Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கம்சட்கா ரஷ்யாவின் பசிபிக் கரையோர இன்பவனம்

கம்சட்கா ரஷ்யாவின் பசிபிக் கரையோர இன்பவனம்

கம்சட்கா ரஷ்யாவின் பசிபிக் கரையோர இன்பவனம்

ரஷ்யாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

முந்நூறுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னர், ஆசியா வழியாக கிழக்குத் திசையில் முன்னேறிய ரஷ்ய ஆய்வுப் பயணிகள் மலைப்பாங்கான தீபகற்பத்தை அடைந்தார்கள்; இதன் மேற்கே ஓகாட்ஸ்க் கடலும், கிழக்கே பேரிங் கடலும், தெற்கே பசிபிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. இது இத்தாலி நாட்டைவிட சற்றுப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இடமாகும்; கொள்ளை அழகு கொட்டிக் கிடக்கும் இந்நாட்டைப் பற்றி பெரும்பாலோருக்கு இன்றும்கூட தெரியாது.

கம்சட்காவின் கடலோரப் பகுதியில் குளிர்காலம் மிதமாக இருக்கிறது; ஆனால், உட்பிரதேசங்கள் சிலவற்றில் 6 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்குப் பனி பொழிகிறது, சில சமயங்களில் கிட்டத்தட்ட 12 மீட்டர் உயரத்திற்கும்கூட பொழிகிறது! கோடை காலத்தில், கடலின் மூடுபனியால் இத்தீபகற்பம் போர்த்தப்பட்டிருக்கிறது, அதோடு பலத்த காற்றும் வீசுகிறது. கம்சட்காவில் மழை சக்கைப் போடு போடுவதால் அங்கு மரம் செடிகொடிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன; எரிமலை தாதுக்கள் நிறைந்த அம்மண்ணில் பெர்ரி புதர்ச்செடிகளும், மனித உயரத்திலுள்ள புற்களும், மலர்களின் ராணி என அழைக்கப்படுகிற ரோஜாவும், வகை வகையான அழகிய காட்டுப்பூக்களும் செழித்தோங்குகின்றன.

இத்தீபகற்பத்தின் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியை ஒருவகை பூர்ச்சமரங்கள் (ஸ்டோன் அல்லது எர்மான்ஸ் பிர்ச் மரங்கள்) அலங்கரிக்கின்றன; பலத்த காற்றும், கடும் பனியும் சரமாரியாகத் தாக்குவதால், இவற்றின் அடிமரங்களும் கிளைகளும் வளைந்துநெளிந்தும், கோணல்மாணலாகவும் காட்சியளிக்கின்றன. எதையும் தாக்குப்பிடிக்கிற இந்தப் பூர்ச்ச மரங்கள் மெதுவாக வளருபவை. அதோடு இவற்றுக்கு அசாதாரணமான வலுவும் உறுதியான வேர்களும் உள்ளன. அதனால் எந்த இடத்தில் வேண்டுமானாலும், ஏன், செங்குத்துப் பாறையின் விளிம்பிலிருந்து கிடைமட்டமாகவும்கூட வளருகின்றன! இவற்றின் இலைகள் பனிப் பொழிவு ஓய்ந்திராத ஜூன் மாதத்தில் பெரும்பாலும் துளிர்க்கின்றன; பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் குளிர்காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில் மஞ்சள் நிறமாக மாறுகின்றன.

எரிமலைகள், கொதிநீர் ஊற்றுகள், வெந்நீர் ஊற்றுகள்

நெருப்பு வளையம் என அழைக்கப்படுகிற, பசிபிக் கடலோரங்களிலுள்ள எரிமலை மண்டலத்தில் கம்சட்கா அமைந்துள்ளதால் அங்கே செயல்படுகிற எரிமலைகள் சுமார் 30 இருக்கின்றன. “அற்புதமானது, அசத்தும் அழகுடையது” என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற கிலியூசெஃப்ஸ்கயா எரிமலையின் “கூம்பு” கடல் மட்டத்திற்கு மேலே 4,750 மீட்டர் உயரத்தில் உள்ளது; இதுவே யுரேஷியாவின் மிகப்பெரிய செயல்படுகிற எரிமலையாக இருக்கிறது. 1697 முதற்கொண்டு, அதாவது ரஷ்ய ஆய்வாளர்கள் கம்சட்காவில் முதன்முதலாக கால்பதித்தது முதற்கொண்டு, அங்கே 600-⁠க்கும் மேற்பட்ட எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

