Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நல்ல நண்பர்களும் கெட்ட நண்பர்களும்

நல்ல நண்பர்களும் கெட்ட நண்பர்களும்

நல்ல நண்பர்களும் கெட்ட நண்பர்களும்

ஓர் இளைஞி தன் மனவேதனையை எல்லாம் கொட்டித் தீர்த்தாள்; அவளுடைய பெயர் சாரா என வைத்துக்கொள்வோம். அவள் ஓர் ஆணிடம் நண்பனைப் போல் பழகினாள், ஆனால் ஒருநாள் அவன் ஒரு கொலைகாரன் என தெரிய வந்தது. ‘நான் மலைபோல் நம்பின ஒருவர் இப்படி செய்துவிட்டார் என்றால் வேறு யாரைத்தான் நம்புவது?’ என அவள் கேட்டாள். அவளது வேதனையை எல்லாம் காதுகொடுத்து கேட்ட நபர் அவளிடம், அந்த ஆள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மதிப்பீடுகளைப் பின்பற்றி வந்தார் என்று தெரியுமா என கேட்டார். அதற்கு அவள், “மதிப்பீடுகளா, அப்படியென்றால் என்ன?” என கேட்டாள். “மதிப்பீடுகள்” என்றால் என்னவென்று சாராவுக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரியுமா? உங்களுடைய நண்பர்களின் மதிப்பீடுகளை அல்லது அவர் பின்பற்றும் நெறிகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

சாராவின் அனுபவம் காட்டுகிறபடி, உங்களுடைய வாழ்வும் சாவும் இக்கேள்விக்கான பதிலைப் பொறுத்ததே. பைபிளிலுள்ள ஒரு நீதிமொழி இவ்வாறு சொல்கிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) ஆனால், சாராவைப் போன்று பலரும், பார்த்த மாத்திரத்தில், ஒருவரோடு தனக்கு ஒத்துப்போனால், அதாவது தங்களோடு சிலர் இருக்கும்போது எப்படி உணருகிறார்களோ அதன் அடிப்படையில் அவர்களை நண்பர்களாக்கிக் கொள்கிறார்கள். நாம் யாருடன் இருந்தால் சந்தோஷமாக உணருகிறோமோ அவர்களுடன் இருக்க விரும்புவது சகஜம்தான். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அடிப்படைத் தராதரம் அதுதான் என நினைத்து, ஒருவரில் மறைந்திருக்கும் குணங்களுக்குக் கவனம் செலுத்தாமற்போனால் பெருத்த ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடலாம், ஒருவர் உயர்ந்த நெறிகளைப் பின்பற்றுபவரா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

உயர்ந்த ஒழுக்க நெறிகளுக்கான தேவை

முதலாவதாக, நாம்தாமே சிறந்த மதிப்பீடுகளைக் கொண்டிருக்கவேண்டும். எது சரி எது தவறு, எது நல்லது எது கெட்டது என்பவற்றை நாம் அறிந்திருக்க வேண்டும், அதோடு உயர்ந்த ஒழுக்க நியதிகளை எல்லா சமயத்திலும் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். பைபிளிலுள்ள மற்றொரு நீதிமொழி இவ்வாறு கூறுகிறது: “இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல, ஒருவர் தம் அறிவால் மற்றவரைக் கூர்மதியாளராக்கலாம்.” (நீதிமொழிகள் 27:17, பொது மொழிபெயர்ப்பு) இரும்பு போன்ற பலமான உயர்ந்த ஒழுக்க நெறிகளைப் பின்பற்றும் இருவர் நண்பர்களாகும்போது, பக்குவப்பட அவை அவர்களுக்குத் துணைபுரியும், அவர்களது நட்பும் பலப்படும்.

