நிரந்தரத் தீர்வு

நிரந்தரத் தீர்வு

முந்தின கட்டுரைகளில் சொல்லப்பட்டுள்ள ஆலோசனைகள் லட்சக்கணக்கான மக்களுக்குப் பிரயோஜனமாக இருந்திருக்கின்றன. இதயத்திலிருந்து பாகுபாட்டைப் பிடுங்கியெறிய அவர்கள் கடினமாக முயற்சி செய்திருக்கிறார்கள். எல்லா விதமான பாகுபாட்டையும் நம்முடைய சொந்த முயற்சியால் எடுத்துப்போட முடியாது என்பது உண்மைதான். அப்படியென்றால், இதற்குத் தீர்வே இல்லையா?

மிகச் சிறந்த அரசாங்கம்

மனித அரசாங்கங்களால் பாகுபாட்டை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியவில்லை. அப்படியென்றால், எந்தவொரு அரசாங்கத்தாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்று அர்த்தமா?

பாகுபாட்டை ஒழித்துக்கட்ட வேண்டுமென்றால் ஒரு அரசாங்கம் இப்படி இருக்க வேண்டும்:

  1. 1. மற்றவர்களைப் பற்றித் தவறாக யோசிக்கும் விதத்தை மாற்ற மக்களைத் தூண்ட வேண்டும்

  2. 2. மற்றவர்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்வதற்குக் காரணமாக இருக்கிற மனக் காயங்களை ஆற்ற வேண்டும்

  3. 3. குடிமக்கள் ஒவ்வொருவரையும் சமமாகப் பார்க்கிற நல்ல தலைவர்களைக் கொண்டிருக்க வேண்டும்

  4. 4. எல்லா விதமான மக்களையும் ஒரே குடும்பம்போல் ஒன்றுசேர்க்க வேண்டும்

இப்படிப்பட்ட ஒரு அரசாங்கத்தைக் கடவுள் பரலோகத்தில் ஏற்படுத்தியிருப்பதாக பைபிள் சொல்கிறது. அதுதான், ‘கடவுளுடைய அரசாங்கம்.’—லூக்கா 4:43.

அந்த அரசாங்கம் எதையெல்லாம் சாதிக்கும்?

1. தலைசிறந்த கல்வி

‘ஜனங்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.’—ஏசாயா 26:9.

“உண்மையான நீதியின் விளைவாக சமாதானம் உண்டாகும். உண்மையான நீதியின் பலனாக நிம்மதியும் பாதுகாப்பும் என்றென்றும் கிடைக்கும்.”—ஏசாயா 32:17.

இந்த வசனங்களின் அர்த்தம் என்ன? கடவுளுடைய அரசாங்கம் நீதியை, அதாவது சரியானதை, மக்களுக்குக் கற்றுக்கொடுக்கும். எது சரி எது தவறு என்பதை, அதாவது எது நீதி எது அநீதி என்பதை, கற்றுக்கொள்ளும்போது மற்றவர்களைப் பற்றிய தப்பான எண்ணத்தை மக்களால் மாற்றிக்கொள்ள முடியும். அப்போது, எல்லா விதமான மக்களிடமும் அன்பு காட்டுவதுதான் சரியானது என்பதை எல்லாரும் புரிந்துகொள்வார்கள்.

2. மனக் காயங்களுக்கு மருந்து

“அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது. முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன.”—வெளிப்படுத்துதல் 21:4.

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன? அநீதியால் ஏற்பட்ட எல்லா வேதனைகளுக்கும் கடவுளுடைய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கும். அப்போது, அநீதிக்கு ஆளானவர்களின் மனதிலிருந்த பகையெல்லாம் பறந்தோடிவிடும்.

3. மிகச் சிறந்த தலைவர்

அவர், “கண்ணால் பார்ப்பதை வைத்து தீர்ப்பு சொல்ல மாட்டார். காதால் கேட்பதை வைத்து கண்டிக்க மாட்டார். பூமியிலுள்ள ஏழைகளுக்கு நீதியோடு தீர்ப்பு வழங்குவார். தாழ்மையானவர்களின் சார்பாக ஜனங்களை நியாயமாகக் கண்டிப்பார்.”—ஏசாயா 11:3, 4.

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன? கடவுளுடைய அரசாங்கத்தின் தலைவரான இயேசு கிறிஸ்து, பூமியிலுள்ள மக்கள் எல்லாரையும் நீதியாகவும் பாரபட்சமில்லாமலும் ஆட்சி செய்வார். எல்லாவித மக்களையும் அவர் சரிசமமாக நடத்துவார். பூமியிலுள்ள எல்லாருமே அவருடைய நீதியான சட்டங்களுக்குக் கீழ்ப்படியும்படி பார்த்துக்கொள்வார்.

4. ஒற்றுமை

“பிரிவினைகள் இல்லாமல் ஒரே மனதோடும் ஒரே யோசனையோடும் முழுமையாக ஒன்றுபட்டிருக்க” மக்களுக்குக் கடவுளுடைய அரசாங்கம் கற்றுக்கொடுக்கும்.—1 கொரிந்தியர் 1:10.

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன? கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் ஒற்றுமையாக இருப்பதாக வெறுமனே உதட்டளவில் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் உண்மையான அன்பு காட்டுவதால், ‘முழுமையாக ஒன்றுபட்டிருப்பார்கள்.’