1975/76-⁠ஆம் ஆண்டுகளில் டோல்பாச்சிக் பகுதியில் பிளவிலிருந்து ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் மேலெழுந்த தீக்கொழுந்து, 2,500 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு “பந்தமாக” நின்றது! சிதறிய சாம்பலின் ஊடாக தீப்பிழம்பு தகதகவென மின்னியது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடித்த இவ்வெடிப்பால், நான்கு புதிய எரிமலைக் கூம்புகள் உருவாயின. ஏரிகளும் ஆறுகளும் காணாமல் போயின, அங்கிருந்த மரம் செடிகொடிகளின் வேர்களையும்கூட சூடான சாம்பல் பொசுக்கியதால் காடுகள் அனைத்தும் பொட்டலாயின. பெரும் நிலப்பரப்பு பாலைவனமாய் உருமாறியது.

நல்லவேளையாக, பெரும்பாலான வெடிப்புகள் மனிதக் குடியிருப்பிலிருந்து வெகு தொலைவில் நிகழ்ந்துள்ளதால் உயிரிழப்பு குறைவாகவே இருந்திருக்கிறது. ஆனால் அங்குச் செல்கிற சுற்றுலாப் பயணிகள் வேறுசில காரணங்களுக்காக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; குறிப்பாக, கிச்பின்னச் எரிமலையின் அடிவாரத்திலுள்ள மரணப் பள்ளத்தாக்கிற்குச் செல்லும்போது ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக, பனி உருகுகிற வெப்பமுள்ள வசந்தகாலத்திலும், காற்றோட்டமே இல்லாத சமயத்திலும், எரிமலையிலிருந்து கசியும் விஷ வாயுக்கள் இந்தப் பள்ளத்தாக்கில் மையம் கொள்கின்றன; இதனால் காட்டு விலங்குகளின் உயிரைக் குடிக்கும் இடமாக இது உருவெடுக்கிறது. ஒரு சமயத்தில், இந்தப் பள்ளத்தாக்கில் பத்துக் கரடிகளும் ஏராளமான சிறு விலங்குகளும் ஆங்காங்கே செத்துக் கிடந்தன.

யூசான் கால்டேரா என அழைக்கப்படுகிற அகலமான எரிமலை வாய்ப்பகுதியில் தளதளவென கொதிக்கிற சேற்றுப் பள்ளங்களும் வண்ணவண்ண ஆல்கே நிறைந்த கொதிநீர் ஏரிகளும் உள்ளன. இதே பகுதியில்தான் கொதிநீர் ஊற்றுப் பள்ளத்தாக்கும் (வேலி ஆஃப் கீஸர்ஸ்) உள்ளது. இது 1941-⁠ல் கண்டுபிடிக்கப்பட்டது. சில கொதிநீர் ஊற்றுகள் இரண்டிலிருந்து மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை வெடிக்கின்றன, மற்றவை சில நாட்களுக்கு ஒருமுறை வெடிக்கின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகிற இத்தகைய தலங்கள் பீட்ரோபவ்லாஸ்க்-கம்சட்ஸ்கி நகரத்திற்கு வடக்கே சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன; சுற்றுலாப் பயணிகளை ஹெலிகாப்டர்கள் அங்கு அழைத்துச் செல்கின்றன. இருந்தாலும், கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்பட வேண்டிய சூழியல் சமநிலைக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க அங்குச் செல்கிற பயணிகளின் எண்ணிக்கை கறாராகக் கட்டுப்படுத்தப்படுகிறது. இக் காரணத்திற்காகவே, கம்சட்காவிலுள்ள ஆறு பகுதிகள் உலக ஆஸ்திகளாய் பாதுகாக்கப்படுகின்றன.

