ஃபைலிஸ் லியாங் | வாழ்க்கை சரிதை
தயாராக இருந்த என்னை யெகோவா தாராளமாக ஆசீர்வதித்திருக்கிறார்
பைபிள் காலத்தில் வாழ்ந்த ரெபெக்காள், யெகோவாவுடைய விருப்பத்தை செய்வதற்காக தன் வாழ்க்கையையே மாற்றிப் போட்ட முடிவை எடுக்க தயாராக இருந்தாள். (ஆதியாகமம் 24:50, 58) நானும் ரெபெக்காள் மாதிரிதான்! அதற்காக, நான் ரொம்ப ஸ்பெஷல் என்று சொல்ல வரவில்லை. சவால்கள் நிறைய இருந்தாலும் யெகோவாவுக்கு நிறைய செய்வதற்காக எப்போதுமே தயாராக இருந்திருக்கிறேன். நான் தயாராக இருந்ததால் யெகோவா என்னை தாராளமாக ஆசீர்வதித்திருக்கிறார், அதுவும் எதிர்பாராத விதத்தில்!
முதியவர் கொண்டுவந்த முத்து
நாங்கள் குடும்பமாக தென் ஆப்பிரிக்காவில் இருக்கிற ரூடேபோர்ட் என்ற ஒரு நகரத்துக்கு மாறிப் போனோம். கொஞ்ச வருடங்களுக்கு பின்பு எங்கள் அப்பா இறந்துவிட்டார். 1947-ல் எனக்கு 16 வயதானபோது குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்காக அரசாங்க தொலைபேசி சேவை மையத்தில் முழுநேரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் வயதான ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்து காவற்கோபுர சந்தாவைப் பற்றி சொன்னார். அவருக்காக நாங்கள் சந்தா எடுத்தோம்.
பைபிளில் இருக்கிற உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்று போகப் போக எங்களுக்கே ஆர்வம் வந்துவிட்டது. எங்கள் அம்மா சின்ன வயதிலிருந்தே டச் சீர்திருத்த திருச்சபைக்கு போய்க் கொண்டிருந்தார். சர்ச்சில் சொல்லிக்கொடுக்கிற விஷயங்கள் பைபிளில் இருக்கிற விஷயங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது என்பதை இப்போது புரிந்துகொண்டார். நாங்கள் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டோம். சீக்கிரத்தில் கூட்டங்களுக்கும் போக ஆரம்பித்தோம். 1949-ல் எங்கள் குடும்பத்திலேயே நான்தான் முதலில் ஞானஸ்நானம் எடுத்தேன். அதற்கு பின்பு சில வருடங்கள் நான் வேலைக்கு போய்க்கொண்டிருந்தேன். ஆனால் யெகோவாவுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.
தேவையுள்ள இடத்தில் சேவை செய்யத் தயார்
FomaA/stock.adobe.com
கூக்ஸிஸ்டர்ஸ்
1954-ல் நான் ஒழுங்கான பயனியராக சேவை செய்ய ஆரம்பித்தேன். தேவையுள்ள இடத்தில் சேவை செய்ய ஆசைப்படுவதாக தென் ஆப்பிரிக்கா கிளை அலுவலகத்திடம் சொன்னேன். அவர்கள் என்னை பிரிடோரியா நகரத்துக்கு போகச் சொன்னார்கள் . என்னோடு சேவை செய்ய இன்னொரு பயனியர் சகோதரியையும் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் தங்கியிருந்த இடத்தில் எங்களுக்கு போதுமான வசதிகள் இருந்தன. அங்கே கூக்ஸிஸ்டர்ஸ் என்ற ஒருவகை ருசியான பிரெட் கிடைக்கும். அதை எண்ணெயில் பொரித்து... சாஸில் முக்கி... வைத்திருப்பார்கள். அதன் ருசி இன்னும் என் நாக்கிலேயே இருக்கிறது.
அதற்கு பின்பு என்னோடு இருந்த பயனியர் சகோதரிக்கு கல்யாணம் ஆனது. அதனால் கிளை அலுவலக கண்காணியான ஜார்ஜ் பிலிப்ஸ், ‘விசேஷ பயனியராக சேவை செய்ய ஆசைப்படுகிறீர்களா?’ என்று என்னிடம் கேட்டார். நான் ரொம்ப சந்தோஷமாக அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன்.
