Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒன்றுபட்ட ஐரோப்பா—அவ்வளவு முக்கியமானதா?

ஒன்றுபட்ட ஐரோப்பா—அவ்வளவு முக்கியமானதா?

ஒன்றுபட்ட ஐரோப்பா—அவ்வளவு முக்கியமானதா?

ஷேம்பெய்ன் மது பாட்டில்கள் பெரும் சப்தத்துடன் திறக்கப்பட்டன. வானவேடிக்கைகள் ஆகாயத்தை ஒளி வெள்ளத்தில் மூழ்கடித்தன. எதற்காக? புதிய ஆயிரமாண்டு துவங்கியதற்காகவா? இல்லை. உலக காலண்டர்களில் வெறுமனே ஓர் இலக்கத்தை மாற்றுவதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை அது குறித்தது. அது ஜனவரி 1, 1999. யூரோப்பியன் யூனியன் (EU) முழுவதற்குமாக ஒரே, புதிய நாணயம்—யூரோ என்று அழைக்கப்பட்ட ஒருவகை பணம்—அன்று அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.

ஐரோப்பாவின் ஒற்றுமைக்கான வேட்கை தணியாதது. பொதுவான ஒரு நாணயம் அறிமுகப்படுத்தியதைக் கண்ட ஐரோப்பியர்களில் அநேகர் இந்த தணியாத வேட்கையில் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம் என கருதுகின்றனர். யூரோ அறிமுகப்படுத்தப்பட்டதை “ஐரோப்பிய ஒருமைப்பாட்டின் மணிமகுடம்” என டா டேலக்ராஃப் என்ற டச்சு செய்தித்தாள் புகழாரம் சூட்டுகிறது. ஐரோப்பிய ஒருமைப்பாட்டிற்கான கனவுகள், நாடுகளுக்கிடையே பேச்சு வார்த்தைகள், அதில் ஏற்பட்ட தாமதங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்தன. ஆனால் இப்போதோ அந்தக் கனவு மிக சீக்கிரத்தில் பலிக்கும் என தோன்றியது.

எதற்கு இத்தனை ஆரவாரம்! இப்படியாக ஐரோப்பாவிற்கு வெளியே வசிப்பவர்கள் ஒருவேளை யோசிக்கலாம். யூரோ அறிமுகப்படுத்தப்பட்டதும், ஐரோப்பிய ஒருமைப்பாட்டிற்கான எல்லா முயற்சிகளுமே அவர்களுடைய அனுதின வாழ்க்கையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என அவர்களுக்கு தோன்றலாம். இருப்பினும், உலகிலேயே மிகப் பெரிய பொருளாதார கூட்டமைப்பை ஐரோப்பிய ஒருமைப்பாடு கொண்டுவரும். எனவே, நாம் எங்கே வாழ்ந்தாலும்சரி, ஒன்றுபட்ட ஐரோப்பாவை புறக்கணிப்பதற்கில்லை.

உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களின் அரசு துணைச் செயலர் மார்க் க்ரோஸ்மன், சமீபத்தில் வட அமெரிக்கர்களிடம் இப்படியாக சொன்னார்: “நம் செழிப்பு ஐரோப்பாவோடு சம்பந்தப்பட்டது.” ஏன்? “ஐ.மா.-ன் தொழிற்சாலை வேலையாட்களில் 12 பேரில் ஒருவர், அமெரிக்காவிலுள்ள ஐரோப்பியர்களால் நடத்தப்படும் 4,000 வியாபார ஸ்தாபனங்களில் வேலை செய்கின்றனர்” என்பதே அவர் குறிப்பிட்ட காரணங்களுள் ஒன்று. ஐரோப்பாவின் இந்த புதிய நாணயம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலையை பாதிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. ஐரோப்பாவிற்குத் தொலைவிலுள்ள நாடுகளிலும்கூட அடமான விலையை பாதிக்கக்கூடும்.

