Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புதைப்படிவ பதிவுகளை பேச விடுவோமா?

புதைப்படிவ பதிவுகளை பேச விடுவோமா?

அதிகாரம் 5

புதைப்படிவ பதிவுகளை பேச விடுவோமா?

புதைப்படிவங்கள் என்பவை பூமியின் மேலோட்டில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பழங்கால உயிரினங்களின் எஞ்சிய பாகங்கள். இவை எலும்புக்கூடுகளாக அல்லது எலும்புகள், பற்கள், ஓடுகள் போன்ற பாகங்களாக இருக்கலாம். புதைப்படிவம் என்பது ஒருகாலத்தில் வாழ்ந்திருந்த ஓர் உயிரினத்தின் செயல்பாடுகளாக, அதாவது அதன் கால்தடம் அல்லது வழித்தடம் போன்ற ஏதாவது அடையாளமாகவும் இருக்கலாம். அநேக புதைப்படிவங்களில் ஆரம்பத்திலிருந்த திசுக்கள் இருப்பதில்லை, ஆனால் அதற்கு பதிலாக தாதுப்பொருட்கள் ஊடுருவி அதே உருவத்தைப் பெற்றிருக்கும்.

2பரிணாமத்திற்கு புதைப்படிவங்கள் ஏன் முக்கியமானவை? மரபியல் வல்லுனர் ஜி. எல். ஸ்டெப்பின்ஸ் ஒரு முக்கிய காரணத்தைக் குறிப்பிட்டார்: “பரிணாமத்தின் விளைவாக பெரும் பிரிவைச் சேர்ந்த உயிரினங்கள் தோன்றியதை எந்தவொரு உயிரியல் வல்லுனரும் நேரில் பார்த்ததில்லை.”1 ஆகவே, இன்று பூமியில் வாழும் உயிரினங்கள் வேறு ஏதோவொன்றாக பரிணமிப்பதை பார்க்க முடிவதில்லை. மாறாக, அவை அனைத்தும் முழுமையான வடிவிலும் மற்ற வகைகளிலிருந்து வேறுபட்டும் உள்ளன. மரபியல் வல்லுனர் தியோடோசியஸ் டோப்ஸான்ஸ்கி கூறியதுபோல: “உயிரினங்களின் உலகம் . . . சங்கிலி தொடர்போன்ற இடைப்பட்ட இணைப்புகள் (transitional links) உள்ள ஓர் ஒற்றை வரிசையல்ல.”2 மேலும் சார்ல்ஸ் டார்வின் ஒப்புக்கொண்டது போல, “குறிப்பட்ட [உயிரின] வகைகள் தனிச்சிறப்பு மிக்கவை, அவற்றிற்கு இடையே எண்ணற்ற இணைப்புகள் இல்லாததே உண்மையில் பெரும் பிரச்சினை.”3

3ஆகவே, இன்று உயிரோடிருக்கும் வெவ்வேறு வகை உயிரினங்களும் பரிணாமக் கொள்கையை ஆதரிக்கிறதில்லை. பரிணாமக் கொள்கைக்கு தேவையான அத்தாட்சி புதைப்படிவங்களிலாவது கிடைக்காதா என்று எதிர்பார்த்தனர். அதனால்தான் இவற்றிற்கு அதிக மவுசு வந்துவிட்டது.

எதை எதிர்பார்க்கலாம்

4பரிணாமம் உண்மை என்றால், ஒரு வகை உயிரினம் படிப்படியாய் மற்றொரு வகையாக மாறியதற்கு புதைப்படிவ அத்தாட்சி நிச்சயம் இருக்கும். பரிணாமத்தின் எந்தக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் சரி அத்தாட்சி கட்டாயம் இருக்கவேண்டும். “நிறுத்த சமநிலை” (“punctuated equilibrium”) கொள்கையோடு சம்பந்தப்பட்ட திடீர் மாற்றங்களை நம்பும் விஞ்ஞானிகளும்கூட, இந்த மாற்றங்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நிகழ்ந்திருக்கலாம் என்று ஒப்புக்கொள்கின்றனர். ஆகவே, இடைப்பட்ட புதைப்படிவங்கள் தேவையே இல்லை என கருதுவது நியாயமற்றது.

5அதுமட்டுமல்ல, பரிணாமம் உண்மையை அடிப்படையாக கொண்டது என்றால் உயிரினங்களில் புதிய உறுப்புகள் தோன்ற ஆரம்பித்ததை புதைப்படிவ பதிவுகள் காண்பிக்க வேண்டும். படிப்படியாக வளரும் நிலையிலுள்ள கைகள், கால்கள், இறக்கைகள், கண்கள், எலும்புகள், வேறு சில உறுப்புகள் போன்றவை சில புதைப்படிவங்களிலாவது இருக்கவேண்டும். உதாரணமாக மீனின் துடுப்புகள், பாதங்களையும் விரல்களையும் உடைய நில நீர்வாழ்வனவற்றின் (amphibian) கால்களாகவும், செவுள்கள் நுரையீரல்களாகவும் மாறவேண்டும். ஊர்வனவற்றின் முன்னங்கால்கள் பறவையின் இறக்கைகளாகவும், பின்னங்கால்கள் நகங்களை உடைய கால்களாகவும், செதிள்கள் சிறகுகளாகவும், வாய்கள் கெட்டியான அலகுகளாகவும் மாறவேண்டும்.

6இதனால்தான் நியூ சயன்டிஸ்ட் என்ற பிரிட்டிஷ் பத்திரிகை அந்தக் கொள்கையைப் பற்றி கூறியதாவது: “முழுமையான ஒரு புதைப்படிவ பதிவு, உயிரினங்களில் படிப்படியான மாற்றம் நீண்ட காலமாக நிகழ்ந்ததைக் காண்பிக்கும் என்பதாக அது முன்னுரைத்தது.”4 டார்வினே அடித்துக் கூறியதுபோல: “இதற்குமுன் வாழ்ந்த இடைப்பட்ட வகைகளின் எண்ணிக்கை உண்மையில் மிக அதிகமாக இருந்திருக்கும்.”5

7மறுபட்சத்தில், படைப்பு பற்றிய ஆதியாகம பதிவு உண்மை என்றால், ஒரு வகை உயிரினம் மற்றொரு வகையாக மாறுவதை புதைப்படிவ பதிவு காட்டாது. மாறாக, ஒவ்வொரு வித்தியாசமான உயிரினமும் ‘அதனதன் இனத்தின்படி’ மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் என்ற ஆதியாகம பதிவை அது ஆதரிக்கும். (ஆதியாகமம் 1:11, 12, 21, 24, 25, NW) அதோடுகூட, உயிரினங்கள் நேரடியாக படைக்கப்பட்டிருந்தால் அரைகுறையான எலும்புகளோ உறுப்புகளோ புதைப்படிவ பதிவில் இருக்காது. மாறாக, இன்று வாழும் உயிரினங்களைப் போலவே, எல்லா புதைப்படிவங்களிலும் உயிரினங்கள் முழுமை பெற்றவையாகவும் அதிக சிக்கல் வாய்ந்தவையாகவும் இருக்கும்.

8மேலும், உயிரினங்கள் படைக்கப்பட்டிருந்தால், அவற்றிற்கு முன்பு வாழ்ந்த எந்த உயிரினத்தோடும் தொடர்பின்றி புதைப்படிவத்தில் அவை திடீரென தோன்ற வேண்டும். இதுவே உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால்? டார்வின் திறந்த மனதுடன் ஒப்புக்கொண்டார்: “எண்ணற்ற உயிரினங்கள் . . . ஒரே சமயத்தில் தோன்றியிருந்தால், இந்த உண்மை பரிணாம கொள்கைக்கு மரண அடியாக இருக்கும்.”6

பதிவு முழுமையானதா?

