Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தோல்வியை நான் எப்படி சமாளிப்பது?

தோல்வியை நான் எப்படி சமாளிப்பது?

இளைஞர் கேட்கின்றனர் . . .

தோல்வியை நான் எப்படி சமாளிப்பது?

“இப்போதுதான் என்னுடைய ரிப்போர்ட் கார்ட் என் கையில் கிடைத்தது. மறுபடியும் அதே நான்கு பாடத்தில் ஃபெய்ல். எவ்வளவோ முயற்சி செய்தும் திரும்பவும் ஃபெய்ல்தான்.”​—⁠லாரன், வயது 15.

“தோல்வியை சமாளிப்பது ரொம்பவே கஷ்டம். நம்பிக்கை இழப்பது ரொம்ப சுலபம்.”​—⁠ஜெஸிக்கா, வயது 19.

தோல்வி. இந்த வார்த்தையை ஒருவேளை நீங்கள் நினைத்துப் பார்க்கக்கூட விரும்பமாட்டீர்கள். இருந்தாலும் நாம் எல்லாருமே அவ்வப்போது தோல்வியை எதிர்ப்படத்தான் செய்கிறோம். பள்ளி பரீட்சையில் ‘ஃபெய்ல்’ ஆகிவிடுகையிலும் சரி, தர்மசங்கடமான எதையாவது செய்துவிடுகையிலும் சரி, நாம் நேசிக்கிற ஒருவருக்கு ஏமாற்றமளிக்கையிலும் சரி, பெரிய தவறைச் செய்துவிடுகையிலும் சரி, நம்மால் தோல்வியை ஜீரணிக்க முடிவதில்லை.

மனிதர்கள் எல்லாருமே தவறு செய்வது உண்மைதான். “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி” இருக்கிறார்கள் என்று பைபிளும் சொல்கிறது. (ரோமர் 3:23) ஆனால் நம்மில் சிலர் தோல்வியிலிருந்து மீள கஷ்டப்படுகிறோம். ஜேஸன் என்ற ஓர் இளைஞன் இவ்வாறு சொல்கிறான்: “என்னைக் கடுமையாக விமர்சிப்பது நானேதான். நான் தவறு செய்தால், மற்றவர்கள் கேலி செய்யலாம், ஆனால் சீக்கிரத்தில் அதைப் பற்றி மறந்துவிடுவார்கள். என்னால்தான் அதை மறக்கவே முடியாது, என் தப்பைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருப்பேன்.”

நாம் செய்த தவறுகளை கொஞ்சம் யோசித்துப் பார்ப்பதில் குற்றமில்லை​—⁠முக்கியமாக அது நம் முன்னேற்றத்திற்கு உதவும்போது குற்றமில்லை. என்றாலும் எப்பொழுதும் நம்மில் நாமே குறை கண்டுபிடித்துக் கொண்டிருப்பது ஆபத்தானது, அது நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தும். “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்” என்று நீதிமொழிகள் 12:25 சொல்கிறது.

பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் எப்பாப்பிரோதீத்து என்பவரைக் குறித்து சற்று சிந்திப்போம். அவர் அப்போஸ்தலன் பவுலின் உதவியாளராக சேவை செய்ய ரோமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். என்றாலும் அவர் வியாதிப்பட்டு, தன் பொறுப்பை நிறைவேற்ற முடியாதளவு பாதிக்கப்பட்டுவிட்டார். சொல்லப்போனால், பவுல் அவரை கவனித்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது! ஆகவே எப்பாப்பிரோதீத்துவை வீட்டிற்கு அனுப்பிவைக்க பவுல் ஏற்பாடு செய்தார். விசுவாசமுள்ள இந்த நபர் மனதளவில் சோர்வடைந்துவிட்டார் என்று அங்குள்ள சபைக்கும் தெரிவித்தார். எப்பாப்பிரோதீத்து சோர்வடைந்ததற்கு காரணம்? “அவன் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டீர்கள்” என்று பவுல் விளக்கமளித்தார். (பிலிப்பியர் 2:25, 26) வியாதி காரணமாக தன் வேலைகளைச் செய்ய முடியாமற்போன விஷயம் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டதே என்பதை நினைத்தபோது தான் தோல்வியடைந்துவிட்டதாக எப்பாப்பிரோதீத்துவுக்குத் தோன்றியிருக்கலாம். ஆகவே அவர் சோர்வடைந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை!

