Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உப்பு—மவுசு மிக்க பொருள்

உப்பு—மவுசு மிக்க பொருள்

உப்பு​—மவுசு மிக்க பொருள்

“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” என்று இயேசு தம் சீஷர்களிடம் கூறினார். (மத்தேயு 5:13 ) “நம் இருவருக்கும் இடையே உப்பு உள்ளது” என்பார்கள் அரேபியர்கள். “உப்பைத் தின்றுவிட்டு துரோகம் பண்ணுதல்” (இரண்டகம் செய்தல் அல்லது நன்றி கெட்டுப் போதல் ) என்பது பெர்சியர்களின் சொல் வழக்கு. உப்பினுடைய பாதுகாக்கும் பண்புகளினால், “உப்பு” என்ற வார்த்தை அதிக மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய விஷயங்களைக் குறிக்க அன்றைய மொழிகளில் பயன்படுத்தப்பட்டது, இன்றும் அவ்வாறே பயன்படுத்தப்படுகிறது.

உப்பு, நிரந்தர மற்றும் ஸ்திரத்தன்மையின் சின்னமாகவும் ஆனது. ஆகவே, பைபிளில் நிலையான உடன்படிக்கை ஒன்று, “உப்பு உடன்படிக்கை” என்று அழைக்கப்பட்டது. பொதுவாக, உடன்படிக்கை செய்யும் இரு தரப்பினரும் உப்பிட்ட உணவை சேர்ந்து உண்டனர்; இவ்வாறு அந்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தினர். (எண்ணிக்கை [எண்ணாகமம் ] 18:19, பொது மொழிபெயர்ப்பு) மோசேயின் நியாயப்பிரமாண சட்டப்படி, பலிபீடத்தில் செலுத்தப்பட்ட பலிகளுடன் உப்பு சேர்க்கப்பட வேண்டியிருந்தது; அது கெட்டுப்போகாமலும் சிதைவுறாமலும் இருப்பதையே குறித்தது.

சுவாரஸியமான சரித்திர உண்மைகள்

சரித்திரம் முழுவதிலும், உப்பு (சோடியம் குளோரைடு ) ரொம்பவே மவுசு மிக்க பொருளாக இருந்து வந்ததால், அதற்காக போர்களும்கூட மூண்டன. பிரெஞ்சு புரட்சி ஏற்பட்டதற்கான காரணங்களில் ஒன்று, பதினாறாம் லூயி மன்னர் உப்பின்மீது உயர் வரியை சுமத்தியதே. பண்டமாற்று வணிகத்தில் மதிப்பு மிக்க பொருளாகவும் உப்பு பயன்படுத்தப்பட்டது. வட ஆப்பிரிக்காவின் வெவ்வேறு பாகங்களில் வாழ்ந்த மூரிஷ் நாடோடி வணிகர்கள் உப்புக்காக கிராமுக்கு கிராம் தங்கத்தைக் கொடுத்தனர்; மத்திய ஆப்பிரிக்க பழங்குடியினர் சிலர் பாறை-உப்புப் பாளங்களை பணமாக பயன்படுத்தினர். சம்பளம் என்பதற்கான ஆங்கில வார்த்தையாகிய “சாலரி” என்பது சாலரியம் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து பிறந்தது; இந்த சாலரியம், உப்பு என்று பொருள்படும் சால் என்ற வார்த்தையிலிருந்து உருவானது. இது பண்டைய ரோம வீரர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை​—பணத்தோடு உப்பும் வழங்கப்பட்ட சம்பளத்தை—​குறித்தது. கிரேக்கர்கள் உப்பை கொடுத்து அடிமைகளை வாங்கினர்; இதுவே, “அவன் உப்புக்கு விலைபெறாதவன்” என்ற பழமொழி உருவாக வழிவகுத்தது.

இடைக்காலத்தில் உப்போடு சம்பந்தப்பட்ட சில மூட நம்பிக்கைகள் உருவாயின. உப்பை சிந்துவது கெட்ட சகுனமாக கருதப்பட்டது. உதாரணமாக, லியனார்டோ டா வின்ச்சியின் “கடைசி இராப்போஜன” ஓவியத்தில் யூதாஸ்காரியோத்துக்கு முன்னால் உப்பு ஜாடி ஒன்று கவிழ்ந்து கிடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மறுபட்சத்தில், 18-வது நூற்றாண்டு வரை, விருந்துண்ணும் மேஜையில் வைக்கப்படும் உப்புக்கு மேற்புறத்திலோ கீழ்ப்புறத்திலோ ஒருவர் அமருவது அவரது சமுதாய அந்தஸ்தை குறித்துக் காட்டியது; உப்பு ஜாடிக்கு மேற்புறத்தில், அதாவது மேஜையின் தலைப்பகுதியில் அமர்ந்திருப்பது கௌரவமான நிலையைக் குறித்துக் காட்டியது. ஆரம்ப காலத்திலிருந்தே மனிதன் இயற்கையில் கிடைக்கும் உப்பு நீரிலிருந்தோ, கடல் நீரிலிருந்தோ, பாறை-உப்பிலிருந்தோ உப்பை பிரித்தெடுக்க கற்றுக்கொண்டான். மருந்தியல் பற்றிய ஒரு பண்டைய சீனப் பதிவில், 40-⁠க்கும் அதிகமான உப்பு வகைகள் குறிப்பிடப்படுகின்றன; அதில், உப்பை பிரித்தெடுக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு முறைகள் விவரிக்கப்படுகின்றன; அவை ஆச்சரியமூட்டும் வகையில் இன்று பயன்படுத்தப்படும் முறையை ஒத்திருக்கின்றன. உதாரணமாக, சூரிய ஒளியை பயன்படுத்தி கடல் நீரிலிருந்து உப்பை பிரித்தெடுக்கும், உலகிலேயே மிகப் பெரிய நிறுவனம், மெக்ஸிகோவைச் சேர்ந்த பாஹா கலிபோர்னியா சூயரிலுள்ள பாயீயா ஸேபாஸ்டியான் வீஸ்காயீனோவின் கரைகளில் அமைந்துள்ளது.