கம்சட்காவில் ஏராளமான வெந்நீர் ஊற்றுகள் உள்ளன; இவற்றில் பெரும்பாலானவற்றின் வெப்பநிலை 85 டிகிரி ஃபாரன்ஹீட் முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வேறுபடுகின்றன. நீண்ட குளிர்காலத்தின் கடுமையை இவை ஈடுகட்டுவதால், அங்குச் செல்பவர்கள் அவற்றில் நீராடி மகிழ்கிறார்கள். அங்குள்ள நிலத்தடி வெப்பத்திலிருந்து மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. சொல்லப்போனால், ரஷ்யாவின் முதல் நிலவெப்ப மின் நிலையம் இத்தீபகற்பத்தில்தான் அமைக்கப்பட்டது.

கரடிகள், சால்மன்கள், கடற்கழுகுகள்

இன்றும்கூட சுமார் 10,000 பிரௌன் கரடிகள் கம்சட்காவில் சுற்றித் திரிகின்றன. இவற்றின் சராசரி எடை 150 முதல் 200 கிலோவாக இருந்தாலும், இவற்றைக் கொல்லாமலிருந்தால் இதைவிட மூன்று மடங்கு பெரிதாகவும் இவை வளரும். இங்குள்ள ஈட்டல்மன் பழங்குடி மக்களுடைய நாடோடிக் கதைகளில் கரடிகள் அவர்களுடைய “சகோதரர்களாக” வர்ணிக்கப்பட்டன; எனவே அவர்கள் அவற்றின் மீது மதிப்பு வைத்திருந்தார்கள். துப்பாக்கிகள் வந்தபிறகோ, இந்தச் சகோதர பாசம் காணாமல் போய்விட்டது. இப்போது இயற்கை ஆர்வலர்கள் இந்த மிருகத்தின் எதிர்காலத்தைக் குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.

பயந்த சுபாவமுள்ள இக்கரடிகள் இங்கு அரிதாகவே தென்படுகின்றன. ஆனால் ஜூன் மாதத்தில், ஆறுகளில் சால்மன் மீன்கள் பெருகத் துவங்கியவுடன் இவற்றை ஒரு பிடி பிடிப்பதற்காக கரடிகள் கூட்டம்கூட்டமாக வருகின்றன; அதோடு ஒரு கரடி மட்டுமே ஒரு வேளை உணவாக இரண்டு டஜன் சால்மன் மீன்களை மூக்குப் பிடிக்கச் சாப்பிடுகிறது! ஏன் இந்த அகோரப் பசி? உணவு கிடைக்காத குளிர்காலத்தைத் தாக்குப்பிடிப்பதற்கு கோடை காலத்திலேயே போதுமான அளவு கொழுப்பை தங்கள் உடலில் அவை சேமித்துக் கொள்கின்றன; அதோடு அச்சமயத்தில் உடலின் சக்தியை இழக்காதிருப்பதற்காக கதகதப்பான குகைகளில் தூக்கம் போடுகின்றன.

ஸ்டெல்லர்ஸ் ஸீ ஈகில் எனும் ஒரு வகை கடற்கழுகுக்கும் சால்மன் மீனைத் தின்பதில் அலாதி பிரியம். இக்கம்பீரமான பறவையின் இறக்கைகள் 2.5 மீட்டர் நீளம் வரை இருக்கும். இதன் உடல் முழுவதும் கருமை நிறத்தில் இருந்தாலும், தோள்பகுதியில் வெள்ளை நிறம் தென்படுகிறது; இதன் ஆப்பு வடிவ வாலும் வெள்ளை நிறத்தில் உள்ளது. இங்கே தற்போது சுமார் 5,000 கழுகுகள் இருந்தாலும், இவற்றின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது; இக்கழுகுகள் கம்சட்காவிலும் சில சமயங்களில் அல்யூஷன், பிரிபலாஃப் ஆகிய அலாஸ்கா தீவுகளிலும் மட்டுமே காணப்படுகின்றன. இவை ஒவ்வொரு வருடமும் ஒரே கூட்டையே பயன்படுத்துகின்றன; அவற்றைப் பராமரித்து பெரிதாக்குகின்றன. பூர்ச்ச மரத்தின் மீது 3 மீட்டர் விட்டத்தில் கட்டப்பட்ட ஒரு பெரிய கூட்டின் எடை அவ்வளவு அதிகமாகிவிட்டதால், அம்மரத்தில் வெடிப்பு ஏற்பட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

