Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொள்வதென்றால்...

கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொள்வதென்றால்...

உங்கள் பெயருக்கு ஒரு குறிப்பிட்ட அர்த்தம் இருக்கிறதா? சில நாடுகளில், பெற்றோர் தங்களுடைய குழந்தைக்கு அர்த்தமுள்ள பெயரை வைப்பது வழக்கமாக இருக்கிறது. இவ்வாறு பெற்றோர் வைக்கும் பெயர் அவர்களுடைய மனப்பான்மைகளையும் மத நம்பிக்கைகளையும் குழந்தையைப் பற்றி அவர்களுக்கிருக்கும் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர் வைப்பது, இன்று நேற்று ஏற்பட்ட பழக்கம் அல்ல. அது, பைபிள் காலம் முதற்கொண்டே இருந்துவந்திருக்கிறது; மக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு வைத்த ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருந்தது. சில சமயங்களில், வாழ்க்கையில் ஒருவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார் என்பதை அவருடைய பெயர் சுட்டிக்காட்டியது. உதாரணத்திற்கு, சாலொமோன் பிற்காலத்தில் என்ன செய்வார் என்பதைப் பற்றி அவருடைய தகப்பனாகிய தாவீதிடம் யெகோவா சொன்னபோது, “அவன் பேர் சாலொமோன் [மூலமொழியில், “சமாதானம்” என்று அர்த்தம்] என்னப்படும்; அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் [அதாவது, அமைதியையும்] அருளுவேன்” என்றார்.—1 நாளாகமம் 22:9.

சில சமயங்களில், யாராவது ஒரு புதிய பொறுப்பை ஏற்க இருக்கையில் யெகோவா அவருக்கு ஒரு புதிய பெயரைக் கொடுத்தார். ஆபிரகாமின் மனைவி மலடியாய் இருந்தபோது, “இளவரசி” என்ற அர்த்தத்தில் அவளுக்கு சாராள் எனப் பெயர் வைத்தார். ஏன்? யெகோவாவே அதற்கு விளக்கமளிக்கிறார்: “நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன்.” (ஆதியாகமம் 17:16) சாராளுக்கு ஒரு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டதாலேயே அவளுக்கு அந்தப் புதிய பெயர் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சரி, எல்லாப் பெயர்களை விடவும் மகத்தான ஒரு பெயரைக் குறித்து இப்போது நாம் சிந்திப்போம். அதுதான் யெகோவா என்ற பெயர். அதன் அர்த்தம் என்ன? அந்தப் பெயரைக் குறித்து மோசே யெகோவாவிடம் விளக்கம் கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்: “இருக்கிறவராக இருக்கிறேன்.” (யாத்திராகமம் 3:14) ரோதர்ஹாம் பைபிள் இந்த வார்த்தைகளை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “எப்படியெல்லாம் ஆக வேண்டுமென விரும்புகிறேனோ அப்படியெல்லாம் நான் ஆவேன்.” யெகோவா எண்ணற்ற ஸ்தானங்களை ஏற்கிறார் என்பதை அவருடைய பெயர் சுட்டிக்காட்டுகிறது. இதைப் புரிந்துகொள்ள எளிமையான ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: தன் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள ஒரு தாய் ஒவ்வொரு நாளும் பல ஸ்தானங்களை ஏற்க வேண்டியிருக்கலாம். ஒரு நர்ஸாக... சமையல்காரியாக... ஆசிரியையாக... இப்படித் தேவைக்கேற்ப பல ஸ்தானங்களை வகிக்க வேண்டியிருக்கலாம். இதேபோல் யெகோவாவும் பல ஸ்தானங்களை வகிக்கிறார், ஆனால் ஓர் உன்னதமான விதத்தில்! அவர் மனிதகுலத்தின் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். அவர்களுக்காகத் தாம் வைத்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக எந்த ஸ்தானத்தையெல்லாம் ஏற்க நினைக்கிறாரோ அந்த ஸ்தானத்தையெல்லாம் ஏற்பார். எனவே, யெகோவாவுடைய பெயரைத் தெரிந்துகொள்வதென்றால்... அவர் வகிக்கும் ஒவ்வொரு ஸ்தானத்தையும் புரிந்துகொண்டு, அதற்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று அர்த்தம்.

வருத்தமான விஷயம் என்னவென்றால், கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொள்ளாதவர்களுக்கு அவருடைய அருமையான சுபாவமும் தெரியாமற்போய்விடுகிறது. என்றாலும், நீங்கள் பைபிளைப் படிப்பதன் மூலம், ஞானமுள்ள ஆலோசகராக... வலிமையுள்ள ரட்சகராக... தாராளப் பிரபுவாக... இப்படிப் பல ஸ்தானங்களை ஏற்கிற யெகோவாவுக்கு இன்னுமதிகமாய் மதிப்புக் காட்டக் கற்றுக்கொள்வீர்கள். சொல்லப்போனால், யெகோவாவின் பெயரில் பொதிந்துள்ள ஆழமான அர்த்தம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஆனால், கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொள்வது எப்போதுமே சுலபமல்ல. ஏன் என்பதை அடுத்த கட்டுரை விளக்கும். (w10-E 07/01)