1955-ல் என்னுடைய முதல் விசேஷ பயனியர் நியமிப்பு ஹேரிஸ்மித் என்ற நகரத்தில் கிடைத்தது. என்னோடு ஒரு பயனியர் சகோதரி நியமிக்கப்பட்டார். எங்களுக்கு வீடு கிடைப்பதே பெரும்பாடாக இருந்தது. அப்படியே வீடு கிடைத்தாலும் அங்கிருக்கிற சர்ச் ஆட்கள், நாங்கள் யார் என்று தெரிந்துகொண்டு எங்களை வீட்டை விட்டு காலி பண்ணச் சொல்லி வீட்டு உரிமையாளரை கட்டாயப்படுத்த ஆரம்பித்தார்கள்.
கொஞ்ச நாளுக்கு பின்பு நான் ஜோஹெனஸ்பர்க்கில் இருக்கிற பார்க்குஸ்ட் என்ற இடத்துக்கு நியமிக்கப்பட்டேன். அங்கே இரண்டு மிஷனரி சகோதரிகளோடு சேர்ந்து ஊழியம் செய்தேன். சில நாட்களுக்கு பின்பு அதில் ஒருவருக்கு கல்யாணம் ஆனது. இன்னொருவர் வேறு இடத்துக்கு நியமிக்கப்பட்டார். அங்கே ஐலின் போர்ட்டர் என்ற ஒரு சகோதரி இருந்தார், அவர் ரொம்ப அன்பானவர். அவருடைய வீடு சின்னதாக இருந்தாலும் அவரும் அவருடைய குடும்பமும் என்னை அங்கே தங்க வைத்துக்கொண்டார்கள். அவர்களுடைய வீட்டில் ஒரு சின்ன பகுதியை மட்டும் திரைபோட்டு மறைத்து வைத்திருந்தார்கள். அங்கேதான் நான் தூங்குவேன். ஐலின் என்னிடம் ரொம்ப பாசமாக இருந்தார். எப்போதுமே ரொம்ப உற்சாகப்படுத்துவார். அவரோடு இருந்தபோது நான் எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தேன். தன்னுடைய குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்புகள் அதிகமாக இருந்தாலும் சத்தியத்தின்மேல் அவருடைய பக்திவைராக்கியம் அதை விட அதிகமாக இருந்தது. அதைப் பார்த்து நான் அசந்து போய்விட்டேன்!
சீக்கிரத்திலேயே நானும் மெர்லின் (மெர்லே) லாரன்ஸ் என்ற சகோதரியும் கிழக்கு கேப் மாகாணத்தில் இருக்கிற அளிவால் நார்த் என்ற நகரத்துக்கு நியமிக்கப்பட்டோம். அப்போது நாங்கள் இருவருமே எங்களுடைய 20-களில் இருந்தோம். அந்த சமயத்தில் டாரதி என்ற வயதான சகோதரி எங்களுக்கு உற்சாகத்தின் ஊற்றாக இருந்தார். அவரை நாங்கள் செல்லமாக டாட் ஆன்டி என்று கூப்பிடுவோம். சின்ன வயதில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது ஒருமுறை அவர் நாய்களால் வெறித்தனமாக தாக்கப்பட்டார். ஆனாலும் ஊழியத்தின்மேல் அவருக்கிருந்த ஆர்வத் தீ அணையவே இல்லை.
1956-ல் 28-வது கிலியட் பள்ளியில் கலந்துகொள்வதற்காக மெர்லே கிளம்பிப் போனாள். எனக்கும் அவளோடு கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள ரொம்ப ஆசையாக இருந்தது. அந்த சமயத்தில் டாட் ஆன்டி என்னை ரொம்ப அன்பாக பார்த்துக்கொண்டார். என்னை விட அவர் 50 வயது மூத்தவர். இருந்தாலும் அவரும் நானும் ரொம்ப நெருங்கிய நண்பர்களானோம்.
மெர்லே மாதிரியே எனக்கும் கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள அழைப்பு கிடைத்தது. நான் அப்படியே சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தேன்! அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு, நைகல் என்ற நகரத்தில் கேத்தி குக் என்ற சகோதரியோடு சேர்ந்து கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் சேவை செய்தேன். அவர் ஒரு கிலியட் பட்டதாரி. கிலியட் பள்ளி எப்படி இருக்கும் என்று அவர் சொல்லச் சொல்ல எனக்கு அங்கே போக வேண்டும் என்ற ஆசை இன்னும் அதிகமானது. ஜனவரி 1958-ல் நான் நியு யார்க்குக்குப் போனேன்.
