Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முதலில் செய்தது யார்?

முதலில் செய்தது யார்?

அதிகாரம் 12

முதலில் செய்தது யார்?

“நாம் ஏதோ பெரிய கண்டுபிடிப்பாளர்கள் என்று நினைத்துக்கொள்கிறோம்; ஆனால் ஏற்கெனவே இருப்பதைத்தான் நாம் வெறுமனே திரும்ப செய்கிறோமோ என்றே நான் சந்தேகப்படுகிறேன்.”1 ஓர் உயிரியல் வல்லுனர் இவ்வாறு கூறினார். அநேக சமயங்களில், தாவரங்களும் மிருகங்களும் ஆயிரக்கணக்கான வருடங்களாக செய்துவந்திருப்பதைத்தான் மனித கண்டுபிடிப்பாளர்கள் மறுபடியும் செய்கிறார்கள். இது உயிரியப் பயனியல் (bionics) என்று அழைக்கப்படுகிறது; உயிரினங்களிலிருந்து காப்பியடிப்பது அவ்வளவாக மலிந்துவிட்டதாலேயே அதற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2மனித தொழில்நுட்பத்தின் அடிப்படையான எல்லா அம்சங்களையுமே, “அவற்றின் செயல்பாடுகளை மனிதன் புரிந்துகொண்டு, உபயோகிக்க ஆரம்பிப்பதற்கு வெகு முன்னரே . . . உயிரினங்கள் அவற்றைக் கண்டுபிடித்து, தங்கள் பிரயோஜனத்திற்காக உபயோகித்துக் கொண்டிருந்தன” என்று மற்றொரு விஞ்ஞானி கூறுகிறார். அவர் தொடர்ந்து கூறுவது ஆர்வத்தைத் தூண்டுகிறது: “இயற்கையோடு ஒப்பிட, மனித தொழில்நுட்பம் அநேக விஷயங்களில் மிகவும் பின்தங்கியுள்ளது.”2

3மனித கண்டுபிடிப்பாளர்கள் காப்பியடிக்க முயன்றிருக்கும் உயிரினங்களின் இந்தச் சிக்கலான திறமைகளைப் பற்றி நீங்கள் சிந்திக்கையில், இவை எல்லாம் தற்செயலாகவே நிகழ்ந்துவிட்டன என்று நம்புவது நியாயமாக தோன்றுகிறதா? அதுவும் ஒருமுறை அல்ல பல முறை, கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத பிராணிகளில் தானாகவே நிகழ்ந்திருக்க முடியுமா? இவை எல்லாமே மிகவும் ஞானமிக்க வடிவமைப்பாளரால் மட்டுமே செய்ய முடிந்த சிக்கலான வடிவங்கள் என்பதை நம்முடைய அனுபவத்திலிருந்து நாம் உணரவில்லையா? காப்பியடிப்பதற்கே மிகவும் திறமைசாலியான ஒருவர் தேவைப்பட்ட இப்பேர்ப்பட்ட காரியங்கள் தற்செயலாக நிகழ்ந்திருக்க முடியும் என்றா நினைக்கிறீர்கள்? பின்வரும் உதாரணங்களைச் சிந்திக்கையில் இப்படிப்பட்ட கேள்விகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்:

4குளிரூட்டுதல் (AIR CONDITIONING). நவீன தொழில்நுட்பம் அநேக வீடுகளுக்கு குளிரூட்டுகிறது. ஆனால், வெகு காலமாகவே கறையான்கள் அவற்றின் வீடுகளுக்கு குளிரூட்டி வந்தன, இன்றும் அதைச் செய்கின்றன. அவற்றின் புற்று ஒரு பெரிய மண் மேட்டின் நடுவில் உள்ளது. அதிலிருந்து, மேற்பரப்பிற்கு அருகிலுள்ள காற்றுத் துவாரங்களின் பின்னலமைப்பிற்குள் சூடான காற்று மேலெழும்புகிறது. உபயோகிக்கப்பட்ட இந்தக் காற்று, நுண்துளைகளை உடைய அதன் பக்கங்கள் வழியாக வெளியேறுகிறது. சுத்தமான, குளிர்ந்த காற்று மண் மேட்டின் அடியிலிருக்கும் காற்று அறைக்குள் நுழைந்து கீழிறங்குகிறது. அங்கிருந்து அது புற்றுக்குள் சுற்றிவருகிறது. சில புற்றுகளில், சுத்தமான காற்று உள்ளே நுழைவதற்கென்று கீழே சில திறப்புகள் உள்ளன. வெப்ப காலங்களிலோ, நிலத்திலிருந்து மேலே வரும் நீர் ஆவியாகி காற்றைக் குளிர வைக்கிறது. லட்சக்கணக்கான குருட்டு வேலைக்காரர்கள் தங்கள் திறமைகளை ஒன்று திரட்டி இவ்வளவு அருமையான வடிவமைப்பைக் கட்ட எப்படி முடிந்தது? உயிரியல் வல்லுனர் லூயி தாமஸ் பதிலளிக்கிறார்: “அவை கூட்டு புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவது தெளிவாக உள்ளது. இது ஒரு புரியாப் புதிரே.”3