கம்சட்காவாசிகள்

தற்போது கம்சட்காவில் பெரும்பாலும் ரஷ்யர்களே வசித்தாலும், பல்லாயிரக்கணக்கான பழங்குடியினரும் இருக்கிறார்கள்; வடக்குப் பகுதியில் வசிக்கிற கர்யாக் இனத்தவரே மிகப்பெரிய தொகுதியாக இருக்கிறார்கள். இவர்களைத் தவிர சுக்சி மற்றும் ஈட்டல்மன் இனத்தவரும் வசிக்கிறார்கள், அவரவருக்கென தாய்மொழியும் இருக்கிறது. கம்சட்காவில் பெருவாரியான மக்கள் நிர்வாக மையமாக விளங்குகிற பீட்ரோபவ்லாஸ்க்-கம்சட்ஸ்கீயில் வசிக்கிறார்கள். குறைவானோரே தீபகற்பத்தின் மற்ற பகுதிகளில் வசிக்கிறார்கள்; அதோடு கடலோரங்களிலும் ஆற்றோரங்களிலும் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு, படகுகளில் அல்லது விமானங்களில் மட்டுமே செல்ல முடியும்.

நண்டு மற்றும் மீன்பிடி தொழில்களே முக்கிய வருமானத்தை ஈட்டித் தருகின்றன. கம்சட்காவின் சிவந்த ராட்சச நண்டுகளுக்கு மவுசு அதிகம். இந்நண்டுகளின் இடுக்கி போன்ற கால்களுக்கு இடையேயுள்ள நீளம் 1.7 மீட்டர் ஆகும்; விற்பனைக்காகப் பரத்தி வைத்திருக்கும்போது அவை அந்தக் கடைகளுக்கே தனி அழகைச் சேர்க்கும்.

யெகோவாவின் சாட்சிகள் 1989 முதற்கொண்டு வித்தியாசமான ஒரு வகை மீன்பிடிப்பு வேலைக்காக கம்சட்காவிற்குச் சென்றுள்ளார்கள். ‘மனுஷரைப் பிடிக்கிறவர்களாகிய’ இவர்கள் ஒதுக்குப்புறமாயுள்ள கம்சட்காவில் வசிக்கிற மக்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கித்து வருகிறார்கள். (மத்தேயு 4:19; 24:14) அநேகர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்; அதோடு படைப்பாளரான யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் அவருடைய படைப்புகளை அல்ல, அவரை வணங்குவதற்கும் இப்போது மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அதன் பலனாக, உள்ளூர்வாசிகள் அநேகர் பொல்லாத ஆவிகளைப் பற்றிய பயத்திலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். (யாக்கோபு 4:7) தீமையும், தீமை செய்பவர்களும் சுவடு தெரியாமல் அழிக்கப்பட்ட பிறகு, “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால்” நிறைந்திருக்கும் மகத்தான எதிர்காலத்தைக் குறித்தும் கற்று வருகிறார்கள்.​—ஏசாயா 11:⁠9.

