Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

நர்ஸ்கள் சுமார் மூன்று வருடங்களாக நான் ஒரு நர்ஸாக வேலை பார்க்கிறேன். நோய்களையும் வலிகளையும் நேரில் கவனிப்பது நிச்சயமாகவே சுலபமான வேலை அல்ல. “நர்ஸ்​—⁠இல்லையேல் நம் நிலை?” (டிசம்பர் 8, 2000) தொடர் கட்டுரையில், நாங்கள் செய்யும் வேலையை மற்றவர்கள் புரிந்துகொள்கிறார்கள், போற்றுகிறார்கள் என்பதை வாசித்தது தெம்பளிக்கிறது! சீக்கிரத்தில் நர்ஸ்களே தேவைப்பட மாட்டார்கள் என்று கூறும் பைபிளின் வாக்குறுதி இதைவிட அதிக உற்சாகமளிக்கிறது.​—ஏசாயா 33:⁠24.

ஜே.எஸ்.பி., பிரேஸில்

என் கணவரும் நானும் சேர்ந்து, புறநோயாளி நர்ஸிங் சர்வீஸ் ஒன்றை நடத்தி வருகிறோம். இந்தத் தொடர் கட்டுரைகள் எங்களுக்கு மிகவும் ஊக்கமளித்தன. எங்கள் தொழில் மீதும் நோயாளிகள் மீதும் எங்களுக்கிருந்த மனப்பான்மையை சரிசெய்துகொள்ள இது உதவியது. மிகச் சிறப்பான இந்தக் கட்டுரைகளுக்காக எங்கள் பாராட்டுக்கள்!

எஸ்.எஸ்., ஜெர்மனி

நர்ஸ்கள் செய்வதெல்லாம் இரண்டாம் தரமான வேலைதான் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் மனோ ரீதியிலான கஷ்டங்களைப் போக்க நர்ஸ்கள் பெரிதும் உதவுகின்றனர்; மிகவும் பிஸியாக இருக்கும் டாக்டர்களால் பெரும்பாலும் காட்ட முடியாத புரிந்துகொள்ளுதலையும் ஆதரவையும் இவர்கள் அளிக்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள இக்கட்டுரைகள் எனக்கு உதவின. இப்போது நர்ஸ் பயிற்சியில் சேர்ந்திருக்கும் என்னுடைய ‘கிளாஸ்மேட்’கள் பலருக்கு இந்தப் பத்திரிகைகளை அனுப்பி வைத்திருக்கிறேன்.

எஃப்.ஜி., இத்தாலி

புரிந்துகொள்ளுதலுடன் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகளுக்கு நன்றி. நான் பல விதங்களில் முதிர்ச்சியடைய நர்ஸ் தொழில் எனக்கு உதவி செய்திருக்கிறது. வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி சிந்திக்கவும் பைபிளை படிக்கவும் என்னை தூண்டிய அம்சங்களில் இதுவும் ஒன்று. எனக்கு இதுவரை கிடைத்த பாராட்டிலேயே மிகப் பெரிய பாராட்டை இந்த விழித்தெழு! இதழ் தந்துள்ளது. இதில் பெற்றுக் கொண்ட உற்சாகம் இன்னும் பல வருடங்களுக்கு இப்பணியைத் தொடர எனக்கு உதவும்!

ஜே.டி., செக் குடியரசு

இந்தத் தொடர் கட்டுரைகளுக்காக உங்களுக்கு நன்றி. நான் பல வருடங்களாக பதிவுபெற்ற நர்ஸாக பணிபுரிந்து வருகிறேன். நோயாளியின் இடத்தில் என்னை வைத்துப் பார்ப்பதால் அவர்களுக்கு கண்ணில் மருந்து ஊற்றினால் என் கண்களில் கண்ணீர்வரும். உலகம் முழுவதிலுமுள்ள நர்ஸ்கள் இந்த விழித்தெழு! இதழை வரவேற்பார்கள் என்று நிச்சயம் நம்புகிறேன்.