9எனினும், ஆதரவு கிடைப்பது படைப்பிற்கா அல்லது பரிணாமத்திற்கா என பாரபட்சமற்ற சோதனை செய்ய போதுமான அளவுக்கு புதைப்படிவ பதிவு முழுமையாக உள்ளதா? நூறு ஆண்டுகளுக்கு முன்பு அது அவ்வாறில்லை என டார்வின் கருதினார். அவருடைய காலத்திய புதைப்படிவ பதிவில் என்ன “குறை” இருந்தது? அவருடைய கொள்கையை ஆதரிக்க தேவையான இணைப்புகள் அதில் இல்லை. இதனால் அவர் பின்வருமாறு கூறினார்: “அப்படியென்றால், நில அடுக்கு (stratum) ஒவ்வொன்றிலும் இடைப்பட்ட இணைப்புகள் ஏராளம் இல்லாதது ஏன்? இனங்கள் படிப்படியாக மாறியதற்கான எந்த அத்தாட்சியையும் புவி அடுக்குகளில் நம்மால் காணவே முடிவதில்லை; ஆக இதுவே, இந்தக் கொள்கைக்கு எதிரான வெளிப்படையான, பெரும் எதிர்ப்பு.”7

10டார்வின் காலத்திய புதைப்படிவ பதிவு இன்னொரு வகையில் அவருக்கு ஏமாற்றமளித்தது. அவர் விளக்கியதாவது: “சில நில அடுக்குகளில் குறிப்பிட்ட வகை உயிரினங்கள் முழு தொகுதிகளாக திடீரென தோன்றுவதால் . . . ஒரு வகை உயிரினம் மற்றொரு வகையாக மாறும் (transmutation of species) என்ற நம்பிக்கைக்கு மரண அடி என்றே தொல்லுயிரியல் வல்லுனர்களில் அநேகர் வலியுறுத்திக் கூறுகின்றனர்.” அவர் தொடர்ந்து கூறினார்: “இதோடு சம்பந்தப்பட்ட, மிக கடினமான மற்றொரு பிரச்சினையும் உள்ளது. விலங்கினத்தின் பல்வேறு பெரும் பிரிவுகளைச் சேர்ந்த உயிரினங்கள், மிகவும் அடியிலுள்ள புதைப்படிவ பாறைகளில் திடீரென தோன்றிய விதத்தைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். . . . இவ்விஷயத்தை தற்சமயத்தில் விளக்கவே முடியாது. மேலும் இங்கு விளக்கப்படும் [பரிணாம] கருத்துகளுக்கு எதிராக இதை நியாயமான விவாதமாக உபயோகிக்கலாம்.”8

11புதைப்படிவ பதிவுகளைக் குறைகூறுவதன் மூலம் இந்த மாபெரும் பிரச்சினைகளிலிருந்து டார்வின் தப்பிக்க முயன்றார். “புவியியல் பதிவு செய்துள்ள இந்த உலக வரலாற்றில் குறை உள்ளது . . . அது மிகப் பெரிய குறை என்றே நான் கருதுகிறேன்”9 என்று அவர் சொன்னார். கிடைக்காத புதைப்படிவ இணைப்புகள் பிற்காலத்தில் கட்டாயம் கிடைத்துவிடும் என அவரும் மற்றவர்களும் கற்பனை செய்துகொண்டனர்.

12இன்று, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அதிகளவு தோண்டிய பின்னர் புதைப்படிவங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன. புவியியல் பதிவில் இன்னும் “குறை” உள்ளதா? கரிம பரிணாமத்தின் செய்முறைகள் (Processes of Organic Evolution) என்ற புத்தகம் குறிப்பிடுவதாவது: “கடந்தகால உயிரினங்கள் பற்றிய பதிவு இப்பொழுது கடலளவு உள்ளது; அதோடுகூட தொல்லுயிரியல் வல்லுனர்கள் இன்னும் கண்டுபிடித்து, விளக்கமளித்து, புதிய புதைப்படிவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இதன் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது.”10 ஸ்மித்ஸோனியன் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி போர்ட்டர் கையர் மேலும் சொல்வதாவது: “உலகம் முழுவதிலும் உள்ள அருங்காட்சியகங்களில் கோடிக்கணக்கான புதைப்படிவங்கள் உள்ளன. இவையனைத்தும் வகைப்படுத்தப்பட்டும் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டும் உள்ளன.”11 ஆகவே, புவி வரலாற்றிற்கு ஒரு கையேடு (A Guide to Earth History) இவ்வாறு அறிவிக்கிறது: “புதைப்படிவங்களின் உதவியால், கடந்தகால உயிரினங்களைப் பற்றி தொல்லுயிரியல் வல்லுனர்கள் மிகச் சிறந்த விளக்கத்தை இப்போது கொடுக்க முடியும்.”12

13இவ்வளவு காலத்திற்குப் பிறகு, கோடிக்கணக்கான புதைப்படிவங்களை ஒன்றுசேர்த்த பிறகு பதிவு இப்போது என்ன சொல்கிறது? இந்தப் புதைப்படிவங்கள், “உயிர் தோன்றியதைப் பற்றிய அதிசயிக்கத்தக்க புதுப்புது விஷயங்களை வெளிப்படுத்துகின்றன”13 என பரிணாமவாதி ஸ்டீவன் ஸ்டான்லி கூறுகிறார். மூன்று பரிணாமவாதிகளால் எழுதப்பட்ட உயிர் பற்றிய ஒரு கண்ணோட்டம் (A View of Life) என்ற புத்தகம் தொடர்ந்து கூறுகிறது: “தொல்லுயிரியல் வல்லுனர்களால் விளக்கவே முடியாத ஏராளமான விஷயங்கள் புதைப்படிவ பதிவுகளில் நிறைந்துள்ளன.”14 “அதிசயிக்கத்தக்க,” “விளக்கவே முடியாத” எதை இந்தப் பரிணாம விஞ்ஞானிகள் கண்டனர்?

14புதைப்படிவ சான்றுகள் டார்வினுடைய நாளில் எதை வெளிப்படுத்தியதோ அதையேதான் இப்போது கிடைத்துள்ள ஏராளமான புதைப்படிவங்களும் வெளிப்படுத்துவது விஞ்ஞானிகளைக் குழப்புகிறது. அதாவது, உயிரினங்களின் அடிப்படை இனங்கள் திடீரென்று தோன்றின, மேலும் நீண்ட காலங்களுக்கு அவை எந்தக் கணிசமான மாற்றத்தையும் அடையவில்லை. உயிரினத்தின் ஒரு பெரும் இனத்திற்கும் மற்றொன்றிற்கும் இடையே எந்த இடைப்பட்ட இணைப்பும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, பரிணாம கொள்கை சொன்னதற்கு நேர்மாறானதையே புதைப்படிவ பதிவு கூறுகிறது.

1540 வருட ஆராய்ச்சிக்கு பிறகு ஸ்வீடனைச் சேர்ந்த தாவரவியல் வல்லுனர் ஹெரிபர்ட் நீல்சன் இவ்விதமாக விவரித்தார்: “கிடைத்துள்ள தொல்லுயிரியல் அத்தாட்சிகளை வைத்து ஒரு பரிணாம வளர்ச்சியின் கேலிச்சித்திரம்கூட வரைய முடியாது. புதைப்படிவங்கள் போதுமான அளவு இல்லாததாலேயே இடைப்பட்ட இணைப்புகள் கிடைக்கவில்லை என ஒரு காலத்தில் கூறினர். இப்போது புதைப்படிவங்கள் ஏராளமாக கிடைத்திருப்பதால் . . . இனிமேலும் அந்தச் சாக்குப்போக்கை சொல்ல முடியாது. இந்த இணைப்புகள் இல்லவே இல்லை, அவற்றை ஒருபோதும் பெற முடியாது.”15

உயிர் திடீரென தோன்றுகிறது

16அத்தாட்சிகளை சற்று உன்னிப்பாக கவனித்துப் பார்ப்போமே. ரெட் ஜயன்ட்ஸ் அண்ட் ஒய்ட் ட்வார்ஃப்ஸ் என்ற தனது புத்தகத்தில் ராபர்ட் ஜாஸ்ட்ரோ கூறுவதாவது: “முதல் நூறுகோடி வருடங்களின்போது ஏதோவொரு சமயத்தில், உயிர் பூமியில் தோன்றியது. உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எளிய வகையிலிருந்து சிக்கல் வாய்ந்த வகையாக மாறினவென்று புதைப்படிவ பதிவு காண்பிக்கிறது.” இந்த விவரப்பதிவை வைத்து பார்த்தால், முதலில் தோன்றிய “எளிய” உயிரின வகைகள் முதல் சிக்கல் வாய்ந்த வகைகள் வரை படிப்படியான ஒரு பரிணாமத்தைப் புதைப்படிவ பதிவு நிரூபித்துள்ளது என்றே ஒருவர் நம்புவார். இருப்பினும், “உயிர் தோன்றிய அதிமுக்கிய காலமான ஆரம்ப நூறுகோடி வருடங்கள், பூமியின் வரலாற்று ஏட்டில் காலியாகவே உள்ளன”16 என்று அதே புத்தகம் சொல்லுகிறது.

