Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா?

பதில்களைத் தேடி...

பதில்களைத் தேடி...

கெட்ட செய்திகளைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும், உங்களுக்கு கவலையாகவோ பயமாகவோ இருக்கலாம். நீங்கள் மட்டுமல்ல மற்றவர்களும் அப்படித்தான் உணருகிறார்கள். 2014-ல் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா இப்படிச் சொன்னார்: ‘செய்தியில வர்ற கெட்ட விஷயங்கள பார்த்து, இந்த உலகம் கட்டுக்கடங்காம போகுதுனும், அதை யாராலயும் கட்டுப்படுத்த முடியாதுனும் நிறைய பேர் நினைக்குறாங்க.’

ஆனால், இதைச் சொல்லி முடித்த பிறகு, உலகத்திலுள்ள நிறைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்களைப் பற்றி அவர் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். அரசாங்கம் எடுத்திருக்கும் சில முயற்சிகள் “நல்ல செய்தியாக” இருக்கிறது என்று சொன்னார். இதைக் குறித்து, தான் “உறுதியாகவும்,” “நம்பிக்கையாகவும்” இருப்பதாக அவர் சொன்னார். அதாவது, மனிதர்களுடைய முயற்சியால் உலகத்திலிருக்கும் மோசமான விஷயங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், உலக அழிவைத் தடுக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.

இவரைப் போலவே நிறைய பேர் நம்பிக்கையாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, சிலர் அறிவியலை நம்பியிருக்கிறார்கள். தொழில்நுட்பங்களின் வளர்ச்சி உலகத்திலுள்ள பிரச்சினைகளுக்கு முடிவு கொண்டுவரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். புது கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் நிபுணராக இருக்கும் ஒருவர் எதிர்காலத்தைப் பற்றி இப்படி உறுதியாகச் சொன்னார்: ‘தொழில்நுட்பம் 2030-க்குள்ள ஆயிரம் மடங்கும், 2045-க்குள்ள பல லட்சம் மடங்கும் பலம்படைச்சதா ஆகும். தொழில்நுட்பம் ரொம்ப நல்லா முன்னேறிட்டு வருது. நாம எதிர்ப்படுற எந்தவொரு பிரச்சினையும் அவ்ளோ பெருசா இருந்ததில்ல, சவால்கள சமாளிக்குறது ஒரு பெரிய விஷயமே இல்ல!’

இந்த உலக நிலைமைகள் எந்தளவு மோசமாக இருக்கின்றன? நாம் உண்மையிலேயே அழிவின் விளிம்பில் இருக்கிறோமா? விஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு நம்பிக்கையான செய்தியைச் சொன்னாலும், எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்று நிறைய பேர் குழம்பிப்போய் இருக்கிறார்கள். ஏன்?

ஒட்டுமொத்த அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள். அணு ஆயுதங்களைக் குறைப்பதற்கு ஐக்கிய நாட்டு சங்கமும் மற்ற அமைப்புகளும் நிறைய முயற்சிகள் எடுத்திருந்தாலும், அவர்களால் அவற்றைக் குறைக்க முடியவில்லை. சில தலைவர்கள், ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களைப் பார்த்து கேலி செய்கிறார்கள். அணு ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கும் நாடுகள் தங்களுடைய பழைய வெடிகுண்டுகளை மாற்றி அவற்றைப் புதிதாக்குகின்றன. அதோடு, பயங்கரமான நாசத்தை ஏற்படுத்தும் புதுப்புது வெடிகுண்டுகளையும் தயாரிக்கின்றன. ஒரு காலத்தில், ஒட்டுமொத்த அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் சில நாடுகளிடம் இருக்கவில்லை. ஆனால் இப்போது, அந்த நாடுகளால் பல லட்சக்கணக்கான மனிதர்களை அழிக்க முடியும்.

உலக நாடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு அணு ஆயுத போருக்குத் தயாராக இருக்கின்றன. அதனால், “சமாதானமான” காலத்திலேயே, உலகம் ரொம்ப ஆபத்தான இடமாக மாறியிருக்கிறது. “மனிதனுடைய உதவியோ மேற்பார்வையோ இல்லாமலேயே தானாக இயங்கக்கூடிய படுபயங்கரமான அணு ஆயுதங்களால் பெரியளவில் அழிவை ஏற்படுத்த முடியும். இந்த ஆயுதங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகின்றன” என்று புல்லட்டின் ஆஃப் தி அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ் பத்திரிகை சொல்கிறது.