பயிற்சி பெற தயார்
கிலியட்டில் நானும் சமோவாவை சேர்ந்த டியா அலூனி என்ற சகோதரியும், மவோரி இனத்தைச் சேர்ந்த ஐவி காவே என்ற சகோதரியும் ஒரே ரூமில் தங்கியிருந்தோம். நான் தென் ஆப்பிரிக்காவில் இருந்த சமயத்தில், அந்த அரசாங்கம் இன ஒதுக்கீட்டு முறையை பின்பற்றியதால் வெள்ளை இன மக்கள் மற்றவர்களிலிருந்து தனியாகப் பிரித்து வைக்கப்பட்டார்கள். ஆனால், இப்போது இவர்களோடு ஒன்றாக தங்கியிருந்தது எனக்கு புது அனுபவம். உலகளாவிய ஒரு பெரிய குடும்பத்தில் நானும் ஒருத்தி என்று நினைக்கும்போது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. சீக்கிரத்திலேயே நாங்கள் உயிர் நண்பர்கள் ஆகிவிட்டோம்.
எங்களுடைய கிலியட் பள்ளி போதனையாளர்களில் ஒருவர் சகோதரர் மேக்ஸ்வெல் ஃபிரெண்ட். அவருடைய பயிற்சியே ரொம்ப வித்தியாசமாக இருக்கும். அவருடைய வகுப்பறையில் மூன்று லைட் இருக்கும். அதில் “தொனி,” “வேகம்,” “வலிமை” என்று எழுதியிருக்கும். ஒரு மாணவர் பேச்சுக் கொடுக்கும் போது அல்லது நடிப்பு செய்யும் போது அவர் எந்த விஷயத்தில் குறைவுபடுகிறாரோ அதற்கான லைட்டை சகோதரர் மேக்ஸ்வெல் போடுவார். எனக்கு கூச்ச சுபாவம் ஜாஸ்தி. நான் நியமிப்பு செய்யும்போது நிறைய தடவை சகோதரர் மேக்ஸ்வெல் லைட்டை போட்டுவிடுவார். சிலசமயம் எனக்கு அழுகையாக வரும். இருந்தாலும் எனக்கு சகோதரர் மேக்ஸ்வெல்லை ரொம்ப பிடிக்கும். நான் சுத்தம் செய்யும் நியமிப்பில் பிஸியாக இருக்கும்போது அவர் எனக்கு ரொம்ப அக்கறையாக காபி கொண்டுவந்து கொடுப்பார்.
கடைசி சில நாட்களில் ‘எனக்கு எங்கே நியமிப்பு கிடைக்குமோ?’ என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். முன்பு என்னோடு பயனியர் செய்துகொண்டிருந்த மெர்லே ஏற்கனவே கிலியட்டில் பட்டம் பெற்று பெருவில் சேவை செய்துகொண்டிருந்தாள். அவளோடு இருந்த மிஷனரி சகோதரிக்கு கல்யாணம் ஆகப் போவதால் அந்த சகோதரிக்குப் பதிலாக என்னை அங்கே நியமிக்க முடியுமா என்று சகோதரர் நாரிடம் என்னை கேட்க சொன்னாள். அப்போது சகோதரர் நார் நம்முடைய வேலைகளை முன்னின்று வழிநடத்திக்கொண்டிருந்தார். கிலியட் பள்ளி நடக்கிற இடத்துக்கு அவர் அடிக்கடி வந்ததால் அவரிடம் பேசுவதும் எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது. நான் கிலியட்டில் பட்டம் பெற்ற உடனேயே பெருவுக்கு நியமிக்கப்பட்டேன்!