17அதுமட்டுமா, அந்த ஆரம்பகால உயிரின வகைகள் உண்மையிலேயே ‘எளியவையா?’ விண்வெளியிலிருந்து பரிணாமம் என்ற புத்தகம் சொல்வதாவது: “மிகப் பழமையான பாறைகளில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால உயிரினங்களின் எஞ்சிய புதைப்படிவங்கள் ஓர் எளிய தொடக்கத்தை காட்டவில்லை. புதைப்படிவ பாக்டீரியா, பாசி, நுண்காளான் போன்றவற்றை ஒரு நாய் அல்லது குதிரையோடு ஒப்பிடும்போது எளியவையாக தோன்றலாம். ஆனால் இவை உண்மையில் சிக்கல் நிறைந்தவையே. பூமியின் மிகப் பழைய பாறைகளில் படிந்திருக்கும் உயிரினங்கள்கூட உயிர்வேதியியல் சிக்கல்கள் நிறைந்தவையே.”17

18ஆகவே, ஒரு செல் உயிரிகள் பல செல் உயிரிகளாக பரிணமித்தன என்பதை நிரூபிக்க ஏதேனும் சான்று உள்ளதா? “ஒரு செல் உயிரிகளிலிருந்துதான் பல செல் உயிரிகள் வளர்ச்சியடைந்தன என்பதற்கு எந்தவொரு தடயமும் புதைப்படிவ பதிவில் கிடைக்கவில்லை”18 என்று சொல்கிறார் ஜாஸ்ட்ரோ. அதற்கு மாறாக, “புதைப்படிவ பதிவுகளில் பாக்டீரியா மற்றும் ஒரு செல் தாவரங்கள் தவிர வேறு எதுவுமே காணப்படவில்லை. ஏறக்குறைய முன்னூறு கோடி வருடங்களாக நிகழ்ந்த கண்ணுக்குப் புலப்படா முன்னேற்றங்களுக்குப் பிறகு, சுமார் நூறுகோடி வருடங்களுக்கு முன்புதான் மாபெரும் திருப்பம் ஏற்பட்டது. பல செல் உயிரிகள் முதன்முதலில் பூமியில் தோன்றின”19 என்பதாக அவர் சொல்கிறார்.

19இவ்வாறு, கேம்ப்ரியன் காலப்பகுதியின் ஆரம்பத்தில் புதைப்படிவ பதிவில் விவரிக்க முடியாத திடீர் திருப்பம் ஏற்பட்டது. முழு வளர்ச்சி பெற்ற, கெட்டியான மேலோட்டை உடைய, சிக்கல் வாய்ந்த அநேக கடல் உயிரிகள் திடீரென தோன்றியதால் இந்தக் காலப்பகுதி உயிரினங்களின் “திடீர் பெருக்கம்” என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. உயிர் பற்றிய ஒரு கண்ணோட்டம் என்ற புத்தகம் இதை பின்வருமாறு விவரிக்கிறது: “கேம்ப்ரியன் காலப்பகுதி முதல் சுமார் ஒரு கோடி வருடங்கள் வரை, எலும்புக்கூட்டை உடைய முதுகெலும்பில்லா உயிரினங்களின் முக்கிய பிரிவுகள் இதுவரை இல்லாத அளவு முதன்முதலில் ஏராளமாக நம் கோளத்தில் தோன்றின.” நத்தைகள், கடற்பஞ்சுகள், நட்சத்திர மீன்கள், ட்ரைலோபைட்டுகள் என்றழைக்கப்படும் லாப்ஸ்டர் (ராஜ இறால்) ரக உயிரிகளும் சிக்கல் வாய்ந்த அநேக கடல் உயிரிகளும் தோன்றின. அதே புத்தகம் இவ்வாறு குறிப்பிடுவது ஆர்வத்துக்குரியது: “மறைந்துபோன சில ட்ரைலோபைட்டுகளுக்கு, உயிர்வாழ்ந்த மற்ற எந்த கணுக்காலிகளையும்விட (arthropod) அதிக சிக்கல் வாய்ந்த, கூர்மையான பார்வையுடைய கண்கள் உருவாகியிருந்தன.”20

20இவ்வாறு உயிர் திடீரென பெருகியதற்கும் அதற்கு முன் சம்பவித்ததற்கும் இடையே ஏதேனும் புதைப்படிவ இணைப்புகள் உள்ளனவா? டார்வினுடைய காலத்தில் இப்படிப்பட்ட இணைப்புகள் ஒன்றுமே இருக்கவில்லை. அவரே பின்வருமாறு ஒப்புக்கொண்டார்: “கேம்ப்ரியன் காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதிகளில் ஏன் ஏராளமான புதைப்படிவங்கள் இல்லை என்ற கேள்விக்கு என்னால் திருப்திகரமான பதில் கொடுக்க முடியவில்லை.”21 இன்று அந்த நிலைமை மாறிவிட்டதா? “உயிரினங்களின் முழு தொகுதிகள் திடீரென தோன்றுகின்றன” என டார்வினே ஒப்புக்கொண்டதை குறிப்பிட்டுவிட்டு தொல்லுயிரியல் நிபுணர் ஆல்ஃபிரெட் எஸ். ரோமர் எழுதியதாவது: “இதற்கு [கேம்ப்ரியன் காலப்பகுதிக்கு] கீழே அடர்த்தியான வண்டல் படிவுகள் (sediments) காணப்படுகின்றன; கேம்ப்ரியன் கால உயிரினங்களின் மூதாதைகள் இவற்றில் இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனாலும் நாம் அவற்றைக் காண முடிவதில்லை. இந்தப் பழங்கால படிவுகளில் உயிர் இருந்ததற்கான அத்தாட்சி துளிகூட இல்லை என்றே சொல்லலாம். ஆக மொத்தம், கேம்ப்ரியன் காலத்தின் ஆரம்பத்தில் ஒரு விசேஷ படைப்பு நிகழ்ந்திருக்கும் என நியாயமாகவே சொல்ல முடியும். ‘கேம்ப்ரியன் காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதிகளில் ஏன் ஏராளமான புதைப்படிவங்கள் இல்லை என்ற கேள்விக்கு என்னால் திருப்திகரமான பதில் கொடுக்க முடியவில்லை’ என்று டார்வின் சொன்னார். இன்று நம்மாலும் பதில் கொடுக்க முடியாது”22 என்கிறார் ரோமர்.

21கேம்ப்ரியன் காலப்பகுதிக்கு முற்பட்ட பாறைகள் வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாயின அல்லது ஆழம் குறைந்த கடல்களில் பாறைகளே உருவாகாமல் போய்விட்டன; அப்படியிருக்க, புதைப்படிவ இணைப்புகள் எப்படி கிடைக்கும் என்று சிலர் வாதாடுகின்றனர். “இந்த வாதங்களில் எதற்குமே ஆதாரமில்லை” என்பதாக பரிணாமவாதிகள் சால்வடார் ஈ. லூரியா, ஸ்டீஃபன் ஜே கௌல்ட், சாம் சிங்கர் ஆகியோர் சொல்கின்றனர். “கேம்ப்ரியன் காலப்பகுதிக்கு முற்பட்ட, மாற்றம் ஏற்படாத அநேக வண்டல் படிவுகளை புவியியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்; அவற்றில் சிக்கல் வாய்ந்த உயிரினங்களின் புதைப்படிவங்களே கிடையாது”23 என்றும் அவர்கள் கூறினர்.

