Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எகிப்திலிருந்து உலகின் எல்லா நகரங்களுக்கும்

எகிப்திலிருந்து உலகின் எல்லா நகரங்களுக்கும்

எகிப்திலிருந்து உலகின் எல்லா நகரங்களுக்கும்

இத்தாலியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“அவை தங்களுடைய தாய் மண்ணைவிட்டுப் ‘பயணித்தன,’ தங்களை உருவாக்கிய ஒரு மாபெரும் நாகரிகத்தின் கண்கூடான அடையாளங்களாக இருந்தன” என்று இத்தாலிய பத்திரிகையான ஆர்சேவோ கூறுகிறது. அவற்றில் பெரும்பாலானவை நீண்ட காலத்திற்கு முன்பாகவே எகிப்தைவிட்டு இஸ்தான்புல், லண்டன், பாரிஸ், ரோம், நியு யார்க் போன்ற இடங்களுக்குக் கொண்டுவரப்பட்டன. ரோமிலுள்ள பல நகரங்களின் மிகவும் பிரபலமான இடங்கள் இவற்றின் வருகையால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை அங்கு வரும் பார்வையாளர்கள் கவனிக்க முடியும். அவை என்ன? நான்முக ஸ்தூபிகள்!

நான்கு பக்கங்களைக் கொண்ட கல்தூணே நான்முக ஸ்தூபி எனப்படுகிறது; அதன் உச்சிப்பகுதி பிரமிடு உருவில் கூர்முனையுடன் இருக்கிறது. இந்த நான்முக ஸ்தூபியின் அடிப்பாகம் அகலமாகவும் மேலே செல்லச்செல்ல குறுகலாகவும் இருக்கிறது. பழமையான நான்முக ஸ்தூபி சுமார் 4,000 வருடங்களுக்கு முற்பட்டது. மிகச் சமீப கால ஸ்தூபிகூட சுமார் 2,000 வருடங்களுக்கு முற்பட்டது.

நான்முக ஸ்தூபிகள், பொதுவாக சிவப்புநிற கிரானைட் கற்களால் ஆனவையாக இருக்கும்; அவை பூர்வ எகிப்தியர்களால் ஒரே கல்லாக வெட்டியெடுக்கப்பட்டு கல்லறைகளுக்கும் கோயில்களுக்கும் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. சில விண்ணை முட்டுமளவுக்கு உயரமுள்ளவை. 32 மீட்டருக்கும் மேல் இன்னும் நின்றுகொண்டிருக்கிற மாபெரும் ஸ்தூபி ஒன்று ரோமச் சதுக்கத்தில் வீற்றிருக்கிறது; அதன் எடை சுமார் 455 டன். பெரும்பாலானவை சித்திர எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

ரா என்ற சூரியக் கடவுளைக் கெளரவிப்பதற்காக இந்த நினைவுச் சின்னங்கள் நிறுவப்பட்டன. எகிப்திய அரசர்களுக்கு அந்தக் கடவுள் வெற்றியையும் பாதுகாப்பையும் அளித்ததற்கு நன்றிக்கடனாகவும் ஆசிபெற வேண்டுவதற்காகவும் அவை நிறுவப்பட்டன. அவற்றின் வடிவம் பிரமிடுகளின் வடிவமைப்பின் அடிப்படையில் இருக்கிறதென சிலர் கருதுகிறார்கள். பூமியைக் கதகதப்பாக்குவதற்கு இறங்கி அதை ஜொலிக்கப்பண்ணும் சூரியக் கற்றைகளை அவை அடையாளப்படுத்துகின்றனவாம்.

