Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அனைவரும் ஆசைப்படுவது ஆரோக்கியமே!

அனைவரும் ஆசைப்படுவது ஆரோக்கியமே!

அனைவரும் ஆசைப்படுவது ஆரோக்கியமே!

வியாதியே இல்லாத காலம் வரப்போவதைப் பற்றி 2,700-⁠க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பாக ஒரு தீர்க்கதரிசி சொன்னார். இந்தத் தீர்க்கதரிசனம் இன்று வரை பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஏசாயா எனும் தீர்க்கதரிசி எழுதிய பூர்வ புத்தகத்தில் இது காணப்படுகிறது. வரவிருக்கும் அக்காலத்தில், “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை” என்றும் “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்” என்றும் அவர் எழுதினார். (ஏசாயா 33:24; 35:5, 6) பைபிளில் உள்ள பிற தீர்க்கதரிசனங்களும்கூட அத்தகைய காலம் வரப்போவதைப்பற்றிச் சொல்கின்றன. உதாரணத்திற்கு, பைபிளின் கடைசி புத்தகமான வெளிப்படுத்துதல், வேதனையைக் கடவுள் துடைத்தழிக்கப் போகும் காலத்தைப்பற்றி விவரிக்கிறது.​—வெளிப்படுத்துதல் 21:⁠4.

இந்த வாக்குறுதிகள் எல்லாம் நிஜமாகுமா? மனிதர்கள் நல்லாரோக்கியத்தோடு வியாதியே இல்லாமல் வாழ முடிகிற காலம் எப்போதாவது வருமா? கடந்த தலைமுறையினரோடு ஒப்பிடுகையில் இன்றுள்ள பெரும்பாலோரின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும், அவர்கள் மிகச் சிறந்த ஆரோக்கியத்தோடு இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. இன்னமும் வியாதி பெருவாரியான ஜனங்களின் உயிரைக் குடித்துக்கொண்டுதான் இருக்கிறது. வியாதி வந்துவிடுமோ என்ற பயமே சொல்ல முடியாதளவு கவலையை ஏற்படுத்திவிடுகிறது. இந்த நவீன உலகிலும், உடல் நோய், மனநோய் ஆகியவற்றின் உடும்புப் பிடியிலிருந்து யாரும் முழுமையாய் தப்பிக்க முடியாது என்பதே ஜீரணிக்க முடியாத உண்மை.

பாதிப்புகள் பல விதம்

சுகவீனத்தால் பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன. மளமளவென அதிகரிக்கும் மருத்துவ செலவுகள் மக்களுக்கு இன்று பெரும் கவலையைத் தருகின்றன; இது சுகவீனத்தால் வரும் பாதிப்புகளில் ஒன்று. உதாரணத்திற்கு, சமீப காலத்தில் உடல்நல பிரச்சினைகள் காரணமாக ஜனங்கள் வேலைக்குச் செல்லாததால் ஐரோப்பாவில் 50 கோடி வேலை நாட்கள் வீணாயின. பிற இடங்களிலும் இதே நிலைதான். சுகவீனத்தால், வேலை செய்யும் இடங்களில் உற்பத்தி குறைகிறது. அதோடு, உடல்நல பராமரிப்புக்கு எக்கச்சக்கமாய் செலவும் ஆகிறது. இவை இரண்டும் சேர்ந்து பணச் சுமையைக் கூட்டி எல்லாருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வியாபார நிறுவனங்களும் அரசாங்கங்களும்கூட இதனால் பாதிக்கப்படுகின்றன. இந்தச் சுமையை சமாளிக்க வியாபார நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருள்களின் விலையைக் கூட்டுகின்றன, அரசாங்கங்களும் வரியை உயர்த்துகின்றன. இதனால் யார் பாதிக்கப்படுகிறார்கள்? நீங்கள்தான்!

அநேக நாடுகளில் தரமான மருத்துவ சிகிச்சை என்பது ஏழைபாழைகளுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. பின்தங்கிய நாடுகளில் உள்ள லட்சக்கணக்கானோரும் இதே பரிதாபமான நிலையில்தான் வாழ்கிறார்கள்; அவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை ஓரளவே கிடைக்கிறது அல்லது அறவே கிடைக்காமல் போகிறது. மருத்துவ வசதிகள் தாராளமாக கிடைக்கிற பணக்கார நாடுகளில்கூட மிகச் சிறந்த சிகிச்சையைப் பெறுவதற்குச் சிலர் போராட வேண்டியிருக்கிறது. பெரும்பாலும், அமெரிக்காவில் உள்ள 4 கோடியே 60 லட்சம் பேரில் அநேகர் மருத்துவ காப்பீடு செய்யாதிருப்பதால் இப்படித் திண்டாடுகிறார்கள்.

சுகவீனம் பணச்சுமையை மட்டுமே தலையில் சுமத்துவதில்லை. அதன் உச்சக்கட்ட பாதிப்புகளில் சில: உயிரைக் குடிக்கும் வியாதியின் கொடுமையால் வரும் வேதனை, தீராத வியாதியின் ரணவலியைச் சகிக்கையில் வரும் துயரம், மோசமான வியாதியில் பாதிக்கப்பட்டவர்கள் துடியாய் துடிப்பதைக் காணச்சகிக்காத கொடுமை, அன்புக்குரியவர்களை மரணத்தில் பறிகொடுத்துவிட்டு நிர்க்கதியாய் நிற்கும் அவலம்.

என்றோ ஒருநாள் வியாதியில்லா உலகில் வாழப்போகும் நம்பிக்கை மனதுக்கு ரொம்பவே இதமளிக்கிறது. அனைவரும் ஆசைப்படுவது ஆரோக்கியமே! நம்ப முடியாததாகத் தோன்றினாலும் இத்தகைய நம்பிக்கை நிஜமானதுதான் என்பதை அநேகர் நம்புகிறார்கள். காலப்போக்கில், மனித தொழில்நுட்பம் எல்லா வியாதிகளையும் சுகவீனத்தையும் சுவடுதெரியாமல் துடைத்தகற்றிவிடுமென சிலர் உறுதியாய் நம்புகிறார்கள். மறுபட்சத்தில், பைபிள்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள், வியாதியில்லா உலகம் வரும் என்பதாக பூர்வத்தில் உரைத்த தீர்க்கதரிசனங்களை கடவுள் நிறைவேற்றுவாரென நம்புகிறார்கள். வியாதியிலிருந்து விடுதலை அளிக்கப்போவது யார்? மனிதனா, கடவுளா? எதிர்காலம் எப்படியிருக்கும்?