Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“இலையுதிராதிருக்கிற” மரம்

“இலையுதிராதிருக்கிற” மரம்

“இலையுதிராதிருக்கிற” மரம்

கிராமப்புறங்களில் பச்சைப் பசேலென அடர்த்தியாய் வளர்ந்து கம்பீரமாய் நிற்கிற மரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவற்றைப் பார்க்கவே கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருக்குமல்லவா! இலைகள் அடர்ந்த பெரிய பெரிய மரங்களைப் பார்க்கும்போது அந்த இடத்தில் வறட்சி நிலவுவதாக நினைப்பீர்களா? நினைக்கவே மாட்டீர்கள். அவை செழித்தோங்கி நிற்பதைப் பார்க்கும்போது அங்கே தண்ணீருக்குப் பஞ்சமில்லை என்பதையே புரிந்துகொள்வீர்கள்.

அதனால்தான், ஆன்மீகப் பலம்படைத்த ஆட்களைச் செழிப்பான பெரிய மரங்களுக்கு பைபிள் ஒப்பிடுகிறது. உதாரணத்திற்கு, முதலாம் சங்கீதத்திலுள்ள முதல் மூன்று வசனங்களில் காணப்படும் இந்த அழகிய வர்ணனையைக் கவனியுங்கள்:

‘துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், யெகோவாவுடைய வேதத்தில் [“சட்டங்களில்,” NW] பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.’

அதேபோல், எரேமியா 17:7, 8-ல் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘யெகோவாமேல் நம்பிக்கை வைத்து, யெகோவாவைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய்[கள்] ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப் போலிருப்பான்.’

ஒருவர் சரியானதைச் செய்து, கடவுளுடைய சட்டங்களில் பிரியமாயிருந்து அவரை முழுமையாய்ச் சார்ந்திருக்கும்போது எப்படிப்பட்டவராய் ஆவார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு மேற்சொல்லப்பட்ட இரண்டு வர்ணனைகளிலும் மரங்கள் உவமையாய்ப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்தகைய ஒருவர் எப்படி ஆன்மீக அர்த்தத்தில் செழிப்பான மரத்தைப் போல் இருப்பார் எனக் கேட்கத் தோன்றுகிறது. இந்த வசனங்களை இன்னும் ஆழமாய் ஆராய்ந்து பார்க்கலாம்.

“நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு . . . ”

மேலே உள்ள வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்கள், “நீர்க்கால்களின் ஓரமாய்,” அல்லது ‘கால்வாய்களின் ஓரமாக’ நடப்பட்டிருப்பதாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது, ஒரேவொரு ஆற்றின் ஓரமாக அல்லது ஒரேவொரு கால்வாயின் ஓரமாக நடப்பட்டிருப்பதாய்ச் சொல்லப்படவில்லை. இதே போன்ற வர்ணனை ஏசாயா 44:3, 4-லும் காணப்படுகிறது. பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து விடுதலையான மனந்திரும்பிய யூதர்களைத் தாம் எப்படிக் கவனித்துக்கொள்ளப் போகிறார் என்பதைப் பற்றிக் கடவுளாகிய யெகோவா அதில் குறிப்பிட்டார். ஏசாயா தீர்க்கதரிசி மூலம் அவர் இவ்வாறு சொன்னார்: “தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; . . . அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச் செடிகளைப் [“பாப்லர் மரங்களைப்,” NW] போல வளருவார்கள்.” கடவுளுடைய ஆசியைப் பெற்றிருப்பவர்களை அடர்ந்த பாப்லர் மரங்களைப் போலச் செழித்தோங்கச் செய்வது ‘ஆறுகளும்,’ ‘நீர்க்கால்களும்’ என்று இந்த வசனம் குறிப்பிடுகிறது.