வளரும் நாடுகள் இதனால் நன்மையடைய வாய்ப்பிருக்கிறது. எப்படி? “ஐரோப்பிய நாணயங்கள் பலவற்றை மாற்றீடு செய்துள்ள யூரோ நாணயம், யூரோப்பியன் யூனியனோடு இந்த வளரும் நாடுகள் கொண்டுள்ள வணிக உறவுகளை எளிதாக்கிவிடும்” என ஓர் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. மேலும், ஐரோப்பாவில் வியாபாரம் நடத்தும் ஜப்பானிய மற்றும் ஐ.மா. வணிக ஸ்தாபனங்கள் நன்மை அடையும் என சிலர் எதிர்பார்க்கின்றனர். யூரோ நாணயம் நிலைபெற்றதும், ஐரோப்பிய நாடுகளுக்கிடையே உள்ள நாணயமாற்று வீதத்தில் மாற்றங்கள் இராது. எனவே ஐரோப்பாவில் வாணிபம் செய்வது மிக லாபகரமானதாக இருக்கும்.

ஐரோப்பாவிற்கு நீங்கள் செல்ல திட்டுமிடுகிறீர்களென்றால், ஐரோப்பிய ஒருமைப்பாட்டின் நன்மைகளை நீங்கள் வெகுவாக உணர முடியும். ஒரே நாணயத்தை, அதாவது யூரோவை வைத்துக்கொண்டே ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பொருட்களை வாங்க முடியும். ஐ.மா.-ன் டாலரைப் போன்றே மதிப்புடையது யூரோ. க்யூல்டன், ஃப்ராங்க், லிரா, மார்க் என்று பல நாட்டு நாணயங்களையும் பாக்கெட் சைஸ் கால்குலேட்டரையும் கையில் வைத்துக்கொண்டும் குழம்பிக்கொண்டும் சுற்றுலாப் பயணிகள் இனி அலைய வேண்டியதில்லை.

இருப்பினும், ஒருமைப்பட்ட ஒரு கண்டத்தை உருவாக்குவதில் ஐரோப்பா எடுக்கும் இந்த முயற்சி கருத்தைக் கவரும் ஒன்றை நம்முன் வைக்கிறது. அது என்ன? நம்பிக்கை. சில ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் போர் எனும் புகை சூழ்ந்து இருந்ததை யோசித்துப் பாருங்கள். அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஐரோப்பிய ஒருமைப்பாடென்பது ஆச்சரியமூட்டும் ஒரு நிகழ்ச்சி. உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் இதை ஆர்வத்தோடு கவனிக்கின்றனர்.

இதைப் பார்க்கும்போது, உலக ஒற்றுமை உண்மையிலேயே எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதானா என அநேகர் அதிசயப்படுகின்றனர். இதைத் தவிர்ப்பதற்கில்லை. இந்த எதிர்பார்ப்பு கானல்நீராகத்தான் இருக்கிறது! ஒருமைப்பாட்டிற்கான ஐரோப்பாவின் முயற்சி, உலக ஒற்றுமையினிடமாக மனிதனை நெருங்கிவரச் செய்யுமா? இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதற்குமுன், ஐரோப்பிய ஒருமைப்பாட்டைக் குறித்து ஒரு நேர்மையான பரிசீலனை அவசியம். ஒற்றுமையை குலைக்கும் என்ன தடைக்கற்கள் இன்னும் நீக்கப்பட வேண்டும்?

[பக்கம் 4-ன் பெட்டி/அட்டவணை]

ஐக்கியம் உருவாகிறதா?

ஐரோப்பிய ஒருமைப்பாடு என்பது முற்றிலுமே ஒரு புதிய கருத்தல்ல. ரோமப் பேரரசின் காலத்திலும் ஓரளவு ஐக்கியம் இருந்தது. சார்லிமேனின் ஆட்சியிலும் பின்னர் முதலாம் நெப்போலியன் ஆட்சியிலும் அமைதி நிலவியது. இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் படைவலிமையாலும் வெற்றியாலும்தான் ஒற்றுமை கிடைத்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின், ஒத்துழைப்பின் அடிப்படையில் ஐக்கியம் தேவை என்பதை போரால் அலைக்கழிக்கப்பட்ட நாடுகள் உணர்ந்தன. இப்படிப்பட்ட ஒத்துழைப்பு, பொருளாதார நிலையை திரும்பப் பெறுவதற்கு மட்டுமல்ல போரை அடியோடு தடுக்கவும் உதவும் என இந்த நாடுகள் நம்பின. இன்றைய நிலைக்கு வழிநடத்திய சில முக்கியமான சம்பவங்கள் இதோ!

