தீத்துவுக்குக் கடிதம் 3:1-15

3  அரசாங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும், கீழ்ப்படிய வேண்டும்,+ எல்லா விதமான நல்ல செயல்களையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்,  யாரைப் பற்றியும் மோசமாகப் பேசக் கூடாது, யாரோடும் தகராறு செய்யக் கூடாது, நியாயமானவர்களாக* நடந்துகொள்ள வேண்டும்,+ எல்லாரிடமும் எல்லாவற்றிலும் சாந்தகுணத்தைக் காட்ட வேண்டும்+ என்றெல்லாம் அவர்களுக்குத் தொடர்ந்து ஞாபகப்படுத்து.  ஏனென்றால், நாமும்கூட ஒருகாலத்தில் புத்தியில்லாதவர்களாக, கீழ்ப்படியாதவர்களாக, வழிதவறி நடக்கிறவர்களாக, பலவிதமான ஆசைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களாக, தீமையும் பொறாமையும் நிறைந்தவர்களாக, வெறுக்கத்தக்கவர்களாக, ஒருவரை ஒருவர் பகைக்கிறவர்களாக இருந்தோம்.  ஆனாலும், நம் மீட்பராகிய கடவுள் தன்னுடைய கருணையையும்+ அன்பையும் மனிதர்கள்மேல் காட்டியபோது,  மறுவாழ்வு பெறுவதற்கு நம்மைத் தூய்மையாக்கியதன்* மூலமும்+ தன்னுடைய சக்தியால் புதுப்பித்ததன் மூலமும் நம்மை மீட்டார்;+ நம்முடைய நீதியான செயல்களால் அல்ல,+ தன்னுடைய இரக்கத்தால் நம்மை மீட்டார்.+  அந்தச் சக்தியை நம் மீட்பரான இயேசு கிறிஸ்துவின் மூலம் நம்மேல் அளவில்லாமல்* பொழிந்தார்.+  அவருடைய அளவற்ற கருணையால் நாம் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு,+ முடிவில்லாத வாழ்வு+ என்ற நம்பிக்கையைச் சொத்தாகப் பெற வேண்டும்+ என்பதற்காக அப்படிச் செய்தார்.  இந்த வார்த்தைகள் நம்பகமானவை; அதனால், கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள் தொடர்ந்து நல்ல செயல்கள் செய்வதில் முழு கவனத்தோடு இருப்பதற்காக இவற்றை நீ அவர்களுக்கு வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இவை சிறந்தவை, மனிதர்களுக்குப் பிரயோஜனமானவை.  முட்டாள்தனமான விவாதங்களையும், வம்சாவளி விவரங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளையும், சச்சரவுகளையும், திருச்சட்டத்தைப் பற்றிய சண்டைகளையும் அடியோடு தவிர்த்து விடு; அவை பிரயோஜனம் இல்லாதவை, வீணானவை.+ 10  சபையில் பிரிவினைகளை உண்டாக்குகிறவனுக்கு+ ஒரு தடவை புத்திசொல்,* இரண்டாவது தடவையும் புத்திசொல்,+ அதன் பின்பு அவனை ஒதுக்கிவிடு.+ 11  ஏனென்றால், அப்படிப்பட்டவன் வழிதவறி நடக்கிறான், பாவம் செய்கிறான், தனக்குத்தானே தண்டனைத் தீர்ப்பை வரவழைத்துக்கொள்கிறான். 12  அர்தெமாவையோ தீகிக்குவையோ+ நான் உன்னிடம் அனுப்பிய பின்பு, நிக்கொப்போலிக்கு என்னிடம் வர உன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்; அங்கேதான் குளிர் காலத்தில் தங்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். 13  திருச்சட்ட வல்லுநனாகிய சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் எந்தக் குறைவும் இல்லாதபடி அவர்களுடைய பயணத்துக்கு வேண்டியதையெல்லாம் பார்த்துக் கொடுத்தனுப்பு.+ 14  நம்மைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து நல்ல செயல்கள் செய்து, அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.+ அப்போதுதான், அவர்கள் பலன் தராத ஊழியர்களாக இருக்க மாட்டார்கள்.+ 15  என்னோடு இருக்கிற எல்லாரும் உனக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள். விசுவாசத்தில் இருக்கிற நம் நண்பர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களைச் சொல். கடவுளுடைய அளவற்ற கருணை உங்கள் எல்லார்மீதும் இருக்கட்டும்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “வளைந்துகொடுப்பவர்களாக.”
நே.மொ., “குளியலின்.”
வே.வா., “தாராளமாக.”
வே.வா., “எச்சரி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா