Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மையான அன்பும் சமாதானமும் வாழ்வில் மலர்ந்தது

உண்மையான அன்பும் சமாதானமும் வாழ்வில் மலர்ந்தது

உண்மையான அன்பும் சமாதானமும் வாழ்வில் மலர்ந்தது

எஸிடியோ நஹக்ப்ரியா சொன்னபடி

அன்பு காட்டவோ கவனித்துக்கொள்ளவோ ஆள் இல்லாம வளர்ந்தேன். ஆனா, இப்போ எல்லாரும் என்மேல அன்பை பொழியிறாங்க. நிம்மதியாவும் இருக்கேன். எப்படி இந்த மாற்றம்? சொல்றேன், கேளுங்க.

வ ருடம் 1976. கிழக்கு தைமூரிலுள்ள மலைப்பிரதேசத்தில் ஒரு மண்குடிசையில்தான் நான் பிறந்தேன். அந்த ஊர், அப்போது இந்தோனேஷியாவின் பாகமாக இருந்தது. ஏழைபாழைகளான என் பெற்றோருக்கு பத்து பிள்ளைகள், எட்டாவதாக நான். பத்து பிள்ளைகளுக்கும் சாப்பாடு போட்டு வளர்க்க முடியாததால், இரட்டைப் பிள்ளைகளில் என் தம்பியை மட்டும் வைத்துக்கொண்டு என்னை பெரியப்பா மகனிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.

நான் பிறப்பதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு, அதாவது டிசம்பர் 1975-ல் இந்தோனேஷியாவின் காலடியில் கிழக்கு தைமூர் வீழ்ந்தது. அடுத்த இருபது வருடங்கள் நடந்த கொரில்லாப் போருக்கு அதுதான் காரணம். இப்படி, வன்முறையும் கஷ்டங்களும் பிஞ்சு வயதிலேயே என் மனதில் பதிந்துவிட்டன. போராளிகள் எங்களுடைய கிராமத்தைத் தாக்க வந்தது... எல்லாரையும் ஊரைவிட்டு விரட்டியது... எல்லாம் இன்னும் என் கண்முன் நிற்கிறது. நானும் என் பெரியப்பா மகனும் கால்கடுக்க நடந்து, ஆள் நடமாட்டம் இல்லாத மலைப்பாங்கான இடத்திற்குப் போனோம். அங்கேதான் ஆயிரக்கணக்கான தைமூர் ஆட்கள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள்.

போராளிகள் எப்படியோ அந்த இடத்தையும் கண்டுபிடித்துவிட்டார்கள். அப்புறம் என்ன? ஒரே குண்டு மழை! எப்போதும் நெஞ்சம் முழுக்க திகில், சாவு, அழிவு பற்றிய நினைவாகவே இருக்கும். ஒருவழியாக, எங்கள் கிராமத்திற்குத் திரும்பினோம். இருந்தாலும், பயந்து பயந்தே வாழ்ந்தேன். அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் திடீர் திடீரென காணாமல் போய்விடுவார்கள், ஒருவேளை கொலை செய்யப்பட்டிருக்கலாம். அடுத்து மாட்டப் போவது நான்தான் என்ற பயம் என்னை கவ்வியது.

எனக்குப் பத்து வயது இருந்தபோது, பெரியப்பா மகன் உடல் நலமில்லாமல் இறந்துவிட்டார். அதனால், பெற்றோர் என்னை பாட்டி வீட்டிற்கு அனுப்பினார்கள். தாத்தாவை இழந்து தவித்த பாட்டிக்கு வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்தது. அதோடு, நானும் அங்கே போனதால் என்னை பாரமாக நினைத்தார். அடிமைபோல் என்னை வேலை வாங்கினார். ஒருநாள், வேலை செய்ய முடியாதளவுக்கு சுகமில்லாமல் இருந்தேன். அப்போது, அடியோ அடியென அடித்துவிட்டார். செத்துபோகும் நிலையில் இருந்தேன். அந்த நேரம் பார்த்து, என் மாமன் மகன் வந்து என்னை அவருடைய வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போனார்.