22ஆகவேதான், டி. பி. கோவர் என்ற உயிர் வேதியியலாளர் கூறியதை இங்கிலாந்தின் கெண்டிஷ் டைம்ஸ் இவ்வாறு பிரசுரித்தது: “படைப்பு பற்றிய ஆதியாகம விவரப்பதிவும் பரிணாமக் கொள்கையும் ஒத்துப்போகாது. ஒன்று சரியாகவும் மற்றொன்று தவறாகவுமே இருக்க வேண்டும். புதைப்படிவங்கள் சொல்வது ஆதியாகம பதிவுக்கு இசைவாக உள்ளது. ஆரம்பகால உயிரிகளிலிருந்து முழு வளர்ச்சியடைந்த உயிரிகள் வரை படிப்படியாக மாறியதை காண்பிக்கும் புதைப்படிவ இணைப்புகளை மிகவும் பழங்கால பாறைகளில் நாங்கள் காணவில்லை. ஆனால் அந்தப் பழங்கால பாறைகளில் முழு வளர்ச்சியடைந்த உயிரினங்கள் திடீரென தோன்றியுள்ளன. ஒவ்வொரு இனத்திற்கும் மத்தியில் இடைப்பட்ட புதைப்படிவங்கள் இல்லவே இல்லை.”24

23விலங்கியல் வல்லுனர் ஹெரால்ட் காஃபின் இவ்வாறு கூறி முடித்தார்: “எளிய உயிரினங்களிலிருந்து சிக்கல் வாய்ந்த உயிரினங்கள் படிப்படியாக பரிணமித்தது உண்மையென்றால், கேம்ப்ரியன் காலப்பகுதியைச் சேர்ந்த முழு வளர்ச்சியடைந்த உயிரினங்களின் மூதாதைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும், ஆனால் தோல்வியே மிச்சம்; அவற்றை இனி கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பதாக விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கின்றனர். உண்மைகளின் அடிப்படையில், பூமியில் கண்டுபிடிக்கப்பட்டவற்றின் அடிப்படையில் பார்த்தால், பெரும் உயிரின வகைகள் திடீர் படைப்பு செயலால் தோன்றின என்ற கோட்பாடே மிகவும் பொருத்தமானது.”25

திடீர் ஆரம்பங்கள் தொடருகின்றன, மாற்றம் ஏதுமில்லை

24திடீர் உயிரின பெருக்கம் ஏற்பட்ட கேம்ப்ரியன் காலப்பகுதிக்கு மேலுள்ள அடுக்குகளில் புதைப்படிவ பதிவின் அத்தாட்சி ஒரே மாதிரிதான் காணப்படுகிறது: அவற்றிற்கு முன்பிருந்த எவற்றோடும் தொடர்பே இல்லாத புதிய விலங்கின மற்றும் தாவர வகைகள் திடீரென தோன்றுகின்றன. அவை தோன்றியது முதல் அதிக மாற்றம் ஏதுமின்றி அவ்வாறே தொடர்கின்றன. புதிய பரிணாம கால அட்டவணை இவ்வாறு கூறுகிறது: “பொதுவாக உயிரினங்கள் லட்சமோ பத்து லட்சமோ அதற்கும் அதிகமான தலைமுறைகளோ வாழ்ந்தாலும் அதிக மாற்றங்கள் இல்லாமல் இருப்பதை இன்று அத்தாட்சிகள் காட்டுகின்றன. . . . அவை தோன்றிய பிறகு முற்றிலும் அழிந்துபோகுமுன், பெரும்பாலான இனங்கள் எவ்வித பரிணாம மாற்றமும் அடைவதில்லை.”26

25உதாரணமாக, பூச்சிகள் பரிணாம மூதாதை ஏதுமின்றி புதைப்படிவ பதிவில் திடீரென்றும் எக்கச்சக்கமாகவும் தோன்றின. இந்நாள் வரை அவை அதிக மாற்றங்களை அடையவுமில்லை. “நாலு கோடி வருடங்கள் பழமையான” புதைப்படிவ ஈ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பற்றி டாக்டர் ஜார்ஜ் பாய்னர் ஜூனியர் சொன்னதாவது: “இவற்றின் உடலமைப்பு இன்றுள்ள ஈக்களுக்கு இருப்பதைப் போலவே உள்ளது. இறகுகள், கால்கள், தலை, உள்ளே இருக்கும் செல்கள் ஆகியவையும்கூட நவீனகால ஈக்களுடையதைப் போலவே காட்சியளிக்கின்றன.”27 டோரன்டோவின் த க்ளோப் அண்ட் மெய்ல் என்ற செய்தித்தாளில் வெளிவந்த ஓர் அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டது: “பரிணாம ஏணியில் ஏறுவதற்காக 4 கோடி ஆண்டுகள் போராடியும் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றத்தையும் அவை அடையவில்லை.”28

26தாவரங்களின் நிலையும் இதேதான். அநேக மரம், செடிகளின் புதைபடிவ இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை நம் நாளில் காணப்படும் ஓக், வால்நட், ஹிக்கரி, திராட்சை, மக்னோலியா, பனைவகை, இன்னும் மற்ற அநேக தாவரங்களின் இலைகளிலிருந்து அதிக வித்தியாசமாக இல்லை. விலங்கினங்கள் விஷயத்திலும் இதுவே உண்மை. இன்று உயிர்வாழ்பவற்றின் மூதாதைகள் புதைப்படிவ பதிவில் திடீரென தோன்றுகின்றன, இப்போது உயிரோடிருக்கும் அவற்றின் கூட்டாளிகளைப் போலவேதான் உள்ளன. அவற்றில் அநேக வித்தியாசங்கள் இருந்தாலும் அவையனைத்தும் ஒரே “இனம்” என்று சுலபமாக சொல்லிவிடலாம். அத்தகைய ஓர் உதாரணத்தை டிஸ்கவர் பத்திரிகை குறிப்பிடுகிறது: “ஹார்ஸ்-ஷூ நண்டு . . . எந்தவொரு மாற்றமுமின்றி பூமியில் 20 கோடி வருடங்களாக வாழ்ந்து வந்திருக்கிறது.”29 முற்றிலும் அழிந்துபோன இனங்களின் விஷயத்திலும் இதுவே உண்மை. உதாரணமாக டினோசார்கள், எந்த மூதாதையோடும் தொடர்பின்றி புதைப்படிவ பதிவுகளில் திடீரென்று தோன்றுகின்றன. பெருமளவில் இனப்பெருக்கம் செய்துவிட்டு, முற்றிலும் அழிந்துபோயின.

27இவ்விஷயம் பற்றி சிகாகோவின் ஃபீல்ட் மியூஸியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி வெளியிடும் புல்லட்டின் கூறியதாவது: “உயிரினங்கள் திடீரென்று தோன்றி, காலமுழுவதும் சிறிது மாற்றம் அடைந்து அல்லது மாற்றமே அடையாமல் பின்னர் திடீரென்று மறைந்துவிடுகின்றன. பின்னர் வந்த சந்ததிகள் அவற்றின் மூதாதையரைவிட சூழ்நிலைக்கு ஏற்ப நன்றாய் மாற்றியமைத்துக்கொள்ளும் தன்மையுள்ளவையா என்பது தெளிவாகவே இல்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால், உயிரியல் ரீதியில் படிப்படியாக வளர்ச்சியடைந்ததைக் காண்பது மிகவும் அரிதே.”30

இடைமாறுபாட்டு அம்சங்கள் ஏதுமில்லை

28பரிணாமக் கொள்கைக்கு மற்றொரு பிரச்சினையும் உள்ளது. அது, அரைகுறையாக உருவான எலும்புகளோ உறுப்புகளோ புதைப்படிவ பதிவுகளில் காணப்படாததே ஆகும்; அவ்வாறு காணப்பட்டால்தானே ஒரு புதிய அங்கம் தோன்றுகிறது என்று சொல்ல முடியும்? உதாரணமாக, பறவைகள், வௌவால்கள், மடிந்துபோன டீரோடாக்டைல்கள் போன்ற பல்வேறு வகை பறவைகளின் புதைப்படிவங்கள் உள்ளன. பரிணாமக் கொள்கையின்படி அவை இடைமாறுபாட்டு மூதாதையிலிருந்தே பரிணமித்திருக்க வேண்டும். ஆனால் அந்த இடைப்பட்ட வகைகளில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவற்றைப் பற்றிய சிறு துப்புகூட இல்லை. தற்போதுள்ள ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் பாதியோ முக்கால் வாசியோ நீளமுள்ள கழுத்துடைய ஒட்டகச்சிவிங்கியின் புதைப்படிவங்கள் ஏதாவது உள்ளனவா? ஊரும் பிராணியின் தாடை, பறவையின் அலகாக பரிணமிக்கும் புதைப்படிவங்கள் ஏதாவது உள்ளனவா? ஒரு மீனுக்கு, நில நீர்வாழ் உயிரியின் இடுப்பெலும்பு வளர்வதாகவோ, மீனின் துடுப்புகள் நில நீர்வாழ் உயிரியின் கால்களாக, பாதங்களாக அல்லது கால்விரல்களாக மாறுவதாகவோ ஏதாவது புதைப்படிவ சான்று உள்ளதா? இத்தகைய வளர்ந்துவரும் அம்சங்களைப் புதைப்படிவ பதிவுகளில் தேடுவது பிரயோஜனமில்லாத முயற்சி என்பதே உண்மை.

