Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பேதுருவின் மாமியாரை இயேசு குணப்படுத்தினார்.—மத்தேயு 8:14, 15; மாற்கு 1:29-31

கிறிஸ்தவ மத ஊழியர்கள் துறவிகளாக வாழ வேண்டுமா?

கிறிஸ்தவ மத ஊழியர்கள் துறவிகளாக வாழ வேண்டுமா?

மதத் தலைவர்களும் குருமார்களும் துறவிகளாக வாழ வேண்டும் என்ற கருத்து உலகம் முழுவதும் இருக்கும் அநேக மதங்களில் இருக்கிறது. உதாரணத்துக்கு கத்தோலிக்க சர்ச்சுகள், ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகள், புத்த மதம் போன்றவற்றில் இப்படிப்பட்ட கருத்து இருக்கிறது. ஆனால், மத குருமார்கள் நிறைய பாலியல் குற்றங்களை செய்வதால் அவர்கள் துறவிகளாக இருக்க வேண்டும் என்ற ஏற்பாடு வந்திருக்கலாம் என்று சில மக்கள் நினைக்கிறார்கள்.

கிறிஸ்தவ மத ஊழியர்கள் துறவிகளாக வாழ வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறாரா? துறவிகளாக வாழ வேண்டும் என்ற ஏற்பாடு எப்போது ஆரம்பித்தது என்றும் இதைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்றும் இந்த கட்டுரையில் பார்ப்போம்.

எப்போது ஆரம்பித்தது?

“மதத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆட்களோ பக்தர்களோ திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது அல்லது உடலுறவு வைத்துக்கொள்ளாமல் இருப்பதுதான்” துறவி வாழ்க்கை என்று என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. பதினாறாம் போப் பெனடிக்ட் கட்டாய துறவி வாழ்க்கையை பற்றி ஒரு குறிப்பை சொன்னார். 2006-ல் கத்தோலிக்க திருச்சபைகளடங்கிய தொகுதிக்கு கொடுத்த பேச்சில், துறவி வாழ்க்கை இயேசுவின் “அப்போஸ்தலர்கள் வாழ்ந்த காலத்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட ஒரு பழக்கம்” என்று சொன்னார்.

துறவி வாழ்க்கை என்ற பழக்கம் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் மத்தியில் இல்லை. அது நமக்கு எப்படி தெரியும்? சிலர் ‘வஞ்சனையான செய்திகளையும் போதனைகளையும்’ பரப்புவார்கள், “திருமணம் செய்யக் கூடாதென்றும்” சொல்வார்கள் என்று முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார்.—1 தீமோத்தேயு 4:1-3.

இரண்டாவது நூற்றாண்டில் இருந்துதான் மேற்கத்திய “கிறிஸ்தவ” சர்ச்சுகளில் இந்த பழக்கம் நுழைந்தது. செலிபசி அண்ட் ரிலிஜியஸ் டிரெடிஷன்ஸ் என்ற புத்தகம் சொல்கிறபடி, ‘செக்ஸில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் ரோம சாம்ராஜ்யத்தில் அந்த சமயம் பரவலாக இருந்தது. அந்த எண்ணத்தோடு இந்த துறவி வாழ்க்கை என்ற கோட்பாடும் ஒத்துப்போனது.’

அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் சர்ச் பாதிரிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் துறவி வாழ்க்கையை சிபாரிசு செய்தார்கள். சர்ச் ஆலோசனை குழுவும் இதே கருத்தை ஆதரித்தது. குருத்துவ சேவை செய்வதும் செக்ஸில் ஈடுபடுவதும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகாது என்றும் அது அந்த சேவையின் புனிதத்தன்மையை கெடுத்துவிடும் என்றும் நினைத்தார்கள். இருந்தாலும், “பத்தாவது நூற்றாண்டில் இருந்த நிறைய பாதிரிகளும் பிஷப்புகளும் கல்யாணம் செய்திருந்தார்கள்” என்று என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது.

குருமார்களாக சேவை செய்பவர்கள் கட்டாயம் துறவிகளாக வாழ வேண்டும் என்று லேட்டரன் மன்ற கூட்டத்தில் (1123-ல் மற்றும் 1139-ல் ரோமில் நடந்தது) தீர்மானிக்கப்பட்டது. இன்றுவரை ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள் இதை பின்பற்றுகின்றன. அதனால், சர்ச்சின் வருமானத்தையும் அதன் செல்வாக்கையும் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. ஏனென்றால், பாதிரிகளுக்கு திருமணமானால் சர்ச்சின் சொத்துக்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு போய்விடும் ஆபத்து இருந்தது.

இதைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார்?

தன்னை வணங்குபவர்கள் துறவிகளாக வாழ்வதைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்று பைபிளில் இருந்து தெரிந்துகொள்ள முடியும். இயேசு சொன்ன வார்த்தைகளை கவனியுங்கள். சிலர் தன்னைப் போலவே “பரலோக அரசாங்கத்துக்காகத் தங்களையே அர்ப்பணித்து, திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள்” என்று சொன்னார். (மத்தேயு 19:12) அதேபோல் பவுலும், சில கிறிஸ்தவர்கள் தன்னுடைய முன்மாதிரியை பின்பற்றி “நல்ல செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதற்காக” திருமணம் செய்யாமல் இருந்தார்கள் என்று சொன்னார்.—1 கொரிந்தியர் 7:37, 38; 9:23.