5விமானங்கள். பறவைகளின் இறக்கைகள் பற்றிய ஆராய்ச்சியால் விமான இறக்கைகளின் வடிவமைப்பு பெரிதும் பயனடைந்துள்ளது. பறவைகளின் இறக்கைகள் வளைந்திருப்பதால், புவியீர்ப்பு விசையை மேற்கொள்ள உதவும் தூக்காற்றலை (lift) அது பெறுகிறது. ஆனால், இறக்கை மேல்நோக்கி அதிகம் சாய்ந்துவிட்டால் திடீரென்று நின்றுவிடும் அபாயம் உள்ளது. அவ்வாறு நின்றுவிடுவதைத் தவிர்ப்பதற்கு அதன் இறக்கையின் முன்புறத்தில் சிறகுகளின் (flaps) ஓர் வரிசை உள்ளது; இறக்கை அதிகமாக சாய்ந்துவிட்டால் இந்தச் சிறகுகள் உடனே தூக்கிக்கொள்ளும் (1, 2). காற்றோட்டம் இறக்கையின் மேற்புறத்திலிருந்து விலகிவிடாதபடிக்கு காப்பதன் மூலம் தூக்காற்றல் குறையாமல் இருக்க இந்தச் சிறகுகள் உதவுகின்றன.

6காற்றுக் கொந்தளிப்பைக் (turbulence) கட்டுப்படுத்தி, ‘நின்றுபோவதைத்’ தவிர்க்க உதவும் மற்றொரு உபகரணம் அலுலா [alula (3)] ஆகும். சிறகுகளின் ஒரு சிறிய தொகுதியான இதைக் கட்டைவிரலைப் போல பறவையால் உயர்த்த முடியும்.

7பறவை மற்றும் விமான இறக்கைகளின் நுனியில் காற்றுச் சுழற்சிகள் (eddies) உருவாவதால் இழுவை விசை (drag) ஏற்படுகிறது. இதைப் பறவைகள் இரண்டு வழிகளில் குறைக்கின்றன. ஸ்விஃப்ட், ஆல்பட்ராஸ் போன்ற சில பறவைகளுக்கு சிறிய நுனியுடைய நீண்ட, மெல்லிய இறக்கைகள் உள்ளன; இந்த வடிவமைப்பின் காரணமாக அதிகமான காற்றுச் சுழற்சிகள் ஏற்படுவதில்லை. பருந்து, பிணந்தின்னிக் கழுகு போன்ற மற்ற பெரிய பறவைகளுக்கு அகலமான இறக்கைகள் இருப்பதால் பெரும் காற்றுச் சுழற்சிகள் ஏற்படக்கூடும். ஆனால் இந்தப் பறவைகளின் இறக்கை நுனியிலுள்ள சிறகு பல்லிணைகள் (pinions), விரல்களைப் போல விரிவதால் இது குறைக்கப்படுகிறது. இதனால் மழுங்கியிருக்கும் அந்த நுனி, பல மெல்லிய நுனிகளாக மாறுகிறது, இது காற்றுச் சுழற்சி மற்றும் இழுவை விசையைக் குறைக்கிறது (4).

8விமானத்தை வடிவமைப்பவர்கள் இந்த வடிவங்களில் அநேகத்தைக் காப்பியடித்துள்ளனர். இறக்கைகளின் வளைவு தூக்காற்றலைக் கொடுக்கிறது. பல்வேறு விளிம்புகளும் நீட்டிக்கொண்டிருக்கும் அமைப்புகளும் காற்றோட்டத்தைக் கட்டுப்படுத்த அல்லது தடுத்து நிறுத்த உதவுகின்றன. சில சிறிய விமானங்களில் இறக்கை நுனியில் ஏற்படும் காற்றுச் சுழற்சிகளைக் கட்டுப்படுத்த, இறக்கை பரப்பிற்கு செங்குத்தாக சில தட்டையான தகடுகள் வைக்கப்படுகின்றன. அப்படியிருந்தும், பறவைகளின் இறக்கைகளோடு ஒப்பிட விமானங்களின் இறக்கைகள் கால் தூசிக்குக்கூட சமானமில்லை.