பிரான்சு நாட்டைச் சேர்ந்த பாக்கோம் இவ்வாறு கூறுகிறார்: “என்னைப் பொறுத்தவரை, நான் சொல்வதைக் காதுகொடுத்து கேட்க வேண்டும், என்னிடம் அன்பாகப் பேச வேண்டும், அதே சமயத்தில் மடத்தனமாக ஏதாவது செய்துவிட்டால் என்னைக் கண்டிக்க வேண்டும், அப்படிப்பட்ட ஒருவரே உண்மையான ஃபிரெண்ட்.” ஆம், நம்முடைய ஆத்ம நண்பர்கள், சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, நாம் சரியான வழியில் செல்ல வழிகாட்டுவார்கள், முட்டாள்தனமான காரியங்களை செய்யவிருந்தால் நம்மைத் திருத்துவார்கள். “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 27:6) ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் நாம் பலப்படுவதற்கு, கடவுளையும் அவருடைய நியதிகளையும் நேசிக்கிறவர்களுடன் நாம் சகவாசம் வைப்பது அவசியம். “என் ஸ்கூலில் கிறிஸ்தவ நெறிகளையும் நம்பிக்கைகளையும் பின்பற்றுகிறவர்கள் யாருமே இல்லாதிருந்ததால், சபையில் எனக்கு நல்ல ஃபிரெண்ட்ஸ் இருப்பது முக்கியம் என்பதை தெரிந்துகொண்டேன். சமநிலையோடு நடந்துகொள்வதற்கு அவர்கள் ரொம்பவே எனக்கு உதவியிருக்கிறார்கள்” என்கிறாள் பிரான்சைச் சேர்ந்த ஸேலன்.

நண்பர்களாகப் போகிறவர்களை மதிப்பிடுதல்

நீங்கள் ஒருவரை சந்திக்கிறீர்கள், அவரை நண்பராக்கிக்கொள்ள விரும்புகிறீர்கள்; அப்போது, உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘அவருடைய நண்பர்கள் யார்?’ ஒருவருடைய நண்பர்களை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் கணக்குப்போட முடியும். அதுமட்டுமல்ல, அவர் மீது சமுதாயத்திலுள்ள பெரியவர்களுக்கும் மரியாதைக்குரியவர்களுக்கும் என்ன அபிப்பிராயம் இருக்கிறது? மேலும், நண்பர்களாகப் போகிறவர்கள் நம்மிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை மட்டுமல்ல, ஆனால் மற்றவர்களிடம், குறிப்பாகப் பிரதி உபகாரம் செய்ய முடியாதவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையும் கவனிப்பது ஞானமானது. நேர்மை, உண்மைத்தன்மை, பொறுமை, கரிசனை போன்ற நல்ல குணங்களை எப்போதும் எல்லாரிடமும் காட்டாதவர், உங்களிடம் மட்டும் எப்போதும் நன்றாக நடந்துகொள்வார் என்பது என்ன நிச்சயம்?

ஒருவருடைய உண்மையான சுபாவத்தை அறிந்துகொள்வதற்கு பொறுமையும் திறமையும் தேவை; அதோடு, நிஜ வாழ்க்கையில் அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் கவனிப்பதற்குக் காலமும் தேவை. “மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர் போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்” என பைபிள் குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 20:5) நண்பர்களாகப் போகிறவர்களிடம் சில முக்கிய விஷயங்களைக் கலந்து பேசுவது அவசியம்; அவர்களுடைய உண்மையான சுபாவத்தையும், நோக்கங்களையும், மதிப்பீடுகளையும்கூட வெளியே கொண்டுவருகிற விஷயங்களைப் பேசுவது அவசியம். அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அன்பானவர்களா அல்லது உணர்ச்சியற்றவர்களா? நம்பிக்கையான மனநிலையும், உற்சாகமும் உள்ளவர்களா, அல்லது நம்பிக்கையற்ற மனநிலையும் குறைகாணும் மனப்பான்மையும் உள்ளவர்களா? சுயநலமற்றவர்களா, சுயநலவாதிகளா? நம்பகமானவர்களா, நம்பத்தகாதவர்களா? மற்றவர்களைப் பற்றி உங்களிடம் குறைசொல்பவர், நீங்கள் இல்லாதபோது உங்களைப் பற்றியும் மற்றவர்களிடம் குறைசொல்ல மாட்டாரென்பது என்ன நிச்சயம்? “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” என இயேசு சொன்னார். (மத்தேயு 12:34) ஆகவே, மற்றவர்கள் நம்மிடம் பேசுவதைக் கவனிக்க வேண்டும், அப்போது அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