உலகிலுள்ள சமுத்திரங்களெல்லாம் அடியோடு வற்றிவிடுவதாக வைத்துக்கொண்டால், “குறைந்தபட்சம் 1.9 கோடி கன கிலோமீட்டர் அளவுக்கு பாறை-உப்பு கிடைக்கும்; அல்லது கடல் ஏற்ற அளவின்போது கடல் மட்டத்திற்கு மேல் உள்ள ஐரோப்பா கண்டம் முழுவதையும் போல சுமார் 14.5 மடங்கு எடையுள்ள உப்பு கிடைக்கும்” என்று கணக்கிடப்பட்டிருப்பதாக என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்வது ஆர்வமூட்டுகிறது. பொதுவாக, கடல் நீரிலுள்ள உப்பின் சாதாரண அளவைவிட சுமார் ஒன்பது மடங்கு அதிகமான உப்பு, சவக்கடல் நீரில் உள்ளது!

உப்பின் இன்றைய பயன்

இன்றும் உப்புக்கு மவுசு இருக்கத்தான் செய்கிறது. உணவுக்கு சுவையூட்டுவதில், இறைச்சியைப் பதப்படுத்துவதில், சோப்பையும் கண்ணாடியையும் உற்பத்தி செய்வதில், இன்னும் பிறவற்றில் உப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பொது சுகாதார துறையில் அதன் உபயோகம் குறிப்பாக ஆர்வமூட்டுகிறது. உதாரணமாக, உலகின் பல நாடுகளில், அயோடின் சத்துக் குறைவை போக்க உப்புடன் அயோடினைச் சேர்க்கின்றனர்; இந்த அயோடின் சத்து குறைவினால் பொதுவாக கழலை நோய் (தைராய்டு சுரப்பி விரிவடைதல் ) ஏற்படுகிறது; இது தீவிரமடைகையில் மனநலம் குன்றிவிடுகிறது. மேலும், பற்சிதைவை தடுப்பதற்காக சில நாடுகளில் உப்புடன் ஃப்ளூரைடை சேர்க்கின்றனர்.

இரத்தத்தின் அளவையும் அழுத்தத்தையும் உப்பு சீரமைப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு அது அத்தியாவசியம் என்று சொல்லப்படுகிறது; அதே சமயத்தில் உட்கொள்ளும் உப்பின் அளவுக்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக சொல்லப்படும் முரண்பாட்டைக் குறித்து என்ன சொல்வது? உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உப்பையும் சோடியத்தையும் குறைவாகவே உட்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் எப்போதும் சிபாரிசு செய்திருக்கின்றனர். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் சுமார் முப்பது முதல் ஐம்பது சதவீதமானோர் தாங்கள் உட்கொள்ளும் உப்பினால் பாதிக்கப்படுகின்றனர். இவ்விஷயத்தில் உப்பை குறைப்பது இரத்த அழுத்தம் குறைவதைக் காட்டியிருக்கிறது.

உப்பு உண்மையில் உணவின் ருசியைக் கூட்டுகிறது; “ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ?” என்று கேட்டபோது யோபுவும் இதைத்தான் அர்த்தப்படுத்தினார். (யோபு 6:6 ) மவுசு மிக்க பொருளான உப்பு உட்பட, “சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற” நம் படைப்பாளருக்கு நாம் உண்மையில் நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்.​—1 தீமோத்தேயு 6:⁠17. (g02 6/8)

[பக்கம் 27-ன் படம்]

பலவகை உப்புகளில் சில (மேலிருந்து கடிகாரச் சுற்றில் ):

(1 ) ஆலயீயா கடல் உப்பு, ஹவாய்; (2 ) ஃப்ளூர் ட ஸெல், பிரான்ஸ்; (3 ) சுத்திகரிக்கப்படாத ஆர்கானிக் கடல் உப்பு; (4 ) செல் கிரீ (கிரே சால்ட் ), பிரான்ஸ்; (5 ) பருவெட்டான கடல் உப்பு; (6 ) கருப்பு தூள் உப்பு, இந்தியா