Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

புகையிலையால் கேன்ஸர்—ஒப்புக்கொள்ளும் கம்பெனி

மருத்துவக் குழுக்கள் பலவற்றின் கண்டுபிடிப்புகளை புகையிலைக் கம்பெனிகள் பல ஆண்டுகளாக மறுத்து வந்தன. ஆனால், நுரையீரல் கேன்ஸர், மற்ற கொடிய வியாதிகளுக்கு காரணம் புகைபிடித்தலே என ஐக்கிய மாகாணங்களிலுள்ள மிகப் பெரிய சிகரெட் கம்பெனி ஃபிலிப் மாரிஸ் இப்போது ஒப்புக்கொள்கிறது. அந்தக் கம்பெனியின் வெளியீடு ஒன்று இப்படியாக குறிப்பிடுகிறது: “நுரையீரல் கேன்ஸர், இருதய நோய், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய், இன்னும் மற்ற கடுமையான வியாதிகளுக்கும் புகைபிடித்தலே காரணம் என மருத்துவ மற்றும் அறிவியல் வட்டாரங்கள் ஒத்துக்கொள்கின்றன.” “நுரையீரல் கேன்ஸர் போன்ற வியாதிகள் வருவதற்கான ‘அபாயத்தை அதிகரிக்கும் ஓர் அம்சம்’ அல்லது அதுபோன்ற வியாதிகளுக்கான காரணங்களுள் ‘ஓர் அம்சம்’ மட்டுமே புகைபிடித்தல், ஆனால் இதுதான் அந்த நோய்க்கு காரணம் என்று சொல்லவே முடியாது என்பதாக அந்தக் கம்பெனி முன்பு வாதாடியது” என த நியூயார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. இப்படியாக ஒத்துக்கொண்டபோதிலும், அந்தக் கம்பெனி சொல்கிறதாவது: “எங்கள் கம்பெனி பிராண்டின் சிகரெட்டைக் குறித்தும் பல ஆண்டுகளாக அதை பிரபலப்படுத்தி வந்த விளம்பரங்களைக் குறித்தும் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.”

மறைந்துவரும் பிரத்தியேக சின்னங்கள்

கனடாவின் மேற்கத்திய புல்வெளிகளில் இருந்த தானியக் களஞ்சியங்களுக்கான கட்டிடங்கள் மெதுவே மறைந்துவருகின்றன. 1933-ல் தானியக் களஞ்சியங்கள் 5,758 என்ற உச்ச எண்ணிக்கையை அடைந்தது. கிராமப்புற பகுதிகளின் அடையாளச் சின்னங்களாய் இவை திகழ்ந்தன. அது முதற்கொண்டு, இந்தக் களஞ்சியங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து, 1,052 என்ற நிலையை அடைந்தது. காரணம்? தானியக் களஞ்சியங்கள் அழிக்கப்பட்டு வருவதை பார்த்த ஒருவர் இப்படியாக புலம்புகிறார்: “காலங்கள் மாறிவிட்டன. விவசாயம் இப்போது வியாபாரம் ஆகிவிட்டது. விவசாயம் குடும்பத் தொழிலாக செய்யப்படுவது மறைந்து வருகிறது. எனவேதான் தானியக் களஞ்சியங்களும் மறைந்து வருகின்றன.” “கால்வாய்கள் இல்லாத வெனிஸ் எப்படியோ, விண்ணைத் தொடும் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் இல்லாத நியூயார்க் எப்படியோ அல்லது க்ளப்புகள் இல்லாத பிரிட்டன் எப்படியோ அப்படித்தான் தானியக் களஞ்சியங்கள் இல்லாத புல்வெளிகளும் இருக்கின்றன” என ஹாரோஸ்மித் கன்ட்ரி லைஃப் பத்திரிகை அறிவிக்கிறது. கனடாவின் சமவெளிகளுடைய கலைவண்ணம் மிக்க அடையாளமாக கருதப்படும் இக்களஞ்சியங்களை பாதுகாப்பதற்காக விசேஷக் குழுக்கள் முனைப்பாய் ஈடுபடுகின்றன. ஒரு களஞ்சியம் பொருட்காட்சி சாலையாகவும் மற்றொரு களஞ்சியம் ரெஸ்டாரண்டாகவும் மாற்றப்பட்டுள்ளன.