எனக்கு 12 வயதாக இருக்கும்போதுதான் ஸ்கூலுக்கே போக ஆரம்பித்தேன். பிறகு, மாமா மகனின் மனைவியும் வியாதியில் படுத்துவிட்டார், அதனால் அவர் ரொம்பவே நொந்துபோனார். இனியும் அவர்களுக்கு பாரமாய் இருக்கக் கூடாதென நினைத்து அங்கிருந்து ஓடி காட்டுப் பகுதியில் தங்கியிருந்த இந்தோனேஷிய போராளிகளோடு சேர்ந்துகொண்டேன். துணிகளைத் துவைப்பது, சமைப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளை அவர்களுக்குச் செய்துகொடுத்தேன். அவர்களும் என்னை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். என்னையும் ஒரு ஆளாக மதிக்கிறார்களே என நினைத்து சந்தோஷப்பட்டேன். சில மாதங்களுக்குப் பிறகு, என் சொந்தக்காரர்கள் என்னைக் கண்டுபிடித்துவிட்டார்கள். என்னை கிராமத்துக்கு அனுப்பி வைக்கும்படி போராளிகளை நச்சரித்தார்கள்.

புரட்சியாளராக...

உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்த பிறகு, கிழக்கு தைமூரின் தலைநகரான டிலிக்குப் போய் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கே என்னைப் போலவே கஷ்டத்தில் வளர்ந்த நிறைய இளைஞர்களைப் பார்த்தேன். அரசியலைக் கையில் எடுத்தால்தான் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கும், சமுதாயத்தில் மாற்றமும் ஏற்படும் என நாங்கள் முடிவு செய்தோம். மாணவர்கள் கைகோர்த்து போராட்டங்கள் நடத்தினோம், கடைசியில் எல்லாம் கலவரத்தில்தான் முடிந்தது. என் நண்பர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது. சிலர் கொலையும் செய்யப்பட்டார்கள்.

2002-ல் கிழக்கு தைமூர் சுதந்திரம் பெற்றபோது, நாடு கலவர பூமியாகக் கிடந்தது, ஆயிரக்கணக்கானோர் செத்துப் போயிருந்தார்கள், லட்சக்கணக்கானோர் நாட்டைவிட்டு துரத்தப்பட்டிருந்தார்கள். நிலைமை சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, அரசியல் போராட்டம் எல்லாம் தொடர்கதையாகத்தான் இருந்தது.

புதிய திருப்பம்

அப்போது நான் உறவினர்கள் சிலருடன் வாழ்ந்து வந்தேன். ஆன்ட்ரே என்ற தூரத்து உறவினனும் அங்கு இருந்தான். அவன் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்துக்கொண்டிருந்தான். நான் தீவிர கத்தோலிக்கனாக இருந்ததால், அவன் வேறொரு மதத்தில் ஆர்வம் காட்டியது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இருந்தாலும், பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற துடிப்பு இருந்தது. அதனால், அவ்வப்போது ஆன்ட்ரே தன்னுடைய படுக்கை அறையில் வைத்திருந்த பைபிளை எடுத்து படிப்பேன். படித்த விஷயங்கள் என் ஆர்வத் தீயை மூட்டிவிட்டன.

2004-ல் இயேசுவின் மரண நினைவு நாளுக்கான அழைப்பிதழை ஆன்ட்ரே எனக்குக் கொடுத்தான். அதில் கலந்துகொள்ளத் தீர்மானித்தேன். அதைச் சரியாக வாசிக்காததால், கூட்டம் ஆரம்பிப்பதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பே அங்கு போய்விட்டேன். உள்ளூரையும் வெளிநாட்டையும் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள் அங்கு வந்தபோது, அன்பாக கைகுலுக்கி என்னை வரவேற்றார்கள். நான் அப்படியே உச்சிக்குளிர்ந்து போனேன். பேச்சாளர் சொன்ன வசனங்களை நோட்டில் எழுதிக்கொண்டேன். பின்னர், அதை என்னுடைய கத்தோலிக்க பைபிளில் சரிபார்த்தேன். அவர் சொன்னது சரியாகத்தான் இருந்தது!

