Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஐரோப்பா உண்மையிலேயே ஒன்றுபடுமா?

ஐரோப்பா உண்மையிலேயே ஒன்றுபடுமா?

ஐரோப்பா உண்மையிலேயே ஒன்றுபடுமா?

ஒருமைப்பாட்டைக் குறித்து ஐரோப்பா உண்மையிலேயே ஆர்வமாய் இருக்கிறதென்பதை நம்புவது உங்களுக்கு கடினமாக இருக்கிறதா? அப்படியென்றால், ஐரோப்பிய நாடுகள் ஒருசிலவற்றின் எல்லைகளை கடப்பதே நீங்கள் செய்ய வேண்டிய காரியம். யூரோப்பியன் யூனியனில் (EU) உள்ள நாடுகளில் மக்கள் இப்போது மற்ற நாடுகளுக்கு தாராளமாக சென்று வரலாம். எல்லையை கடப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லவே இல்லை. சுற்றுலாப் பயணிகளுக்கு இது மட்டில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், நன்மை பெறுபவர்கள் இவர்கள் மட்டுமேயல்ல. யூரோப்பியன் யூனியனின் குடிமக்கள் படிப்பிற்காக, வேலைக்காக, வியாபாரம் தொடங்குவதற்காக இப்போது அந்த நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் சுலபமாக செல்லலாம். அந்த யூனியனில் உள்ள ஏழை நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதில் இது விளைவடைந்துள்ளது.

எல்லையை சுலபமாக தாண்டுவதென்பது நிச்சயமாகவே மிகப் பெரிய மாற்றமே. எனவே, ஐரோப்பா ஏற்கெனவே ஒன்றுபட்டுவிட்டது, ஒருமைப்பாட்டிற்கு தடைக்கற்கள் எதுவுமே இல்லை என்ற முடிவுக்கு நாம் வர வேண்டுமா? இல்லை! மாறாக, இன்னும் தடைக்கற்கள் நம் முன்னே இருக்கின்றன. அவற்றில் சில மிக அச்சுறுத்துபவையாயும் உள்ளன. ஆனால், இவற்றைக் குறித்து சிந்திப்பதற்குமுன், ஒருமைப்பாட்டிற்காக இதுவரை செய்யப்பட்ட மாபெரும் சாதனைகளை முதலில் சிந்திப்போம். ஒற்றுமைக்காக இந்தளவு நம்பிக்கை ஏன் மக்களுக்கு இருக்கிறது என்பதை இந்த வகையில் நாம் நன்கு புரிந்துகொள்ளலாம்.

நாணய ஒருமைப்பாட்டை நோக்கி

எல்லைகளை நிர்வகிப்பதென்பது பெருஞ்செலவு பிடிப்பதாகும். யூரோப்பியன் யூனியனில் உள்ள 15 நாடுகளில் சுங்கவரி விதிமுறைகளுக்காகவே ஆண்டுதோறும் 1,200 கோடி யூரோ செலவாகியது. அதுமட்டுமா! ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளில் இருக்கும் இந்தப் புதிய நிலைமை பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. யூரோப்பியன் யூனியனில் சுமார் 37 கோடி மக்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே வாணிகக் கூட்டணி அமைப்பின்மூலம் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு தாராளமாக செல்ல முடியும். இதை யோசிக்கும்போது, பொருளாதார வளர்ச்சிக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. இந்த வளர்ச்சியை சாத்தியமாக்கியது எது?

பிப்ரவரி 1992-ல், அரசாங்க தலைவர்கள் யூரோப்பியன் யூனியன் ஒப்பந்தம் அல்லது மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். ஒருமைப்பாட்டிற்காக எடுத்த மிகப் பெரிய படி இது. ஐரோப்பாவில், ஒரே வணிகக்கூட்டமைப்பை நிறுவவும், மத்திய வங்கி ஒன்றையும் ஒரே நாணயத்தை அறிமுகப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வழிவகுத்தது. இருந்தாலும், மற்றொரு முக்கிய படி எடுக்க வேண்டியதாயிற்று; நாணயமாற்று வீதத்திலிருக்கும் மாற்றங்களை நீக்குவதே அது. அதாவது, நாணயமாற்று வீதத்தில் ஏற்படும் மாற்றத்தால், ஒரு நாள் லாபகரமாக இருக்கும் வணிகம் அடுத்த நாள் படுநஷ்டமடையும்.

இந்தத் தடையும் நீக்கப்பட்டது. பொருளாதார மற்றும் நாணயமுறை கூட்டமைப்பு (EMU) நிறுவப்பட்டதும் பொது நாணயமாக யூரோ அறிமுகப்படுத்தப்பட்டதும் ஒருமைப்பாட்டிற்கான தடையை நீக்கியது. நாணயமாற்று வீதத்தால் ஏற்படும் செலவுகள் இப்போது இல்லை. நாணயமாற்று வீதத்தால் ஏற்படும் நஷ்டங்களால் வியாபாரங்கள் இனியும் முடங்கிப்போக வேண்டிய அவசியமில்லை. விளைவு? செலவுகள் குறைக்கப்படுகின்றன. பன்னாட்டு வணிகம் பெருகுகிறது. இது, மேலுமதிகமான வேலை வாய்ப்புகளை அள்ளித் தருகிறது. இதன் விளைவாக, ஜனங்களிடம் பணப்புழக்கம் அதிகமாகிறது. இது எல்லாருக்குமே நன்மை அளிக்கிறது.

1998-ல் ஐரோப்பிய மத்திய வங்கி ஸ்தாபிக்கப்பட்டது. ஒரே பொது நாணயத்தை ஏற்றுக்கொள்வதில் எடுக்கப்பட்ட மற்றொரு முக்கிய படி இதுவே. இந்தத் தனியுரிமை வங்கி, ஜெர்மனியிலுள்ள ஃப்ராங்க்ஃபர்ட் நகரத்தில் இருக்கிறது. இதில் அங்கத்தினர்களாக இருக்கும் அரசாங்கங்களின் நாணயமுறைக்கு இதுவே சர்வ அதிகாரம் உடையதாய் இருக்கிறது. 11 நாடுகள் அடங்கிய இது யூரோ மண்டலம் என அழைக்கப்படுகிறது. இதில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இது கடும் முயற்சி எடுக்கிறது. a யூரோ, டாலர், யென் போன்ற நாணயங்களுக்கிடையே உள்ள நாணயமாற்று வீதத்தில் இருக்கும் மாற்றங்களை இது நிலைப்படுத்துகிறது.

நாணயத்தைப் பொருத்தமட்டில் ஒருமைப்பாட்டை நோக்கி மாபெரும் படிகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நிலவும் பிரிவினைகளை நாணயம் பற்றிய விஷயங்களே தெளிவாக காட்டுகின்றன.

நாணயமுறை குறித்து இன்னுமதிக விஷயங்கள்

ஏழை நாடுகளுக்கே உரிய குறைபாடுகள் யூரோப்பியன் யூனியனையும் விட்டுவைக்கவில்லை. யூனியனில் உறுப்பினர்களாக இருக்கும் பணக்கார நாடுகள் செல்வத்தை தங்களோடு பகிர்ந்துகொள்வதில்லை என ஏழை நாடுகள் கருதுகின்றன. யூரோப்பியன் யூனியனில் இருக்கும் தங்கள் ஏழை பார்ட்னர்களுக்கு அதிகப்படியான பண உதவியை தர வேண்டும் என்பதை எந்த உறுப்பு நாடுகளுமே மறுப்பதில்லை. இருப்பினும், அவ்வாறு உதவிக்கரம் நீட்டாமல் இருப்பதற்கான தகுந்த காரணங்கள் இருப்பதாக பணக்கார நாடுகள் நினைக்கின்றன.