தோல்வியினால் வரும் வேதனையைத் தவிர்க்க ஏதாவது வழி இருக்கிறதா?

உங்கள் வரம்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

தோல்வியடையும் வாய்ப்பை குறைப்பதற்கு ஒரு வழி, நியாயமான, உங்கள் வரம்புக்குட்பட்ட இலக்குகளை வைப்பதே. “தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்” என்று பைபிள் கூறுகிறது. (நீதிமொழிகள் 11:2, NW; 16:18) தன்னடக்கமுள்ள ஆண்களும் பெண்களும் தங்கள் வரம்புகளை அறிவார்கள். உங்களுடைய திறமைகளையும் ஆற்றல்களையும் முன்னேற்றுவிக்க சில சமயங்களில் உங்களை நீங்களே பரிசோதித்துக்கொள்வது நல்லதுதான். ஆனால் அப்படிச் செய்கையில் எதார்த்தமாய் இருங்கள். நீங்கள் கணக்கில் புலியாக இல்லாதிருக்கலாம் அல்லது விளையாட்டில் நட்சத்திரம் போல் ஜொலிக்க முடியாதிருக்கலாம்; அப்படியானால் அதை ஒத்துக்கொள்ளுங்கள். மைக்கல் என்ற ஓர் இளைஞன் இப்படியாக ஒத்துக்கொள்கிறான்: “நான் விளையாட்டில் மன்னன் கிடையாது. எனவே என் சக்திக்கு மீறிய லட்சியங்களை வைப்பது கிடையாது. உங்கள் சக்திக்கு ஏற்றபடித்தான் நீங்கள் இலக்குகளை வைக்க வேண்டும்.”

முதுகெலும்புப் பிளவினாலும் மூளை வாதத்தினாலும் அவதிப்படும் 14 வயது ஈவான் சொல்வதை கவனியுங்கள்: “என்னால் மற்றவர்களைப் போல் ஓடியாடி விளையாட முடியாது. ஏன், நடக்கக்கூட முடியாது. மற்றவர்கள் செய்வதை என்னால் செய்ய முடிவதில்லையே என நினைத்தால் ரொம்ப சங்கடமாக இருக்கிறது. அநேகர் என் மனதைப் புரிந்துகொள்வதில்லை. ஆனாலும் என்னால் சமாளிக்க முடிகிறது.” இதுவே ஈவானின் ஆலோசனை: “முயற்சி செய்வதை நிறுத்திவிடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நீங்கள் தோல்வியடைந்தால் அல்லது சரியாகச் செய்யவில்லையென்றால் மனதைத் தளர விடாதீர்கள். உங்களால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டேயிருங்கள்.”

அதே சமயம் மற்றவர்களுடன் உங்களை தவறாக ஒப்பிட்டு உங்கள் மனதை நோகடித்துக் கொள்ளாதீர்கள். 15 வயது ஆன்ட்ரூ இவ்வாறு சொல்கிறான்: “நாம் எல்லாரும் வெவ்வேறு திறமைகளையும் ஆற்றல்களையும் பெற்றிருக்கிறோம். எனவே நான் மற்றவர்களுடன் என்னை ஒப்பிடுவதை தவிர்க்கிறேன்.” ஆன்ட்ரூ சொன்னது கலாத்தியர் 6:4-⁠ல் சொல்லப்பட்ட கூற்றின் எதிரொலியாகவே இருக்கிறது: “அவனவன் தன்தன் சுய கிரியையைச் சோதித்துப் பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.”