9உறை எதிர்ப்பு திரவம் (ANTIFREEZE). மனிதர்கள், கார் ரேடியேட்டர்களில் உறை எதிர்ப்பு திரவமாக கிளைகால் உபயோகிக்கின்றனர். ஆனால் அன்டார்க்டிக்காவின் ஏரிகளிலுள்ள சில நுண்ணிய தாவரங்கள் உறைந்து போவதைத் தவிர்க்க, வேதியியல் ரீதியில் இதை ஒத்துள்ள கிளைசராலை உபயோகிக்கின்றன. உறைநிலைக்கும் 20 டிகிரி செல்சியஸ் குறைவான வெப்ப நிலையில் வசிக்கும் பூச்சிகளிலும் இது காணப்படுகிறது. அன்டார்க்டிகாவின் கடுங்குளிரான நீரில் வாழ உதவும் உறை எதிர்ப்பு திரவத்தை மீன்களும் சுயமாகவே தயாரித்துக் கொள்கின்றன. உறைநிலைக்கும் 40 டிகிரி செல்சியஸ் குறைவான வெப்ப நிலையில்கூட சில மரங்கள் உயிர்வாழ்கின்றன. எப்படி தெரியுமா? “பனிக்கட்டிகள் உருவாக உதவும் தூசி அல்லது மாசு எதுவுமே இல்லாத மிகவும் சுத்தமான தண்ணீர்”4 அவற்றில் இருக்கும் காரணத்தால்.

10நீருக்கடியில் சுவாசித்தல்.ற்று நிறைந்த சிலிண்டர்களை முதுகில் கட்டிக்கொண்டால்தான் மனிதனால் நீருக்கடியில் சுமார் ஒரு மணிநேரமாவது செலவுசெய்ய முடியும். சில வண்டுகளோ மிக எளிமையான முறையைப் பயன்படுத்தி இன்னும் அதிக நேரம் நீருக்கடியில் உலா வருகின்றன. நீர்க்குமிழி ஒன்றை பிடித்துக்கொண்டு அவை தண்ணீருக்குள் ‘டைவ்’ அடிக்கின்றன. அந்த நீர்க்குமிழிதான் வண்டின் நுரையீரலாக செயல்படுகிறது. அது, வண்டிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை அகற்றி தண்ணீரில் கலந்துவிடுகிறது; வண்டு உபயோகிப்பதற்காக தண்ணீரில் கறைந்துள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொடுக்கிறது.

11கடிகாரங்கள். மக்கள் சூரிய கடிகாரத்தை உபயோகிக்க ஆரம்பிப்பதற்கு வெகு முன்னரே உயிரினங்களுக்குள் இருந்த கடிகாரங்கள் துல்லியமாக நேரம் காத்துவந்தன. அலை இறக்கத்தின்போது (low tide), நுண்பாசிகள் என்றழைக்கப்படும் நுண்ணிய தாவரங்கள் கடற்கரையின் ஈரமான மணலின் மேற்பரப்பிற்கு வருகின்றன. அலை ஏற்றத்தின்போதோ (high tide) அவை மீண்டும் மண்ணுக்குள் சென்றுவிடுகின்றன. ஆனால் சோதனைக் கூடத்திலுள்ள மணலிலே அலை ஏற்றமோ இறக்கமோ இல்லாவிட்டாலும்கூட, அவற்றின் கடிகாரத்தின் காரணமாக அலைகளின் நேரத்திற்கு ஏற்றவாறு அவை மேலே வந்து கீழே போகின்றன. ஃபிட்லர் நண்டுகள் (fiddler crabs) அலை இறக்கத்தின்போது சற்று கருமை நிறத்தில் மாறி வெளியே வருகின்றன; அலை ஏற்றத்தின்போதோ நிறம் வெளுத்து அவற்றின் வளைகளுக்கு திரும்புகின்றன. கடலிலிருந்து வெகு தொலைவில் சோதனைக் கூடத்திலும்கூட மாறிவரும் அலைகளுக்கு ஏற்றவாறு அவை நேரம் காத்து, அலையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறு சற்று கருமையாகவும் வெளுப்பாகவும் மாறுகின்றன. நேரம் கடந்து செல்லசெல்ல இடம் மாறும் சூரியன் மற்றும் நட்சத்திரங்களை வைத்து பறவைகள் பயணம் செய்கின்றன. இந்த மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும் உள்ளான கடிகாரங்கள் அவற்றிற்கு இருக்க வேண்டும். (எரேமியா 8:7) ஆக, நுண்ணிய தாவரங்கள் முதல் மனிதர்கள் வரை லட்சக்கணக்கான உள்ளான கடிகாரங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கின்றன.