ஒத்திருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்

தங்களுக்கு இருக்கும் அதே விருப்பங்கள் தங்களுடைய நண்பர்களுக்கும் இருக்க வேண்டுமென சிலர் நினைக்கிறார்கள். தனக்குப் பிடித்தமான ஒரு ஸ்வீட் இன்னொருவனுக்குப் பிடிக்காவிட்டால் அவன் தன்னுடைய ஃபிரெண்டாய் இருக்க முடியாது என ஒரு சிறுவன் பிடிவாதமாகச் சொன்னான். நண்பர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள, அவர்களுக்கிடையே போதுமானளவிற்கு ஒத்த கருத்துக்கள் இருக்க வேண்டும் என்பது உண்மைதான்; அதைவிட முக்கியம், ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் ஒரேவிதமான நெறிமுறைகள் இருக்க வேண்டும். ஆனால் இருவருடைய குணங்களும் வாழ்க்கைப் பின்னணியும் ஒரேவிதமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. சொல்லப்போனால், இப்படிப்பட்ட வேறுபாடுகள் இருப்பது நட்புறவைப் பலப்படுத்தும், பரஸ்பர நன்மைகளையும் அளிக்கும்.

நட்புக்கு இலக்கணமாகத் திகழுகிற, எக்காலத்திற்கும் பொருந்துகிற இரண்டு உதாரணங்கள் பைபிளில் உள்ளன. ஒன்று தாவீது, யோனத்தானின் உதாரணம், மற்றொன்று ரூத், நகோமியின் உதாரணம். கடவுள் மீதும் அவருடைய நியதிகள் மீதும் அவர்களுக்கு ஒரேவிதமான பற்று இருந்ததைச் சார்ந்திருந்தது அவர்கள் நட்பு. a இந்த இரு உதாரணங்களிலும் காணப்படும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வயதிலும் பின்னணியிலும் அவர்களுக்கிடையே பெரும் வித்தியாசங்கள் இருந்தன. ஆகவே இவை நட்பைப் பற்றிய ஒரு விஷயத்தை நமக்குக் கற்பிக்கின்றன: சிறியோரும் பெரியோரும் நண்பர்களாக இருக்க முடியும், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க முடியும்.

வயது வேறுபாட்டிலிருந்து நன்மையடைதல்

நம்மைவிட வயதில் சிறியவர்களையோ பெரியவர்களையோ நண்பர்களாக்கிக் கொள்வது இரு சாராருக்குமே பயனுள்ளதாக இருக்கும். இளைஞர்கள் சிலர் சொந்த அனுபவத்திலிருந்து சொல்வதைக் கேளுங்கள்:

மானுயேலா (இத்தாலி): “கொஞ்ச நாட்களுக்கு முன்பு வயதில் முதிர்ந்த ஒரு தம்பதியர் என் நண்பர்களானார்கள். அவர்களிடம் எல்லாவற்றைப் பற்றியும் பேசுவேன்; அவர்களும் என்னிடம் ஒளிவுமறைவில்லாமல் பேசுவார்கள், அது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. நான் சின்னவள் என்பதற்காக அவர்கள் என்னை மட்டமாக நினைக்கவில்லை. இது அவர்களிடம் நெருக்கமாவதற்கு என்னைத் தூண்டியது. எனக்கு பிரச்சினைகள் வந்தபோது அவர்களுடைய ஃபிரெண்ட்ஷிப் எனக்குக் கைகொடுத்தது. என் வயதுக்காரர்களிடம் பிரச்சினைகளைப் பற்றி பேசும்போது, சில சமயங்களில் அவர்கள் கொடுக்கிற ஆலோசனை நன்றாக யோசித்து சொன்னதாக தெரிவதில்லை. ஆனால் வயதில் முதிர்ந்த என் நண்பர்களுக்கு அனுபவமும், விவேகமும், எங்களைப் போன்ற இளைஞர்களிடமில்லாத சமநிலையும் இருக்கிறது. அவர்களுடைய உதவியுடன் நல்ல தீர்மானங்களை எடுக்க முடிகிறது.”

