Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காலடியில் மரணம்

காலடியில் மரணம்

காலடியில் மரணம்

“சில சமயங்களில், இரண்டு காலுமே இருப்பதாக கனவு காண்பேன். . . . பல வருடங்களுக்கு முன்பு நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே என் நண்பர்களோடு விளையாட போனேன். திடீரென்று ‘டமார்’ என்ற சப்தம் . . . என்னுடைய வலது கால் காணாமல் போனது.”

—சாங் காசல், 12, கம்போடியா.

கண்ணி வெடிகள் காரணமாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 70 பேர் ஊனமாகின்றனர் அல்லது மரிக்கின்றனர். கண்ணி வெடிகளுக்கு பலியாவோரில் பெரும்பாலானோர் இராணுவ வீரர்கள் அல்ல. மாறாக, மந்தை மேய்க்கும் ஆண்கள், தண்ணீர் கொண்டுவர செல்லும் பெண்கள், விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் என பலதரப்பட்ட பொதுமக்களையே இவை கொன்று குவிக்கின்றன. உதாரணமாக, அட்டைப்படத்தில் காணப்படும் எட்டு வயது பெண்ணான ரூக்கியா கண்ணி வெடியின் காரணமாகவே முடமானாள். அதே கண்ணி வெடி அவளுடைய மூன்று அண்ணன்களையும் அவளுடைய உறவினர் ஒருவரையும் கொன்றுவிட்டது.

கண்ணி வெடிகள் நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டு 50 வருடங்களுக்குப் பிறகும்கூட அவை ‘உயிருடன்’ இருக்கும். ஆகவே, “ஒரு யுத்தம் நடக்கும்போது கொல்லும் ஆட்களைவிட யுத்தம் முடிந்தபிறகும் ஏராளமான ஆட்களைக் கொல்லும் ஒரே ஆயுதம் இவைமட்டும்தான்” என த டிஃபென்ஸ் மானிடர் என்ற பத்திரிகை கூறுவதில் ஆச்சரியம் ஏதுமுண்டோ? உலகம் முழுவதிலும் எத்தனை கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்பது ஒருவருக்குமே தெரியாது. ஆனால் சுமார் ஆறு கோடியாக இருக்கலாம் என்று அனுமானிக்கின்றனர். அநேக கண்ணி வெடிகளை நீக்கிவருகின்றனர் என்பதும் உண்மையே. ஆனால் 1997-ல் ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கை என்ன சொன்னது தெரியுமா? “ஒரு கண்ணி வெடி நீக்கப்பட்டால் புதிதாக 20 புதைக்கப்படுகின்றன. 1994-ல் சுமார் 1,00,000 கண்ணி வெடிகள் நீக்கப்பட்டன, ஆனால் 20 லட்சம் புதிதாக புதைக்கப்பட்டுள்ளன” என்று கூறியது.

நவீனகால யுத்த வெறியர்களில் அநேகர் ஏன் கண்ணி வெடிகளையே விரும்பி உபயோகிக்கின்றனர்? அதனால் ஏற்படும் பொருளாதார, சமுதாய பின்விளைவுகள் என்ன? காயப்பட்டு பிழைப்பவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்? இந்தப் பூமியில் கண்ணி வெடிகளே இல்லாத காலம் எப்போதாவது வருமா?

[பக்கம் 3-ல் உள்ள படங்களுக்கான நன்றி]

© ICRC/David Higgs

Copyright Nic Dunlop/Panos Pictures