Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 77

அவர்கள் வணங்க மறுக்கிறார்கள்

அவர்கள் வணங்க மறுக்கிறார்கள்

இந்த மூன்று வாலிபர்களைப் பற்றி வாசித்தது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? சாப்பிடக் கூடாத உணவு வகைகளை சாப்பிட மறுத்த தானியேலின் நண்பர்கள்தான் இவர்கள். பாபிலோனியர் இவர்களை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்று அழைத்தார்கள். ஆனால் இப்போது இவர்களைப் பார். மற்ற எல்லோரையும் போல் அந்த மிகப் பெரிய சிலையை ஏன் இவர்கள் வணங்காமல் நிற்கிறார்கள்? நாம் பார்க்கலாம்.

யெகோவா எழுதிக் கொடுத்த பத்துக் கட்டளைகள், அதாவது பத்துச் சட்டங்கள் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ‘என்னைத் தவிர வேறு எந்தக் கடவுட்களையும் நீ வணங்கக் கூடாது’ என்பதே முதலாவது சட்டமாகும். அதனால் இங்கே இந்த வாலிபர்கள் இந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறார்கள், அப்படிக் கீழ்ப்படிவது எளிதாக இல்லாவிட்டாலும் அவ்வாறு செய்கிறார்கள்.

பாபிலோனிய ராஜா நேபுகாத்நேச்சார், தான் நிறுத்தி வைத்திருக்கிற இந்தப் பொற்சிலையை வணங்குவதற்காக பல முக்கிய ஆட்களை அழைத்திருக்கிறான். எல்லா ஜனங்களுக்கும் இப்போது இவ்வாறு சொல்கிறான்: ‘எக்காளங்கள், சுரமண்டலங்கள், இன்னும் மற்ற இசைக் கருவிகள் வாசிக்கப்படும் சத்தத்தை கேட்கையில் நீங்கள் கீழே குனிந்து இந்தப் பொற்சிலையை வணங்க வேண்டும். அப்படிக் குனிந்து வணங்காதவன் எவனோ அவன் எரியும் நெருப்புச் சூளைக்குள் உடனடியாக வீசப்படுவான்.’

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்போர் அந்தச் சிலையை வணங்கவில்லை என்று கேள்விப்பட்டதும் நேபுகாத்நேச்சாருக்கு பயங்கர கோபம் வந்துவிடுகிறது. அவர்களைத் தன் முன் கொண்டுவந்து நிறுத்தும்படி உத்தரவிடுகிறான். அவர்கள் கொண்டு வரப்பட்டதும், அந்தச் சிலையை வணங்கச் சொல்லி மறுபடியும் கட்டளையிடுகிறான். ஆனால் அந்த வாலிபர்கள் யெகோவாவை முழுமையாக நம்புகிறார்கள். ‘நாங்கள் சேவிக்கிற எங்கள் கடவுளால் எங்களைக் காப்பாற்ற முடியும், அப்படி அவர் எங்களைக் காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் உம்முடைய பொற்சிலையை நாங்கள் வணங்க மாட்டோம்’ என்று அவர்கள் நேபுகாத்நேச்சாரிடம் சொல்கிறார்கள்.

இதைக் கேட்டதும் நேபுகாத்நேச்சாருக்கு இன்னும் பயங்கர கோபம் வருகிறது. அருகே இருந்த நெருப்புச் சூளையைக் காண்பித்து: ‘அந்தச் சூளையை ஏழு மடங்கு அதிகமாகச் சூடாக்குங்கள்!’ என்று கட்டளையிடுகிறான். பிறகு, ‘சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் கட்டி அந்தச் சூளைக்குள் வீசியெறியுங்கள்’ என தன் படையிலுள்ள பயில்வான்களிடம் உத்தரவிடுகிறான். அந்தச் சூளை அவ்வளவு சூடாக இருப்பதால் கொளுந்துவிட்டு எரியும் ஜுவாலைகள் அந்தப் பயில்வான்களையே பொசுக்கி விடுகிறது. ஆனால் அதனுள் தூக்கி வீசிப்பட்ட அந்த மூன்று வாலிபர்களுக்கு என்ன ஆனது?

நேபுகாத்நேச்சார் அந்தச் சூளையைப் பார்க்கிறான், ரொம்பவே பயந்துவிடுகிறான். ‘எரிகிற அந்த நெருப்புச் சூளைக்குள் மூன்று ஆட்களைத்தானே நாம் கட்டி எறிந்தோம்?’ என்று அவன் கேட்கிறான்.

‘ஆம்’ என்று அவனுடைய வேலையாட்கள் பதிலளிக்கிறார்கள்.

‘ஆனால் அங்கே நான்கு ஆட்கள் நெருப்பில் உலாவிக் கொண்டிருக்கிறதை நான் பார்க்கிறேனே, அவர்கள் கைகள் இப்போது கட்டப்பட்டு இல்லை, நெருப்புகூட அவர்களைப் பொசுக்கவில்லை. அந்த நான்காவது ஆள் பார்ப்பதற்கு கடவுளைப் போல் இருக்கிறார்’ என்று ஆச்சரியமாக சொல்கிறான். ராஜா அந்தச் சூளையின் வாசலுக்குச் சற்று நெருங்கிச் சென்று: ‘சாத்ராக்! மேஷாக்! ஆபேத்நேகோ! மகா உன்னத கடவுளின் ஊழியர்களே வெளியே வாருங்கள்!’ என்று சத்தமாக கூப்பிடுகிறான்.

அவர்கள் வெளியே வருகிறபோது அவர்கள் உடம்பில் எந்தக் காயமோ தீப்புண்ணோ இல்லாததை எல்லோரும் பார்க்கிறார்கள். அப்போது ராஜா: ‘சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய கடவுள் துதிக்கப்படுவாராக! அவர்கள் தங்களுடைய சொந்த கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் வணங்க மறுத்ததால் அவர் தம்முடைய தேவதூதனை அனுப்பி அவர்களைக் காப்பாற்றினார்’ என்று சொல்கிறான்.

யெகோவாவுக்கு உண்மையாய் இருப்பதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சிறந்த முன்மாதிரி அல்லவா?