ஜெர்மனியை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். ஐரோப்பிய ஒருமைப்பாட்டிற்கு ஆகும் செலவுகளை ஏற்றுக்கொள்ள அந்த நாடு ஆர்வத்தோடு முன்வந்தது. ஆனால், இப்போதோ அந்த ஆர்வம் தணிந்து, மெல்ல மறைந்துகொண்டே வருகிறது. ஏனென்றால், அந்த நாட்டின் பணச் செலவு மலைபோல் வளர்ந்து கொண்டே போவதுதான் காரணம். கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் இணைப்பதற்கான செலவு மிக அதிகம். ஆண்டுதோறும் 10,000 கோடி டாலர் செலவாகிறது. தேசிய பட்ஜெட்டில் இது கால்பாகத்தை விழுங்கி விடுகிறது. இந்த புதிய நிலைமை ஜெர்மனியின் தேசிய கடனை ராக்கெட் வேகத்தில் மளமளவென வளர்த்துள்ளது. இது அந்தளவுக்கு வளர்ந்துள்ளதால், ஐரோப்பிய நாணயமுறை கூட்டமைப்பில் தொடர்ந்து உறுப்பினராக இருப்பதே ஜெர்மனிக்கு பெரும்பாடாகி உள்ளது.

யூரோப்பியன் யூனியனில் சேர புதிய உறுப்பினர்களின் நாட்டம்

சுருங்கச் சொன்னால், ஐரோப்பிய நாணயமுறை கூட்டமைப்பில் உறுப்பினராகாத யூரோப்பியன் யூனியன் நாடுகள் தங்கள் தடைக்கற்களை 2002-ம் ஆண்டிற்குள் சரிப்படுத்திவிடுவர் என ஒரே பொதுவான நாணயத்தை ஆதரிப்பவர்கள் நம்புகின்றனர். அந்த ஆண்டிற்குள், இன்றைய ஐரோப்பிய நாணயங்கள் அனைத்தையும் யூரோ நாணயங்களும் நோட்டுகளும் மாற்றீடு செய்யும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். பிரிட்டன், டென்மார்க், ஸ்வீடன் நாடுகளும் தங்கள் தயக்கத்தை விட்டுவிட்டால், பவுண்ட், க்ரோனர் போன்ற நாணயங்களை யூரோ மாற்றீடு செய்வதை அந்த நாடுகளிலுள்ள மக்களும் காணலாம்.

இதற்கிடையே, இன்னும் ஆறு ஐரோப்பிய நாடுகள் யூரோப்பியன் யூனியனின் கதவை தட்டுகின்றன. அவை: சைப்ரஸ், செக் குடியரசு, எஸ்டோனியா, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேனியா. இன்னும் ஐந்து நாடுகளும் வரிசையில் காத்திருக்கின்றன. அவை: பல்கேரியா, லாட்வியா, லிதுவேனியா, ருமேனியா, ஸ்லோவாகியா. இவை, அவ்வளவு சுலபமாக சேர்ந்துவிட முடியாது. கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வரும் பத்து புதிய நாடுகள் ஐரோப்பிய நாணயமுறை கூட்டமைப்பில் சேருவதற்கு யூரோப்பியன் யூனியன் 8,000 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும். இப்படியாக, 2000 முதல் 2006-ம் ஆண்டுகளுக்கான கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

யூரோப்பியன் யூனியனிலிருந்து இந்நாடுகள் நிதியுதவி பெறும் என்பது மெய்யே. இருப்பினும், இந்தப் புதிய நாடுகள் கூட்டமைப்பில் சேர்வதற்கு தேவையான நிதியை திரட்ட வேண்டும். இது, யூரோப்பியன் யூனியன் கொடுக்கும் நிதியைவிட பல மடங்கு அதிகம். உதாரணமாக, ஹங்கேரி தன்னுடைய சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வளர்ச்சிக்காக 1,200 கோடி யூரோ செலவழிக்க வேண்டும். தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களுக்காக மட்டுமே செக் குடியரசோ 340 கோடி யூரோவுக்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டும். காற்றில் வெளியேற்றப்படும் கந்தகத்தை குறைப்பதற்காக போலந்து 300 கோடி யூரோ செலவழிக்க வேண்டும். எது எப்படியிருந்தாலும்சரி, இந்த செலவுகளையெல்லாம்விட நன்மைகள் நிச்சயம் அதிகமாக இருக்குமென விண்ணப்ப நாடுகள் கருதுகின்றன. ஒரு காரியம் நிச்சயம், யூரோப்பியன் யூனியன் நாடுகளோடு அவற்றின் வணிகம் பெருகும். இருந்தாலும், இந்த நாடுகள் வரிசையில் காத்திருக்க வேண்டியது அவசியம். பண விவகாரங்களை யூரோப்பியன் யூனியன் சரிப்படுத்திய பிறகே புதிய நாடுகளை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பதே தற்போது பொது அபிப்பிராயமாக இருக்கிறது.

