Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எனக்கு ஏன் மயக்கம் வருகிறது?

எனக்கு ஏன் மயக்கம் வருகிறது?

எனக்கு ஏன் மயக்கம் வருகிறது?

என்னுடைய கண் அழுத்தத்தைப் பரிசோதிக்கப் போவதாக மருத்துவர் கூறினார். அதற்கு அவர் என் கண்மணியை ஒரு கருவியால் தொட வேண்டும், அடுத்து என்ன நடக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஒவ்வொரு முறையும் அப்படித்தான் ஆகும். இரத்தம் எடுக்க நர்ஸ் ஊசி குத்தினாலும் அப்படித்தான் ஆகும். சில சமயங்களில் காயங்கள்பற்றிப் பேசினால்கூட மயக்கம்போட்டு கீழே விழுந்துவிடுவேன்.

பிரிட்டன் நாட்டின் ஓர் அறிக்கைபடி, நம்மில் சுமார் 3 சதவிகிதத்தினர் மேற்கூறப்பட்டுள்ள ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் பெரும்பாலும் மயக்கமடைகிறோம். நீங்களும் இந்தப் பிரச்சினையுடன் போராடுபவராக இருந்தால், அதைத் தவிர்க்க முயற்சி செய்தும் தோல்வியடைந்திருப்பீர்கள். எல்லாருக்கும் முன்பாக மயக்கம்போட்டு கீழே விழுந்துவிடுவோமோ என பயந்து குளியலறைக்குச் செல்ல நீங்கள் முயற்சி செய்திருக்கலாம். ஆனால், அது சரியல்ல. ஏனென்றால், போகும் வழியிலேயே நீங்கள் மயக்கம்போட்டு கீழே விழுந்து உங்களைக் காயப்படுத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. பல முறை எனக்கு இப்படி மயக்கம் வந்திருப்பதால் இதற்கு என்னதான் காரணம் என்பதைத் தெரிந்துகொள்ள தீர்மானித்தேன்.

ஒரு நல்ல மருத்துவரிடம் இதைப்பற்றி பேசிய பிறகும் சில புத்தகங்களை ஆராய்ந்த பிறகும் இந்த நிகழ்வுக்குப் பெயர் வேஸோவேகல் ரியாக்‍ஷன் என்பதைத் தெரிந்துகொண்டேன். இரத்த ஓட்டத்தை, அதாவது நீங்கள் உட்கார்ந்திருந்த பிறகு எழுந்திருக்கையில் ஏற்படுகிற இரத்த ஓட்டத்தைச் சீராகக் கட்டுப்படுத்துகிற உடல் அமைப்பில் ஏற்படும் கோளாறுதான் இது எனச் சொல்லப்படுகிறது.

சில சமயங்களில், நீங்கள் இரத்தத்தைப் பார்க்கையிலோ உங்கள் கண்கள் பரிசோதிக்கப்படுகையிலோ உங்களுடைய தானியங்கு நரம்பு மண்டலம் நீங்கள் படுத்திருக்கையில் செயல்படுவது போல செயல்படுகிறது; ஆனால் உண்மையில் நீங்கள் நின்றபடி அல்லது உட்கார்ந்தபடிதான் இருப்பீர்கள். பயத்தின் காரணமாக முதலில் உங்களுடைய இதயத் துடிப்பு படுவேகமாக ஏறுகிறது. பிறகு, உங்களுடைய நாடித் துடிப்பு திடீரென்று சரிகிறது. உங்கள் கால்களுக்குச் செல்லும் இரத்த நாளங்கள் விரிந்துவிடுகின்றன. அதன் விளைவாக, உங்கள் கால்களில் இரத்த ஓட்டம் அதிகமாகி தலையில் இரத்த ஓட்டம் குறைந்துவிடுகிறது. அதனால் உங்கள் மூளைக்குப் போதுமான பிராணவாயு கிடைக்காமல் நீங்கள் மயக்கமடைகிறீர்கள். இதை எப்படித் தவிர்ப்பது?

உங்களிடமிருந்து இரத்தம் எடுக்கப்படுகையில் நீங்கள் வேறே எங்காவது பார்க்கலாம் அல்லது அந்தச் சமயத்தில் படுத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே பார்த்தபடி, வேஸோவேகல் ரியாக்‍ஷன் ஆரம்பிப்பதற்கு முன் பெரும்பாலும் அதன் அறிகுறிகளை உங்களால் கண்டுணர முடியும். ஆகவே, நீங்கள் மயக்கமடைவதற்கு முன் தேவையான நடவடிக்கையை எடுப்பதற்குப் போதுமான அவகாசம் இருக்கிறது. அறிகுறிகளைக் கவனித்தவுடனேயே நீங்கள் படுத்துக்கொள்ளுங்கள் என்றும் உங்கள் கால்களை நாற்காலி மீதோ சுவர் மீதோ தூக்கிவையுங்கள் என்றும் அநேக மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். இப்படிச் செய்வதன்மூலம் உங்கள் கால்களுக்கு இரத்தம் பாய்வதை நிறுத்தி நீங்கள் மயக்கமடைவதையும் தவிர்க்க முடியும். ஒரு சில நிமிடங்களில் நீங்கள் பழைய நிலைக்குத் திரும்பிவிடலாம்.

இந்தத் தகவல் எனக்கு உதவியது போலவே உங்களுக்கும் உதவினால் வேஸோவேகல் ரியாக்‍ஷன் ஆரம்பிப்பதற்கு முன்பே நீங்கள் அதன் அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இப்படிச் செய்வதன்மூலம் மயக்கம் வருவதற்கு முன்பே தேவையான நடவடிக்கைகளை எடுத்து அதைத் தடுக்கலாம்.​—⁠அளிக்கப்பட்டது.

[பக்கம் 28-ன் சிறு குறிப்பு]

மருத்துவர் பரிசோதிக்கையில் படுத்திருப்பது உதவியாக இருக்கலாம்