நேரம் போதாது

ஐரோப்பா முழுவதிலும் அதிகமதிகமான மக்கள் நேரத்தட்டுப்பாட்டை உணருவதாக கெசெனெ ஆல்கெமீனா என்ற ஜெர்மானிய செய்தித்தாள் அறிவிக்கிறது. வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும்சரி, வீட்டு வேலைகளை செய்கிறவர்களாக இருந்தாலும்சரி, அல்லது ஓய்வாக நேரத்தைக் கழிக்கிறவர்களாக இருந்தாலும்சரி எல்லாருமே இப்படித்தான் உணருகின்றனர். “நாற்பது வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட மக்கள் இப்போது குறைவாக தூங்கி, வேகவேகமாக சாப்பிட்டு, அவசர அவசரமாக வேலைக்குப் போவதாகவே உணருகின்றனர்” என பாம்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியலாளர் மான்ஃப்ரட் கார்ஹாமா சொல்கிறார். அவர் ஆய்வு மேற்கொண்ட எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் மக்களின் அனுதின வாழ்க்கை அதிவேகமாக செல்கிறதென அவர் கண்டார். வேலைப் பளுவை குறைக்கும் நவீன வீட்டு உபகரணங்களையோ, வேலை நேரம் குறைக்கப்பட்டிருத்தலோ, “சாவதானமான சமுதாயத்தையோ” அல்லது “அதிகப்படியான நேரத்தையோ” அளிக்கவில்லை. மாறாக, சாப்பாட்டு நேரத்தில் 20 நிமிடங்களும் இரவு தூக்க நேரத்தில் 40 நிமிடங்களும் சராசரியாக குறைக்கப்பட்டிருக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் சூதாட்ட மயக்கம்

“ஆஸ்திரேலியாவின் மிக மோசமான உடல்நலப் பிரச்சினையாக சூதாட்டம் உருவெடுத்து வருகிறது. குறைந்த பட்சம் 3,30,000 தீவிர சூதாட்டக்காரர்களை இது நேரடியாக பாதிக்கிறதென” த ஆஸ்திரேலியன் செய்தித்தாள் அறிவிக்கிறது. உலகிலுள்ள எலெக்ட்ரானிக் சூதாட்ட மிஷின்களில் ஐந்தில் ஒன்று என்ற விகிதத்திற்கும் அதிகமானவை ஆஸ்திரேலியாவில் இருக்கின்றன. அங்கே, பெரியவர்களின் மக்கள் தொகையில் 82 சதவீதத்தினர் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆஸ்திரேலியாவின் சூதாட்ட தொழிலைப் பற்றி ஒரு குழு விசாரணை நடத்தியது. ஆஸ்திரேலியாவிலுள்ள பெரியவர்களில் 2.3 சதவீதத்தினருக்கு சூதாட்டம் மிக கடுமையான பிரச்சினையாக உள்ளதென அந்தக் குழு கண்டுபிடித்துள்ளது. தற்கொலை செய்துகொள்ள தாங்கள் யோசித்ததாக இவர்களில் 37 சதவீதத்தினரும், தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக 11 சதவீதத்தினருக்கும் அதிகமானோர் தெரிவித்தனர். மேலும், சூதாட்டத்தின் காரணமாக தாங்கள் மன உளைச்சலால் மிக மோசமாக அவதியுறுவதாக இவர்களில் 90 சதவீதத்தினர் தெரிவித்தனர். சூதாட்ட நடவடிக்கைகளில் முற்றிலுமான மாற்றம் தேவை என அந்தக் குழு தெரிவித்திருக்கிறது. அதோடு, சூதாட்ட க்ளப்புகளில் எச்சரிக்கை அறிவிப்புகளை மாட்டி வைக்க வேண்டுமென அது பரிந்துரைத்துள்ளது.

அழுத்தத்தை சமாளித்தல்

நெருக்கடியான நிலையில் இருப்பதாக நீங்கள் உணருகிறீர்களா? அழுத்தத்தை சமாளிக்க பின்வரும் ஆலோசனைகளை மெக்ஸிகன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் செக்யூரிட்டி பரிந்துரை செய்துள்ளதாக எல் யூனிவர்சால் அறிவிக்கிறது. அவை: உங்கள் உடலுக்கு எவ்வளவு தூக்கம் தேவைப்படுகிறதோ அந்தளவு தூங்குங்கள். அதாவது, ஒரு நாளைக்கு ஆறு முதல் பத்து மணிநேரம் தூங்குங்கள். நிறைவான, சமவிகித காலை உணவை சாப்பிடுங்கள். சராசரி அளவிலான மதிய உணவை உண்ணுங்கள். இரவு உணவு மட்டாக சாப்பிடுங்கள். மேலும், கொழுப்பு சத்து மிகுதியாக உள்ள உணவுப்பொருட்களை குறையுங்கள். சாப்பாட்டில் உப்பையும் குறையுங்கள். நாற்பது வயதிற்குமேல், பால், சர்க்கரை இரண்டையுமே குறைத்துக்கொள்ளுங்கள். அமைதியாக தியானிப்பதற்காக நேரத்தை ஒதுக்குங்கள். இயற்கையோடு ஒன்றியிருப்பதன்மூலம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தைக் குறையுங்கள்.