அடுத்த வாரம், பூசையில் கலந்துகொள்ள சர்ச்சுக்குப் போனேன். நானும் சிலரும் தாமதமாகப் போனதால், பாதிரியார் கோபத்தில் ஒரு தடியை எடுத்து எங்களை வெளியே விரட்டினார். நாங்கள் வெளியே நின்றுகொண்டிருக்க, “இயேசுவின் சமாதானம் உங்களோடு இருப்பதாக” என்று சொல்லி அவர் பூசையை முடித்தார். தைரியசாலியான ஒரு பெண், “அந்த ஆளுங்களையெல்லாம் வெளியே விரட்டிட்டு, எப்படி சமாதானத்த பற்றி பேசுறீங்க?” என்று கேட்டாள். அதைப் பாதிரியார் காதில் வாங்கவே இல்லை. அன்றைக்கு சர்ச்சைவிட்டு வெளியே வந்தவன்தான், அதற்கு பிறகு அந்தப் பக்கம் எட்டியே பார்க்கவில்லை.

ஆன்ட்ரேயுடன் சேர்ந்து நானும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன், யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கும் போக ஆரம்பித்தேன். சொந்தக்காரர்களுக்கு விஷயம் தெரிய வந்ததும் எங்களை எதிர்த்தார்கள். “அந்தப் புது கூட்டத்தோடு இனியும் சேர்ந்தீங்கன்னா உங்க ரெண்டு பேரையும் குழிதோண்டி புதைச்சுடுவேன்” என்று ஆன்ட்ரேயின் பாட்டி எச்சரித்தார். அவர் என்னதான் பூச்சாண்டி காட்டினாலும் நாங்கள் நிறுத்தவே இல்லை. ஆன்மீக விஷயங்களில் முன்னேற நாங்கள் தீர்மானித்தோம்.

மாற்றங்கள் செய்தோம்

பைபிளைப் படிக்க படிக்க, அன்பின் வாசமே என்னிடம் இல்லை என்பதை உணர்ந்தேன். ஏனென்றால், நான் முரடனாக, சண்டைக்காரனாக, யாரையும் நம்பாதவனாக இருந்தேன். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் உண்மையிலேயே என்மீது அக்கறை காட்டினார்கள். உடம்பு முடியாமல் இருந்தபோது என் சொந்தக்காரர்கள் என்னை எட்டியே பார்க்கவில்லை. ஆனால், யெகோவாவின் சாட்சிகள் என்னை வந்து பார்த்தார்கள், உதவி செய்தார்கள். அவர்கள் உண்மையான அன்பை “சொல்லிலும் பேச்சிலும்” மட்டுமல்ல, “செயலிலும்” காட்டினார்கள்.​—⁠1 யோவான் 3:​18, பொது மொழிபெயர்ப்பு.

தோற்றத்திலும் குணத்திலும் காட்டான் மாதிரி இருந்த என்னிடம் யெகோவாவின் சாட்சிகள் “அனுதாபத்தையும் சகோதரப் பாசத்தையும்” காட்டினார்கள். (1 பேதுரு 3:⁠8) வாழ்க்கையில் முதல் முறையாக அன்பை ருசித்தேன். சாதுவாக மாறினேன், கடவுள்மீதும் ஆட்கள்மீதும் அன்பு காட்ட தொடங்கினேன். பிறகு, டிசம்பர் 2004-ல் யெகோவாவுக்கு என்னை அர்ப்பணித்து ஞானஸ்நானம் பெற்றேன். அதன் பிறகு, ஆன்ட்ரேயும் ஞானஸ்நானம் பெற்றான்.

துன்பங்களில் இன்பம்

ஞானஸ்நானம் எடுத்த பிறகு, என்னைப் போல அன்பையும் நியாயத்தையும் பற்றி தெரியாதிருந்த ஆட்களுக்கு அதைப் பற்றி சொல்ல வேண்டும் என்ற ஆசை எனக்குள் பற்றியெரிந்தது. அதனால், முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தேன். யெகோவாவின் சாட்சிகள் இதை பயனியர் சேவை என்று சொல்வார்கள். அரசியல் ஆர்ப்பாட்டங்களிலும் கலவரங்களிலும் ஈடுபட்டு எதையும் சாதிக்கவில்லை. ஆனால், பைபிளிலுள்ள உற்சாகமூட்டும் செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லும்போது மனதுக்கு எவ்வளவு திருப்தியாக இருக்கிறது! இப்போதுதான் நான் உண்மையிலேயே மற்றவர்களுக்கு உதவுகிறேன்.