12திசைக்காட்டிகள். சுமார் பொ.ச. பதின்மூன்றாம் நூற்றாண்டில், ஒரு காந்த ஊசியை தண்ணீருள்ள கிண்ணத்தில் மிதக்க வைத்து ஆரம்பகால திசைக்காட்டியாக அதை உபயோகிக்க ஆரம்பித்தனர். ஆனால் இது புதுமையான ஒன்றல்ல. ஒரு திசைக்காட்டியை உருவாக்க கச்சிதமான அளவுள்ள காந்தத் துகள்களின் தொகுதிகள் பாக்டீரியாக்களில் உள்ளன. அவற்றின் விருப்பமான சூழலுக்கு செல்ல இவை வழிகாட்டுகின்றன. பறவைகள், தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், டால்பின்கள், மெல்லுடலிகள் போன்ற மற்ற அநேக உயிரினங்களிலும்கூட மாக்னட்டைட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீடு திரும்பும் மாடப்புறாக்கள் பூமியின் காந்தப் புலத்தைப் பயன்படுத்தி அவற்றின் வீடுகளுக்கு திரும்புவதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள் அவற்றின் தலைக்குள் உள்ள காந்தத் திசைக்காட்டிகளை உபயோகித்து வழியைக் கண்டுபிடிக்கின்றன என்று இப்போது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

13உப்பு நீக்கம் (DESALINATION). கடல் நீரிலிருந்து உப்பை நீக்க மனிதன் பெரிய தொழிற்சாலைகளைக் கட்டுகிறான். சதுப்புநில மரங்களோ இதை மிகவும் எளிதாக செய்கின்றன. அவற்றின் வேர்கள் கடல் நீரை உறிஞ்சி, உப்பு நீக்கும் சவ்வுகளின் உதவியுடன் உப்பை மட்டும் வடிகட்டிவிடுகின்றன. அவிசின்னியா என்ற ஒரு வகை சதுப்புநில மரம், இலைகளின் கீழ்ப்புறத்திலுள்ள சுரப்பிகளை உபயோகித்து கூடுதலான உப்பை நீக்கிவிடுகிறது. கடற்காகங்கள், பெலிக்கன்கள், கார்மரான்டுகள், ஆல்பட்ராஸ்கள், பெட்ரல்கள் போன்ற கடற்பறவைகள் கடல் நீரைக் குடிக்கின்றன; ஆனால் இரத்தத்தில் கலந்துவிடும் கூடுதலான உப்பை அவற்றின் தலையிலுள்ள சுரப்பிகள் மூலமாக நீக்கிவிடுகின்றன. பென்குவின்கள், கடலாமைகள், கடல் உடும்புகள் ஆகியவையும்கூட உப்பு நீக்கிய கடல் நீரையே குடிக்கின்றன.

14மின்சாரம். சுமார் 500 வகையான மின்சார மீன்களில் பேட்டரிகள் உள்ளன. ஆப்பிரிக்க பூனைமீன் 350 ஓல்ட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. வட அட்லாண்டிக்கைச் சேர்ந்த மாபெரும் மின்சார ரே, 60 ஓல்ட் மின்சக்தி கொண்ட 50 ஆம்பியர் துடிப்புகளை வெளியிடுகிறது. தென் அமெரிக்க மின்சார விலாங்கு மீன் 886 ஓல்ட் மின் அதிர்வைத் தருகிறது. “பதினோறு மீன் குடும்பங்களில், மின்சார உறுப்புகள் கொண்ட மீன்களின் வகைகள் இருப்பது அறியப்பட்டுள்ளது” என ஒரு வேதியியலாளர் கூறுகிறார்.5

15விவசாயம் (FARMING). மனிதன் பல நூற்றாண்டுகளாக நிலத்தை உழுது பயிர் செய்து, கால்நடைகளை வளர்த்து வந்திருக்கிறான். ஆனால் அதற்கு வெகு முன்னரே, இலை வெட்டும் எறும்புகள் தோட்டக்காரர்களாக வேலை செய்தன. அவற்றின் எச்சங்களிலிருந்தும் இலைகளிலிருந்தும் தயாரித்த காம்போஸ்ட்டில் உணவிற்காக பூஞ்சைகளை வளர்த்தன. சில எறும்புகள் தாவரப்பேன்களை (aphids) கால்நடைகளாக வளர்த்து சர்க்கரை நிறைந்த தேன் திவலைகளை அவற்றிலிருந்து கறந்தெடுக்கின்றன. அதுமட்டுமா, அவற்றைப் பாதுகாக்க கொட்டகைகளைக்கூட கட்டிக்கொடுக்கின்றன! அறுவடை எறும்புகள், நிலத்தடி களஞ்சியங்களில் விதைகளை சேகரித்து வைக்கின்றன. (நீதிமொழிகள் 6:6-8) ஒருவகை வண்டு மைமோசா மரங்களுக்கு அலங்காரம் செய்துவிடுகிறது. பிகாஸ் மற்றும் மார்மட்டுகள், புல்லை அறுத்து, உலர்த்தி, சேமித்து வைக்கின்றன.

