Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சித்திரம் சொல்லும் சரித்திரம்

அல்ஹாசன்

அல்ஹாசன்

அபு அலி அல்-ஹாசன் ஐபென் அல்-ஹேத்தம் பற்றி நீங்கள் ஒருவேளை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும், இவரை அல்ஹாசன் என்று மக்களுக்குத் தெரியும். அல்ஹாசன் என்பது அல்-ஹாசன் என்ற அரேபிய முதல் பெயரிலிருந்து வந்த லத்தீன் பெயர். “அறிவியல் சரித்திரத்தில் இவர் ஒரு முக்கியமான நபராக” கருதப்படுகிறார். இவருடைய அறிவியல் ஆராய்ச்சிகளைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது, நாம் எல்லாரும் நன்மை அடையலாம்.

ஈராக்கில் இருக்கும் பஸ்ரா என்ற நகரத்தில், சுமார் கி.பி. 965-ல் அல்ஹாசன் பிறந்தார். வானவியல், வேதியியல், கணிதம், மருத்துவம், இசை, ஒளியியல், இயற்பியல், கவிதை போன்றவற்றில் இவருக்கு ஆர்வம் இருந்தது. இவற்றில் சிலவற்றை நாம் இப்போது பார்க்கலாம்.

நைல் அணை

நைல் நதியின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த அவர் போட்டிருந்த திட்டத்தைப் பற்றி மக்கள் ரொம்ப காலமாகவே பேசி வந்தார்கள். சுமார் 1000 வருஷங்களுக்குப் பிறகு, 1902-ல், அஸ்வான் என்ற இடத்தில் நைல் நதியின் குறுக்கே ஓர் அணை கட்டப்பட்டது.

எகிப்தில் மாறிமாறி வரும் வெள்ளத்தையும் வறட்சியையும் கட்டுப்படுத்துவதற்காக, நைல் நதியின் குறுக்கே ஓர் அணையைக் கட்ட அல்ஹாசன் திட்டம் போட்டிருந்தார். இதைப் பற்றி காலிஃப் அல்-ஹாகிம் என்ற கெய்ரோ நகரத்தின் ராஜா கேள்விப்பட்டபோது, அணையைக் கட்டித்தர எகிப்துக்கு வரும்படி அவர் அல்ஹாசனை அழைத்தார். ஆனால், அந்த நதியைப் பார்த்த பிறகு, அணையைக் கட்டுவது அவ்வளவு சுலபமில்லை என்று அல்ஹாசன் புரிந்துகொண்டார். கோபக்கார ராஜாவுடைய தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக, அவர் பைத்தியம்போல் நடித்தார். அந்த ராஜா உயிரோடு இருக்கும்வரை அப்படி நடித்தார். கிட்டத்தட்ட 11 வருஷங்களுக்குப் பிறகு, அதாவது 1021-ல், அந்த ராஜா இறந்துபோனார். அதுவரையில், தனக்கு ஆர்வம் இருந்த விஷயங்களைச் செய்ய அவர் அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.

புக் ஆஃப் ஆப்டிக்ஸ் (BOOK OF OPTICS)

இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்குள், இதன் ஏழு தொகுதிகளையும் அல்ஹாசன் பெரும்பாலும் எழுதி முடித்திருந்தார். இந்தப் புத்தகம்தான், “இயற்பியல் பாடப் புத்தகங்களிலேயே ரொம்ப முக்கியமான” புத்தகமாகக் கருதப்படுகிறது. ஒளியின் இயல்பு... ஒளி எப்படி வித்தியாசமான நிறங்களாக சிதறுகிறது... கண்ணாடியில் பட்டு ஒளி எப்படிப் பிரதிபலிக்கிறது... ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருள் வழியாகப் போகும்போது ஒளி எப்படி வளைகிறது... போன்ற விஷயங்களைப் பற்றிய அவருடைய ஆராய்ச்சிகள் அதில் இருந்தன. அதோடு, காட்சிகளை உணர்வது (visual perception) பற்றியும், கண்ணின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் அவர் ஆராய்ச்சி செய்திருந்தார்.