வன்மம், தேசியம், வேலையில்லா திண்டாட்டம்

ஒருமைப்பாட்டிற்கான முயற்சிகள் பெருமளவில் இருக்கின்றன. என்றாலும், இந்தக் கண்டத்தில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்து ஐரோப்பாவிலும் அதற்கு வெளியேயும் மிகுந்த கவலை இருக்கிறது. பால்கன் பிராந்தியத்தை கூறு கூறாக்கும் இனக்கலவரங்கள் போன்ற பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்பதில் பெரும் திண்டாட்டம் உள்ளது. உதாரணம்: முதலில் போஸ்னியாவில் ஏற்பட்ட போர், பின்னர் கொஸோவாவில் ஏற்பட்ட கலவரம். ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலுள்ள நாடுகளிலும் ஏற்படும் இப்படிப்பட்ட கலவரங்களை எப்படி சமாளிப்பது என்பதில் யூரோப்பியன் யூனியன் உறுப்பு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. யூரோப்பியன் யூனியன் என்பது அரசியல் கூட்டமைப்பல்ல. ஒரே பொதுவான வெளிநாட்டுக் கொள்கையும் இதற்கில்லை. எனவே, தேசிய அக்கறைகள்தான் பெரும்பாலும் முன்வைக்கப்படுகின்றன. ‘ஐரோப்பிய நாடுகளின் ஒருமைப்பாடு’ என்பதற்கு மாபெரும் தடைக்கல்லாக இருப்பதே தேசிய அக்கறைகள்தான் என்பது தெளிவாகிறது.

அதிகளவிலான வேலையில்லா திண்டாட்டமே, ஐரோப்பா எதிர்கொள்ளும் மற்றுமொரு நெருக்கடி நிலை. மொத்த வேலையாட்களில் சராசரியாக 10 சதவீதத்தினர் வேலையில்லாமல் இருக்கின்றனர். அதாவது, 1.6 கோடிக்கும் அதிகமானோர் வேலையில்லாமல் இருப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. யூரோப்பியன் யூனியன் நாடுகளின் மொத்த மக்கள் தொகையில் கால்பங்கு இளைஞர்களே. பல நாடுகளில் உள்ள இளைஞர்கள், வேலைக்காக பெரும்பாடுபடுகின்றனர். ஆனால், இந்த வேட்டையில் அவர்கள் வெற்றி பெறுவதில்லை. அதிகளவிலான இந்த வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிரான போராட்டமே ஐரோப்பாவின் நம்பர் ஒன் சவால்! லேபர் மார்க்கெட்டை சீரமைப்பதற்காக இதுவரை எடுத்த முயற்சிகள் யாவும் பயனற்று போயின.

இருப்பினும், ஒருமைப்பாட்டிற்கு இன்னும் ஒரு பெரிய தடைக்கல் உள்ளது.

யார் பொறுப்பு?

ஒன்றுபட்ட ஐரோப்பாவை அடைவதில் மாபெரும் தடைக்கல்லாக இருப்பது அரசுரிமையே. தேசிய அளவில் ஆட்சியுரிமையை எந்தளவு விட்டுக்கொடுக்க உறுப்பு நாடுகள் தயாராய் இருக்கின்றன என்பதன் பேரில் அவை ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும். தேசியம் என்ற வரம்புக்கு அப்பாற்பட்ட ஓர் ஆட்சிமுறையை நிறுவுவதே யூரோப்பியன் யூனியனின் குறிக்கோள். இதை அடைய முடியவில்லையெனில், யூரோவை அறிமுகப்படுத்தியது வெறுமனே “தற்காலிகமான வெற்றியே” என லா மான்ட் குறிப்பிடுகிறது. எனினும், அதிகாரத்தை விட்டுக்கொடுப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக சில உறுப்பு நாடுகள் கருதுகின்றன. உதாரணமாக, தன்னுடைய நாடு “தேசங்களுக்கெல்லாம் தலைவராக இருக்கவே பிறந்தது, சீடராக இருக்கவல்ல” என யூரோப்பியன் யூனியனின் உறுப்புநாடுகள் ஒன்றின் தலைவர் சொன்னார்.