இன்றும்கூட விவசாயம் செய்யப்படுகிற பகுதிகளில் ஆழமான கிணறு, ஆறு, குளம், நீர்த்தேக்கம் போன்ற பெரிய நீர்நிலைகளிலிருந்து வரும் தண்ணீர், கால்வாய்களாகவும் நீர்க்கால்களாகவும் ஓடுவதை நீங்கள் பார்ப்பீர்கள். பொதுவாக, இவை வயல்களுக்கு அல்லது தோப்புகளுக்கு நீர் பாய்ச்சுவதற்கான அமைப்புகளாக இருக்கின்றன. சில சமயங்களில், இந்தக் கால்வாய்களிலுள்ள நீர் திருப்பிவிடப்படுவதால் அது பழத் தோட்டங்களுக்குப் பாய்கிறது. வேறு சில சமயங்களில், நீர்க்கால்களிலிருந்து பாய்கிற நீர், வயல்களுக்கு மட்டுமல்லாமல் அவற்றின் எல்லைகளில் வரிசையாக நிற்கிற மரங்களுக்கும் பாய்கிறது.

இத்தகைய நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டுள்ள மரங்கள் எப்படிப்பட்ட மரங்களாய் வளருகின்றன? இதைப் புரிந்துகொள்ள சங்கீதம் 1:3-ஐக் கவனிப்போம். அங்கே ‘தன் காலத்தில் தன் கனியைத் தருகிற’ மரத்தைப் பற்றி அது சொல்கிறது. பைபிள் தேசங்களில், அத்தி மரம், மாதுளை மரம், ஆப்பிள் மரம், பேரீச்சை மரம், ஒலிவ மரம் ஆகியவற்றைக் காணலாம். அத்தி மரத்தை எடுத்துக்கொண்டால், அது கிளை பரப்பி 30 அடி உயரம்வரை வளரலாம்; ஆனால், பட்டியலிலுள்ள கனிதரும் மரங்களில் பெரும்பாலானவை இவ்வளவு உயரமாக வளருவதில்லை. எனினும், அவை பசுமையாகவும் செழிப்பாகவும் வளர்ந்து, உரிய காலத்தில் ஏராளமாகக் கனி தரலாம்.

பூர்வ காலத்தில், சிரியா, பாலஸ்தீனா ஆகிய நாடுகளில் ஆற்றோரங்களிலும் நீர்க்கால்களின் ஓரங்களிலும் பெரியபெரிய பாப்லர் மரங்கள் வளர்ந்தன. பைபிளில், பொதுவாக இந்த மரங்கள் நீர்நிலைகளோடு அல்லது ‘ஆறுகளோடு’ தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றன. (லேவியராகமம் 23:40, NW) பாப்லர் மர வகையைச் சேர்ந்த வில்லோ மரங்களும்கூட தண்ணீர் அதிகமுள்ள பகுதிகளில் வளருவதைப் பார்க்கலாம். (எசேக்கியேல் 17:5, NW) செழித்தோங்கி வளரும் இந்தப் பெரிய மரங்கள், சங்கீதக்காரனும் எரேமியாவும் சொல்ல வந்த கருத்தை நன்றாகத் தெளிவுபடுத்துகின்றன: கடவுளுடைய சட்டங்களைப் பின்பற்றி அவரை முழுமையாய்ச் சார்ந்திருக்க முயற்சி செய்கிற ஒவ்வொருவரும் ஆன்மீக ரீதியில் திடமாய் இருப்பார்கள்; ‘அவர்கள் செய்வதெல்லாம் வாய்க்கும்.’ நாம் செய்வதெல்லாம் வாய்க்க வேண்டும், அதாவது வெற்றி பெற வேண்டும், என்றுதானே நாம் விரும்புகிறோம்?

