டுவிடலாம்” என்று திருமண ஆலோசனை வழங்கும் ரிலேட் என்ற அமைப்பின் முக்கிய நிர்வாகி ஆஞ்சலா சிப்ஸன் கூறுகிறார். சாட் ரூமில் வெறுமனே நட்புடன் கதை பேச ஆரம்பிப்பது சீக்கிரத்தில் நெருக்கமான உறவாக மாறிவிடலாம். “தந்திர மனமுள்ள” நபர்கள் பாலியல் நோக்கத்தோடு தங்கள் பலியாட்களிடம் ‘இச்சகம் பேசலாம்’ அதாவது, உச்சிகுளிர வைக்கும் விஷயங்களை அவர்களிடம் பேசலாம். (நீதிமொழிகள் 6:24; 7:10) “அவன் என்மீது அன்பு மழை பொழிந்தான். எப்போது பார்த்தாலும் என்னைப் பற்றி ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து பேசியே என்னை மயக்கிவிட்டான்” என பிரிட்டன் கூட்டரசைச் சேர்ந்த 26 வயது நிகோலா விளக்குகிறாள்; பலியான நபர்களில் இவளும் ஒருத்தி. “சாட் ரூமில் காதல் லீலைகள் புரிவதில் ஆரம்பித்து, பெரும்பாலும் துணையை டைவர்ஸ் செய்வதில் போய் முடிவடையும் இந்த ஆபத்தான சறுக்கு மரத்தைப் பற்றி மக்களை எச்சரிக்க” வேண்டும் என்று டாக்டர் அல் கூப்பர் கூறுகிறார். இவர், செக்ஸும் இன்டர்நெட்டும்: மருத்துவர்களுக்கு ஒரு கையேடு (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் பதிப்பாசிரியர்.

‘கம்ப்யூட்டர் செக்ஸ் குற்றவாளிகளால்’ மிக எளிதில் ஏமாற்றப்பட்டு அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் சிறுவர்களே. செக்ஸுக்காகக் குழந்தைகளைத் துஷ்பிரயோகம் செய்வோர் “வாயின் தாறுமாறுகளை”யும் “உதடுகளின் மாறுபாட்டை”யும் உபயோகித்து அப்பாவி குழந்தைகளை ஏமாற்றுகிறார்கள். (நீதிமொழிகள் 4:24; 7:7) அவர்களை ஸ்பெஷலானவர்களாக உணர வைப்பதற்காக நன்கு கவனித்துக் கொள்கிறார்கள், பாசத்தைப் பொழிகிறார்கள், தயவாக நடந்துகொள்கிறார்கள். அந்தக் குழந்தைக்கு பிடித்த இசை, ஹாபிக்கள் போன்ற எல்லாமே அவர்களுக்கு அத்துப்படி என்பது போல தோன்றுகிறது. வீட்டில் தலைதூக்கும் சிறுசிறு பிரச்சினைகளையும் பெரிதுபடுத்தி அந்தக் குழந்தைக்கும் அதன் குடும்பத்திற்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். தங்கள் காம இச்சைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, இந்த நயவஞ்சகர்கள் ஊர்சுற்றி பார்க்க ஒரு டிக்கெட்டைக்கூட பலியாட்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதன் விளைவுகள் குலைநடுங்க வைக்கின்றன.

பைபிள் நியமங்கள் உங்களைப் பாதுகாக்கும்

இந்த ஆபத்துக்களை எல்லாம் சிந்தித்துப் பார்த்த பிறகு, இன்டர்நெட்டையே உபயோகிக்க வேண்டாம் என்று சிலர் முடிவுகட்டிவிடுகிறார்கள். ஆனால், இன்டர்நெட்டில் குறைந்த எண்ணிக்கையான வெப்-சைட்டுகளே ஆபத்தானவை என்பதையும் இதை உபயோகிக்கும் பெரும்பாலானோர் எந்தப் பெரிய பிரச்சினைகளையும் சந்தித்ததில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ஆபத்துக்களிலிருந்து நம்மை ‘பாதுகாக்கும்’ ஆலோசனைகளை பைபிள் அளிப்பதால் நாம் சந்தோஷப்படலாம். அறிவு, ஞானம், நல்யோசனை ஆகியவற்றைப் பெறும்படி அது நம்மை உற்சாகப்படுத்துகிறது. இப்படிப்பட்ட குணங்கள் ‘நம்மை காப்பாற்றி,’ ‘துன்மார்க்கனுடைய வழியிலிருந்து’ நம்மை தப்புவிக்கும். (நீதிமொழிகள் 2:10-12) ஆனால் “ஞானம் எங்கேயிருந்து வரும்” என்று பூர்வத்தில் கடவுளின் ஊழியராக இருந்த யோபு கேட்டார். “ஆண்டவருக்குப் [யெகோவாவுக்கு] பயப்படுவதே ஞானம்” என்பதே அதற்கான பதில்.​—யோபு 28:20, 28.

“தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் [யெகோவாவுக்கு] பயப்படும் பயம்”; அதுவே, தெய்வீக குணங்களை வளர்த்துக்கொள்ள அடிப்படை. (நீதிமொழிகள் 1:7; 8:13; 9:10) கடவுளிடம் அன்பும் பயபக்தியும் இருந்து, அவருடைய வல்லமைக்கும் அதிகாரத்திற்கும் சரியான மரியாதை காட்டும்போது அவர் வெறுக்கிற கெட்ட காரியங்களை நாமும் வெறுத்து, ஒதுக்கித் தள்ள ஆரம்பிப்போம். தெளிந்த மனதோடு சிந்திக்கும் திறனும், தெய்வீக அறிவும் நமக்கு இருக்கும்போது நம் மனதையும், இருதயத்தையும், ஆவிக்குரிய தன்மையையும் கெடுக்கும் ஆபத்துக்களை நம்மால் அடையாளம் காண முடியும். நம் குடும்பத்தைக் குலைத்து, யெகோவாவுடனான நம் உறவை முறித்துப்போடக்கூடிய சுயநலமான, பேராசையான மனப்பான்மைகளை நாம் வெறுக்க ஆரம்பிப்போம்.

ஆகவே, நீங்கள் இன்டர்நெட்டை உபயோகித்தால் அதன் ஆபத்துக்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ‘நெருப்போடு’ விளையாடாதீர்கள்; கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க தீர்மானமாக இருங்கள். (1 நாளாகமம் 28:7) அப்படி செய்வீர்கள் என்றால், இன்டர்நெட்டை உபயோகிக்கையில் ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடும்போது ஞானமாக அவற்றைவிட்டு ஓடிவிடுவீர்கள்.​—1 கொரிந்தியர் 6:18. (g04 12/8)

[பக்கம் -ன் பெட்டி] 19]

ஆபாசத்தைவிட்டு ஓடிவிடுங்கள்!

“பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர் முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.”​—⁠எபேசியர் 5:3.

“ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, . . . பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.”​—⁠கொலோசெயர் 3:5.

‘தேவனுடைய சித்தம்’ என்னவென்றால், “தேவனை அறியாத அஞ்ஞானிகளைப் போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்”ள வேண்டும் என்பதே.​—⁠1 தெசலோனிக்கேயர் 4:3-5.

[பக்கம் -ன் பெட்டி/படங்கள்] 20, 21]

இன்டர்நெட் சாட் ரூம்கள்​—⁠உஷார்!

இன்டர்நெட் குற்றச்செயல்களைத் துப்பறியும் நிபுணரான ஒரு பெண் போலீஸ், இன்டர்நெட் சாட் ரூம்களின் ஆபத்துக்களை நேரில் வந்து பார்க்கும்படி விழித்தெழு! எழுத்தாளர் ஒருவரை அழைத்தார். தன்னை ஒரு 14-வயது சிறுமியாகக் காட்டிக்கொண்டு கம்ப்யூட்டர் சாட் ரூமில் “உரையாட” ஆரம்பித்தார். சில வினாடிகளுக்குள், ஏகப்பட்ட நபர்கள் தொடர்புகொள்ள ஆரம்பித்தார்கள். முன்பின் தெரியாத அந்த ஆசாமிகள், “உன் வீடு எங்கே?” “நீ பொண்ணா, பையனா?” “நாம இப்போ பேச ஆரம்பிக்கலாமா?” என பல கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். போலீஸார் சந்தேகிக்கும் காமவெறியர்களிடமிருந்தே அநேக கேள்விகள் வந்திருந்தன. பிள்ளைகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் அத்தகைய காமுகர்கள் சாட் ரூமில் உங்கள் பிள்ளையோடு எவ்வளவு எளிதில் தொடர்புகொள்ள முடியும் என்பதைத்தான் இது காட்டுகிறது.

