Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளைஞர்கள் ஆன்லைனில்!

இளைஞர்கள் ஆன்லைனில்!

இளைஞர்கள் ஆன்லைனில்!

நட்ட நடு ராத்திரியில் உங்கள் பிள்ளை தன்னந்தனியாக தெருக்களில் திரிவதைச் சற்று கற்பனை செய்துபாருங்கள்.

உங்கள் டீனேஜ் பிள்ளை உங்களுக்கே தெரியாமல் உங்கள் வீட்டில் ஒரு பார்ட்டிக்காக ஏற்பாடு செய்யும் காட்சியைச் சற்று எண்ணிப்பாருங்கள்.

உங்கள் மகனோ மகளோ, உங்கள் வீட்டின் பூட்டுக்கு ‘டூப்ளிகேட்’ சாவி செய்து முன்பின் தெரியாதவர்களிடம் கொடுப்பதைச் சற்று நினைத்துப்பாருங்கள்.

உங்கள் பிள்ளைக்கு இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதென்றால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள எதை வேண்டுமானாலும் செய்யலாம். “எலக்ட்ரானிக் மெசேஜ் போர்டு தொடங்கி ‘சாட்டிங்’ மற்றும் சோஷியல் நெட்வொர்க் சைட்டுகள்வரை ஆன்லைனில் சந்திப்பதற்கு விதவிதமான, எண்ணற்ற வழிகளை மக்களுக்கு இன்டர்நெட் அள்ளி வீசுகிறது” என்று சைன்ஸ் நியூஸ் பத்திரிகை கூறுகிறது.

இளசுகள், ஆன்லைன் வாழ்க்கைக்கு அதிவேகமாகப் பழகிவிட்டார்கள். பார்க்கப்போனால், 2004-⁠ல் அமெரிக்காவில் 12-17 வயதுக்குட்பட்ட இளசுகளில் 10 பேரில் கிட்டத்தட்ட 9 பேர் இன்டர்நெட்டைப் பயன்படுத்தினார்கள். இன்று உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் இன்டர்நெட் வசதி இருக்கிறது.

இன்டர்நெட்டால் நன்மைகள் இருப்பதை யாரும் மறுப்பதில்லை. ஆனால் அதன் தீமைகளைக் குறித்தும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, பல இளவட்டங்கள் ஆன்லைன் என்னும் தெருவில் தன்னந்தனியாகத் திரிகிறார்கள். நீங்களும், ஏன் உங்கள் பிள்ளையும்கூட வீட்டுக்கு அழைக்க விரும்பாத ஆட்களுடன், சில இளைஞர்கள் ஆன்லைனில் தொடர்புகொள்கிறார்கள்.

அனுபவமற்ற சில இளைஞர்கள் இன்டர்நெட்டில் தங்களைப் பற்றிய அந்தரங்க தகவலையும், படங்களையும், தங்கள் கருத்துகளையும் பரிமாறிக்கொள்கிறார்கள். நியு யார்க் நகரின் தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரியும் ஜங் யான் சொல்கிறபடி, “அந்தத் தகவல்களைக் காமுகர்கள் உட்பட பலரால் பார்க்க முடியும் என்பது இளைஞர்களுக்குப் பெரும்பாலும் தெரிவதில்லை.”

இளைஞர்கள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைச் சற்று விளக்கமாகப் பார்க்கலாம். அவர்களுக்கு என்ன ஆபத்துகள் காத்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள இது நமக்கு உதவும்; நம் பிள்ளைகளின் நாட்டங்களைப் புரிந்துகொண்டு அவர்களுடைய நியாயமான தேவைகளை எப்படித் திருப்திசெய்யலாம் என்பதைத் தீர்மானிக்கவும் உதவும். அதோடு, கிறிஸ்தவ இளைஞர்கள் இந்தக் கடினமான காலங்களில் கடவுளுக்குக் கீழ்ப்படிய தங்களுக்குமுன் இருக்கும் தடைக்கற்களைத் தகர்க்கவும் உதவும்.​—2 தீமோத்தேயு 3:1-5.