29“முழு நிறைவான ஒரு புதைப்படிவ பதிவில், நீண்ட காலப்பகுதியில் படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டு வெவ்வேறு பிராணிகளாக பரிணமித்த தடயங்கள் இருக்கும்” என பரிணாமம் முன்னுரைப்பதாக நியூ சயன்டிஸ்ட் குறிப்பிட்டது. ஆனால் அது ஒப்புக்கொண்டதாவது: “புதைப்படிவ பதிவு இந்த எதிர்பார்ப்பை திருப்தி செய்யவில்லை என்பது வருந்தத்தக்கதே; ஏனென்றால் எந்தவொரு உயிரினங்களின் புதைப்படிவங்களுக்கு இடையிலும் இடைப்பட்ட வகைகளே இல்லை. . . . அறியப்பட்ட புதைப்படிவ உயிரினங்கள் பல லட்சக்கணக்கான வருடங்கள் கழித்தும்கூட பரிணமிப்பது கிடையாது என்றே தோன்றுகிறது.”31 மரபியல் வல்லுனரான ஸ்டெப்பின்ஸ் இவ்வாறு எழுதுகிறார்: “விலங்குகள் அல்லது தாவரங்களின் எந்தவொரு பெருந்தொகுதிக்கும் மத்தியில் இடைப்பட்ட வகைகள் எதுவுமே இல்லை.” அவர் மேலுமாக, “உயிரினங்களின் பெரும் பிரிவுகளுக்கு இடையே மிகவும் அகன்ற இடைவெளி”32 இருப்பதைப் பற்றி பேசுகிறார். “ஓர் உயிரினம் மற்றொரு உயிரினமாக மாறுவதற்கு நம்பகமான ஒரு அத்தாட்சியைக்கூட புதைப்படிவ பதிவு கொடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஆச்சரியப்படும் அளவு நீண்ட காலங்களுக்கு இனங்கள் நிலைத்திருந்தன”33 என்பதாக புதிய பரிணாம கால அட்டவணை ஒப்புக்கொள்கிறது.​—⁠நேரெழுத்துக்கள் எங்களுடையவை.

30இது, லண்டனின் புவியியல் சங்கமும் இங்கிலாந்தின் தொல்லுயிரியல் நிறுவனமும் இணைந்து நடத்திய விரிவான ஆராய்ச்சியோடும் ஒத்திருக்கிறது. அந்த ஆராய்ச்சியின் முடிவைப் பற்றி இயற்கை அறிவியல் பேராசிரியர் ஜான் என். மூர் இவ்வாறு அறிவித்தார்: “சுமார் 2,500 தொகுதிகளாக வகைப்படுத்தப்பட்ட தாவர மற்றும் விலங்குகளின் புதைப்படிவ பதிவுகளைப் பற்றிய ஓர் ஆய்வு அறிக்கையை சுமார் 120 விஞ்ஞானிகள் தயாரித்து சமர்ப்பித்தனர்; அது 30 அதிகாரங்களும் 800-⁠க்கும் அதிக பக்கங்களும் உடைய பெரும் அறிக்கை. இவர்கள் அனைவருமே வெவ்வேறு துறையில் நிபுணர்கள். . . . தாவர மற்றும் விலங்கினத்தின் முக்கிய பிரிவு அல்லது வகை ஒவ்வொன்றும் மற்ற பிரிவுகள் அல்லது வகைகளிலிருந்து வேறுபட்ட, தனிச்சிறப்பான வரலாற்றை உடையதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது! தாவரம், விலங்கு ஆகிய இரு தொகுதிகளுமே புதைப்படிவ பதிவில் திடீரென தோன்றுகின்றன. . . . திமிங்கலங்கள், வௌவால்கள், குதிரைகள், மனிதக் குரங்குகள், யானைகள், முயல்கள், அணில்கள் போன்றவை அனைத்தும் இன்று இருப்பதைப் போலவே முதன்முதலாகத் தோன்றிய சமயத்திலும் இருந்தன. பொது மூதாதைப் பற்றிய எந்தத் தடயமும் இல்லை, முன்னோடி என்று சொல்லப்பட்ட எந்த ஊர்வனவற்றோடும் சுத்தமாக எந்தத் தொடர்புமே இல்லை.” மூர் தொடர்ந்து கூறினார்: “புதைப்படிவ நிலையில் இடைப்பட்ட வகைகள் என ஒன்றுமே இல்லை. அதனால்தான் அவற்றைப் புதைப்படிவ பதிவில் கண்டுபிடிக்கவே முடியவில்லை. விலங்கினங்கள் மத்தியிலோ தாவரங்கள் மத்தியிலோ அல்லது இவை இரண்டிற்கும் மத்தியிலோ எந்த மாற்றமுமே நிகழ்ந்திருக்க முடியாது.”34

31இவ்வாறாக, டார்வின் காலத்தில் உண்மையாய் இருந்ததே இன்றும் உண்மையாய் உள்ளது. புதைப்படிவ பதிவின் அத்தாட்சி, உயிரியல் வல்லுனர் டிஆர்க்கி தாம்ஸன் வளர்ச்சி மற்றும் உருவம் பற்றி (On Growth and Form) என்ற தனது புத்தகத்தில் சில வருடங்களுக்கு முன் சொன்னதைப் போலவே இன்றும் உள்ளது: “ஊர்வனவற்றிலிருந்து பறவைகள் எப்படி வந்தன, முன்னர் வாழ்ந்த நாலுகால் பிராணிகளிலிருந்து பாலூட்டிகள் எப்படி வந்தன, மீன்களிலிருந்து நாலுகால் பிராணிகள் எப்படி வந்தன, முதுகெலும்பு இல்லாதவற்றிலிருந்து முதுகெலும்பு உள்ளவை எப்படி வந்தன போன்றவற்றை டார்வினின் பரிணாமக் கொள்கை நமக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. . . . இவற்றின் இடைவெளிகளை இணைப்பதற்கான வழிகளை என்றென்றும் தேடினாலும் அது வீணே.”35

குதிரையைப் பற்றி என்ன?

32எனினும் குதிரை மட்டுமாவது, புதைப்படிவ பதிவின் மூலம் பரிணாமத்தை ஆதரிக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறது. “பரிணாம வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டுகளிலேயே குதிரைகளுக்குத்தான் மிகச் சிறந்த அத்தாட்சி உள்ளது”36 என்பதாக த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்லுகிறது. இதன் படங்கள் ஒரு சிறிய விலங்கிலிருந்து ஆரம்பித்து இன்று காணப்படுகிற பெரிய குதிரை வரை தொடர்கின்றன. ஆனால் புதைப்படிவ சான்றுகள் உண்மையில் இதை ஆதரிக்கின்றனவா?

33 என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்வதாவது: “குதிரை பரிணமித்ததற்கு சீரான ஆதாரம் எதுவுமில்லை.”37 அதாவது, அந்தச் சிறிய விலங்கு பெரிய குதிரையாக படிப்படியாக மாறியதற்கு புதைப்படிவ சான்றுகள் எங்கும் இல்லை. பரிணாமத்தின் இந்தத் “தலைசிறந்த” உதாரணத்தைப் பற்றி பரிணாமவாதி ஹிட்சிங் சொல்வதாவது: “இது எளிமையானது, தெளிவானது என ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்டது, இப்பொழுதோ மிகவும் சிக்கலானது என்பது அம்பலமாகிவிட்டது. எனவே, இதைப் பற்றிய ஒரு விளக்கத்தை நிராகரித்துவிட்டு மற்றொன்றை ஏற்றுக்கொள்வது பகுத்தறிவு சார்ந்ததல்ல, மாறாக அவரவரது நம்பிக்கையை சார்ந்ததே. இயோஹிப்பஸ் என்பது பூர்வீக குதிரை என்றும், வெகு காலத்திற்கு முன்னே மறைந்துவிட்டது என்றும், இன்று புதைப்படிவங்கள் வாயிலாக மட்டுமே அறிந்துகொள்ள முடியும் என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால் இந்த இயோஹிப்பஸ், இன்று உயிருடனும் நலமுடனும் குதிரையோடு எவ்வித தொடர்புமே இல்லாத ஒரு மிருகமாக​—⁠நரியின் உடல் பருமன் கொண்ட, எளிதில் அச்சமடைகிற, ஆப்பிரிக்க புதர்களில் விரைந்து திரிகிற டாமன் என்ற விலங்காக​—⁠இருக்கலாம்.”38

34முக்கியமாக, “[இயோஹிப்பஸ்] படிப்படியாக குதிரையாய் மாறிவிட்டதாக ஊகிக்கப்பட்டது” என்று புதிய பரிணாம கால அட்டவணை சொல்கிறது. இதன் அடிப்படையில் சிறிய இயோஹிப்பஸை குதிரையின் மூதாதையாக நினைத்து பார்ப்பது கற்பனா சக்திக்குச் சவால்விடுகிறது. ஆனால் இந்த ஊகத்தை உண்மைகள் ஆதரிக்கின்றனவா? “[இயோஹிப்பஸ்] புதைப்படிவத்தில் பரிணாம மாற்றத்திற்கான சான்றுகளே இல்லை” என இந்தப் புத்தகம் பதிலளிக்கிறது. புதைப்படிவ பதிவு, “குதிரைக் குடும்பத்தின் முழு வரலாற்றையும் தொகுத்துக் கொடுக்க தவறுகிறது”39 எனவும் இது ஒப்புக்கொள்கிறது.