விஷத்தின் அழகு முகத்தில்

முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க ஒருவகை ஒப்பனை முறை தற்போது பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில், பாடுலினம் எனும் மிகக் கடுமையான நச்சுப்பொருளை உற்பத்தி செய்யும் ஒரு வகை பாக்டீரியா ஊசிமூலம் ஏற்றப்படுகிறது என த டோரன்டோ ஸ்டார் அறிவிக்கிறது. முகத்தில் குறிப்பிட்ட தசைகளை இந்த நச்சுப்பொருள் செயலிழக்கச் செய்கிறது. இவை ஒருசில நாட்களில் தங்களுடைய இயக்கத்தை இழக்கின்றன. இது சுருக்கங்கள் நீங்கி, தசைகள் விரிவதில் விளைவடைகிறது. இது சுமார் நான்கு மாதங்களுக்கு இருக்கிறது. இந்த முறையை பயன்படுத்தியவரின் தசைகள் இந்த நான்கு மாதங்களும் தளர்ந்த நிலையிலும் இளமையோடும் காணப்படுகின்றன. இருப்பினும், இதற்கு அவர் கொடுக்க வேண்டிய விலை ஒன்று இருக்கிறது. “இம்முறையை பயன்படுத்துபவர்கள் தங்களுடைய சுருக்கங்களை மட்டுமல்ல, ஆச்சரியத்தில் புருவங்களை உயர்த்துவதையும் சிரிக்கும்போது கண்களை சுருக்குவதையும் புருவத்தை நெரிப்பதையும் முகத்தை சுளிப்பதையும்கூட இழந்துவிடுகின்றனர்” என அந்த அறிக்கை எச்சரிக்கிறது. “இளமை அழகுக்காக உங்கள் முகத்தின் ஒரு பாகம் செயலற்றுப் போகச் செய்வதற்கு” தயாராய் இருப்பதை இது குறிக்கிறதென அந்த செய்தித்தாள் சொல்கிறது.

“கடவுள் எந்தப் பக்கம்?”

“எவருடைய நம்பிக்கையையுமே தரக்குறைவாக பேசுவது என் விருப்பமல்ல. ஆனால், கடவுள் பக்தியை வெளிப்பகட்டாக காட்டும் இந்த செயல் விளையாட்டுத்துறையில் மட்டுமீறிய அளவில் சென்றுவிட்டதல்லவா? வெற்றிப்புள்ளி ஒன்று எடுத்தவுடன் கால்பந்து ஆட்டக்காரர்கள் ஏன் பிரார்த்தனை செய்கின்றனர்?” என விளையாட்டு விமர்சகர் சாம் ஸ்மித் எழுதுகிறார். ஆட்டம் முடிந்ததும், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு குழுவாக பிரார்த்தனை செய்யும் இதே ஆட்டக்காரர்கள், உடை மாற்றும் அறையில் “நிருபர்கள்மீது வசைமாரி பொழிவதையும்” அல்லது போட்டா போட்டியின் காரணமாக “ஆட்டக்காரர்களை காயப்படுத்த முயலுவதையும்” நாம் பார்க்கலாம் என ஸ்மித் குறிப்பிடுகிறார். ஒரு விளையாட்டு குழுவிற்கு மேலாக மற்றொரு விளையாட்டுக் குழுவை கடவுள் ஆதரிக்கிறார் என நினைப்பது “கடவுள் நம்பிக்கையை தரங்குறைப்பதாக தோன்றுகிறதென” அவர் மேலும் சொல்கிறார். எனவே, “விளையாட்டை விளையாட்டாகவே வைப்போமாக. அதற்கும் மேலே மதச் சடங்காக்காதிருப்போமாக” என சொல்லி தன் கட்டுரையை முடிக்கிறார்.

கறைபடிந்த பணம்

லண்டனின் பணநோட்டுகளில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை கொக்கேயினால் கறைபடிந்திருக்கின்றன என கார்டியன் செய்தித்தாள் அறிவிக்கிறது. நிபுணர்கள் 500 நோட்டுகளை பரிசோதித்தனர். அவற்றில் 496 நோட்டுகளில் போதை மருந்துகளின் அடையாளம் இருந்தன. போதை மருந்துகளை உபயோகிப்பவர்கள் இந்த நோட்டுகளை புழங்கும்போதுதான் கறைபடிய துவங்குகிறது. இந்தக் கறைபடிந்த நோட்டுகளை வங்கி மெஷின்கள் பிரிக்கும்போதும் அல்லது அடுக்கி வைக்கும்போதும் மற்ற பண நோட்டுகளையும் அழுக்காக்கி விடுகின்றன. பிரிட்டனில், பொழுதுபோக்குகளில் 20 முதல் 24 வயதிற்குட்பட்டோர் மிகப் பரவலாக பயன்படுத்திவரும் போதை மருந்து கொக்கேய்ன். தங்கள் மதிப்பையும் சக்தியையும் இந்த கொக்கேய்ன் உயர்த்துவதாக உணருவதாலேயே டீனேஜர்கள் இதை உபயோகிக்கின்றனர் என லண்டனைச் சேர்ந்த இளைஞர் விழிப்புணர்வு திட்டம் குறிப்பிடுகிறது.