பிள்ளைகள் சாட் ரூமைப் பயன்படுத்துவதில் எந்த ஆபத்துமில்லை என சில பெற்றோர்கள் நினைக்கிறார்கள், ஏனெனில் சாட் ரூமிலுள்ள எல்லாராலும் அவர்கள் உரையாடுவதைப் பார்க்க முடியும் என நினைக்கிறார்கள். ஆனால், சாட் ரூமிற்குள் நுழைந்த பிறகு வேறு யாருக்கும் தெரியாத விதத்தில் ஒருவரோடு மட்டும் உரையாடுவதற்கு நீங்கள் அழைக்கப்படலாம். சில சமயம், கிசுகிசுத்தல் என அழைக்கப்படுகிற இந்தப் பழக்கத்தைக் குறித்து பிரிட்டன் இன்டர்நெட்டில் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு ஒன்று இவ்வாறு எச்சரிக்கிறது: “இது எப்படியிருக்கிறது என்றால், நிறைய பேர் கலந்துகொண்டிருக்கிற ஒரு பார்ட்டியிலிருந்து தனியாக வெளியே வந்து ஒரு தனி அறையில் முன்பின் தெரியாத ஓர் ஆசாமியிடம் பேசுவது போல் இருக்​கிறது.”

பிள்ளைகளைத் துஷ்பிரயோகம் செய்கிற அநேக காமுகர்கள் ஒரு பிள்ளையுடன் கம்ப்யூட்டரில் “உரையாடுவதோடு” மட்டுமே நிறுத்திக் கொள்வதில்லையென்ற விஷயத்தையும் பெற்றோர்கள் புரிந்துகொள்வது அவசியம். இன்டர்நெட் குற்றச்செயல் கருத்தரங்கம் தயாரித்த ஓர் ஆவணம் இவ்வாறு அறிக்கை செய்கிறது: “சாட் ரூம்களில் உரையாடல்களை ஆரம்பிக்கும் அவர்கள் படிப்படியாக ஈ-மெயில், (மொபைல்) ஃபோன் போன்ற வேறு வழிகளிலும் பிள்ளையோடு தவறாமல் தொடர்புகொள்ள ஆரம்பித்துவிடலாம்.” அமெரிக்க துப்பறியும் நிபுணர்களிடமிருந்து வந்த ஓர் அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “கம்ப்யூட்டர்-செக்ஸ் குற்றவாளிக்கு, ஒரு பிள்ளையோடு ஆன்-லைனில் பேசுவது “த்ரில்லாக” இருந்தாலும், அது அவனுக்குப் பெரிய ஒரு பாரமாகவும் இருக்கலாம். பிள்ளைகளோடு டெலிபோனில் பேசுவதைத்தான் அவர்களில் பெரும்பாலோர் விரும்புகிறார்கள். பிள்ளைகளோடு அடிக்கடி ‘டெலிபோன் செக்ஸில்’ அவர்கள் ஈடுபடுகிறார்கள்; அதுமட்டுமல்ல, உடலுறவு கொள்வதற்காக அவர்களை நேரில் சந்திக்கவும் ஏற்பாடு செய்கிறார்கள்.”

பொதுவாக, கம்ப்யூட்டர்-செக்ஸ் குற்றவாளிகள் தங்கள் காமவெறியைத் தணித்துக்கொள்ள தங்களுடைய ஃபோன் நம்பரை பிள்ளைகளிடம் கொடுக்கிறார்கள். உங்கள் பிள்ளை தப்பித்தவறி அந்த நம்பரைச் சுழற்றினால் போதும், அவர்களுடைய ஃபோனிலுள்ள ஒரு விசேஷ கருவி அந்தப் பிள்ளையின் ஃபோன் நம்பரைப் பதிவு செய்துவிடும். மற்றவர்களோ கட்டணம் செலுத்த வேண்டியிராத நம்பர்களை அல்லது தாங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் நம்பரைப் பிள்ளைக்குக் கொடுக்கிறார்கள். சிலர் பிள்ளைக்கு ஒரு செல் ஃபோனையே அனுப்பி வைத்திருக்கிறார்கள். அத்தகைய குற்றவாளிகள் ஒருவேளை கடிதங்களையும், ஃபோட்டோக்களையும், பரிசுகளையும்கூட அனுப்பி வைக்கலாம்.