ஸூலேகா (இத்தாலி): “பார்ட்டிகள் நடத்துகையில் இளைஞர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் நாங்கள் அழைப்போம். இப்படி பெரியவர்களும் சிறியவர்களும் ஒன்றுகூடி வரும்போது, முடிவில் நாங்கள் எல்லாருமே புத்துணர்ச்சி பெற்றதுபோல் உணருவதைக் கவனித்திருக்கிறேன். வித்தியாசமான கண்ணோட்டமுள்ள எல்லாரும் ஒன்று சேரும்போது பார்ட்டி ஜாலியாக இருக்கிறது.”

பெரியவர்களே, நீங்களும்கூட இளைஞர்களிடம் அக்கறை காட்டலாம். மேலே குறிப்பிடப்பட்ட சிலருடைய அனுபவங்கள் காட்டுகிறபடி, இளைஞர் பலரும் உங்களுடைய பல்லாண்டு அனுபவத்தை மனதாரப் போற்றுகிறார்கள், உங்களுடைய நட்புறவை இனிமையாகக் கருதுகிறார்கள். அமில்யா என்பவருக்கு 80-⁠க்கும் அதிக வயதாகிறது, அவர் விதவையும்கூட; அவர் இவ்வாறு சொல்கிறார்: “இளைஞர்களோடு பழகுவதற்கு முயலுகிறேன். அவர்கள் ஓடியாடி, சுறுசுறுப்பாக இருப்பதைப் பார்ப்பது எனக்குத் தெம்பளிக்கிறது!” இப்படி ஒருவருக்கொருவர் உற்சாகத்தைப் பரிமாறிக்கொள்வதால் எண்ணற்ற நல்ல பலன்கள் கிடைக்கின்றன. அநேக வாலிபர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்குக் காரணராயிருந்த நண்பர்களை மனதாரப் பாராட்டுகிறார்கள்; அவர்கள் சிறியவர்களாக இருந்தபோது இந்த நண்பர்கள் அவர்களைவிட சற்று பெரியவர்களாக இருந்தார்கள், சிறந்த முன்மாதிரி வைத்தார்கள், பயனுள்ள ஆலோசனையும் அளித்தார்கள்.

நட்புறவுகளுக்கு மெருகூட்டுதல்

அருமையான நட்புறவை அனுபவிப்பதற்கு, புதிய நண்பர்களைப் பெற வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஏற்கெனவே உற்ற நண்பர்கள் இருந்தால், அவர்களோடுள்ள பந்தத்தைப் பலப்படுத்துவதைப் பற்றி ஏன் யோசித்துப் பார்க்கக் கூடாது? நீண்டகால நண்பர்கள் பொன் போன்ற பொக்கிஷங்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆகவே அவர்களை அந்த விதமாகவே மதிக்க வேண்டும். அவர்களுடைய களங்கமற்ற நட்பை ஒருபோதும் துச்சமாகக் கருதிவிடாதீர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களையும், உங்களுடைய நேரத்தையும், உங்களுடைய வளங்களையும் அளிப்பதன் மூலமே மட்டற்ற மகிழ்ச்சியும் நிலையான நட்பும் கிடைக்கும் என்பதை நினைவில் வையுங்கள். நாம் செய்யும் முயற்சிகளுக்கும் தியாகங்களுக்கும் கிடைக்கும் பலன் ஈடிணையற்றது. ஆனால், உங்களை மட்டுமே மனதில் வைத்து நண்பர்களைத் தேர்ந்தெடுத்தால், தோல்விதான் மிஞ்சும். ஆகவே உங்களுடைய அபிமானத்தைப் பெற்றவர்களையும் உங்களுக்கு ஆதாயம் உள்ளவர்களையும் மட்டுமே நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். ஒருவேளை மற்றவர்களால் உதாசீனப்படுத்தப் படுகிறவர்களையும் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்கத் தெரியாதவர்களையும்கூட நீங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளலாம். பிரான்சு நாட்டைச் சேர்ந்த கேயில் இவ்வாறு குறிப்பிடுகிறாள்: “ஏதாவது ஒரு காரியத்தைச் செய்வதற்காக ஒன்றாகக் கூடிவரும்போது தனிமையில் இருக்கிற இளைஞரையும் நாங்கள், ‘நீ ஏன் வீட்டுல தனியாக இருக்கணும், எங்களோட வா. நாம் ஒருவரையொருவர் தெரிந்து கொள்ளலாம்’ என்று சொல்லி கூப்பிடுவோம்.”​—லூக்கா 14:12-14.

அதே சமயத்தில் நல்ல ஆட்கள் உங்களோடு நட்புகொள்ள வருகையில் அவசரப்பட்டு அதை மறுத்துவிடாதீர்கள். இத்தாலியைச் சேர்ந்த எலிஸா இவ்வாறு குறிப்பிடுகிறாள்: “முன்பு ஒருசமயம் உங்களோடு பழகாமல் உங்களைத் தவிர்த்ததை நினைக்கும்போது உங்கள் மனம் கொதிப்படையலாம். ‘ஃபிரெண்ட்ஷிப் ஒன்றும் எனக்கு அவ்வளவு முக்கியமல்ல’ என்றும்கூட நீங்கள் நினைக்க ஆரம்பிக்கலாம், ஆகவே, நீங்கள் பழகாமல் தனியாக ஒதுங்கி, நீங்கள் உண்டு உங்கள் வேலையுண்டு என்று இருந்துவிடுகிறீர்கள். வேறு யாரையாவது நண்பர்களாக்கிக் கொள்வதற்குப் பதிலாக உங்களைச் சுற்றி ஒரு தடுப்புச்சுவரையே எழுப்பிவிடுகிறீர்கள்.” தேவையற்ற பயமோ சுயநலமோ புதிய நண்பர்களைப் பெறவிடாமல், மற்றவர்களிடம் மனந்திறந்து பேசவிடாமல் தடுக்கும். நண்பர்களாகும் எண்ணத்துடன் மற்றவர்கள் நம்மிடம் பழகுகையில் அதற்கு நாம் மிகுந்த நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

உண்மையான நண்பர்களைப் பெறலாம்

உற்ற நண்பர்கள் வேண்டுமா? அதற்காக ஆசைப்பட்டுக் கொண்டிருப்பதோ காத்திருப்பதோ இதுபோன்ற கட்டுரைகளை வாசிப்பதோ மட்டும் போதாது. நண்பர்களைப் பெறுவதற்கான வழிகளை அறிவது, சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வதைப் போன்றது. இந்த இரண்டிற்குமே புத்தகத்தைப் படித்தால் மட்டும் திறமைகள் எல்லாம் தானாக வந்துவிடாது. சில முறை கீழே விழ வேண்டியிருந்தாலும் பழகிப் பார்ப்பது அவசியம். கடவுளுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பவர்களின் நட்புறவுகள்தான் மிக உறுதியான பந்தம் உடையவை என பைபிள் காட்டுகிறது. ஆனால் நண்பர்களைப் பெறுவதற்கு முயற்சி எடுக்காவிட்டால் கடவுளுடைய ஆசீர்வாதம் இருக்காது. நல்ல நண்பர்களைப் பெற நீங்கள் தீர்மானித்துவிட்டீர்களா? முயற்சியைக் கைவிடாதீர்கள். உதவிக்காகக் கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள், சுயநலத்தைக் களைந்து முயற்சி செய்யுங்கள், நண்பராக இருங்கள். (g04 12/8)

[அடிக்குறிப்பு]

a இந்த உதாரணங்களை பைபிளில் ரூத், ஒன்று சாமுவேல், இரண்டு சாமுவேல் ஆகிய புத்தகங்களிலிருந்து வாசித்தறியலாம்.

[பக்கம் 11-ன் பெட்டி/படம்]

பெற்றோரின் கவனத்திற்கு

அநேக பாடங்களைப் போல நட்பைப் பற்றியும் பிள்ளைகள் வீட்டிலிருந்துதான் முதலில் கற்றுக்கொள்கிறார்கள். முக்கியமாக, அன்பாக பழகுவதற்கு ஒரு சிறு பிள்ளைக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் வீட்டாரே பூர்த்தி செய்கிறார்கள். அப்படிப்பட்ட சிறந்த சூழலில் இருந்தாலும் அந்தப் பிள்ளை மற்றவர்களுடன் பழகும்போது அதன் எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலும் நடத்தையிலும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. உதாரணமாக, வேறொரு நாட்டிற்குக் குடிமாறி போகையில் பிள்ளைகள் எவ்வளவு விரைவில் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் மற்ற பிள்ளைகளுடன் பழகுவதாலேயே சீக்கிரத்தில் கற்றுக்கொள்கிறார்கள்.

