Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“கதம்ப தேசம்” அதன் வரலாற்று திருப்பங்கள்

“கதம்ப தேசம்” அதன் வரலாற்று திருப்பங்கள்

“கதம்ப தேசம்” அதன் வரலாற்று திருப்பங்கள்

பிரேஸிலிலிருந்து விழித்தெழு! நிருபர்

பிரேஸில்—“கதம்ப தேசம்” என அழைக்கப்படுகிறது. என்னே பொருத்தமான பெயர்! இதன் சீதோஷணமே ஒரு கதம்பம். தெற்கே இதமான வெப்பம் கதகதப்பூட்டுகிறது. வடக்கே அமேசான் பகுதியிலோ சுட்டு பொசுக்குகிறது. இதன் கதம்ப வரலாறு திடீர் திருப்பங்கள் நிறைந்தது. இந்நாட்டின் 85,11,999 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பிற்கு, பார்டர் வைத்தாற்போல் 7,400 கிலோமீட்டர் நீ()ள கடற்கரை. இங்கே பன்னாட்டு மக்கள் பல்வேறு கலாச்சாரங்களுடன் வாழ்கிறார்கள்.

500 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் பிரேஸிலில் கால் பதித்த பெருமை போர்ச்சுக்கீஸியர்களையே சாரும். இந்நாட்டு மக்களின் உபசரிப்பால் போர்ச்சுக்கீஸியர்கள் மயங்கிப்போனார்கள். 1500-ல் பேரோ வோஸ் டி கோமின்யா என்ற போர்ச்சுக்கீஸியர் அரசன் முதலாம் மானுவேலுக்கு கடிதம் எழுதினார். அதில் பிரேஸில் மக்கள் தங்களை ஆரத்தழுவி வரவேற்று, அன்யோன்யமாய் பழகியதை விவரித்தார். ஆனால் போர்ச்சுக்கீஸியருக்கு பிரேஸிலில் என்ன வேலை?

பெத்ரூ எல்வேரிஷ் கேப்ரல் என்ற போர்ச்சுக்கீஸியர் மார்ச் 9, 1500-ல், இந்தியாவிலுள்ள கோழிக்கோட்டில் ஒரு வியாபார ஸ்தலத்தை நிறுவ அநேக கப்பல்களுடன் புறப்பட்டார். ஆனால் அவர் கோழிக்கோட்டை அடைவதற்கு பதில் பிரேஸிலின் பாஹியா என்ற கடலோரத்தை ஏப்ரல் 23, 1500-ல் அடைந்தார்.

கேப்ரல் பிரேஸிலுக்கு தற்செயலாக போகவில்லை என்றும், அந்நாட்டைப் பற்றி போர்ச்சுக்கீஸியர்கள் ஏற்கெனவே அறிந்திருந்தனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். a இந்தியாவின் நறுமணப் பொருட்களிலிருந்து கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைத்த போர்ச்சுக்கீஸியர்களுக்கு பிரேஸிலில் கிடைத்த ஒரே சரக்கு பிரேஸில்-மரமே. இம்மரம் செந்நிற சாயத்திற்கு புகழ்பெற்றது. இதிலிருந்து ஓரளவே லாபம் கிடைத்திருக்கும்.

போர்ச்சுக்கல் நாடு, ஃபெர்னேன்டோ டி நோரோன்ஹா என்ற போர்ச்சுக்கீஸியருக்கு பிரேஸிலை பத்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது. அவர் போர்ச்சுக்கல் அரசுக்கு வரியை கட்டிவிட்டு, பிரேஸிலின் மரத்தை வெட்டி வியாபாரம் செய்தார். ஆனால் மற்ற ஐரோப்பிய நாடுகளும் இந்நாட்டோடு வியாபார செய்ய விரும்பின. பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெய்ன் நாட்டு மாலுமிகள் நடத்திவந்த திருட்டு வியாபாரத்தை நோரோன்ஹாவால் தடுக்க முடியவில்லை. பிரேஸில் தங்கள் கையைவிட்டே போய்விடும் என போர்ச்சுக்கல் பயந்தது. அதனால் 1532-ல் தன் நாட்டு மக்களை பிரேஸிலில் குடியேற்றியது. சர்க்கரை தயாரிப்பே பிரேஸிலில் அதிக லாபம் ஈட்டியது.

18-ம் நூற்றாண்டில் தங்கத்தையும் வைரத்தையும் வெட்டியெடுக்கும் தொழில் செழித்தோங்கியது. 19-ம் நூற்றாண்டின் துவக்கத்திற்குள், ரப்பர் மரத்திலிருந்து பாலெடுக்கும் தொழில் பொருளாதாரத்தில் பெரும் பங்கை வகித்தது. b பிரேஸில் நகரமயம் ஆனதற்கு காபி விளைச்சல் முக்கிய பங்கு வகித்தது. ரயில் பாதைகளை அமைக்கவும் ரியோ டி ஜெனிரோ மற்றும் சான்டோஸ் துறைமுகங்களை நவீன மயமாக்கவும்கூட காபி பயிரிடுதலே உதவியது. 19-ம் ஆண்டின் முடிவில், உலகின் மொத்த காபியில் பாதி பிரேஸிலிலேயே அறுவடை செய்யப்பட்டது. சாவோ பாலோ நகரம் பிரேஸிலின் பணம் புழங்கும் முக்கிய இடம்.