16அடைகாக்கும் கருவிகள் (INCUBATORS). மனிதன், முட்டைகளைப் பொரிக்க அடைகாக்கும் கருவிகளை கண்டுபிடித்துள்ளான். ஆனால் இந்த விஷயத்திலும் அவன் ரொம்ப லேட். கடலாமைகளும் சில பறவைகளும் அடைகாப்பதற்காக சூடான மணலில் முட்டையிடுகின்றன. மற்ற பறவைகளோ, எரிமலையின் சூடான சாம்பலில் முட்டையிடுகின்றன. சில சமயங்களில் அலிகேட்டர்கள், அழுகும் தாவர பொருட்களால் அவற்றின் முட்டைகளை மூடி வைக்கின்றன. முட்டைகளுக்கு தேவையான உஷ்ணத்தை இது கொடுக்கிறதல்லவா! ஆனால் இந்த விஷயத்தில் ஆண் மேலீ பறவைக்கு நிகரே இல்லை. அது ஒரு பெரிய குழி தோண்டி, அந்தக் குழிக்குள் தாவர பொருட்களை போட்டு மணலால் அதை மூடிவிடுகிறது. அந்தத் தாவரப் பொருட்கள் நொதிக்கையில் (fermenting) உஷ்ணம் உண்டாகிறது. பெட்டை மேலீ பறவை, ஒரு வாரத்திற்கு ஒரு முட்டை என்ற விகிதத்தில் ஆறு மாதத்திற்கு அந்த மேட்டின் மீது முட்டையிடுகிறது. அந்தச் சமயம் முழுவதிலும், ஆண் பறவை தன் அலகை அந்த மண் மேட்டிற்குள் நுழைத்து அதன் வெப்பத்தை சோதித்துப் பார்க்கிறது. மணலைக் சேர்ப்பதன் அல்லது குறைப்பதன் மூலம் தன்னுடைய அடைகாக்கும் கருவியின் வெப்பநிலை எப்போதுமே 33 டிகிரி செல்சியஸ் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறது. இவ்வாறு, உறையும் குளிரோ பொசுக்கும் வெயிலோ எந்தச் சமயத்திலும் கூட்டின் வெப்பநிலை மாறாமல் நிலையாக உள்ளது.

17ஜெட் உந்துவிசை (JET PROPULSION). இன்றைய விமானங்கள் அனைத்துமே அநேகமாக ஜெட் உந்துவிசையால்தான் செலுத்தப்படுகின்றன. அநேக மிருகங்களும்கூட இதற்கு முன்பே பல நூற்றாண்டுகளாக ஜெட் உந்துவிசையை பயன்படுத்தியிருக்கின்றன. ஆக்டோபஸ்ஸும் ஸ்குவிட்டும் இதில் கைத்தேர்ந்தவை. அவை விசேஷித்த ஓர் அறைக்குள் நீரை உறிஞ்சி, பிறகு சக்தி வாய்ந்த தசைகளால் அதை வெளியேற்றும்போது முன்னே தள்ளப்படுகின்றன. நௌடிலஸ் நத்தை, ஸ்கேலாப்புகள், ஜெல்லி மீன்கள், தட்டான் பூச்சிகளின் புழுக்கள், சில வகை கடல்வாழ் மிதப்பிகள் (plankton) ஆகியவைகூட ஜெட் உந்துவிசையைப் பயன்படுத்துகின்றன.

18ஒளி. விளக்கைக் கண்டுபிடித்த பெருமை தாமஸ் எடிசனைச் சேரும். ஆனால் அது மிகவும் திறம் வாய்ந்தது அல்ல, ஏனென்றால் அது உஷ்ணத்தை வெளிவிடுவதால் ஆற்றலை இழக்கிறது. மின்மினி பூச்சிகளோ அவற்றின் அலங்கார விளக்குகளை அதிக திறமையோடு ஒளிவீசச் செய்கின்றன. அவை குளிர் ஒளியை வெளியிடுவதால் ஆற்றலை இழப்பதில்லை. அநேக கடற்பஞ்சுகள், பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், புழுக்கள் ஆகியவை அழகாக ஒளி வீசுகின்றன. ஒரு புழுவின் பெயர் புகை வண்டி புழு. அதன் சிகப்பு ‘ஹெட்லைட்டும்’ 11 ஜோடி வெள்ளை அல்லது வெளிர் பச்சைநிற ‘ஜன்னல்களும்’ பார்ப்பதற்கு ஒரு புகை வண்டி ஊர்ந்து செல்வதைப்போல இருக்கும். அநேக மீன்களுக்கும் விளக்குகள் உண்டு: ஃபிளாஷ்லைட் மீன், ஆங்கிலர் மீன், லான்டர்ன் மீன், வைப்பர் மீன், காண்ஸ்டலேஷன் மீன் ஆகியவை அதில் சில. கடல் அலைகளிலுள்ள லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் கண்ணைக் கவரும் வண்ணம் பளபளவென்று மின்னுகின்றன.