காலப்போக்கில், அதிகாரம் மொத்தமும் பெரிய நாடுகள் வசம் சென்றுவிடும்; அப்போது, தங்களைப் போன்ற சிறிய நாடுகளின் நலன்களை பாதிக்கும் தீர்மானங்களையும்கூட அவை ஏற்றுக்கொள்ளலாம் என சிறிய நாடுகள் அஞ்சுகின்றன. உதாரணமாக, யூரோப்பியன் யூனியனின் பல்வேறு ஏஜென்ஸிக்களின் தலைமையகங்களை எந்த நாடுகளில் அமைப்பது என்பது எப்படி தீர்மானிக்கப்படும் என சிறிய நாடுகள் வியப்பு தெரிவிக்கின்றன. இது முக்கியமான தீர்மானம். ஏனெனில், தலைமையகத்தை உடைய நாடுகளில் இந்த ஏஜென்ஸிக்கள் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு, போர், வேலையில்லா திண்டாட்டம், தேசியம் போன்றவை ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் தடைக்கற்கள். ஐரோப்பிய ஒருமைப்பாடு என்பதே ஏமாற்றத்திற்குரியது என்ற உணர்வை ஒருவேளை இந்தத் தடைக்கற்கள் தரலாம். என்றாலும், அசாதாரணமான முன்னேற்றம் இந்த திசையில் ஏற்பட்டுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை. ஆனால், இன்னும் எவ்வளவு முன்னேற்றம் வர இருக்கிறதென்பது என்னவோ அநிச்சயமே. எல்லா மனித அரசாங்கங்களுக்கும் இடறலாக இருக்கும் பிரச்சினைகளே, ஒன்றுபட்ட ஐரோப்பாவிற்காக முனைப்பாக செயல்படுவோரின் முயற்சிகளுக்கும் இடறலாக உள்ளன.

இனக்கலவரம், வேலையில்லா திண்டாட்டம், வறுமை, போர் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் ஓர் அரசாங்கத்தைக் கொண்டு வருவது சாத்தியமா? மக்கள் அனைவரும் மெய்யான ஐக்கியத்தில் வாழும் உலகம் கூடிய காரியமா? இவற்றிற்குரிய பதிலை அடுத்த கட்டுரையில் காணலாம். அந்தப் பதில் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்.

[அடிக்குறிப்பு]

a அயர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, பிரான்சு, பின்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், போர்ச்சுகல், லக்ஸம்பர்க், ஜெர்மனி, ஸ்பெய்ன் ஆகியவையே அந்நாடுகள். கிரீஸ், டென்மார்க், பிரிட்டிஷ் கூட்டரசு, ஸ்வீடன் ஆகிய நாடுகள் பல காரணங்களுக்காக இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

[பக்கம் -ன் பெட்டி6]

வந்துவிட்டது யூரோ!

தற்போது புழக்கத்தில் இருக்கும் யூரோப்பியன் யூனியனின் உறுப்பு நாடுகளின் தேசிய நாணயங்களும் வங்கி உறுதிமொழி கடன்பத்திரங்களும் 2002-ம் ஆண்டு வரை இருக்கும். என்றாலும், பணம் சம்பந்தப்படாத வணிக நடவடிக்கைகள் ஏற்கெனவே யூரோவில்தான் நடக்கின்றன. இந்த நாணயமுறை மாற்றம், வங்கிகளுக்கு மிகப் பெரிய பணியை உட்படுத்துகிறது. இருப்பினும், உறுப்பு நாடுகளின் பல்வேறு தேசிய நாணயங்களுக்கும் யூரோவிற்கும் இடையே நாணயமாற்று வீதம் இப்போது நிலைப்படுத்தப்பட்டுள்ளது. பங்கு சந்தைகளும் விலையை யூரோவில்தான் காட்டுகின்றன. பல கடைகளும் வியாபார ஸ்தாபனங்களும் தங்கள் பொருட்களின் விலையை உள்ளூர் நாணயத்திலும் யூரோவிலும் காட்டுகின்றன.