35ஆகவே சிறிய இயோஹிப்பஸ், ஏதோ ஒரு வகை குதிரையாகவோ குதிரையின் மூதாதையாகவோ ஒருபோதும் இருந்ததில்லை என்று இப்போது சில விஞ்ஞானிகள் சொல்கின்றனர். மேலும், குதிரையாக பரிணமித்ததாக சொல்லப்படும் ஒவ்வொரு புதைப்படிவ வகையும் மாறியதாகவே தெரியவில்லை; அதற்கும் பரிணாம மூதாதை என்று கருதப்பட்டவற்றிற்கும் இடையில் இடைப்பட்ட வகைகள் ஒன்றுமே இல்லை. அதுமட்டுமல்ல, வெவ்வேறு அளவுகளிலும் வடிவங்களிலும் உள்ள குதிரைகளின் புதைப்படிவங்கள் இருப்பதும் ஆச்சரியமளிக்கக்கூடாது. இன்றும்கூட, சிறிய மட்டக் குதிரைகள் முதல் பெரிய உழவுக் குதிரைகள் வரை வித்தியாசமான வகைகள் உள்ளன அல்லவா? இவை அனைத்துமே குதிரைக் குடும்பத்திலிருக்கும் பல்வேறு வகைகளே.

புதைப்படிவ பதிவு உண்மையில் சொல்வதென்ன?

36புதைப்படிவ பதிவின் அத்தாட்சி பரிணாமத்தை ஆதரிக்கவில்லை, மாறாக படைப்புக்கே சான்றளிக்கிறது. வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த அநேக உயிரிகள் திடீரென தோன்றியதையே அது காண்பிக்கிறது. ஒவ்வொரு இனத்திலும் பல வகைகள் இருந்தபோதிலும் அவற்றிற்கு முன்னர் வாழ்ந்த பரிணாம மூதாதையோடு எவ்வித தொடர்பும் இல்லை. அதேபோல, அவற்றிற்கு பிறகு தோன்றிய வெவ்வேறு வகை உயிரினங்களோடும் அவற்றிற்கு எவ்வித பரிணாம தொடர்பும் இல்லை. நெடுங்காலமாக பல்வேறு வகை உயிரினங்கள் மாற்றம் இல்லாமலே தொடர்ந்து வாழ்ந்திருந்தன. அவற்றில் சில முற்றிலும் அழிந்துபோயின, மற்றவையோ இந்நாள் வரை பிழைத்திருக்கின்றன.

37“பல்வகை உயிரினங்கள் இருப்பதற்கு பரிணாமமே காரணம் என்பதை நியாயமான அறிவியல் விளக்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பரிணாமவாதி எட்மண்ட் சாம்வெல், ஒழுங்கு: உயிரினத்தில் (Order: In Life) என்ற தனது புத்தகத்தில் சொல்லி முடிக்கிறார். ஏன் முடியாது? அவர் தொடர்ந்து கூறுகிறார்: “பூமியில் உயிரினங்கள் பரவியிருப்பதையோ புதைப்படிவ பதிவையோ பற்றிய எந்தவொரு நுண்ணிய ஆராய்ச்சியும் பரிணாமத்தை நேரடியாக ஆதரிக்காது.”40

38திறந்த மனதோடு ஆராயும் ஒருவர், புதைப்படிவங்கள் பரிணாமக் கொள்கையை ஆதரிக்கவில்லை என்ற முடிவுக்கே வருவார். மாறாக, புதைப்படிவ அத்தாட்சிகள் படைப்பை உறுதியாக ஆதரிக்கின்றன. உயிரியல் நிபுணர் காஃபின் சொன்னதுபோல, “கடந்த காலத்தில் வாழ்ந்திருந்த உயிரினங்களுக்கு அத்தாட்சியளிக்கும் புதைப்படிவமே விஞ்ஞானிகளுக்கு முறையிடுவதற்கான உச்ச நீதிமன்றம். ஏனென்றால், உயிரினம் பற்றி அறிவியலுக்கு கிடைத்துள்ள ஒரேவொரு நம்பகமான வரலாறு புதைப்படிவ பதிவு மட்டுமே. இந்தப் புதைப்படிவ வரலாறு பரிணாமக் கொள்கையோடு ஒத்துப்போகவில்லை என்பதுதான் தெளிவாகிவிட்டது அல்லவா? ஆக, இதிலிருந்து என்ன தெரிகிறது? சில அடிப்படை வடிவங்களில் தாவரங்களும் விலங்குகளும் படைக்கப்பட்டன என்று அது நமக்குச் சொல்கிறது. புதைப்படிவ பதிவின் அடிப்படை உண்மைகள் பரிணாமத்தை அல்ல, படைப்பையே ஆதரிக்கின்றன.”41 வானவியல் வல்லுனர் கார்ல் சாகன், காஸ்மாஸ் என்ற தனது புத்தகத்தில் ஒளிவு மறைவின்றி இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “புதைப்படிவ அத்தாட்சி, ஒரு மகத்தான வடிவமைப்பாளர் இருக்கிறார் என்ற கருத்துக்கு இசைவாகவே இருக்கலாம்.”42

[கேள்விகள்]

1. புதைப்படிவங்கள் என்றால் என்ன?

2, 3. பரிணாமத்திற்கு புதைப்படிவங்கள் ஏன் முக்கியமானவை?

4-6. பரிணாமம் உண்மை என்றால் புதைப்படிவ அத்தாட்சி எதைக் காண்பிக்க வேண்டும்?

7. படைப்பு பற்றிய ஆதியாகம பதிவு உண்மை என்றால் புதைப்படிவ பதிவு எதைக் காண்பிக்க வேண்டும்?

8. உயிரினங்கள் படைக்கப்பட்டிருந்தால் புதைப்படிவ பதிவு வேறு எதையும் காண்பிக்க வேண்டும்?

9. தன்னுடைய நாளில் கிடைத்த அத்தாட்சியைப் பற்றி டார்வின் என்ன சொன்னார்?

10. வேறு என்ன ஏமாற்றத்தைப் பற்றியும் டார்வின் குறிப்பிட்டார்?

11. டார்வின் எவ்வாறு பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க முயன்றார்?

12. இப்பொழுது எந்தளவு புதைப்படிவ பதிவுகள் உள்ளன?

13, 14. ஏராளமான புதைப்படிவ அத்தாட்சிகளால் பரிணாமவாதிகள் ஏமாற்றமடைய காரணமென்ன?

15. புதைப்படிவ பதிவுகளை ஆராய்ந்த பிறகு ஒரு தாவரவியல் வல்லுனர் என்ன முடிவுக்கு வந்தார்?

16. (அ) ஒரு விஞ்ஞானியின் கூற்றிலிருந்து ஆரம்பகால புதைப்படிவ பதிவுகளில் எதை எதிர்பார்க்க வேண்டும்? (ஆ) அந்த எதிர்பார்ப்பைப் புதைப்படிவ பதிவு பூர்த்திசெய்கிறதா?

17. ஆரம்பகால உயிரின வகைகள் ‘எளியவையா’?

18. ஒரு செல் உயிரிகள் பல செல் உயிரிகளாக பரிணமித்ததற்கு புதைப்படிவ அத்தாட்சி ஏதேனும் உள்ளதா?