19காகிதம். பல ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பே எகிப்தியர்கள் அதைச் செய்தனர். ஆனாலும்கூட குளவிகள், யெல்லோ ஜாக்கெட்டுகள், மலைக்குளவிகள் ஆகியவை அவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தன. சிறகுகள் கொண்ட இந்தச் சிறிய வேலையாட்கள் பதப்பட்ட மரத்தை மென்று, சாம்பல் நிற காகிதத்தை உண்டாக்கி அதை வைத்து கூடுகளைக் கட்டுகின்றன. மலைக்குளவிகள் அவற்றின் பெரிய, உருண்டையான கூடுகளை மரத்தில் தொங்க வைக்கின்றன. அக்கூட்டின் வெளிப்புறம் பல அடுக்குகள் மொத்தமான காகிதத்தால் ஆனது; அவற்றின் மத்தியில் மூடப்பட்ட காற்று இடைவெளிகள் உள்ளன. இது, 40 சென்டிமீட்டர் மொத்தமான செங்கல் சுவர் உஷ்ணத்திலிருந்தும் குளிரிலிருந்தும் பாதுகாப்பு அளிப்பதைப் போல கூட்டைப் பாதுகாக்கிறது.

20சுழல் எஞ்ஜின் (ROTARY ENGINE). மனிதனைவிட ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பே நுண் பாக்டீரியாக்கள் சுழல் எஞ்ஜினை உருவாக்கின. ஒரு வகை பாக்டீரியாவிற்கு முடிபோன்ற அநேக இழைகள் உள்ளன; அவை எல்லாம் ஒன்றாக இணைந்து, கெட்டியான தக்கைத்திருகி (corkscrew) போல சுருண்டு கொள்கின்றன. கப்பல் முன்னோக்கி நகர உதவும் முற்செலுத்திபோல (propeller) இந்தத் தக்கைத்திருகியைச் சுழற்றுவதன் மூலம் பாக்டீரியா முன் செல்கிறது. தன்னுடைய எஞ்ஜினை அது பின்னோக்கியும்கூட செலுத்த முடியும்! ஆனால் அது வேலை செய்யும் விதத்தை விஞ்ஞானிகளால் முழுமையாக புரிந்துகொள்ளவே முடியவில்லை. அந்தப் பாக்டீரியாவால் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தை அடைய முடியுமென்றும், இதனால் “சக்கரத்தை இயற்கை ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டது என்றே சொல்லலாம்”6 என்றும் ஓர் அறிக்கை உரிமைப்பாராட்டுகிறது. “உயிரியலின் மிகவும் வியக்கத்தக்க ஒரு கருத்து உண்மையாகிவிட்டது: இணைப்பு கொக்கி, சுழலும் தண்டு, பேரிங், சுழலும் விசை மாற்றம் போன்றவை எல்லாம் கொண்ட ஓர் சுழல் எஞ்ஜினை இயற்கையே உருவாக்கியுள்ளது”7 என ஓர் ஆராய்ச்சியாளர் கூறி முடிக்கிறார்.

21சோனார் (SONAR). வௌவால்கள் மற்றும் டால்பின்களின் சோனாரோடு ஒப்பிட மனிதன் கண்டுபிடித்திருப்பது ஒன்றுமேயில்லை. குறுக்கும் நெடுக்குமாக மெல்லிய கம்பிகள் கட்டப்பட்ட ஓர் இருட்டறையில் வௌவால்களைப் பறக்கவிட்டால்கூட அவை எந்தக் கம்பியிலும் மோதிக்கொள்ளாமல் அழகாக பறக்கின்றன. அவற்றின் மிகையொலி (supersonic) சமிக்கைகள் இந்தக் கம்பிகளில் பட்டு திரும்பிவருவதால், அந்த எதிரொலிகளைப் பயன்படுத்தி வௌவால்கள் அவற்றில் மோதாமல் தவிர்க்கின்றன. பார்பாய்ஸ்களும் திமிங்கலங்களும் நீருக்கடியில் இந்த முறையையே பயன்படுத்துகின்றன. எண்ணெய்ப் பறவைகளும், அவை தங்கியிருக்கும் இருண்ட குகைகளுக்குள் சென்று வெளியே வருவதற்கு அவற்றை வழிநடத்த கீச்சொலிகளை உண்டுபண்ணி எதிரொலி முறையைப் பயன்படுத்தி பறக்கின்றன.