திருப்பங்கள் நிறைந்த பிரேஸிலின் வரலாற்றில் கரும் புள்ளியாக அமைந்தது கொத்தடிமை முறை. பிரேஸில்-மரத்தை வெட்டி கொண்டு செல்வதற்கு போர்ச்சுக்கீஸியர்கள் முதலில் செவ்விந்தியர்களையே பயன்படுத்தி வந்தனர். பிற்பாடு, கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய செவ்விந்தியர்கள் அனுப்பப்பட்டனர். வந்த ஐரோப்பியர்கள் சும்மா வராமல், தங்களோடு பல வியாதிகளையும் சுமந்து வந்தார்கள். அதனால் நூற்றுக்கணக்கான செவ்விந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்துபோன ஆட்களுக்கு ஈடுசெய்ய போர்ச்சுக்கீஸியர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை வாங்கினார்கள்.

காலப்போக்கில், லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக பிரேஸிலுக்கு கொண்டுவந்தார்கள். அடிமைகளாய் வந்த ஆப்பிரிக்கர்கள், தங்கள் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கொண்டுவந்தனர். இவற்றை பிரேஸிலின் சாம்பா என்ற புகழ்பெற்ற இசையிலும், கேபெய்ரே-விலும் (ஒரு வகை சண்டை) இன்றும் காணலாம். இவர்கள் ஃபேஸ்சுவாடு என்ற உணவையும் அறிமுகப்படுத்தினர். இது கரும் பீன்ஸில், பன்றியிறைச்சி, சாசேஜ், உலர்ந்த இறைச்சியை போட்டு தயாரிக்கப்படும் உணவு. ஒருவழியாக, 1888-ல் கொத்தடிமை முறை நின்றது. தோட்டங்களிலும் பண்ணைகளிலும் அடிமைகளாய் வேலை செய்த சுமார் 7,50,000 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

19-ம் நூற்றாண்டு முதற்கொண்டு இத்தாலியர்கள், ஸ்பானியர்கள், ஸ்விட்ஸர்லாந்து நாட்டவர், போலந்து நாட்டவர், ஜெர்மானியர்கள், ஜப்பானியர்கள், சைரோ-லெபனீஸியர்கள் என பன்னாட்டவர்கள் கோடிக்கணக்கில் பிரேஸிலில் குடியமர்ந்தனர். பிரேஸில் வாழ்வதற்கு மிகச் சிறந்த இடம். இங்கு ஏராளமான தாவர இனங்களும், விலங்கினங்களும் கதம்பம்போல் வாழ்கின்றன. பிரேஸிலில் இதுவரை இயற்கை சீற்றம்கொள்ளவில்லை. இவ்விடத்தில் போர்களோ, பூமியதிர்ச்சிகளோ, எரிமலைகளோ, புயலோ, ராட்சத அலைகளோ எழவில்லை. 500 வருடங்களுக்கு முன்பு போர்ச்சுக்கீஸியர்களை மயக்கிய உபசரிக்கும் பண்பும், இயற்கை அழகும் நம்மையும் நிச்சயம் சொக்க வைக்கும். ஆகவே, பிரேஸிலுக்கு ஒரு விஸிட் போகலாமா?

[அடிக்குறிப்புகள்]

a 1494-ம் ஆண்டு, டார்டசிலாஸ் ஒப்பந்தத்தில் போர்ச்சுக்கலும் ஸ்பெய்னும் கையெழுத்திட்டன. தென் அட்லாண்டிக்கின் மேற்கு பகுதியிலுள்ள இத்தேசத்தை பிரித்துக்கொண்டனர். ஆகவே, போர்ச்சுக்கலுக்கு உரிய இடத்தை சொந்தமாக்கிக் கொள்ளவே கேப்ரல் அங்கு சென்றார் என சிலர் சொல்கின்றனர்.

b விழித்தெழு!, மே 22, 1997, பக்கங்கள் 14-17- பார்க்கவும்.

[பக்கம் 16, 17-ன் தேசப்படம்/படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

அமேசான் பகுதி

பாஹியா நகரம்

பிரேஸிலியா

ரியோ டி ஜெனிரோ

சாவோ பாலோ

சான்டோஸ்

க்வாகு நீர்வீழ்ச்சி

[படங்கள்]

1. பெத்ரூ எல்வேரிஷ் கேப்ரல்

2. டார்டசிலாஸ் ஒப்பந்தம், 1494

3. காபி மூட்டைகளை சுமந்து செல்வோர்

4. பிரேஸிலிலிருந்து க்வாகு நீர்வீழ்ச்சியின் காட்சி

5. இஃபிஸ்யூனே இந்தியன்

[படங்களுக்கான நன்றி]

Culver Pictures

Courtesy of Archivo General de Indias, Sevilla, Spain

From the book Brazil and the Brazilians, 1857

FOTO: MOURA

[பக்கம் 18-ன் படங்கள்]

1. பிரேஸிலில் ப்யூமாக்கள் அதிகம்

2. அமேசான் காட்டிலுள்ள ஆர்க்கிட்டுகள்

3. பாஹியா, சால்வடாரின் பாரம்பரிய உடை

4. பஞ்சவர்ணக்கிளி

5. படத்தில் காணப்படுவது ரியோ டி ஜெனிரோவிலுள்ள கோப்பக்கேபெனா கடற்கரை. 7,000 கிலோமீட்டருக்கும் அதிக நீளமான அழகிய கடற்கரை பிரேஸிலில் உள்ளது

[படத்திற்கான நன்றி]

Courtesy São Paulo Zoo

[பக்கம் 19-ன் படம்]

பிரேஸிலியா—1960 முதல் பிரேஸிலின் தலைநகர்

[பக்கம் 19-ன் படம்]

சாவோ பாலோ—பிரேஸிலில் பணம் புழங்கும் இடம்

[படத்திற்கான நன்றி]

FOTO: MOURA

[பக்கம் 16-ல் உள்ள படத்திற்கான நன்றி]

© 1996 Visual Language