Skip to content

ஊழியம் செய்வதால் தங்களுக்கு இரட்சிப்பு கிடைத்துவிடும் என்று யெகோவாவின் சாட்சிகள் நினைக்கிறார்களா?

ஊழியம் செய்வதால் தங்களுக்கு இரட்சிப்பு கிடைத்துவிடும் என்று யெகோவாவின் சாட்சிகள் நினைக்கிறார்களா?

 இல்லை. யெகோவாவின் சாட்சிகளான நாங்கள் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் தவறாமல் ஈடுபடுவது உண்மைதான். ஆனால், ஊழியம் செய்தால் இரட்சிப்பைப் பெற்றுவிடுவோம் என்று நாங்கள் நினைப்பதில்லை. (எபேசியர் 2:8) ஏன்?

 இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: தாராள குணமுள்ள ஒருவர் தான் சொல்கிற இடத்திற்கு, தான் சொல்கிற நேரத்திற்கு வருகிற எல்லோருக்கும் விலைமதிக்க முடியாத ஒரு பரிசைத் தருவதாக வாக்குக் கொடுக்கிறார். அதை நீங்கள் நம்பினால் நிச்சயம் அங்கு செல்வீர்கள் அல்லவா? அதுமட்டுமல்ல, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் என எல்லோருக்கும் இந்த விஷயத்தைச் சொல்வீர்கள் அல்லவா? அவர் சொன்னபடி நீங்கள் அங்கு சென்றீர்கள் என்பதற்காக அந்தப் பரிசைப் பெறுவதற்குத் தகுதியானவராக உங்களை நினைத்துக்கொள்ள முடியாது. அது பரிசு! அவராகவே மனமுவந்து கொடுக்கிற பரிசு!!

 அதுபோலவே, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோருக்கும் முடிவில்லா வாழ்வைத் தருவதாக கடவுள் கொடுத்திருக்கும் வாக்கை நாங்கள் நம்புகிறோம். (ரோமர் 6:23) நாங்கள் நம்புவதை எல்லோருக்கும் சொல்கிறோம். ஏனென்றால், அவர்களும் கடவுள் கொடுக்கப்போகிற பரிசைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், ஊழியம் செய்வதால் அந்தப் பரிசைப் பெற நாங்கள் தகுதியானவர்கள் என்று நினைப்பதில்லை. (ரோமர் 1:17; 3:28) உண்மையைச் சொன்னால், நாம் எதைச் செய்தாலும் அந்த அரிய பரிசைப் பெற தகுதியானவர்களாய் ஆக முடியாது. “நாம் செய்த எந்த நல்ல செயல்களாலும் இரட்சிக்கப்படவில்லை. அவருடைய கிருபையால் நாம் இரட்சிக்கப்பட்டோம்.”—தீத்து 3:5, ஈஸி டு ரீட் வர்ஷன்.