[பக்கம் 18-ன் பெட்டி/படங்கள்]

எரிமலைவாயின் எழில்மிகு காட்சி

பண்டைய எரிமலையின் நிலக்குழியான யூசான் கால்டேராவின் குறுக்களவு சுமார் 10 கிலோமீட்டர் ஆகும். செங்குத்தான இயற்கைச் சுவரையுடைய இந்த கால்டேராவில், “கம்சட்காவிற்குப் பெருமை சேர்க்கிற அனைத்தும்” இருப்பதாக ஒரு புத்தகம் தெரிவிக்கிறது. இந்த எரிமலை வாய்ப்பகுதியில், வெந்நீர் மற்றும் குளிர்நீர் ஊற்றுகளும், தளதளவென கொதிக்கிற சேற்றுப்பள்ளங்களும், கூம்பு வடிவ மண்மேடுகளும், ஏராளமான மீன்களும் அன்னப்பறவைகளும் துள்ளிக்குதித்து விளையாடுகிற மாசுபடாத ஏரிகளும், எண்ணற்ற செடிகொடிகளும் உள்ளன.

இங்கு நிலவும் குறுகிய இலையுதிர் காலம், இலைகளை மட்டுமின்றி கொள்ளை அழகையும் உதிர்க்கிறது. இதனால்தான் “இப்படிப்பட்ட ஓர் இடத்தை உலகில் வேறெங்கும் காணமுடியாது” என கம்சட்காவின் அதிசயங்கள் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. சிவப்புக் கம்பளம் விரித்தாற்போல் காணப்படுகிற இப்பனிப்பிரதேசங்களுக்கு நடுவே, பூர்ச்ச மரங்கள் அடர்மஞ்சள் நிறத்திலும் பொன்னிறத்திலும் ஜொலிக்கின்றன; பூமிக்கடியில் கொதிக்கிற சேற்றிலிருந்து வெளிவருகிற நீராவி, ஆங்காங்கே வெண்ணிறத் தூண்களாய் நிற்பது பின்னணியிலுள்ள பளிச்சென்ற நீல வானத் திரையில் எடுப்பாய்த் தெரிகிறது. அதோடு அதிகாலையில், உறைபனி மூடிய கோடிக்கணக்கான இலைகள் ‘டிங்’ என்று தரையில் விழும்போது, கானகத்தில் “சப்தஸ்வரங்கள்” ஒலிக்கின்றன; இக்கீதம் குளிர்காலத்தின் வருகையை மென்மையாக அறிவிக்கிறது.

[பக்கம் 19-ன் பெட்டி]

ஆபத்தான ஏரி!

1996-⁠ல் செயலற்றதாகக் கருதப்பட்ட ஓர் எரிமலை, காரிம்ஸ்கீ ஏரியின் அடிப்பகுதியில் வெடித்தது; இதனால் 10 மீட்டர் உயரத்திற்கு எழுந்த அலை சுற்றுவட்டாரத்திலிருந்த காடுகளைக் கபளீகரம் செய்தது. சில நிமிடங்களில் அந்த ஏரி உயிரினங்கள் வாழ இயலாத அமில ஏரியாக மாறியது. எரிமலைச் சாம்பல் வழிந்தோடியதோடு, உயரே எழும்பிய அலைகள் கரையோரத்தில் இருந்தவற்றையெல்லாம் அள்ளிச் சென்றன; இருந்தபோதிலும், ஏரிக்கு அருகே இறந்த விலங்குகளின் சடலங்கள் ஒன்றுகூடத் தென்படவில்லை என்பதாக விளக்குகிறார் ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூ லோகன். “இந்த வெடிப்புக்கு முன்னால், பல்லாயிரக்கணக்கான மீன்கள் (முக்கியமாக, சால்மனும் டிரௌட்டும்) காரிம்ஸ்கீ ஏரியில் இருந்ததாகத் தெரிகிறது. வெடிப்பு ஏற்பட்ட பிறகு, இந்த ஏரி உயிர்களின் உறைவிடமாவதற்குத் தகுதியற்றுப்போனது.” இருந்தாலும், நிறைய மீன்கள் தப்பியிருக்கலாம். ஒருவித எச்சரிக்கை சமிக்கையால்​—⁠ஒருவேளை தண்ணீர் வேதியியலில் ஏற்பட்ட ஒருவகை மாற்றத்தால்​—⁠மீன்கள் சுதாரித்துக்கொண்டு அருகிலிருந்த காரிம்ஸ்கீ ஆற்றுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் ஊகம்.

[பக்கம் 16-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ரஷ்யா

கம்சட்கா