13-ஆம் நூற்றாண்டுக்குள், அல்ஹாசனின் இந்தப் புத்தகம் அரபு மொழியிலிருந்து லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு வந்த நூற்றாண்டுகளில், ஐரோப்பாவின் அறிஞர்களால் இது அதிகாரப்பூர்வ புத்தகமாகக் கருதப்பட்டது. லென்ஸின் தன்மைகளைப் பற்றி அல்ஹாசன் எழுதிய விஷயங்களை அடிப்படையாக வைத்தே, ஐரோப்பாவின் மூக்குக்கண்ணாடி தயாரிப்பாளர்கள் சில ஆராய்ச்சிகளைச் செய்தார்கள். பிறகு, ஒரு லென்சுக்குப் பின் இன்னொரு லென்ஸை வைத்து டெலஸ்கோப்பையும் மைக்ரோஸ்கோப்பையும் உருவாக்கினார்கள்.

கேமரா அப்ஸ்கியுரா (CAMERA OBSCURA)

கேமரா அப்ஸ்கியுராவை அல்ஹாசன்தான் முதல்முதலில் கண்டுபிடித்தார். இதில் இருக்கும் விதிகள்தான் இன்றுள்ள நவீன ஃபோட்டோகிராஃபில் பயன்படுத்தப்படுகின்றன. கேமரா அப்ஸ்கியுரா என்றால் என்ன? ஒரு “இருட்டு அறைக்குள்,” சின்ன துளை வழியாக ஒளி செல்லும்போது, வெளியே இருக்கும் காட்சி அந்த அறையிலுள்ள சுவரில் தலைகீழாகத் தெரியும், இதுதான் கேமரா அப்ஸ்கியுரா.

அல்ஹாசன் உருவாக்கிய முதல் கேமரா அப்ஸ்கியுரா

19-ஆம் நூற்றாண்டில், புகைப்படங்களை நிரந்தரமாகச் சேகரிக்க ஃபோட்டோகிராஃபிக் ப்ளேட்டுகள் (photographic plates) கேமரா அப்ஸ்கியுராவில் பொருத்தப்பட்டன. இதுதான் உண்மையான கேமராவாக ஆனது! கேமரா அப்ஸ்கியுராவில் உள்ள அதே விதிகளின்படிதான், இன்று இருக்கும் எல்லா நவீன கேமராக்களும் செயல்படுகின்றன. சொல்லப்போனால், நம் கண்களும்கூட அவற்றின் அடிப்படையில்தான் செயல்படுகின்றன. *

ஆராய்ச்சி செய்யும் முறை

இயற்கையாக நடக்கிற விஷயங்களைப் பற்றி அவர் செய்த ஆராய்ச்சிகள் துல்லியமாக இருந்தன; அவை முறையாகவும் செய்யப்பட்டன. இதுதான் அவருடைய ஆராய்ச்சியில் இருந்த ஓர் அற்புதமான விஷயம்! அந்தக் காலத்தில், இவரைப் போல வேறு யாரும் ஆராய்ச்சி செய்ததே இல்லை. அறிவியல் கோட்பாடுகளைச் செய்முறைகளின் மூலம் அவர் நிரூபித்து காட்டியிருக்கிறார். பொதுவாக, எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை என்றால், அதைப் பற்றி கேள்வி கேட்கவும் அவர் தயங்கியதில்லை.

நவீன அறிவியலைப் பற்றி இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்: “நீங்கள் நம்புவதை நிரூபிக்க வேண்டும்!” சிலர், அல்ஹாசனை “நவீன அறிவியல் ஆராய்ச்சியின் தந்தை” என்பதாகக் கருதுகிறார்கள். இதற்காக, நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்! ▪

^ பாரா. 13 நம்முடைய கண்ணுக்கும் கேமரா அப்ஸ்கியுராவுக்கும் இருந்த ஒற்றுமையை, 17-வது நூற்றாண்டில் யோஹானஸ் கெப்லர் விளக்கும்வரை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்த மக்களுக்கு அதைப் பற்றி தெரியவில்லை.