19. கேம்ப்ரியன் என்று அழைக்கப்படும் காலகட்டத்தின் ஆரம்பத்தில் என்ன சம்பவித்தது?

20. கேம்ப்ரியன் காலத்தில் திடீரென்று ஏற்பட்ட உயிரின பெருக்கத்திற்கும் அதற்கு முன் சம்பவித்ததற்கும் இடையே ஏதேனும் புதைப்படிவ இணைப்புகள் உள்ளனவா?

21. எந்த வாதங்களுக்கு ஆதாரமில்லை, காரணம் என்ன?

22. இதனால், உயிர் வேதியியலாளர் ஒருவர் என்ன சொன்னார்?

23. விலங்கியல் வல்லுனர் ஒருவர் என்ன முடிவுக்கு வந்தார்?

24. கேம்ப்ரியன் காலப்பகுதிக்கு மேலுள்ள அடுக்குகளில் இருக்கும் புதைப்படிவ பதிவின் அத்தாட்சி ஒரே மாதிரிதான் காணப்படுகிறதா?

25. பூச்சிகள் குறிப்பிடத்தக்க என்ன மாறா தன்மையைக் காண்பித்துள்ளன?

26. தாவரங்களும் விலங்குகளும் அதே மாறா தன்மையை எவ்வாறு காண்பிக்கின்றன?

27. பரிணாம ‘வளர்ச்சியைப்’ பற்றி ஓர் அறிவியல் பிரசுரம் என்ன சொல்கிறது?

28. எலும்புகள், உறுப்புகள் ஆகியவற்றின் இடைமாறுபாட்டு வடிவங்கள் எப்போதாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா?

29. இடைப்பட்ட வகைகள் என கருதப்பட்டவைப் பற்றி பரிணாமவாதிகள் இப்போது எதை ஒப்புக்கொள்கிறார்கள்?

30. விரிவான ஆராய்ச்சி ஒன்று எதை உறுதிப்படுத்துகிறது?

31. புதைப்படிவ பதிவு டார்வின் காலத்தில் சொன்னதைவிட வித்தியாசமான ஒன்றையா இன்று சொல்கிறது?

32. பரிணாமத்தின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக எது அடிக்கடி கூறப்படுகிறது?

33. குதிரையின் பரிணாமத்தைப் புதைப்படிவ அத்தாட்சி உண்மையிலேயே ஆதரிக்கிறதா?

34, 35. (அ) இயோஹிப்பஸைப் பற்றி தற்போது சிலர் கேள்வியெழுப்ப காரணம் என்ன? (ஆ) புதைப்படிவ குதிரை வகைகளுக்கு ஏதாவது பரிணாம மூதாதை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

36. புதைப்படிவ பதிவு உண்மையில் காண்பிப்பதென்ன?

37. பரிணாமவாதி ஒருவர் எதை ஒப்புக்கொள்கிறார்?

38. திறந்த மனதோடு ஆராயும் ஒருவர் என்ன முடிவுக்கு வருவார்?

[பக்கம் 54-ன் சிறு குறிப்பு]

“பரிணாமத்தின் விளைவாக பெரும் பிரிவைச் சேர்ந்த உயிரினங்கள் தோன்றியதை எந்தவொரு உயிரியல் வல்லுனரும் நேரில் பார்த்ததில்லை”

[பக்கம் 57-ன் சிறு குறிப்பு]

டார்வின்: “எண்ணற்ற உயிரினங்கள் . . . ஒரே சமயத்தில் தோன்றியிருந்தால், இந்த உண்மை பரிணாம கொள்கைக்கு மரண அடியாக இருக்கும்”

[பக்கம் 59-ன் சிறு குறிப்பு]

பரிணாம கொள்கை முன்னுரைத்ததற்கு நேர்மாறானதையே புதைப்படிவ பதிவு கூறுகிறது

[பக்கம் 60-ன் சிறு குறிப்பு]

“பாறைகளில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால உயிரினங்களின் எஞ்சிய புதைப்படிவங்கள் ஓர் எளிய தொடக்கத்தை காட்டவில்லை”

[பக்கம் 61-ன் சிறு குறிப்பு]

டார்வின்: “உயிரினங்களின் முழு தொகுதிகள் திடீரென தோன்றுகின்றன”

[பக்கம் 62-ன் சிறு குறிப்பு]

“ஒரு விசேஷ படைப்பு நிகழ்ந்திருக்கும் என நியாயமாகவே சொல்ல முடியும்”

[பக்கம் 62-ன் சிறு குறிப்பு]

“இடைப்பட்ட புதைப்படிவங்கள் இல்லவே இல்லை”

[பக்கம் 66-ன் சிறு குறிப்பு]

“குதிரை பரிணமித்ததற்கு சீரான ஆதாரம் ஏதுமில்லை”

[பக்கம் 67-ன் சிறு குறிப்பு]

ஈக்குவஸ் தொகுதி​—⁠உயிரோடிருக்கும் அனைத்து குதிரை வகைகளும் அடங்கிய தொகுதி​—⁠ . . . புதைப்படிவ பதிவில் திடீரென தோன்றுகிறது . . . அவற்றின் ஆரம்பத்திற்கான அத்தாட்சிகள் எதுவும் புதைப்படிவங்களில் இல்லை”b

[பக்கம் 70-ன் சிறு குறிப்பு]

“பல்வகை உயிரினங்கள் இருப்பதற்கு பரிணாமமே காரணம் என்பதை நியாயமான அறிவியல் விளக்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது”

[பக்கம் 55-ன் பெட்டி]

பரிணாமக் கொள்கை படைப்பு எதிர்பார்த்த

எதிர்பார்த்த புதைப்படிவ புதைப்படிவ பதிவில்:

பதிவில்:

1. மிகவும் எளிய உயிரினம் 1. சிக்கல் வாய்ந்த உயிரினங்கள்

படிப்படியாகத் தோன்றும் திடீரென்று தோன்றும்

2. எளிய உயிரினம் படிப்படியாக 2. சிக்கல் வாய்ந்த உயிரினங்கள்

சிக்கல் வாய்ந்த ‘அதனதன் இனத்தின்படியே’ (உயிரியல்

உயிரினங்களாக மாறும் குடும்பங்களின்படியே) பெருகும்;

ஆனாலும் பல்வேறு வகைகள் உருவாக

அனுமதிக்கும்

3. வித்தியாசமான இனங்களுக்கு 3. வித்தியாசப்பட்ட உயிரியல்

இடையே அநேக குடும்பங்களுக்கு இடையில்

“இணைப்புகள்” இருக்கும் “இணைப்புகள்” இருக்காது

4. கைகால்கள், எலும்புகள், 4. அரைகுறையான உடல் உறுப்புகள்

உறுப்புகள் போன்ற புதிய எதுவும் இருக்காது; எல்லா

பாகங்களின் ஆரம்பம் காணப்படும் பாகங்களும் முழுமையாய் இருக்கும்

[பக்கம் 56-ன் பெட்டி/படம்]

பரிணாமம் பற்றிய ஒரு புத்தகத்தில், “மீனில் இருந்து மனிதன் வரை” என்ற தலைப்பைக் கொண்ட இதுபோன்ற படம் ஒன்று உள்ளது. “மீன் துடுப்பில் உள்ள எலும்புகள் மனிதனின் மேற்கையிலும் முன்னங்கையிலும் உள்ள எலும்புகளாக எவ்வாறு பரிணமித்தன” என்று அந்தப் படம் காட்டுவதாக அப்புத்தகம் சொல்கிறது. அது தொடர்ந்து கூறுவதாவது: “இந்தப் படிப்படியான வளர்ச்சியின் அநேக இடைப்பட்ட நிலைகளுக்கு புதைப்படிவ பதிவில் அத்தாட்சிகள் உள்ளன.” ஆனால் உண்மையிலேயே அவ்வாறு உள்ளனவா?a

[வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

மணிக்கட்டு

முன்னங்கை

முழங்கை

மேற்கை

தோள்பட்டை

[பக்கம் 68, 69-ன் பெட்டி/படங்கள்]

உயிரினங்களின் ஆரம்பம் பற்றி . . . புதைப்படிவ அத்தாட்சி கூறுவதென்ன

உயிரின் ஆரம்பம் பற்றி:

“புவியோட்டில் எழுதப்பட்ட காலமென்னும் புத்தகத்தின் பக்கங்களில் குறைந்தது முக்கால்வாசி காலியாகவே உள்ளன.”​—⁠நாம் வாழும் உலகம் (The World We Live In)c