கூடுதலாக, நான்முக ஸ்தூபிகள் பார்வோன்களை மகிமைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டன. அவற்றிலுள்ள கல்வெட்டுகள் எகிப்தின் பல்வேறு ஆட்சியாளர்களை “ராவுக்குப் பிரியமானவர்கள்” அல்லது சூரிய அஸ்தமன நேரத்தில் சூரியக் கடவுளாக இருந்த, “ஏட்டம் தெய்வத்தைப் போல . . . அழகுள்ளவர்கள்” என்று விவரிக்கின்றன. ஒரு பார்வோனுடைய இராணுவ பராக்கிரமத்தைப்பற்றி நான்முக ஸ்தூபி ஒன்று இவ்வாறு சொல்கிறது: “அவனுடைய வல்லமை மாந்துவின் [போர்க்கடவுள்] வல்லமையைப்போன்றது, அந்தக் காளை அந்நிய தேசங்களை மிதித்து, பகைவர்களைக் கொல்கிறது.”

எகிப்தின் ஜூனு நகரத்தில் (பைபிளில் ஓன்) முதன்முதலாக நான்முக ஸ்தூபிகள் நிறுவப்பட்டன; ஜூனு நகரத்திற்கு “தூண்களின் நகரம்” என்று அர்த்தம்; இது ஒருவேளை நான்முக ஸ்தூபிகளைக் குறித்திருக்கலாம். எகிப்தியர்களுடைய சூரிய வணக்கத்தின் முக்கிய மையமாக அது இருந்ததால் கிரேக்கர்கள் ஜூனுவை, “சூரியனின் நகரம்” என்று அர்த்தம்கொள்கிற ஹீலீயாபலிஸ் என்றழைத்தார்கள். ஹீலீயாபலிஸ் என்ற கிரேக்கப் பெயர், “சூரியனின் வீடு” என்று அர்த்தப்படுகிற பெத்ஷிமேஸ் என்ற எபிரெய பெயரோடு தொடர்புள்ளது.

பைபிளின் எரேமியா தீர்க்கதரிசனப் புத்தகம், “எகிப்து தேசத்திலுள்ள பெத்ஷிமேசின் சிலைகளை [“தூண்களை,” பொது மொழிபெயர்ப்பு] உடைத்து” என்று சொல்கிறது. இது ஹீலீயாபலிஸின் நான்முக ஸ்தூபிகளைக் குறிக்கலாம். அவை குறித்துக்காட்டிய விக்கிரக வணக்கத்தை கடவுள் கண்டனம் செய்தார்.​—எரேமியா 43:10-13.

வெட்டியெடுத்தலும் கொண்டுசெல்லுதலும்

உள்ளதிலேயே மிகப்பெரிய நினைவுச் சின்னத்தைப் பார்த்தாலே நான்முக ஸ்தூபிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை அறிந்துகொள்ளலாம். எகிப்திலுள்ள அஸ்வானுக்கு அருகில் வெட்டியெடுக்கப்பட்ட அது, இன்னும் அநாதையாக அப்படியே கிடக்கிறது. முதலில் ஸ்தூபிக்குப் பொருத்தமான ஒரு பாறைப் படுகையைத் தேர்ந்தெடுத்தபிறகு, அதை சமப்படுத்துகிறார்கள்; எப்பகுதி தேவைப்படுகிறதோ அதைச் சுற்றி வேலையாட்கள் வரிசையாகத் துளையிடுகிறார்கள். அதன் அடிப்பகுதியில் பள்ளம் வெட்டுகிறார்கள் அடிப்பாகம் கட்டுவிடும்வரை அதை மரக்கட்டைகளால் நிரப்புகிறார்கள். பூர்வ எகிப்தியர்கள் வெட்டியெடுத்த எந்தக் கல்லையும்விட கனமான சுமார் 1,170 டன் எடையுள்ள ஒரே கல் வெட்டியெடுக்கப்பட்டு, பின் நைல் நதிக்கரைக்கு இழுத்துச் செல்லப்பட்டு பிறகு தோணியின் மூலமாக போகும் இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட வேண்டியிருந்தது.