பெற்றோர்களாக, நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுக்க பிள்ளைகளுக்கு நீங்கள் உதவ வேண்டும்; இது ஒரு சிலாக்கியம். உங்களுடைய உதவியின்றி அவ்வாறு தேர்ந்தெடுக்குமளவுக்கு சிறு பிள்ளைகளுக்கும் டீனேஜர்களுக்கும் அனுபவம் போதாது. என்றாலும் ஒரு பிரச்சினை. அநேக இளைஞர்கள், தங்களுடைய பெற்றோரையும் மற்ற பெரியோரையும்விட சக இளைஞர்களிடமே அதிக நெருக்கமாக உணருகிறார்கள்.

டீனேஜர்கள் தங்களுடைய பெற்றோரைவிடவும் சகாக்களிடம் ஆலோசனை கேட்பதற்கு ஒரு காரணம், பிள்ளைகள்மீது தங்களுக்கிருக்கும் தார்மீக பொறுப்பைப் பெற்றோர் பலரும் சந்தேகிப்பதே என சில நிபுணர்கள் நினைக்கிறார்கள். பிள்ளைகளை வழிநடத்துவதில் கடவுள் தங்களுக்குக் கொடுத்த பொறுப்பை பெற்றோர் முன்வந்து நிறைவேற்ற வேண்டும், அவர்களிடத்தில் அக்கறையும் காட்ட வேண்டும். (எபேசியர் 6:1-4) ஆனால் அதை எப்படிச் செய்வது? தங்களுடைய டீனேஜ் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என குழம்பிப்போகும் அநேக பெற்றோர்களை கிளினிக்கல் ஸைக்காலஜிஸ்ட் ரான் டஃபல் சந்திக்கிறார். பெற்றோராக இருந்து பிள்ளைகளைக் கவனிப்பதற்குப் பதிலாக, “பிள்ளை வளர்ப்பு பற்றி மீடியாவில் பரவலாக வெளியிடப்படும் நவீன பாணிகளையே அநேகர் பின்பற்றுகிறார்கள்” என்று அவர் எழுதுகிறார். ஏன்? ஏனென்றால், “முதலாவது பிள்ளைகளின் மனதைப் புரிந்துகொண்டு அவர்களுடன் சுமுகமான உறவை வைத்துக்கொள்வதற்கு, அவர்களுடைய பிள்ளைகளைப் பற்றியே அவர்களுக்கு சரிவர தெரியாதே.”

ஆனால், அப்படியிருக்க வேண்டியதில்லை. பிள்ளைகளுடைய தேவைகள் வீட்டில் பூர்த்தி செய்யப்படாவிட்டால் அவர்கள் தங்களுடைய நண்பர்களிடம்தான் செல்வார்கள் என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியானால் அவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது? “இளைஞர்களுக்கு எப்போதுமே தேவைப்படுகிறவைதான் இவர்களுக்கும் தேவைப்படுகிறது: பேணி வளர்ப்பது, தட்டிக் கொடுத்து பாராட்டுவது, பாதுகாப்பு அளிப்பது, கட்டுப்பாடுகளையும் எதிர்பார்ப்புகளையும் தெளிவாக விளக்குவது, நெஞ்சார நேசிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்த்துவது ஆகியவையே” என டாக்டர் டஃபல் கூறுகிறார். “நம் நாளில் கவலைதரும் விஷயம் என்னவெனில், பெரும்பாலான டீனேஜர்களின் இந்த அடிப்படை தேவைகளைப் பெரியவர்கள் திருப்தி செய்வதில்லை, அதோடு தங்கள் சொந்த குடும்பங்களில் தங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காததைப்போல் அவர்கள் உணருகிறார்கள்” என்றும் அவர் கூறுகிறார்.