“ஆரம்பப் படிகள் . . . பற்றி ஒன்றுமே தெரியாது; . . . அவற்றின் சுவடே இல்லை.”​—⁠ரெட் ஜயன்ட்ஸ் அண்ட் ஒய்ட் ட்வார்ஃப்ஸ்d

பல செல் உயிரினங்கள் பற்றி:

“பல செல் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின, நேரடியாக தோன்றினவா படிப்படியாக தோன்றினவா, ஒரே முறையிலா பல முறைகளிலா என்பதெல்லாம் சர்ச்சைக்குரிய, கடினமான கேள்விகளாகவே எப்போதும் இருக்கின்றன . . . ‘மொத்தத்தில் இவற்றிற்கு பதில் காணவே முடியாது.’”​—⁠சயன்ஸ்e

“பல செல் உயிரினங்களின் ஆரம்ப நிலைகள் பற்றி புதைப்படிவ பதிவில் எந்த அறிகுறிகளுமே இல்லை.”​—⁠ரெட் ஜயன்ட்ஸ் அண்ட் ஒய்ட் ட்வார்ஃப்ஸ்f

தாவரங்கள் பற்றி:

“புதைப்படிவ பதிவு அறிவொளியூட்டும் என தாவரவியல் வல்லுனர்களில் பெரும்பாலானோர் நம்புகின்றனர். ஆனால் . . . பயனுள்ள எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. . . . மூதாதைகள் பற்றிய எந்த அத்தாட்சியும் இல்லை.”​—⁠பனைகளின் இயற்கை வரலாறு (The Natural History of Palms)g

பூச்சிகள் பற்றி:

“பூச்சிகளின் ஆரம்பம் பற்றி புதைப்படிவ பதிவில் எந்தத் தகவலும் இல்லை.”​—⁠என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்காh

“ஆரம்பகால மூதாதைய பூச்சிகளின் உருவத்தைக் காட்டும் எந்தப் புதைப்படிவமும் கிடையாது.”​—⁠பூச்சிகள் (The Insects)i

முதுகெலும்புள்ள விலங்குகள் பற்றி:

“இருப்பினும், முதுகெலும்புள்ள பிராணிகள் தோன்றியதைப் பற்றி புதைப்படிவங்கள் எவ்வித தகவலையும் தரவில்லை.”​—⁠என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்காj

மீன் பற்றி:

“எங்களுக்கு தெரிந்தவரை, இந்தப் புதிய உயிரியையும் இதற்கு முன்னிருந்த உயிரினத்தையும் இணைக்கும் எந்த ‘இணைப்பும்’ இல்லை. மீன் திடீரென தோன்றுகிறது.”​—⁠நம் விலங்குலகின் அற்புதங்களும் புதிர்களும் (Marvels & Mysteries of Our Animal World)k

மீன்கள் நில நீர்வாழ் உயிரிகளாக மாறுவது பற்றி:

“இவை ஏன் அல்லது எப்படி இவ்வாறு மாறின என்று நமக்கு ஒருபோதுமே தெரியாமல் போகலாம்.”​—⁠மீன்கள் (The Fishes)l

நில நீர்வாழ் உயிரிகள் ஊர்வனவாக மாறுவது பற்றி:

“முதுகெலும்பு பிராணிகளின் புதைப்படிவ பதிவில் பெரும் ஏமாற்றமளிக்கும் ஒரு விஷயம்: ஊரும் பிராணிகள் ஆரம்ப காலத்தில், அதாவது ஓடுள்ள முட்டை உருவான சமயத்தில், எப்படி பரிணமித்தன என்பதைப் பற்றி எந்தத் தகவலையும் கொடுக்காததே.” ​—⁠ஊரும் பிராணிகள் (The Reptiles)m

ஊர்வன பாலூட்டிகளாக மாறுவது பற்றி:

“பாலூட்டிகளுக்கும் ஊர்வனவற்றிற்கும் இடையே காணமற்போன இணைப்பு எதுவுமில்லை.”​—⁠ஊரும் பிராணிகள்n

“வருத்தகரமாக, பாலூட்டிகளின் முதல் சந்ததி என நாம் கருதும் விலங்குகள் பற்றி புதைப்படிவங்களில் எந்த அத்தாட்சியும் இல்லை.”​—⁠பாலூட்டிகள் (The Mammals)o

ஊர்வன பறவைகளாக மாறுவது பற்றி:

“ஊர்வன, பறவைகளாக மாறியதற்கு சரியான அத்தாட்சிகளே கிடையாது.” ​—⁠கரிம பரிணாமத்தின் செய்முறைகள்p

“பறவை போன்ற ஊர்வன ஒன்றின் எந்தப் புதைப்படிவமும் இதுவரை கிடைக்கவில்லை.”​—⁠த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியாq

மனிதக் குரங்குகள் பற்றி:

“மனிதக் குரங்குகளின் ஆரம்பத்தைக் கண்டுபிடிக்க உதவும் புதைப்படிவ பதிவுகள் இன்னும் அரைகுறையாகவே இருப்பது வருத்தகரமான விஷயம்.”​—⁠த பிரைமேட்ஸ்r

“உதாரணமாக, நவீனகால மனிதக் குரங்குகள் எங்கிருந்தோ திடீரென்று குதித்தன என்றே தோன்றுகிறது. அவற்றிற்கு கடந்த காலமும் இல்லை, புதைப்படிவ பதிவும் இல்லை.”​—⁠சயன்ஸ் டைஜஸ்ட்s

மனிதக் குரங்கு மனிதனாக மாறுவது பற்றி:

“மனிதனை மனிதக் குரங்கோடு நேரடியாக இணைக்கும் எந்தவொரு புதைப்படிவ அத்தாட்சியும் இல்லை, வேறு எந்த சான்றும் இல்லை.”​—⁠சயன்ஸ் டைஜஸ்ட்t

“மனிதக் குடும்ப வம்சாவளியைப் பார்க்கையில், மனிதக் குரங்கு போன்றவற்றிலிருந்து மனித இனம் வந்தது என்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை.”​—⁠புதிய பரிணாம கால அட்டவணைu

[பக்கம் 58-ன் படம்]

கோடிக்கணக்கான புதைப்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்களிலும் சோதனைக்கூடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன

[பக்கம் 61-ன் படங்கள்]

கேம்ப்ரியன் என்றழைக்கப்படும் காலப்பகுதியின் ஆரம்பத்தில், முதுகெலும்பற்ற உயிரினங்களின் முக்கிய தொகுதிகள் பெருமளவில் தோன்றியதை புதைப்படிவங்கள் காட்டுகின்றன. ஆகவே அந்தக் காலப்பகுதி உயிரினங்களின் “திடீர் பெருக்கம்” என்றே அழைக்கப்படுகிறது. இவை இதற்கு முந்தைய எந்த உயிரினத்தோடும் சம்பந்தமின்றி தோன்றுகின்றன

கடற்பஞ்சு

ட்ரைலோபைட்

ஜெல்லிமீன்

[பக்கம் 63-ன் படங்கள்]

மிகவும் சிக்கலான, பல்வகை உயிரினங்கள் திடீரென்றும் முழு வளர்ச்சியடைந்த நிலையிலும் தோன்றுகின்றன

குதிரை

அமெரிக்க அணில்

வண்ணத்துப் பூச்சி

பெரணி

ரோஜா

மீன்

[பக்கம் 64-ன் படங்கள்]

பறவைகள், இடைமாறுபாட்டு மூதாதையிலிருந்து பரிணமித்ததென பரிணாமக் கொள்கை ஆணித்தரமாக கூறுகிறது; ஆனால் அவற்றில் ஒன்றையுமே கண்டுபிடிக்க முடியவில்லை

டெர்ன்

ஹம்மிங் பறவை

கழுகு

[பக்கம் 65-ன் படம்]

தற்போதுள்ள ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் பாதியோ முக்கால் வாசியோ நீளமுள்ள கழுத்துடைய ஒட்டகச்சிவிங்கியின் புதைப்படிவங்கள் ஒன்றுமே கண்டுபிடிக்கப்படவில்லை

[பக்கம் 67-ன் படங்கள்]

எலி போன்ற இந்தப் பிராணி இயோஹிப்பஸ் போல, அதாவது குதிரையின் மூதாதை போல இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இயோஹிப்பஸ், குதிரை போன்ற ஒரு மிருகமாக பரிணமித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை