Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காய்பாவின் குடும்பத்தைச் சேர்ந்தவள்

காய்பாவின் குடும்பத்தைச் சேர்ந்தவள்

பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் உண்மையிலேயே வாழ்ந்தார்கள் என்பதை நேரடியாகவோ மறைமுகமாகவோ புதைபொருள் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. அப்படி மறைமுகமாக உறுதிப்படுத்தும் கண்டுபிடிப்பு ஒன்றைப் பற்றிய தகவலை இஸ்ரேல் நாட்டு வல்லுநர்கள் 2011-ல் வெளியிட்டார்கள். என்ன கண்டுபிடிப்பு அது? 2000 ஆண்டு பழமையான, வேலைப்பாடுமிக்க ஒரு சுண்ணாம்புக்கல் பேழை அது. பொதுவாக, உடல் சிதைவுக்குப் பிறகு எடுக்கப்பட்ட எலும்புகள் அத்தகைய பேழைகளில் வைக்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட அந்தப் பேழையில் பின்வரும் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது: “பெத் இம்ரியைச் சேர்ந்த, மாசியா குருவாகிய காய்பாவின் மகனான எஷுவாவின் மகள் மிரியம்.” காய்பா என்பவர் இயேசுவின் விசாரணையுடனும் அவரது கொலையுடனும் சம்பந்தப்பட்டிருந்த யூத தலைமைக் குரு. (யோவா. 11:48-50) அவரை, “காய்பா என்றழைக்கப்பட்ட யோசேப்பு” என்று சரித்திராசிரியரான பிளேவியஸ் ஜொஸிஃபஸ் குறிப்பிடுகிறார். அப்படியானால், அப்பேழை அந்தத் தலைமைக் குருவுடைய சொந்தக்காரர் ஒருவரின் பேழையாகத்தான் இருந்திருக்க வேண்டும். கொஞ்சக் காலத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பேழையில், தலைமைக் குருவின் பேழையெனக் கருதப்பட்ட அப்பேழையில், “காய்பாவின் மகனான யோசேப்பு” * என்ற எழுத்துப்பொறிப்பு காணப்பட்டதால், மிரியம் காய்பாவின் சொந்தக்காரப் பெண்ணாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

பண்டைய கல்லறை ஒன்றைச் சூறையாடிய கயவர்களிடமிருந்து மிரியமின் பேழை மீட்கப்பட்டது என இஸ்ரேல் பழங்காலப் பொருள் ஆய்வுத்துறை (IAA) தகவல் அளித்தது. அந்தப் பேழையின் கலைநயத்தையும் அதன்மீதுள்ள எழுத்துப்பொறிப்பையும் ஆய்வுசெய்து அதன் நம்பகத்தன்மைக்குச் சான்றளித்தது.

அந்தப் பேழை ஒரு புதிய தகவலையும் அளிக்கிறது. மாசியாவைப் பற்றி அது குறிப்பிடுகிறது. எருசலேம் ஆலயத்திலே சுற்றுமுறையில் சேவை செய்துவந்து 24 குருமார் வகுப்புகளில் கடைசி வகுப்புதான் மாசியா. (1 நா. 24:18) “காய்பா குடும்பத்தாரும் மாசியா வகுப்பாரும் சொந்தக்காரர்களாக இருந்தார்கள்” என்பதை அந்தப் பேழையிலுள்ள எழுத்துப்பொறிப்பு காட்டுகிறது என்று IAA தகவல் அளிக்கிறது.

அந்த எழுத்துப்பொறிப்பில் பெத் இம்ரி என்ற பெயரும் காணப்படுகிறது. இதற்கு IAA இரண்டு விதமான விளக்கங்களை அளிக்கிறது: “ஒரு விளக்கம், இம்மேர் புத்திரரின் (எஸ்றா 2:36, 37; நெகேமியா 7:39-42) வம்சாவளியில் மாசியா வகுப்பாரும் வந்ததால், பெத் இம்ரி என்பது குருமார் குடும்பம் ஒன்றின் பெயராக இருக்கலாம். மற்றொரு விளக்கம், [பெத் இம்ரி என்பது] மிரியமின் அல்லது அவளுடைய குடும்பத்தாரின் சொந்த ஊராக இருக்கலாம்.” ஆக, நிஜமான நபர்களையும் நிஜமான குடும்பங்களையும் பற்றியே பைபிள் குறிப்பிடுகிறது என்பதற்கு மிரியமின் பேழை ஓர் அத்தாட்சி!

^ காய்பாவின் பேழையைப் பற்றி அறிய, “இயேசுவைக் குற்றவாளியாகத் தீர்த்த பிரதான ஆசாரியன்” என்ற கட்டுரையை ஜனவரி 15, 2006 தேதியிட்ட காவற்கோபுரத்தில், பக்கங்கள் 10-13-ல் பாருங்கள்.