உண்மையில் நடந்தது என்னவெனில், அஸ்வான் நான்முக ஸ்தூபியில் சரிசெய்ய முடியாத அளவுக்கு கீறல் விழுந்து விட்டதால் வேலையாட்கள் அதை அப்படியே போட்டுவிட்டார்கள். அது மாத்திரம் முடிக்கப்பட்டிருந்தால், 4 சதுர மீட்டர் அடிப்பாகத்துடன் 42 மீட்டர் உயரத்திற்கு நின்றிருக்கும். நான்முக ஸ்தூபிகள் எவ்வாறு செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டன என்பது இதுவரை தெரியவில்லை.

எகிப்திலிருந்து ரோமுக்கு

பொ.ச.மு 30-⁠ல் எகிப்து ரோம மாகாணமாக மாறியது. பல்வேறு ரோமப் பேரரசர்கள் தங்களுடைய தலைநகரத்தை மாபெரும் நினைவுச் சின்னங்களால் அலங்கரிக்க ஆசைப்பட்டார்கள்; அதனால் அதிகபட்சமாக 50 நான்முக ஸ்தூபிகளை ரோமுக்குக் கொண்டுவந்தார்கள். இவற்றைக் கொண்டு வருவதற்காகவே மிகப்பெரிய கப்பல்கள் வடிவமைக்கப்பட்டன. ரோமுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகும் அவை சூரிய வணக்கத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன.

ரோமப் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது ரோம் சூறையாடப்பட்டது. பெரும்பாலான நான்முக ஸ்தூபிகள் கீழே வீழ்த்தப்பட்டு அம்போவென விடப்பட்டன. என்றாலும், அந்தப் பூர்வ நகரத்தின் இடிபாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட நான்முக ஸ்தூபிகளைத் திரும்ப நிலைநிறுத்துவதில் பல போப்புகள் ஆர்வம் காட்டினார்கள். நான்முக ஸ்தூபிகள், “ஓர் எகிப்திய அரசனால் சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை” என்றும் ஒருகாலத்தில் அவை “புனிதத்தைக் குழிதோண்டிப் புதைத்த புறமத கோயில்களின் வீண் மகிமைக்காக” இருந்தன என்றும் ரோமன் கத்தோலிக்க சர்ச் ஒப்புக்கொண்டிருக்கிறது.

போப் ஐந்தாம் சிக்ஸ்டஸ் (1585-90) ஆட்சிக்காலத்தில் பேயோட்டி, ஆசீர்வதித்து, புனித தீர்த்தம் தெளித்து, சாம்பிராணி தூபம் காட்டி முதன்முதலாக நான்முக ஸ்தூபிகள் திரும்பவும் நேரே நிறுத்தப்பட்டன. வாட்டிகன் நான்முக ஸ்தூபியின் முன்னால் ஒரு பிஷப் இவ்வாறு பாடினார்: “எல்லாவித புறமத அசுத்தமும் கொடுமையான ஆவிகளின் தாக்குதலும் முற்றிலும் நீங்கி, புனித சிலுவையைச் சுமப்பதற்கு நான் உன்னிலுள்ள பேயைத் துரத்துகிறேன்.”

இன்று ரோமில் நிமிர்ந்து நிற்கும் நான்முக ஸ்தூபிகளை ஒரு சுற்றுலாப் பயணி ஆராயும்போது அவற்றை வெட்டியெடுப்பதற்கும் கொண்டுசெல்வதற்கும் செங்குத்தாக நிறுத்தி வைப்பதற்கும் தேவைப்பட்ட அதீத திறமையை நினைத்து அவர் வியப்பில் ஆழ்ந்துவிடலாம். மேலும், சூரிய வணக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்ட அந்த நினைவுச் சின்னங்கள் போப்புகளின் நகரத்தை அலங்கரிப்பதைப் பார்க்கையில் இது ஒரு விசித்திரமான கலவைதான் என ஆச்சரியமும் அடையலாம்!

[பக்கம் 15-ன் படம்]

லக்ஸர், எகிப்து

[பக்கம் 15-ன் படம்]

ரோம்

[பக்கம் 15-ன் படம்]

நியு யார்க்

[பக்கம் 15-ன் படம்]

பாரிஸ்