இருந்தாலும், கிறிஸ்தவ ஊழியர்கள் கட்டாயம் துறவிகளாக வாழ வேண்டும் என்று இயேசுவும் பவுலும் ஒருபோதும் சொல்லவில்லை. திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதை ஒரு “வரம்” என்று இயேசு சொன்னார். ஆனால், எல்லா சீஷர்களும் அந்த வரத்தை பெற்றிருப்பார்கள் என்று அவர் சொல்லவில்லை. கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் இப்படி வெளிப்படையாக சொன்னார்: “திருமணம் ஆகாதவர்கள் சம்பந்தமாக நம்முடைய எஜமானிடமிருந்து எனக்கு எந்தக் கட்டளையும் கிடைக்கவில்லை. ஆனால் . . . நான் என்னுடைய கருத்தைச் சொல்கிறேன்.”—மத்தேயு 19:11; 1 கொரிந்தியர் 7:25, அடிக்குறிப்பு.

முதல் நூற்றாண்டில் வாழ்ந்த நிறைய கிறிஸ்தவ ஊழியர்கள் திருமணமானவர்களாக இருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. ஏன், அப்போஸ்தலன் பேதுருவும் திருமணமானவர்தான். (மத்தேயு 8:14; மாற்கு 1:29-31; 1 கொரிந்தியர் 9:5) பவுல் வாழ்ந்த காலத்தில், ரோம சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள் ஒழுக்க விஷயத்தில் படுமோசமாக இருந்தார்கள். அதனால், கிறிஸ்தவ சபையில் பொறுப்பில் இருக்கும் ஒருவர் திருமணமானவராக இருந்தால் அவர் “ஒரே மனைவியை உடையவராகவும்,” ‘கீழ்ப்படிதல் உள்ள பிள்ளைகளை உடையவராகவும்’ இருக்க வேண்டும் என்று பவுல் எழுதினார்.—1 தீமோத்தேயு 3:2, 4.

திருமணம் செய்துகொண்ட பிறகு துறவிகளாக வாழ்வதையும் பைபிள் ஆதரிப்பது கிடையாது. கணவனும் சரி, மனைவியும் சரி, ‘ஒருவருக்கொருவர் கொடுக்க வேண்டிய கடனைக் [அதாவது, தாம்பத்திய கடனை] கொடுக்காமல் இருந்துவிட கூடாது’ என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:3-5) இதிலிருந்து ஒரு உண்மை தெளிவாக தெரிகிறது. கிறிஸ்தவ ஊழியர்கள் கட்டாயம் துறவிகளாக வாழ வேண்டிய அவசியமும் இல்லை, கடவுள் அதை எதிர்பார்க்கவும் இல்லை.

நல்ல செய்தியை சொல்ல நிறைய வாய்ப்பு கிடைக்கும்

கிறிஸ்தவ ஊழியர்கள் துறவிகளாக வாழ வேண்டிய அவசியம் இல்லையென்றால் இயேசுவும் பவுலும் ஏன் அதை ஆதரித்து பேசினார்கள்? திருமணமாகாத ஒருவருக்கு கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி சொல்ல நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமான ஒருவருக்கு இருக்கும் கவலைகள் அவருக்கு இருக்காது.—1 கொரிந்தியர் 7:32-35.

டாவிட் என்பவரின் வாழ்க்கை அதைத்தான் காட்டுகிறது. அவர் மெக்சிகோ நகரத்தில் கைநிறைய சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையை செய்துகொண்டிருந்தார். இப்படிப்பட்ட சௌகரியமான வாழ்க்கையை விட்டுவிட்டு கோஸ்டா ரிகாவின் ஒதுக்குப்புறமான கிராமத்துக்கு குடிமாறி போனார். எதற்காக? அங்கிருக்கும் மக்களுக்கு பைபிளைப் பற்றி கற்றுக்கொடுப்பதற்காக அப்படி செய்தார். கல்யாணமாகாமல் இருந்ததால் அவரால் இப்படி தீர்மானம் எடுக்க முடிந்தது. “புது கலாச்சாரம்... வித்தியாசமான வாழ்க்கை... இதெல்லாம் ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. ஆனா எனக்குனு ஒரு குடும்பம் இல்லாதனால சமாளிக்க முடிஞ்சுது” என்று அவர் சொல்கிறார்.

கிளாடியா என்ற கல்யாணமாகாத ஒரு பெண், ஊழியம் செய்ய ஆட்கள் தேவைப்படும் இடத்துக்கு குடிமாறி போனாள். அவள் சொல்கிறாள், “கடவுளுக்கு சேவை செய்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு என்ன தேவையோ அத கடவுள் கொடுக்குறாரு. இத பாக்கும்போது என் விசுவாசமும் அவரோட எனக்கு இருக்குற நட்பும் ரொம்ப பலமாகுது.”

“உங்களுக்கு கல்யாணமாகியிருந்தாலும் சரி, இல்லனாலும் சரி, யெகோவா தேவனுக்கு சுறுசுறுப்பா சேவை செய்யுங்க, கண்டிப்பா சந்தோஷமா இருப்பீங்க.”—கிளாடியா

கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழும் வாழ்க்கை ஒரு சுமை அல்ல. கிளாடியா இன்னும் என்ன சொல்கிறாள் என்று பாருங்கள். “உங்களுக்கு கல்யாணமாகியிருந்தாலும் சரி, இல்லனாலும் சரி, யெகோவா தேவனுக்கு சுறுசுறுப்பா சேவை செய்யுங்க, கண்டிப்பா சந்தோஷமா இருப்பீங்க.”—சங்கீதம் 119:1, 2.