Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

பூமியில் யாரெல்லாம் உயிரோடு எழுப்பப்படுவார்கள், அவர்களுடைய உயிர்த்தெழுதல் எப்படிப்பட்டதாக இருக்கும்?

இந்தக் கேள்விகளுக்கு பைபிள் தரும் பதில்களைப் பார்க்கலாம்.

“நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்று அப்போஸ்தலர் 24:15 சொல்கிறது. கடவுளுக்கு உண்மையாக வாழ்ந்து இறந்துபோனவர்கள்தான் நீதிமான்கள். அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. (மல். 3:16) கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள போதிய வாய்ப்பு கிடைக்காமல் இறந்துபோனவர்கள்தான் அநீதிமான்கள். அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் இல்லை.

அப்போஸ்தலர் 24:15-ல் சொல்லப்பட்டிருக்கிற அதே இரண்டு தொகுதிகளைப் பற்றித்தான் யோவான் 5:28, 29-லும் சொல்லப்பட்டிருக்கிறது. ‘நல்லது செய்தவர்கள் வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள், கெட்டதைச் செய்துவந்தவர்கள் நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்’  என்று இயேசு சொன்னார். நீதிமான்கள், அதாவது இறந்துபோவதற்கு முன்பு நல்லது செய்துவந்தவர்கள், வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள். ஏனென்றால், அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் இருக்கின்றன. அநீதிமான்கள், அதாவது இறந்துபோவதற்கு முன்பு கெட்டதைச் செய்துவந்தவர்கள், நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள். அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் இல்லை. ஆனால், அவர்கள் உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு, யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் வாழ்வின் புத்தகத்தில் பெயர் எழுதப்படுவதற்கும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அது அவர்கள் நியாயந்தீர்க்கப்படுகிற காலப்பகுதியாக இருக்கும். அதாவது, அவர்கள் கண்காணிக்கப்படுகிற காலப்பகுதியாக இருக்கும்.

வெளிப்படுத்துதல் 20:12, 13 சொல்கிறபடி, உயிரோடு எழுப்பப்படுகிற எல்லாருமே ‘சுருள்களில் எழுதப்பட்டிருக்கிறபடி’ நடக்க வேண்டும். அதாவது, புதிய உலகத்தில் கடவுள் கொடுக்கிற புது சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். யாரெல்லாம் கீழ்ப்படியவில்லையோ அவர்கள் அழிக்கப்படுவார்கள்.—ஏசா. 65:20.

உயிரோடு எழுப்பப்படுகிற சிலர் “முடிவில்லாத வாழ்வைப் பெறுவார்கள்” என்றும், வேறு சிலர் “வெட்கத்துக்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவார்கள்” என்றும் தானியேல் 12:2 (பொது மொழிபெயர்ப்பு) சொல்கிறது. உயிரோடு எழுப்பப்படுகிறவர்களுக்குக் கடைசியாக என்ன நியாயத்தீர்ப்பு கிடைக்கும் என்பதைப் பற்றித்தான், அதாவது ‘முடிவில்லாத வாழ்வு’ கிடைக்குமா ‘முடிவில்லாத இழிவு’ கிடைக்குமா, என்பதைப் பற்றித்தான் இந்த வசனம் சொல்கிறது. அப்படியென்றால், 1,000 வருஷங்களின் முடிவில் சிலருக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும், மற்றவர்கள் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்.—வெளி. 20:15; 21:3, 4.

உயிரோடு எழுப்பப்படுகிற இரண்டு தொகுதிகளுக்கும் இருக்கிற வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள இப்போது நாம் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். நீதிமான்கள், வேலை விசா அல்லது குடியுரிமை விசா பெற்று வேறொரு நாட்டில் போய் வாழ்பவர்கள் மாதிரி இருக்கிறார்கள். அந்த நாட்டில் அவர்களுக்கு ஓரளவு சுதந்திரமும் சலுகைகளும் கிடைக்கும். ஆனால் அநீதிமான்கள், பார்வையாளர் விசா அல்லது வேறு தற்காலிக விசா பெற்று வேறொரு நாட்டில் குடியிருப்பவர்கள் மாதிரி இருக்கிறார்கள். ஒருவேளை, தொடர்ந்து அந்த நாட்டில் வாழ வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டால் அதற்குத் தகுதியானவர்களாக வாழ்ந்து காட்ட வேண்டும். அதேபோல்தான் அநீதிமான்களும் தொடர்ந்து பூஞ்சோலை பூமியில் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டால், யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து தாங்கள் நீதிமான்கள் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். ஆரம்பத்தில் ஒருவர் எந்த விசா மூலம் வேறொரு நாட்டுக்குப் போயிருந்தாலும் சரி, அந்த நாட்டில் அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பொறுத்து அவருக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்கலாம், இல்லையென்றால் அவர் அந்த நாட்டைவிட்டு வெளியே அனுப்பப்படலாம். அதுபோலவே, புதிய உலகத்தில் உயிரோடு எழுப்பப்படுகிறவர்கள் எந்தளவுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுக்குக் கடைசி நியாயத்தீர்ப்பு கிடைக்கும்.

யெகோவா அன்பும் கரிசனையும் உள்ள கடவுள். அதனால், நீதிமான்களையும் அநீதிமான்களையும் அவர் உயிரோடு எழுப்பப்போகிறார். அதேசமயத்தில், அவர் நீதிநியாயம் உள்ள கடவுள். (உபா. 32:4; சங். 33:5) அதனால், எல்லாரும் தன்னுடைய நீதியான நெறிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பார். யாரெல்லாம் அவர்மேல் அன்புவைத்து அவருடைய நெறிமுறைகளுக்குக் கீழ்ப்படிகிறார்களோ அவர்கள் மட்டும்தான் புதிய உலகத்தில் வாழ்வார்கள்.