மற்றவர்கள் மட்டுக்கு மீறி எதிர்பார்க்கையில்

என்றாலும் சில சமயங்களில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றவர்கள் உங்களிடமிருந்து அதிகத்தை எதிர்பார்க்கலாம். என்னதான் செய்தாலும் அவர்களைப் பிரியப்படுத்தவே முடியாது என்பதை உணருகிறீர்கள். போதாததற்கு, அவர்களும் தங்கள் அதிருப்தியை உங்களிடம் நேரடியாக சொல்லிவிடலாம். அது உங்களுக்கு எரிச்சல் ஊட்டலாம் அல்லது உங்கள் மனதை சுக்குநூறாக உடைத்து விடலாம். (யோபு 19:2) ஆனால் பெற்றோரோ மற்றவர்களோ உங்களை வேண்டுமென்றே புண்படுத்த நினைப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். “அநேக சமயங்களில் உங்கள் மனம் எந்தளவு புண்படும் என்பதை அவர்கள் உணருவதே இல்லை. சில சமயங்களில் வெறும் மனஸ்தாபத்தால் அப்படி செய்துவிடுகிறார்கள்” என்று ஜெஸிக்கா சொல்கிறாள்.

மறுபட்சத்தில், ஒருவேளை உங்களால் பார்க்க முடியாத ஒன்றை அவர்கள் பார்க்கிறார்களா? உதாரணத்திற்கு, உங்கள் திறமைகளை நீங்கள் குறைவாக எடைபோட்டு, உங்களை நீங்களே தாழ்வாக நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆகவே அவர்களுடைய கருத்துக்களை அசட்டை செய்யாமல், ‘புத்திமதியைக் கேளுங்கள்.’ (நீதிமொழிகள் 8:33) மைக்கல் சொல்கிறான்: “அது உங்களுடைய நன்மைக்குத்தான். நீங்கள் நன்றாக முன்னேற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளுங்கள்.”

சரி, உங்களுடைய பெற்றோரும் மற்றவர்களும் உங்களிடம் எதிர்பார்ப்பது நியாயமற்றது என்றும் அவர்கள் எதிர்பார்ப்பவற்றை நீங்கள் செய்தால் அது தோல்வியில்தான் முடிவடையும் என்றும் நீங்கள் நினைத்தால் என்ன செய்வது? அப்பொழுது அவர்களிடம் போய் மரியாதையுடனும், வெளிப்படையாகவும் பேசுவது ஞானமாக இருக்கும். நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள். அப்போது, நீங்களும் அவர்களும் சேர்ந்து அடைய முடிகிற சில இலக்குகளை வைக்க முடியும்.

உங்கள் ஆன்மீக வாழ்க்கையில் “தோல்விகள்”

யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இருக்கும் இளைஞர்களுக்கு, கடவுளின் ஊழியர்களாக பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் சவால்கள் இருக்கின்றன. (2 தீமோத்தேயு 4:5) நீங்கள் ஒரு இளம் கிறிஸ்தவராக இருந்தால் சில சமயங்களில் தகுதியற்றவராக உணரக்கூடும். ஒருவேளை சபைக் கூட்டங்களில் நன்றாக பதில் சொல்வதில்லை என உணரலாம். அல்லது பைபிள் செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்வது உங்களுக்கு சிரமமாக இருக்கலாம். உதாரணமாக, ஒரு டீன் ஏஜ் பெண்ணுக்கு ஜெஸிக்கா பைபிளைக் கற்றுக்கொடுத்தாள். சில காலங்களுக்கு அந்தப் பெண் நல்ல முன்னேற்றத்தைக் காண்பித்தாள். ஆனால் திடீரென்று, கடவுளை சேவிப்பதில் அவளுக்கு விருப்பமில்லாமல் போய்விட்டது. “எனக்கு ஏற்பட்ட தோல்வியாகவே அதைக் கருதினேன்” என ஜெஸிக்கா சொல்கிறாள்.