மலைப் பிரதேசத்தில் சேவை
1959-ல், மெர்லேயுடன் பெருவில் (வலது)
பெருவில் இருக்கிற லிமாவில் மெர்லேயுடன் மறுபடியும் இணைந்தபோது ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் ஸ்பானிஷ் மொழியை அப்போதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். இருந்தாலும் அங்கே போன உடனேயே எனக்கு முன்னேறுகிற நிறைய பைபிள் படிப்புகள் கிடைத்தன. அதற்கு பின்பு மெர்லேயும் நானும் உயர்ந்த மலைப்பகுதியான அயாகுச்சோவுக்கு நியமிக்கப்பட்டோம். அங்கே வாழ்கிற நிறைய மக்கள் கச்சுவா மொழியைத்தான் பேசினார்கள். ஆனால் எனக்கு ஸ்பானிஷ் மொழிதான் கொஞ்சம் தெரியும். அந்த இடம் கடல்மட்டத்திலிருந்து ரொம்ப உயரத்தில் இருந்தது. அங்கே ஆக்ஸிஜனும் ரொம்ப குறைவு. அதனால் அங்கே சேவை செய்வது உண்மையிலேயே ரொம்ப கஷ்டமாக இருந்தது.
1964-ல், பெருவில் சாட்சி கொடுக்கும்போது
‘அயாகுச்சோவில் நான் யெகோவாவுக்காக பெரிதாக எதுவுமே செய்யவில்லையே, இங்கே இருக்கிற நிறைய மக்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்களா?’ என்றெல்லாம் நான் யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால் இன்று அயாகுச்சோவில் 700-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். கச்சுவா மொழிக்கென்று மொழிபெயர்ப்பு அலுவலகமும் இருக்கிறது.
பின்பு, ரேமோன் கேஸ்டில்லோ என்ற ஒரு வட்டாரக் கண்காணியை மெர்லே கல்யாணம் செய்துகொண்டாள். 1964-ல் கிலியட்டில் நடந்த 10-மாத பயிற்சிக்காக ரேமோன் அங்கே சென்றார். என்னுடன் கிலியட் பள்ளியில் படித்த ஃபுலோன் லியாங் என்ற இளம் சகோதரரும் அந்தப் பயிற்சியில் கலந்துகொண்டார். அவர் ஹாங்காங்கில் சேவை செய்துகொண்டிருந்தார். இப்போது மறுபடியும் கிளை அலுவலக பொறுப்புகளுக்கான கூடுதல் பயிற்சிக்காக கிலியட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார். a அங்கே சகோதரர் ரேமோனிடம் என்னைப் பற்றி விசாரித்தார். அதற்கு பின்பு நாங்கள் கடிதங்களை எழுதிக்கொள்ள ஆரம்பித்தோம்.
இப்படி கடிதங்கள் எழுத ஆரம்பித்து கொஞ்ச நாளிலேயே இது டேட்டிங்தான் என்று ஃபுலோன் எனக்கு தெளிவாக சொன்னார். ஹாங்காங்கில் அவரோடு மிஷனரியாக சேவை செய்துகொண்டிருந்த ஹெரால்டு கிங் அடிக்கடி தபால் நிலையத்துக்குப் போவார். அதனால், ஃபுலோன் எழுதுகிற கடிதங்களை அவர்தான் எனக்கு அனுப்பி வைப்பார். அந்த லெட்டர்மேல் சின்னச் சின்ன படங்களை வரைந்து, “ஃபுலோனின் கடிதம் வரும் வரும் என்று காத்திருந்து நொந்துவிட்டாயா? அடுத்த கடிதம் விரைவில் வரும்!”என்றெல்லாம் நக்கலாக அதில் எழுதி அனுப்புவார்.
ஃபுலோனுடன்
இப்படியே நாங்கள் கிட்டத்தட்ட 18 மாதங்கள் கடிதங்கள் எழுதினோம். பின்பு கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம். பெருவில் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் சேவை செய்திருந்தேன், நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகளோடு அங்கிருந்து கிளம்பினேன்.
ஹாங்காங்கில் புதிய வாழ்க்கை
நவம்பர் 17, 1965-ல் ஃபுலோனும் நானும் கல்யாணம் பண்ணிக்கொண்டோம். இரண்டு தம்பதிகளோடு சேர்ந்து நாங்களும் ஹாங்காங்கில் இருந்த கிளை அலுவலகத்தில் தங்கியிருந்தோம். அங்கே என்னுடைய புது வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நாள் முழுவதும் ஃபுலோன் கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பு வேலைகளை செய்வார், நானோ ஊழியத்துக்கு போய்விடுவேன். அங்கே கான்டோனீஸ் மொழியை கற்றுக்கொள்வது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஆனால் என்னுடைய அன்பான கணவரும் மற்ற மிஷனரி சகோதரிகளும் எனக்கு ரொம்ப பொறுமையாக சொல்லிக்கொடுத்தார்கள். அந்த மொழியை அப்போதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததால் சின்ன பிள்ளைகளுக்கு பைபிள் படிப்பு எடுத்தது என் டென்ஷனை குறைத்தது.