டாக்டர் குருவிகள்

“கல்கத்தாவில் உள்ள குருவிகள் மலேரியா வராமல் தங்களை பாதுகாத்துக்கொள்கின்றன” என டெர் ஸோவாஸ் என்ற பிரெஞ்சு அறிவியல் பத்திரிகை அறிவிக்கிறது. மலேரியா அதிகரித்து வருவதால், க்வினைன் எனும் மலேரியா எதிர்ப்பு மருந்தை இயற்கையிலேயே அதிகம் பெற்ற இலைகளை உடைய மரத்தைத் தேடி இந்த குருவிகள் தூர பறந்து செல்கின்றன. இந்த இலைகளை தங்களுடைய கூடுகளைக் கட்ட இப்பறவைகள் உபயோகிக்கின்றன. அதோடு, அந்த இலைகளை சாப்பிடவும் செய்கின்றன. “மலேரியாவுக்கு பயப்படும் ஆனால் நகர மோகம் கொண்ட குருவிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ஒரு வழியை தெரிந்துகொண்டன” என அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது.

ஆபத்தான வேலைகள்

மிக ஆபத்தான பத்து வேலைகள் என்ன? மரம் வெட்டுபவர்களே மிக ஆபத்தான வேலை செய்பவர்களாக ஐ.மா.-வின் தொழிலாளர் புள்ளியியல் செயலகம் தொகுத்துள்ள கணக்கீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. 1,00,000 மரம் வெட்டுபவர்களில் சுமார் 129 இறக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக வருபவர்கள் மீனவர்களும் கப்பலில் வேலை செய்பவர்களுமே. இவர்களில், 1,00,000 பேருக்கு சுமார் 123 மீனவர்களும் 94 கப்பலில் வேலை செய்பவர்களும் மரிக்கின்றனர். அடுத்தபடியாக உள்ள ஆபத்தான வேலைகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. விமான பைலட்கள், உலோக வேலை செய்பவர்கள், சுரங்கத் தொழிலாளிகள், கட்டிட வேலையாட்கள், டாக்ஸி டிரைவர்கள், லாரி டிரைவர்கள், பண்ணை வேலையாட்கள். இருப்பினும், கடந்த ஐந்து வருடங்களில், “வேலையின்போது ஏற்படும் காயங்களால் இறப்பவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,00,000 வேலையாட்களுக்கு 4.7 என்றே உள்ளது. சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளது” என சைன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகை அறிவிக்கிறது.

“இரத்தத்தால் கடத்தப்படும் தொற்றுநோய்”

“குறைந்தபட்சம் 27 லட்சம் அமெரிக்கர்கள் ஹெபடிடிஸ் சி நோய்க்கிருமியை உடையவர்கள். ஐக்கிய மாகாணங்களில், இரத்தத்தால் கடத்தப்படும் தொற்றுநோயாக இதை ஆக்குகிறதென” அசோஸியேடட் பிரஸ் ரிபோர்ட் அறிவிக்கிறது. பாலுறவின் மூலமும் அல்லது நோய்க்கிருமிகள் உள்ள இரத்தத்தின் மூலமும் ஹெபடைட்டஸ்-சி பரவுகிறது. ஒருவர் மாற்றி ஒருவர் ஊசிமூலம் போதை மருந்துகளை ஏற்றிக்கொள்பவர்களும் ஆணுறையின்றி பாலுறவு கொள்பவர்களுமே அதிக ஆபத்துக்குள்ளாகின்றனர். இருப்பினும், உடம்பில் பச்சைக்குத்துபவர்களும் அக்குபன்சர் சிகிச்சையாளர்களும் இந்த நோயை பரப்பும் ஆட்களாக இருக்கின்றனர். இவர்கள் தாங்கள் உபயோகித்த கருவிகளை சரியாக சுத்தம் செய்வதில்லை. இரத்தம் ஏற்றிக்கொள்பவர்களும் அதிக ஆபத்தில் இருக்கின்றனர். ஐக்கிய மாகாணங்களில், ஒவ்வொரு வருடமும், சுமார் 1,000 பேர் இந்தக் கிருமியால் நுரையீரல் பாதிக்கப்பட்டு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர்.