Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 59

தாவீது ஏன் ஓடிப்போக வேண்டும்

தாவீது ஏன் ஓடிப்போக வேண்டும்

கோலியாத்தை தாவீது கொன்ற பின்பு, இஸ்ரவேலின் படைத்தளபதி அப்னேர் அவனைச் சவுலிடம் அழைத்து வருகிறான். தாவீதைப் பார்த்து சவுல் மிகவும் சந்தோஷப்படுகிறார். அவனைப் படைத்தலைவனாக நியமிக்கிறார்; அதுமட்டுமல்ல, தன்னுடன் அரண்மனையில் வசிப்பதற்கும் அழைத்துச் செல்கிறார்.

பிற்பாடு, இஸ்ரவேலின் படை பெலிஸ்தருடன் போரை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்புகிறபோது, ‘சவுல் ஆயிரங்களைக் கொன்றான், தாவீதோ பதினாயிரங்களைக் கொன்றான்’ என்று பெண்கள் பாடுகிறார்கள். இதைக் கேட்டு சவுல் பொறாமைப்படுகிறார்; ஏனென்றால் சவுலைவிட தாவீதையே அவர்கள் உயர்த்திப் பாடுகிறார்கள். ஆனால் சவுலின் மகன் யோனத்தான் பொறாமைப்படவில்லை. அவன் தாவீதை உயிருக்கு உயிராய் நேசிக்கிறான், தாவீதும் யோனத்தானை நேசிக்கிறான். எனவே, தாங்கள் எப்போதும் நண்பர்களாகவே இருப்பார்களென்று ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கொள்கிறார்கள்.

சுரமண்டலத்தை வாசிப்பதில் தாவீது கெட்டிக்காரன். அவன் வாசிக்கிற இன்னிசையை சவுல் மிகவும் ரசித்துக் கேட்பார். ஆனால் தாவீதின் மீதுள்ள பொறாமையால் ஒருநாள் சவுல் பயங்கரமான ஒரு காரியத்தைச் செய்கிறார். தாவீது சுரமண்டலத்தை வாசித்துக் கொண்டிருக்கும்போது சவுல் ஈட்டியை எடுத்து: ‘சுவரோடு சுவராக உன்னை குத்திப் போடப் போகிறேன்’ என்று சொல்லி தாவீதின் மேல் எறிகிறார். ஆனால் தாவீது ஒரு பக்கமாக விலகி தப்பித்துக் கொள்கிறான். மறுபடியும் ஈட்டியை எறிந்து கொல்ல முயலுகிறார், அப்போதும் தாவீது தப்பித்துக் கொள்கிறான். தான் இனி மிகவும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்பதை தாவீது புரிந்துகொள்கிறான்.

சவுல் கொடுத்திருந்த வாக்கு உனக்கு நினைவிருக்கிறதா? கோலியாத்தை எவன் கொல்கிறானோ அவனுக்குத் தன் மகளை மனைவியாகக் கொடுப்பதாக சொல்லியிருந்தார் அல்லவா? அதனால் தன் மகள் மீகாளை தாவீது கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கடைசியில் அவர் சொல்கிறார், ஆனால் அதற்கு முன் பெலிஸ்திய எதிரிகளில் 100 பேரை தாவீது கொல்ல வேண்டும் என்று சொல்கிறார். இதைக் கொஞ்சம் யோசித்துப் பார்! அந்தப் பெலிஸ்தர் தாவீதைக் கண்டிப்பாக கொன்று போட்டு விடுவார்கள் என்ற நினைப்பில்தான் சவுல் அப்படிச் சொல்கிறார். ஆனால் அவர்கள் அவனைக் கொல்லவில்லை. அதனால் அவர் தன் மகளை தாவீதுக்கு மனைவியாகக் கொடுக்க வேண்டியதாகிறது.

ஒருநாள் சவுல், யோனத்தானிடமும் எல்லா வேலைக்காரரிடமும் தாவீதைக் கொல்லப் போவதாக சொல்கிறார். ஆனால் யோனத்தான் தன்னுடைய அப்பாவிடம்: ‘தாவீதை ஒன்றும் செய்யாதீர்கள். அவன் உங்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. உங்களுக்கு நிறைய உதவிகள்தான் செய்திருக்கிறான். தன் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் கோலியாத்தைக் கொன்றான், அதைப் பார்த்து நீங்கள் சந்தோஷப்பட்டீர்கள் அல்லவா?’ என்கிறான்.

இதனால் சவுல் தன் மகன் கேட்டுக்கொண்டபடியே தாவீதுக்குத் எந்தத் தீங்கும் செய்யப் போவதில்லை என்று வாக்குக் கொடுக்கிறார். தாவீது திரும்ப அழைத்து வரப்படுகிறான். முன்பு செய்து வந்தது போலவே சவுலுடைய அரண்மனையில் மறுபடியும் வேலை செய்கிறான். என்றாலும், ஒருநாள் தாவீது சுரமண்டலம் வாசித்துக் கொண்டிருக்கையில் சவுல் மூன்றாம் முறையாக ஈட்டியைத் தாவீதின் மேல் எறிகிறார். தாவீது விலகிக்கொள்கிறான், ஈட்டி சுவரில் போய்க் குத்துகிறது. அங்கிருந்து தப்பியோடினால்தான் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதை தாவீது புரிந்துகொள்கிறான்.

அன்றிரவு அவன் தன்னுடைய வீட்டுக்குப் போகிறான். சவுலோ அவனைக் கொல்வதற்கு சில ஆட்களை அனுப்புகிறார். தன் அப்பா என்ன திட்டம் போட்டிருக்கிறார் என்பது மீகாளுக்குத் தெரியும். அதனால் அவள் தன் கணவனிடம்: ‘இன்றிரவு நீர் தப்பி ஓடாவிட்டால், நாளைக்கு நீர் பிணமாகத்தான் இருப்பீர்’ என்று சொல்கிறாள். பிறகு, அன்றிரவு தாவீது ஜன்னல் வழியாக தப்பித்துப் போக மீகாள் உதவி செய்கிறாள். ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு சவுலின் கண்களுக்குப் படாமல் தாவீது வெவ்வேறு இடம் மாறி தலைமறைவாக இருக்க வேண்டியதாகிறது.