22நீர்மூழ்கிக் கப்பல்கள். மனிதர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே நீர்மூழ்கிக் கப்பல்கள் உபயோகத்தில் இருந்தன. நுண்ணிய ஆரக்காலிகளின் புரோட்டோபிளாசத்தில் எண்ணெய்த் துளிகள் உள்ளன. அவற்றை உபயோகித்து எடையை மாற்றியமைப்பதால் அவை சமுத்திரத்தில் மேலே அல்லது கீழே செல்கின்றன. மீன்கள் அவற்றின் நீந்தும் பைகளுக்குள் வாயுவை செலுத்தி அல்லது குறைத்துவிடுவதனால் நீரில் மிதக்கும் அவற்றின் ஆற்றலை மாற்றியமைக்கின்றன. நௌடிலஸ் நத்தையின் (chambered nautilus) ஓட்டிற்குள் பல அறைகள் அல்லது மிதவைத் தொட்டிகள் உள்ளன. அந்தத் தொட்டிகளுக்குள் இருக்கும் தண்ணீர் மற்றும் வாயுவின் விகிதங்களை மாற்றுவதனால் அது மேலேயும் கீழேயும் சுலபமாக செல்கிறது. கட்டுள்ஃபிஷ்ஷின் (cuttlefish) எலும்பில் (அதன் கால்ஷியம் நிறைந்த உட்புற ஓட்டில்) துளைகள் நிறைந்துள்ளன. ஆக்டோபஸ் போன்ற இந்த விலங்கு மிதக்கும் பண்பை மாற்றியமைக்க, அதன் எலும்புக் கூட்டிலிருந்து தண்ணீரை வெளியேற்றி வெற்றிடத்தை வாயுவினால் நிரப்புகிறது. இவ்வாறு, கட்டுள் எலும்பிலுள்ள துளைகள் நீர்மூழ்கிக் கப்பல்களிலுள்ள தண்ணீர் தொட்டிகளைப் போலவே சேவிக்கின்றன.

23வெப்பமானிகள் (THERMOMETERS). 17-வது நூற்றாண்டு முதற்கொண்டே மனிதன் தான் உண்டாக்கிய வெப்பமானிகளை உபயோகித்து வருகிறான். ஆனால் இயற்கையில் காணப்படும் சிலவற்றோடு ஒப்பிடுகையில் அது ஒன்றுமே இல்லை. ஒரு கொசுவின் உணர்கொம்பு, தட்பவெப்பத்தில் 1-⁠ன் கீழ் 600 டிகிரி செல்சியஸ் மாற்றம் ஏற்பட்டாலும் கண்டுபிடித்துவிடுகிறது. ராட்டில் பாம்பின் தலையில் குழிகள் உள்ளன; அதன் உதவியால் 1-⁠ன் கீழ் 1200 டிகிரி செல்சியஸ் மாற்றம் ஏற்பட்டாலும் அதனால் உணர முடியும். பிரமாண்டமான ஒரு வகை மலைப்பாம்பு, ஒரு டிகிரியின் சிறு பின்னத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் 35 மில்லி விநாடிகளுக்குள் அதைக் கண்டுபிடித்துவிடும். மேலீ பறவை மற்றும் பிரஷ் வான்கோழியின் அலகுகளுக்கு 0.5 டிகிரி செல்சியஸ் மாற்றத்தைக்கூட கண்டுணரும் திறமை உண்டு.

24இவ்வாறு, மனிதன் அநேக காரியங்களை மிருகங்களிடமிருந்தே காப்பியடித்திருக்கிறான். இவற்றை எல்லாம் பார்க்கும்போது, “இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும். அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்” என பைபிள் கூறுவது நம் நினைவுக்கு வரவில்லையா?​—யோபு 12:7, 8.

[கேள்விகள்]

1. மனித கண்டுபிடிப்பாளர்களைப் பற்றி ஒரு விஞ்ஞானி என்ன கூறினார்?

2. மற்றொரு விஞ்ஞானி, மனித தொழில்நுட்பத்தையும் இயற்கையையும் எவ்வாறு ஒப்பிட்டார்?

3. உயிரியப் பயனியலுக்கான உதாரணங்களைச் சிந்திக்கையில் என்ன கேள்விகளை மனதில் வைத்திருக்க வேண்டும்?

4. (அ) கறையான்கள் அவற்றின் புற்றுகளை எவ்வாறு குளிரூட்டுகின்றன? (ஆ) விஞ்ஞானிகளால் எந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை?

5-8. பறவைகளின் இறக்கைகளிலிருந்து விமான வடிவமைப்பாளர்கள் என்ன கற்றுக்கொண்டுள்ளனர்?

9. எந்த மிருகங்களும் தாவரங்களும் மனிதனுக்கு முன்பாகவே உறை எதிர்ப்பு திரவத்தை உபயோகித்தன, அவை எவ்வளவு திறம் வாய்ந்தவை?

10. நீரில் வாழும் சில வண்டுகள், நீருக்கடியில் சுவாசிக்கும் உபகரணங்களை எவ்வாறு உருவாக்கி உபயோகிக்கின்றன?

11. உயிரியல் கடிகாரங்கள் எவ்வளவு பரவலாக உள்ளன, அவற்றிற்கு சில உதாரணங்கள் யாவை?

12. ஆரம்பகால திசைக்காட்டிகளை மனிதன் பயன்படுத்த ஆரம்பித்தது எப்போது, ஆனால் இதற்கு வெகு முன்னரேகூட அவை எவ்வாறு உபயோகத்தில் இருந்தன?

13. (அ) சதுப்புநில மரங்களால் உப்பு நீரில் எவ்வாறு வாழ முடிகிறது? (ஆ) எந்த விலங்குகளால் கடல் நீரைக் குடிக்க முடியும், அது எப்படி முடிகிறது?

14. மின்சாரம் உற்பத்தி செய்யும் சில பிராணிகளின் உதாரணங்கள் யாவை?

15. விலங்குகள் என்ன பல்வேறு விதமான விவசாய வேலைகள் செய்கின்றன?

16. (அ) கடலாமைகள், சில பறவைகள், அலிகேட்டர்கள் ஆகியவை அவற்றின் முட்டைகளை எவ்வாறு அடைகாக்கின்றன? (ஆ) ஆண் மேலீ பறவையின் வேலை எந்த விதத்தில் மிகவும் சவால் நிறைந்த ஒன்று, அதை அது எவ்வாறு நிறைவேற்றுகிறது?

17. ஆக்டோபஸ்ஸும் ஸ்குவிட்டும் ஜெட் உந்துவிசையை எவ்வாறு உபயோகிக்கின்றன, இவற்றோடு சம்பந்தப்படாத மற்ற எந்த மிருகங்களும் இவ்வாறு செய்கின்றன?

18. விளக்குகள் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளில் சில யாவை, அவற்றின் ஒளி எந்த விதத்தில் மனிதன் உற்பத்தி செய்யும் ஒளியோடு ஒப்பிட மேம்பட்டது?

19. மனிதனுக்கு வெகு முன்னரே காகிதம் செய்தது எது, காகிதம் செய்யும் ஓர் உயிரி தன் வீட்டை எவ்வாறு வெயில் மற்றும் குளிரிலிருந்து பாதுகாக்கிறது?

20. ஒரு வகை பாக்டீரியா எவ்வாறு நகர்ந்து செல்கிறது, இதைப் பற்றி விஞ்ஞானிகளின் கருத்து என்ன?

21. ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத பல மிருகங்கள் எவ்வாறு சோனாரை உபயோகிக்கின்றன?

22. நீர்மூழ்கிக் கப்பல்களில் உபயோகிக்கப்படும் அடிச்சுமை நியதி (ballast), ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத பல்வேறு மிருகங்களில் எவ்வாறு செயல்படுகிறது?

23. வெப்பத்தைக் கண்டுணரும் உறுப்புகளுள்ள மிருகங்கள் யாவை, அவை எவ்வளவு துல்லியமானவை?

24. இந்த உதாரணங்கள் நமக்கு என்ன குறிப்பை நினைப்பூட்டுகின்றன?

[பக்கம் 152-ன் சிறு குறிப்பு]

உயிரினங்களிலிருந்து காப்பியடிப்பது அவ்வளவாக மலிந்துவிட்டதால் அதன் சொந்தப் பெயரே அதற்கு சூட்டப்பட்டுள்ளது

[பக்கம் 153-ன் வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஆவியாதல் மூலம் குளிரூட்டப்படும் புற்று

உபயோகிக்கப்பட்ட காற்று

வெளிப்புற காற்று

நிலத்தடி நீர்

[பக்கம் 154-ன் வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

1 2 3 4

1 2 3

[பக்கம் 155-ன் படம்]

நீர்க் குமிழி

[பக்கம் 159-ன் படம்]

நௌடிலஸ் நத்தையின் குறுக்கு வெட்டு தோற்றம்