சாட் ரூம் ஆபத்துக்களுக்கு இப்படிப் பலியாவது பிள்ளைகள் மட்டுமே அல்ல. சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவன் பெண்களைக் கவரும் விதத்தில் தேனொழுகப் பேசிப் பேசி, ஒரே சமயத்தில் ஆறு பெண்களை தன் காதல் வலையில் விழ வைத்தான். அப்படிப் “பலியானவர்களில்” 27 வயது பட்டதாரியான ஷெரெல் என்ற அழகியும் ஒருத்தி; அவள் இவ்வாறு சொல்கிறாள்: “அதை இப்போ என்னால விளக்கவே முடியல. அவனோட ஆன்-லைனில் நான் வச்சிருந்த தொடர்பு ரொம்ப ரொம்ப தீவிரமாகி, என் முழு வாழ்க்கையையுமே ஆக்ரமிக்க ஆரம்பிச்சுது.”

“இன்டர்நெட்டில் உரையாடுவது பெண்களுக்கு செளகரியமாக இருக்கிறது, ஏனெனில் தோற்றத்தை வைத்து யாரும் அவர்களை எடைபோட முடியாதே” என்கிறார் விமன் இன் சைபர்ஸ்பேஸ் என்ற ஓர் அமைப்பை நிறுவிய ஜென்னி மேடென். “ஆனால், குறிப்பாக இப்படிச் சாட் ரூம்களில் உரையாடும்போது தங்களைப் பற்றி ஏகப்பட்ட தகவல்களை அவர்கள் மனந்திறந்து மளமளவென கொட்டிவிடுவதால், தாங்களாகவே வலியப்போய் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்” என்றும் அவர் சொன்னார்.

பியெட்ரிஸ் ஆபிலா மைல்ஹாம் என்ற ஒரு பெண் ஃப்ளாரிடா பல்கலைக்கழகத்திற்காக நடத்திய ஆய்வின்போது ஓர் ஆளிடம் பல கேள்விகளைக் கேட்கையில், “என்னோட கம்ப்யூட்டரை நான் ஆன் செய்தாலே போதும், ஆயிரக்கணக்கான பெண்கள் என்கிட்ட ‘பேச’ காத்திட்டிருப்பாங்க” என அவன் சொன்னான். ஆபிலா இவ்வாறு குறிப்பிட்டாள்: “சீக்கிரத்திலேயே, ஒழுக்கங்கெட்ட நடத்தைக்கு இன்டர்நெட் பேர்போனதாக ஆகப்போகிறது, யார் கண்டார்கள், இப்போதே அது அப்படித்தான் இருக்கிறதோ என்னவோ.” செக்ஸும் இன்டர்நெட்டும்: மருத்துவர்களுக்கு ஒரு கையேடு (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் பதிப்பாசிரியரான டாக்டர் ஆல்கூப்பர் இவ்வாறு சொன்னார்: “தம்பதிகளுக்கிடையே எழும்பும் பிரச்சினைகளுக்கு ஆன்-லைன் செக்ஸ்தான் பிரதான காரணம் என்ற அறிக்கை நாடெங்குமுள்ள மருத்துவ ஆலோசகர்களிடமிருந்து எங்களுக்கு வந்த வண்ணம் இருக்கிறது.”

சிந்திக்க வைக்கும் இந்த உண்மைகளைக் கவனிக்கும்போது, இன்டர்நெட்டை பயன்படுத்துகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதே ஞானமான செயல் என்பது தெரிகிறது. உங்கள் பிள்ளைகளிடம் பேசுங்கள், ஆபத்திலிருந்து அவர்கள் தங்களை எப்படித் தற்காத்துக் கொள்ளலாம் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். ஆம், சரியான விவரங்களைத் தெரிந்து வைத்திருந்தால், இன்டர்நெட் ஆபத்துக்களை உங்களால் தவிர்க்க முடியும்.​—பிரசங்கி 7:12.