யெகோவாவின் சட்டங்களில் பிரியமாயிருங்கள்

இன்று மக்கள் வாழ்க்கையில் வெற்றி காண பல்வேறு விதங்களில் முயற்சி செய்கிறார்கள். தங்களுக்குப் பேரையும் புகழையும் பணத்தையும் அள்ளித்தருமென நினைத்து அவர்கள் பல காரியங்களில் மூழ்கிவிடுகிறார்கள்; ஆனால், தங்கள் லட்சியங்கள் நிறைவேறாதபோது பெரும்பாலும் ஏமாற்றத்தையே சந்திக்கிறார்கள். எனினும், வாழ்க்கையில் பரம திருப்தியையும் நிரந்தர சந்தோஷத்தையும் எது அளிக்க முடியும்? இயேசு மலைப்பிரசங்கத்தில் சொன்ன விஷயத்திலிருந்து இதற்கான பதிலைப் பெறலாம். “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுக்குரியது” என்று அவர் சொன்னார். (மத்தேயு 5:3) ஆம், எக்கச்சக்கமான பொருள்கள் இருந்தால் உண்மையான சந்தோஷம் நமக்குக் கிடைத்துவிடாது, ஆன்மீக விஷயங்களில் ஆர்வப் பசியோடு இருப்பதன் மூலமும், அதைத் திருப்தி செய்வதன் மூலமுமே அது நமக்குக் கிடைக்கும்; இவ்வாறு, நாம் ஆன்மீக ரீதியில் திடமாய் இருப்போம், உரிய காலத்தில் கனிதரும் செழிப்பான மரங்களைப் போல் இருப்போம். என்றாலும், நாம் எப்படி ஆன்மீக ரீதியில் செழிப்பாய் இருக்கலாம்?

முதலாவதாக, நாம் சில காரியங்களைத் தவிர்க்க வேண்டும்; இதைச் சங்கீதக்காரனின் வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். “துன்மார்க்கருடைய ஆலோசனை,” “பாவிகளுடைய வழி,” ‘பரியாசக்காரர் உட்காரும் இடம்’ ஆகியவற்றைப் பற்றி அவர் குறிப்பிட்டார். நாம் சந்தோஷமானவர்களாய் இருக்க வேண்டுமென்றால், கடவுளுடைய சட்டங்களைப் பரியாசம் செய்கிறவர்களை, ஏன், அவற்றைப் புறக்கணிப்பவர்களைக்கூடத் தவிர்ப்பது அவசியம்.

இரண்டாவதாக, நாம் கடவுளுடைய சட்டங்களில் பிரியமாய் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு செயலைச் செய்வதற்கு நாம் பிரியமாக இருந்தால் அதைச் செய்வதற்கு எப்போது வாய்ப்புக் கிடைக்குமென ஆசை ஆசையாய்க் காத்திருப்போம், அல்லவா? அப்படியானால், கடவுளுடைய சட்டங்களில் பிரியமாய் இருப்பது, அவருடைய வார்த்தைக்கு உயர்ந்த மதிப்புக் காட்டுவதையும், அதை அதிகமதிகமாய்த் தெரிந்துகொள்ள ஆசைப்படுவதையும், அதை நன்கு புரிந்துகொள்ள முயற்சி செய்வதையும் அர்த்தப்படுத்துகிறது.

மூன்றாவதாக, நாம் அதை ‘இரவும் பகலும் . . . தியானிக்க,’ அதாவது தாழ்ந்த குரலில் வாசிக்க வேண்டும். பைபிளைத் தவறாமல் வாசிப்பதும் வாசித்த விஷயங்களைத் தியானிப்பதும் அதில் உட்பட்டிருக்கிறது. “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்” என்று கடவுளுடைய வார்த்தையைப் பற்றிப் பாடிய சங்கீதக்காரனைப் போலவே நாமும் உணர வேண்டும்.—சங்கீதம் 119:97.

ஆம், கடவுளாகிய யெகோவாவைப் பற்றிய திருத்தமான அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்று, அவர்மீதும் அவரது வாக்குறுதிகள்மீதும் முழு நம்பிக்கையை வளர்த்துக்கொண்டோமானால், ஆன்மீக ரீதியில் நிச்சயம் திடமாய் இருப்போம். அப்போது, “அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” எனச் சங்கீதக்காரன் விவரித்த பாக்கியவானைப் போலவே நாமும் இருப்போம். (w09 3/1)