நண்பர்களைப் பெற உங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்? அதற்கு முதல்படி, உங்களுடைய சொந்த வாழ்க்கை முறையையும், நட்புறவுகளையும் பற்றி சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய மற்றும் உங்கள் நண்பர்களுடைய இலட்சியங்களும் வாழ்க்கை முறையும் சிறந்ததாக, சுயநலமற்றதாக இருக்கின்றனவா? அவை ஆன்மீகத்துக்கு இடமளிக்கின்றனவா, பொருள் சம்பந்தமான நாட்டம் உடையனவா? சொற்களைவிட செயல்களே அதிகத்தை வெளிப்படுத்துகின்றன. ஆகவே உங்களுடைய, உங்கள் நண்பர்களுடைய, அவர்களின் பிள்ளைகளுடைய மனப்பான்மையையும் செயல்களையும்கூட உங்கள் பிள்ளைகள் கூர்ந்து கவனிப்பார்கள்” என கிறிஸ்தவ மூப்பரும் தகப்பனுமான டக்லஸ் குறிப்பிடுகிறார்.

அநேக மிருகங்களும்கூட இயல்பாகவும் பெரும்பாலும் மூர்க்கத்தனமாகவும் கொடிய மிருகங்களிடமிருந்து தங்கள் குட்டிகளைக் காப்பாற்றுகின்றன. கரடிகள் பற்றி ஆராயும் ஒரு நிபுணர் இவ்வாறு அறிவிக்கிறார்: “தாய்க் கரடிகள் தங்கள் குட்டிகளை எந்த ஆபத்திலிருந்தும் காப்பாற்றுவதற்குப் பெயர்போனவை.” அப்படியானால் மனித பெற்றோர்கள் எந்த விதத்திலாவது சளைத்தவர்களா என்ன? இத்தாலியைச் சேர்ந்த ரூபன் இவ்வாறு கூறுகிறார்: “என்னுடைய பெற்றோர் பைபிளை உபயோகித்து நியாயத்தை எடுத்துச் சொன்னார்கள். சிலரோடுள்ள சகவாசத்தை விட்டுவிடுவது நல்லது என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவினார்கள். அப்போது நான், ‘அப்படீன்னா யாரோடும் ஃபிரெண்ட்ஷிப் வைச்சுக்கக் கூடாதா!’ என்று முதலில் கேட்டேன். ஆனால் போகப்போகத்தான் புரிந்தது அவர்கள் சொன்னது முழுக்க முழுக்க சரி என்று; அவர்களுடைய பொறுமை என்னைப் பாதுகாத்தது.”

அதுமட்டுமல்ல, நல்ல முன்மாதிரி வைப்பவர்களோடும் சிறந்த இலக்குகளை வைக்க உதவுபவர்களோடும் உங்களுடைய பிள்ளைகளை எப்போதும் பழக வையுங்கள். ஃபிரான்ஸிஸ் என்ற சந்தோஷமுள்ள கெட்டிக்கார இளைஞர் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது பெரும்பாலும் யாரிடமும் பழகாமல் ஒதுங்கியே இருந்தோம்; இதை அம்மா கவனித்தார்கள். அதனால் எங்களுக்கு உதவுவதற்காக முழுநேர ஊழியத்தில் ரொம்ப சுறுசுறுப்பாக ஈடுபடுகிற ஃபிரெண்ட்ஸை வீட்டுக்கு அழைத்தார்கள். இப்படியாக எங்கள் வீட்டில் இருந்தே அவர்களோடு பழகி ஃபிரெண்ட்ஸ் ஆக முடிந்தது.” இதுபோல நீங்களும் முயற்சி செய்கையில், உங்களுடைய வீட்டிலேயே பிள்ளைகளுக்கு நல்ல நட்புறவுகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

[பக்கம் 9-ன் படம்]

நண்பராகப் போகிறவர்களின் நடத்தையை கவனியுங்கள்

[பக்கம் 10-ன் படம்]

வயதும் பின்னணியும் வேறுபட்டாலும் சுயநலமற்ற நட்புறவுகள் வளருகின்றன