Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தத்தளிக்கும் பூமி!

காடுகள்

காடுகள்

காடுகள்தான் இந்தப் பூமியின் “நுரையீரல்” என்று நிறைய விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது சரிதான். ஏனென்றால் நமக்கு ஆபத்தாக இருக்கும் கார்பன் டைஆக்ஸைடை, காடுகளில் இருக்கும் மரங்கள் உறிஞ்சிக்கொள்கின்றன. அதோடு, நாம் உயிர்வாழ்வதற்கு ரொம்பத் தேவையான ஆக்ஸிஜனைக் கொடுக்கின்றன. இந்தப் பூமியில் வாழும் 80%செடிகொடிகள், மிருகங்கள் எல்லாம் காடுகளில்தான் இருக்கின்றன. அப்படியென்றால், காடுகள் இல்லாவிட்டால் நாம் இல்லை!

காடுகள்—ஆபத்தில்!

விவசாயத்துக்கு நிலம் தேவைப்படுவதால் ஒவ்வொரு வருஷமும் மனிதர்கள் கோடிக்கணக்கான மரங்களை வெட்டுகிறார்கள். 1940-களின் முடிவிலிருந்து, இந்த உலகத்தில் இருந்த 50% மழைக்காடுகள் காணாமல் போய்விட்டன.

ஒரு காடு அழிந்துவிட்டால் சுற்றுச்சூழல் நாசமாகிவிடும்; அதோடு, அதில் இருக்கும் செடிகொடிகள், அதையே நம்பியிருக்கும் மிருகங்கள் என எல்லாமே அழிந்துவிடும்.

பூமிக்கு முடிவே இல்லை

மரங்களை வெட்டி காடுகளை அழித்தால்கூட அவற்றால் மறுபடியும் வளர்ந்து பெரிய காடாக ஆக முடியும். இப்படி, காடுகள் சீக்கிரத்திலேயே செழிப்பாக வளருவதைப் பார்த்து சுற்றுச்சூழலை ஆராய்ச்சி செய்கிறவர்களே வாயடைத்துப் போயிருக்கிறார்கள். காடுகளுக்கு இருக்கும் இந்தத் திறனைப் பற்றி சில உதாரணங்களைப் பார்க்கலாம்:

  • விவசாயம் செய்வதற்காக அழித்த காடுகளை மக்கள் பிறகு அம்போவென்று விட்டுவிட்டார்கள். அந்த இடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்காவிலும் மேற்கு ஆப்பிரிக்காவிலும் அதுபோல் 2,200 நிலங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்னும் 10 வருஷங்களுக்குள் அந்த இடங்களில் இருக்கும் மண், செழிப்பான காடு உருவாவதற்கு ஏற்ற மாதிரி மாறிவிடும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

  • அழிந்துபோன அந்தக் காடுகள் இன்னும் 100 வருஷங்களில் பழைய நிலைமைக்கு மாறிவிடும், முன்புபோல் நிறைய உயிரினங்கள் அங்கே வாழ ஆரம்பித்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வதாக சைன்ஸ் பத்திரிகை சொல்கிறது.

  • பிரேசிலைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள். அழிந்துபோன காடுகளில் மனிதர்கள் புதிதாக மரங்களை நட்டு வைத்தால் அந்தக் காடுகள் வேகமாக உருவாகின்றனவா, அல்லது எதுவும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால் வேகமாக உருவாகின்றனவா என்று பார்த்தார்கள்.

  • “ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மனிதர்கள் புதிதாக மரங்களை நட்டு வைக்க அவசியம் இல்லை” என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பதாக நேஷ்னல் ஜியாகரஃபிக் பத்திரிகை சொன்னது. ஐந்தே வருஷங்களில், அவர்கள் ஆராய்ச்சி செய்த இடங்களில் மரமே நட்டு வைக்காமல் “பழையபடி ஒரு காடே உருவாகிவிட்டது.”

மனிதர்களின் முயற்சி

இருக்கிற காடுகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வதற்கும், மோசமான நிலைமையில் இருக்கும் காடுகளைச் சரிசெய்வதற்கும் உலகம் முழுவதும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இப்படிச் செய்வதால், கடந்த 25 வருஷங்களில் “உலகம் முழுவதும் காடுகள் அழிவது 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்துவிட்டது” என்று ஐ.நா. வெளியிட்ட ஒரு செய்தி சொல்கிறது.

ஆனால், காடுகளைக் காப்பாற்ற இந்த முயற்சி போதாது. “கடந்த சில வருஷங்களில் வெப்ப மண்டலங்களில் அழிந்துவரும் காடுகளின் எண்ணிக்கை ஒரே அளவில் இருக்கிறது, அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் என்ற அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கை சொல்கிறது.

அரசாங்கத்துக்குத் தெரியாமல் மரங்களை வெட்டி வியாபாரம் செய்கிறவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இந்தப் பேராசைதான், வெப்ப மண்டலங்களில் இருக்கும் காடுகள் நாசமாவதற்கு முக்கியக் காரணம்.

காடுகளைப் பராமரிக்கும் குழுக்கள், நன்றாக வளர்ந்த மரங்களில் எவ்வளவு தேவைப்படுகின்றனவோ அவற்றை மட்டும் வெட்டுகிறார்கள்; புதிய மரங்களையும் நடுகிறார்கள்.

பைபிள் என்ன நம்பிக்கை கொடுக்கிறது?

“கடவுளாகிய யெகோவா a ருசியான பழங்களைத் தரும் அழகான மரங்களை நிலத்தில் வளர வைத்தார்.”—ஆதியாகமம் 2:9.

மனிதர்கள் காடுகளை எவ்வளவு பயன்படுத்தினாலும் அவை அழிந்துபோகாமல் தொடர்ந்து நமக்கு நன்மை தரும் விதத்தில்தான் கடவுள் அவற்றை உருவாக்கியிருக்கிறார். அசர வைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள நம் சுற்றுச்சூழலையும், காடுகளையும் பாதுகாக்க வேண்டும்... பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்... என்றுதான் அவர் ஆசைப்படுகிறார்.

சுயநலமான மனிதர்கள் இந்தப் பூமியையும் அதில் இருக்கும் உயிரினங்களையும் நாசமாக்குவதற்குக் கடவுள் விடமாட்டார் என்று பைபிள் சொல்கிறது. இதைப் பற்றித் தெரிந்துகொள்ள “பூமி உயிர்வாழும் என்று கடவுள் சொல்லியிருக்கிறார்” என்ற கட்டுரையைப் பக்கம் 15-ல் பாருங்கள்.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.