இப்படிப்பட்ட வணிகம் தீவிர மாற்றங்களை உட்படுத்துகிறது. முக்கியமாக, வயோதிபர் பலர் தாங்கள் பல காலமாக புழங்கி வந்த மார்க், ஃப்ராங்க், அல்லது லிரா போன்ற நாணயங்களை இனியும் உபயோகப்படுத்த முடியாது. கடைகளில் உபயோகப்படுத்தப்படும் விலையை காட்டும் தானியங்கி மெஷின்களும், தானியங்கி டெல்லர் மெஷின்களும் (teller machine) மாற்றி அமைக்கப்பட வேண்டி உள்ளன. எந்தவித தடங்கல்களுமின்றி இந்த மாற்றத்தை கொண்டிருக்க, அதிகாரப்பூர்வ தகவல் அளிக்கும் ஏற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. யூரோவின் வரவையும் அதன் உபயோகத்தையும் இவை மக்களுக்கு தெரிவிக்கும்.

இன்னும் இருக்கும் தடைகள் எதுவாயிருந்தாலும்சரி, யூரோ வருகிறது. யூரோ நாணயங்களையும் நோட்டுகளையும் அச்சிடுவது ஏற்கெனவே துவங்கிவிட்டது. இது மாபெரும் பணி. சுமார் 1.5 கோடி மக்கள் தொகை உடைய நெதர்லாந்து போன்ற சிறிய நாட்டிலும்கூட, யூரோ நாணயங்களையும் நோட்டுகளையும் அச்சிடும் பிரஸ்கள் மூன்று வருடங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். அப்போதுதான், ஜனவரி 1, 2002-ற்குள் 280 கோடி யூரோ நாணயங்களும் 3.8 கோடி வங்கி உறுதிமொழி கடன் பத்திரங்களும் அச்சடிக்க முடியும். இந்தப் புதிய பத்திரங்களை ஒரே அடுக்காக அடுக்கினால், அதன் உயரம் சுமார் 20 கிலோமீட்டருக்கு போகும்!

[பக்கம் 7-ன் பெட்டி]

“யூரோ படுகொலை”?

யூரோப்பியன் கமிஷன், யூரோப்பியன் யூனியனின் செயற்குழு. இது 1999-ன் ஆரம்பத்தில், மிகக் கடுமையான தோல்வியைத் தழுவியது. மோசடி, ஊழல், முறையற்ற சலுகை போன்ற குற்றச்சாட்டுகள் இந்த கமிஷன்மீது சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழு அமர்த்தப்பட்டது. இந்த விசாரணை ஆறு வாரங்கள் தொடர்ந்தது. யூரோப்பியன் கமிஷனில் மோசடி மற்றும் தவறான செயல்பாட்டுமுறை போன்றவை நிகழ்ந்ததை அந்தக் குழு கண்டுபிடித்தது. இருப்பினும், யூரோப்பியன் கமிஷனின் அங்கத்தினர்கள் தங்களுக்கு சொத்து சேர்த்துக்கொண்டார்கள் என்பதற்கான எந்தவித ஆதாரமும் இந்தக் குழுவிற்கு கிடைக்கவில்லை.

அந்தக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டபின், 1999 மார்ச்-ல், யூரோப்பியன் கமிஷன் அங்கத்தினர்கள் அனைவருமே ராஜினாமா செய்தனர். முன்னொருபோதும் நிகழ்ந்திராத செயல் இது. யூரோப்பியன் யூனியனை மிக நெருக்கடியான நிலைமைக்குள் ஆழ்த்தியது இது. இதைத்தான் “யூரோ படுகொலை” என டைம் பத்திரிகை அழைத்தது. ஐரோப்பிய ஒருமைப்பாட்டிற்கான முயற்சியின்மீது இந்த நெருக்கடி எப்படிப்பட்ட பாதிப்புக்களை கொண்டுவரும் என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும்.

[பக்கம் 5-ன் படம்]

ஐரோப்பாவில் எல்லைகளைத் தாண்டுவது ஏற்கெனவே மிகவும் சுலபமாகிவிட்டது

[பக்கம் 7-ன் படம்]

ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்க்ஃபர்ட்டில் இருக்கும் ஐரோப்பிய மத்திய வங்கி 1998-ல் நிறுவப்பட்டது