ஜெஸிக்கா அந்த உணர்ச்சிகளை எப்படி சமாளித்தாள்? முதலாவதாக, தன்னுடன் பைபிளைப் படித்த பெண் தன்னைப் புறக்கணிக்கவில்லை, கடவுளைத்தான் புறக்கணித்துவிட்டாள் என்பதை ஜெஸிக்கா புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் பேதுருவின் உதாரணத்தை தியானித்தது அவளுக்கு உதவியாக இருந்தது. தேவபக்தியுள்ள பேதுருவிற்கு நிறைய குறைபாடுகள் இருந்தன. ஆனாலும், “பேதுரு தன்னுடைய குறைபாடுகளை திருத்திக்கொண்டார் என்றும், ராஜ்ய வேலையில் கடவுள் அவரை அநேக வழிகளில் பயன்படுத்தினார் என்றும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது” என்று ஜெஸிக்கா சொல்கிறாள். (லூக்கா 22:31-34, 60-62) ஒரு போதகராக உங்களுடைய திறமைகள் வளர வேண்டும் என்றால் அதற்காக ஏன் இன்னுமதிக முயற்சி எடுக்கக் கூடாது? (1 தீமோத்தேயு 4:13) சபையில் உள்ள முதிர்ச்சி வாய்ந்தவர்களின் உதவியை நாடுங்கள். அவர்களால் உங்களுக்குப் போதனையையும் பயிற்றுவிப்பையும் தரமுடியும்.

ஒருவேளை வீட்டிற்கு வீடு ஊழியம் செய்வது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஜேஸன் இவ்வாறு சொல்கிறான்: “வீட்டுக்காரர் நான் சொல்வதைக் கேட்க மறுக்கும்போதெல்லாம் அதை ஒரு சின்ன தோல்வியாகவே நினைப்பேன்.” அவன் எப்படி இதை சமாளிக்கிறான்? “உண்மையில் நான் தோற்கவில்லை என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.” ஆம், கடவுள் கொடுத்திருக்கும் பிரசங்கிக்கும் வேலையைச் செய்வதில் அவன் வெற்றியே பெற்றிருக்கிறான்! வீட்டுக்காரர் பைபிள் செய்தியைக் கேட்க மறுக்கும்போது நம் மனதிற்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் எல்லா வீட்டுக்காரர்களும் அதைக் கேட்க மறுப்பதில்லை. “பைபிள் செய்திக்கு செவிகொடுக்கும் நபரை சந்திக்கும்போது என்னுடைய எல்லா முயற்சியும் பயனுள்ளது என்பதை உணருவேன்” என்று ஜேஸன் சொல்கிறான்.

வினைமையான தவறுகள்

நீங்கள் ஒரு பெரிய தவறை அல்லது வினைமையான பாவத்தைச் செய்திருந்தால் என்ன செய்வது? 19 வயது ஆனா அப்படிப்பட்ட ஒரு வினைமையான தவறைச் செய்திருந்தாள். a அவள் இவ்வாறு ஒத்துக்கொள்கிறாள்: “சபையின், குடும்பத்தின், எல்லாருக்கும் மேலாக யெகோவாவின் எதிர்பார்ப்பிற்கு மாறாக நான் நடந்துகொண்டேன்.” மறுபடியும் பழைய நிலைக்கு வருவதற்கு நீங்கள் மனந்திரும்பி சபையிலுள்ள மூப்பர்களின் உதவியை நாட வேண்டும். (யாக்கோபு 5:14-16) ஒரு மூப்பர் உற்சாகமூட்டிய விதத்தை ஆனா நினைவுகூருகிறாள்: “தாவீது ராஜா பல பாவங்களைச் செய்தபோதும் யெகோவா அவரை மன்னிக்கத் தயாராக இருந்தார் என்றும், அதனால் தாவீது பழைய நிலைக்குத் திரும்பினார் என்றும் ஒரு மூப்பர் என்னிடம் விளக்கினார். அது எனக்கு மிகவும் உதவியது.” (2 சாமுவேல் 12:9, 13; சங்கீதம் 32:5) ஆன்மீக ரீதியில் பலப்படுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதையெல்லாம் செய்யுங்கள். “நான் சங்கீதப் புத்தகத்தைத் திரும்பத் திரும்ப வாசிக்கிறேன். உற்சாகமூட்டும் வசனங்களை என் டைரியில் எழுதி வைக்கிறேன்” என்று ஆனா சொல்கிறாள். காலப்போக்கில், வினைமையான தவறைச் செய்த நபர்கூட அதிலிருந்து மீண்டு வரலாம். “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்” என்று நீதிமொழிகள் 24:16 சொல்கிறது.