2006-ல் கிழக்கு தைமூரில் அரசியலிலும் எல்லைப் பகுதிகளிலும் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. பல காலமாக தீர்க்கப்படாமல் இருந்த குறைகளைத் தீர்க்க, அரசியல் கட்சிகள் சண்டை போட்டன. டிலி நகரம் முற்றுகையிடப்பட்டது. கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊரைவிட்டு ஓடினார்கள். அப்படி ஓடிய யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து நானும் டிலிக்குக் கிழக்கே சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாக்காவுக்குத் தப்பி ஓடினேன். அங்கே எங்கள் துன்பமெல்லாம் இன்பமாக மாறியது. ஆம், ஒரு புதிய சபையை ஆரம்பித்தோம். டிலிக்கு வெளியே அதுதான் முதல் சபை.

2009-ல் இந்தோனேஷியாவிலுள்ள ஜகார்த்தாவில் முழுநேர ஊழியர்களுக்கான விசேஷ பள்ளியில் கலந்துகொள்ள அழைப்பு கிடைத்தது. அங்குள்ள சகோதரர்கள் எனக்காக தங்களுடைய இல்லக் கதவை மட்டுமல்ல இதயக் கதவையும் திறந்தார்கள். அவர்களுடைய உண்மையான அன்பு என் நெஞ்சைத் தொட்டது. ஓர் உலகளாவிய ‘சகோதர கூட்டத்தின்,’ ஆம் ஒரு சர்வதேச ‘குடும்பத்தின்’ பாகமாக இருந்ததை உணர்ந்தேன். அவர்கள் என்னைக் கண்ணுக்குக் கண்ணாக கவனித்துக்கொண்டார்கள்.​—⁠1 பேதுரு 2:⁠17.

மனதில் பூத்த நிம்மதி!

அந்தப் பள்ளியில் கலந்துகொண்ட பிறகு, பாக்காவுக்குத் திரும்பினேன். இப்போதும் அங்குதான் இருக்கிறேன். கடவுளைப் பற்றி நான் கற்றுக்கொண்ட விஷயங்களை, மற்றவர்களுக்குச் சந்தோஷமாகக் கற்றுக்கொடுத்து வருகிறேன். உதாரணத்திற்கு, பாக்காவுக்கு வெளியேயுள்ள ஒதுக்குப்புறமான ஒரு கிராமத்தில் நானும் சிலரும் சுமார் 20 பேருக்கு பைபிள் விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தோம். அவர்களில் நிறைய பேர் எழுதப் படிக்கத் தெரியாத வயதானவர்கள். அவர்கள் எல்லாருமே கூட்டங்களுக்கு வருகிறார்கள். மூன்று பேர் ஞானஸ்நானம் பெற்று எங்களுடைய ஆன்மீக ‘குடும்பத்தின்’ பாகமாக ஆனார்கள்.

சில வருடங்களுக்கு முன் ஃபெலிஸார்டா என்ற தங்கமான ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவள் பைபிளைப் படித்து, முன்னேறி ஞானஸ்நானம் பெற்றாள். 2011-ல் நான் அவளைக் கரம் பிடித்தேன். சந்தோஷமான ஒரு விஷயம் என்னவென்றால், என் உறவினன் ஆன்ட்ரே கிழக்கு தைமூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சேவை செய்கிறான். என்னுடைய உறவினர்கள் நிறைய பேர், எங்களைக் குழி தோண்டி புதைக்க நினைத்த ஆன்ட்ரேயின் பாட்டியும்கூட இப்போது நான் சரியான பாதையில்தான் போகிறேன் என்பதைப் புரிந்திருக்கிறார்கள்.

முன்பெல்லாம், நான் ரொம்ப கோபப்படுவேன், அன்பு என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது, மற்றவர்களும் என்னிடம் அன்பு காட்டியதில்லை. ஆனால், யெகோவாவின் தயவால் உண்மையான அன்பும் சமாதானமும் என் வாழ்வில் மலர்ந்தது. (g12-E 06)

[பக்கம் 18-ன் படம்]

புரட்சியாளராக எஸிடியோ

[பக்கம் 20-ன் படம்]

கிழக்கு தைமூரிலுள்ள பாக்கா சபையினரோடு எஸிடியோவும் ஃபெலிஸார்டாவும்