1948 நெதர்லாந்திலுள்ள தி ஹாக்கில் நூற்றுக்கணக்கான ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் ஒன்றுகூடி, “நாங்கள் இனி எங்களுக்குள் போரிட்டுக் கொள்ளவே மாட்டோம்” என உறுதிபூண்டனர்.

1950 நிலக்கரி, இரும்பு தொழிற்சாலைகளை காப்பதற்காக பிரான்சும் ஜெர்மனியும் ஒத்துழைக்க ஆரம்பித்தன. பல நாடுகள் அவற்றோடு சேர்ந்துகொண்டன. இதுவே, ஐரோப்பிய நிலக்கரி மற்றும் இரும்பு கூட்டமைப்பை உருவாக்கியது (ECSC). இந்தக் கூட்டமைப்பு 1952 முதல் இயங்க ஆரம்பித்தது. பெல்ஜியம், பிரான்சு, இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகளும் இதில் அடங்கும்.

1957 இந்தக் கூட்டமைப்பின் (ECSC) ஆறு உறுப்பினர்கள் வேறே இரு அமைப்புகளை உருவாக்கியுள்ளனர்: ஐரோப்பிய பொருளாதார கூட்டமைப்பு (EEC), ஐரோப்பிய அணு ஆற்றல் கூட்டமைப்பு (Euratom).

1967 ஐரோப்பிய நிலக்கரி மற்றும் இரும்பு கூட்டமைப்போடும் ஐரோப்பிய அணு ஆற்றல் கூட்டமைப்போடும் பொருளாதார கூட்டமைப்பு சேர்ந்து ஐரோப்பிய சமுதாயத்தை (EC) உருவாக்குகிறது.

1973 டென்மார்க், அயர்லாந்து, பிரிட்டிஷ் கூட்டரசு நாடுகளை உறுப்பு நாடுகளாக ஐரோப்பிய சமுதாயம் அனுமதித்திருக்கிறது.

1981 கிரீஸும் ஐரோப்பிய சமுதாயத்தில் சேர்ந்தது.

1986 போர்ச்சுகலும் ஸ்பெய்னும் ஐரோப்பிய சமுதாயத்தில் சேர்ந்துகொண்டன.

1990 மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் சேர்ந்தபோது, முன்னாள் கிழக்கு ஜெர்மனியை இந்த அமைப்புக்குள் கொண்டு வந்தது. இப்படியாக, ஐரோப்பிய சமுதாயம் விரிவாக்கப்பட்டது.

1993 பொருளாதார மற்றும் அரசியல் ஒருமைப்பாட்டிற்காக ஐரோப்பிய சமுதாயத்தின் உறுப்பு நாடுகள் எடுத்த முயற்சிகள் யாவும் யூரோப்பியன் யூனியன் (EU) உருவாக வித்திட்டன.

2000 யூரோப்பியன் யூனியனில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. அவை: அயர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, பிரான்சு, பின்லாந்து, கிரீஸ், டென்மார்க், நெதர்லாந்து, பிரிட்டிஷ் கூட்டரசு, பெல்ஜியம், போர்ச்சுகல், லக்ஸம்பர்க், ஜெர்மனி, ஸ்பெய்ன், ஸ்வீடன்.

[பக்கம் 3-ன் படம்]

ஐரோப்பிய நாணயங்கள் பலவற்றை யூரோ மாற்றீடு செய்யும்

[பக்கம் 3-ல் உள்ள படத்திற்கான நன்றி]

3, 5-6, 8 ஆகிய பக்கங்களில் யூரோவும் யூரோ அடையாளங்களும்: © European Monetary Institute