மோசமாகிக்கொண்டே வரும் உடல் ஆரோக்கியம். மனிதர்களுக்கு அறிவியலால் நல்ல உடல் ஆரோக்கியத்தைத் தர முடியவில்லை. உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், காற்று தூய்மைக்கேடு, போதைப் பொருள் துஷ்பிரயோகம் போன்றவை அதிகமாகிக்கொண்டே போகின்றன. இவற்றால் நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. புற்று நோய், சர்க்கரை வியாதி, இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற தொற்றாத நோய்களால்கூட நிறைய பேர் இறந்துபோகிறார்கள். மன நோய்களாலும் மற்ற நோய்களாலும் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். சமீப காலமாக, எபோலா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற பயங்கரமான கொள்ளைநோய்களும் மனிதர்களின் உயிரைப் பறித்திருக்கின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது? உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கட்டுக்கடங்காமல் போகின்றன, நோய்க்கு விடிவுகாலம் வரும் என்ற நம்பிக்கையும் மறைந்துவிட்டது.

மனிதர்களால் நாசமாக்கப்படும் இயற்கை. தொழிற்சாலைகள் பூமியின் காற்று மண்டலத்தை கெடுத்துக்கொண்டே வருகின்றன. அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதால் ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கான மக்கள் இறந்துபோகிறார்கள்.

தனி மனிதர்கள், மக்கள் தொகுதிகள், அரசாங்க அமைப்புகள் என எல்லாரும் கழிவு நீரையும், மருத்துவ மற்றும் விவசாய கழிவுகளையும், பிளாஸ்டிக் பொருள்களையும், மாசுப்படுத்தும் மற்ற பொருள்களையும் கடலில் கலக்குகிறார்கள். “இந்த மாதிரியான நச்சு பொருள்கள் கடலில் வாழும் உயிரினங்களையும் தாவரங்களையும், கடல் உணவைச் சாப்பிடுபவர்களின் உடலையும் கெடுக்கின்றன” என்று என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் மெரைன் சயின்ஸ் சொல்கிறது.

சுத்தமான தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு உலகத்தின் எல்லா பகுதிகளையும் பாதிக்கப்போவதாக பிரிட்டிஷ் அறிவியல் எழுத்தாளரான ராபின் மெக்கீ சொல்கிறார். இதற்கு மனிதர்கள்தான் காரணம் என்றும், இது ஒரு பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்றும் அரசியல்வாதிகள் சொல்கிறார்கள்.

மனிதர்களைத் தாக்கும் இயற்கை. புயல், சூறாவளி, பூமி அதிர்ச்சி போன்றவை பயங்கரமான வெள்ளத்தையும், நிலச் சரிவுகளையும், மற்ற விதமான நாசங்களையும் ஏற்படுத்துகின்றன. நிறைய பேர் இதில் உயிர் இழந்திருக்கிறார்கள் அல்லது மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாஸா (NASA) நடத்திய ஆய்வு இதைப் பற்றி இப்படிச் சொல்கிறது: “இன்னும் பலமான புயல்களும், படு மோசமான நாசத்தை ஏற்படுத்தக்கூடிய வெப்ப அலைகளும் ஏற்படும். அதோடு, மிகக் கடுமையான வெள்ளமும் வறட்சியும் மாறிமாறி வரும்.” இப்படியே போய்க்கொண்டிருந்தால், இயற்கையால் மனிதர்கள் அழிந்துவிடுவார்களா?

நம் உயிரைப் பறிக்கக்கூடிய மற்ற பயங்கரமான ஆபத்துகளும் உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். ஆனால், இன்று நடக்கும் எல்லா கெட்ட விஷயங்களையும் ஆராய்வதன் மூலம், எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளுக்கான திருப்தியான பதில்களை உங்களால் தெரிந்துகொள்ளவே முடியாது. அரசியல்வாதிகளும் விஞ்ஞானிகளும் சொல்கிற விஷயங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிற சிலரும் இதைத்தான் சொல்வார்கள். முந்தின கட்டுரையில் பார்த்தபடி, உலக நிலைமைகளைப் பற்றிய கேள்விகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளுக்கும் நிறைய பேர் திருப்தியான பதில்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பதில்கள் எங்கே இருக்கின்றன?