எல்.ஏ.ஆர்., ஐக்கிய மாகாணங்கள் (g01 7/8)

ஆழ்கடல்கள் “ஆழ்கடல்கள் ஆழத்திலுள்ள இரகசியங்களை அம்பலப்படுத்துகின்றன” (நவம்பர் 22, 2000) என்ற தலைப்பில் ஆங்கில இதழில் வெளிவந்த தொடர் கட்டுரைகளை இன்று நான் வாசித்தேன். இயற்கை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனால் சமுத்திரத்தின் அதலபாதாளத்தைப் பற்றி இதுவரை எனக்குத் தெரியாது. ஆம், பூமியையும் அதிலுள்ள அதிசயங்களையும் பற்றி ஒருவர் படிக்க படிக்க, ஆற்றல்மிக்க இந்தக் கிரகத்தையும் எல்லையில்லா ஞானமுள்ள அதன் படைப்பாளரையும் அதிகமதிகமாக மதிக்க வேண்டும்.

சி.எஃப்., இத்தாலி

அற்புதமாக எழுதப்பட்டிருந்த இந்தத் தொடர் கட்டுரைகளுக்காக நன்றி. குழாய் புழு போன்ற சிறு உயிரிகளை எல்லாம் ஏன் யெகோவா படைத்தார், பெரும்பாலானவர்களுக்கு இவை இருப்பதுகூட தெரியாதே என்று நான் அடிக்கடி யோசித்ததுண்டு. பூமி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற அக்கறையில் யெகோவா இந்த உயிரினங்களைப் படைத்திருக்கிறார் என்ற குறிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருக்கிருக்கும் அதே அக்கறை நமக்கும் வேண்டும்.

எச்.எஸ்., பிரிட்டன்

இந்தத் தொடர் கட்டுரைகளைப் படித்தபோது தகவலறிந்த, விவரமான விளக்கத்தைப் பெறும் போதே கடலின் அடிப்பரப்புக்கே போய் ஆழத்தின் அதிசயங்களைப் பார்ப்பது போல இருந்தது. கடவுளுடைய படைப்பில் பிரதிபலிக்கும் அவரது குணங்களை மிகவும் தெளிவாக புரிந்துகொள்ள உங்கள் கட்டுரைகள் எனக்கு உதவின.

ஜே.எம்.எம்., ஜாம்பியா (g01 7/22)

அனஸ்தீஸியா “வலிக்கு சமாதிகட்டிய அனஸ்தீஸியா” (டிசம்பர் 8, 2000) கட்டுரையில் 1840-⁠க்கு முன்னால் அனஸ்தீஸியா இல்லை என்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஸேஷூ ஹானாயோக்கா என்பவர் ஜப்பானில் 1840-⁠க்கு முன்னரே ஆபரேஷன்கள் செய்து வெற்றி பெற்றுள்ளார்.

எஸ்.ஏ., ஜப்பான்

பொதுவாக 1840-களுக்கு முன்பு மருத்துவ உலகம் அனஸ்தீஸியாவை பயன்படுத்தவில்லை. ஆனால் ஸேஷூ ஹானாயோக்கா (1760-1835) என்பவர் “மாஃபூட்சூசான்” என்ற ஒரு மயக்க மருந்தை “ஆறு மூலிகைகளை” கலந்து தயாரித்தார் என்று “கோடான்ஷா என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ஜப்பான்” சொல்கிறது. அவர் “இதை பயன்படுத்தி 1805-⁠ல் மார்பக புற்றுநோய்க்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தார். பாஸ்டனிலுள்ள மாஸசூஸெட்ஸ் பொது மருத்துவமனையில் முதல் முறையாக ஈதரை பயன்படுத்துவதற்கு 40 வருடங்களுக்கு முன்பே இதை பயன்படுத்தினார்.” அதன் பிறகு ஸேஷூ இந்த மயக்க மருந்தை பல அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தினார்.​—⁠ED.(g01 7/22)