தோல்வியிலிருந்து மீண்டு வருதல்

சின்னச் சின்ன தவறுகள்கூட மனதைப் புண்படுத்தலாம். அவற்றிலிருந்து மீண்டு வர எது உங்களுக்கு உதவும்? முதலாவதாக உங்கள் தவறுகளை எதார்த்தமாய் நோக்குங்கள். மைக்கல் சொல்கிறான்: “நீங்கள் எதைச் செய்தாலும் அது தோல்வியில்தான் முடிவடையும் என்று யோசித்துக் கொண்டிராமல், எதில் தோல்வியடைந்தீர்கள்? எதனால் தோல்வியடைந்தீர்கள்? என்பவற்றைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் இப்படிச் செய்தால் அடுத்த முறை சிறப்பாகச் செய்ய முடியும்.”

அதுமட்டுமல்ல, உங்களுடைய உணர்ச்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து விடாதீர்கள். “நகைக்க ஒரு காலமுண்டு”​—⁠அதில் உங்களைப் பார்த்தே நகைக்கும் காலமும் உள்ளடங்கலாம்! (பிரசங்கி 3:4) நீங்கள் சோர்வடைந்தால், நீங்கள் சிறப்பாக செய்கிற காரியங்களிலோ விளையாட்டிலோ கவனத்தைத் திருப்புங்கள். மற்றவர்களுடன் உங்கள் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்வது போன்ற “நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாக” இருப்பது, உங்களைப் பற்றி நல்ல விதத்தில் யோசிக்க உதவியளிக்கும்.​—1 தீமோத்தேயு 6:18.

முடிவாக, ‘யெகோவா உருக்கமும், இரக்கமுமுள்ளவர் . . . அவர் எப்பொழுதும் கடிந்து கொள்ளார் [அல்லது, குற்றம் காண்பதில்லை]’ என்பதை நினைவில் வையுங்கள். (சங்கீதம் 103:8, 9) “நான் யெகோவாவிடம் எந்தளவுக்கு நெருங்கிச் செல்கிறேனோ அந்தளவுக்கு யெகோவாவின் ஆதரவும் உதவியும் எனக்குக் கிடைக்கும் என்ற உறுதியுடன் என்னால் இருக்க முடிகிறது” என்று ஜெஸிக்கா சொல்கிறாள். ஆம், உங்களுடைய குறைபாடுகளின் மத்தியிலும் பரலோகத் தந்தை உங்களை மதிக்கிறார் என்பதை அறிவது ஆறுதலாக இருக்கிறது அல்லவா! (g04 11/22)

[அடிக்குறிப்பு]

a பெயர் மாற்றப்பட்டுள்ளது.

[பக்கம் 28-ன் படம்]

மற்றவர்கள் உங்களிடம் மட்டுக்கு மீறி எதிர்பார்க்கிறார்கள் என்பது போல் தோன்றினால் மரியாதையான முறையில் அவர்களிடம் போய் பேசுங்கள்

[பக்கம் 29-ன் படம்]

நீங்கள் நன்றாகச் செய்யும் காரியங்களில் கவனம் செலுத்துவது தோல்வி மனப்பான்மையை விரட்டியடிக்க உதவும்