1960-களில் ஹாங்காங்கில் ஆறு பேர் கொண்ட பெத்தேல் குடும்பத்தோடு. ஃபுலோனும் நானும் நடுவில்
சில வருடங்களுக்கு பின்பு ஃபுலோனும் நானும் ஹாங்காங்கில், குவன் டாங் என்ற இடத்தில் இருக்கிற மிஷனரி இல்லத்துக்கு மாறிப்போனோம். ஃபுலோன் புதிதாக வந்த மிஷனரிகளுக்கு கான்டோனீஸ் மொழியை கற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது. b அங்கே ஊழியம் செய்வதை நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன். சில நேரம் ஊழியம் செய்துகொண்டே இருக்கலாம் என்று எனக்கு தோன்றும், வீட்டுக்கு போகவே மனசு வராது.
முன்பு நாங்கள் “தேவனே சத்தியபரர்” என்ற புத்தகத்தில் இருந்துதான் பைபிள் படிப்பு நடத்தினோம். ஆனால், 1968-ல் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புது புத்தகம் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகம் கையில் கிடைத்ததும் நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். அது ரொம்பவே எளிமையாக இருந்தது. முக்கியமாக பைபிளைப் பற்றியும் கிறிஸ்தவ மதத்தை பற்றியும் தெரியாதவர்களுக்கு அதிலிருந்து படிப்பு நடத்துவது ரொம்ப ஈஸியாக இருந்தது.
என்னுடன் பைபிள் படிக்கிறவர்கள் அந்தப் புத்தகத்தில் இருக்கிற கேள்விகளுக்கெல்லாம் கரெக்ட்டாக பதில் சொல்வதால் அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்று நான் தப்புக்கணக்கு போட்டுவிட்டேன். உதாரணத்துக்கு, என்னுடைய பைபிள் மாணவர் ஒருவரோடு சத்தியம் புத்தகத்தை முழுமையாக படித்து முடித்துவிட்டேன். ஆனால் அவருக்கு இன்னமும் கடவுள் நம்பிக்கையே இல்லை என்பது எனக்கு அப்போதுதான் தெரியவந்தது. அதற்குப் பின்பு பைபிளிலிருந்து கற்றுக்கொள்கிற விஷயங்களைப் பற்றி மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களோடு கலந்துபேசி அவர்கள் மனதில் இருப்பதை புரிந்துகொள்ள முயற்சி எடுத்தேன்.
சில வருடங்கள் நாங்கள் குவன் டாங்கில் இருந்த பிறகு மறுபடியும் கிளை அலுவலகத்துக்கு மாறிப் போனோம். அங்கே ஹாங்காங் கிளை அலுவலக குழுவின் அங்கத்தினராக ஃபுலோன் சேவை செய்ய ஆரம்பித்தார். பல வருஷங்கள் நான் சுத்தம் செய்கிற வேலை செய்தேன், வரவேற்பு அறையிலும் வேலை செய்தேன். வெளியே சொல்லக் கூடாத ஆன்மீக வேலைகளுக்காக சிலசமயம் ஃபுலோன் மட்டும் போக வேண்டியிருந்தது. அவருடன் போக முடியவில்லை என்றாலும், எல்லா விதத்திலும் என்னுடைய ஆதரவை கொடுத்ததால் நான் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன்.
பாரம்பரிய மற்றும் எளிமையாக்கப்பட்ட சீன மொழியில் ஏசாயா தீர்க்கதரிசனம் தொகுதி இரண்டை ஃபுலோன் வெளியிட்டபோது
என் வாழ்க்கையை புரட்டிப் போட்ட மாற்றம்
2008-ல் ஒரே நாள் ராத்திரியில் என்னுடைய வாழ்க்கை அப்படியே மாறிவிட்டது. இயேசுவின் மரண நினைவுநாள் நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பு, வெளியூர் போயிருந்த என் அன்பான கணவர் ஃபுலோன் இறந்துவிட்டார். நான் அப்படியே உடைந்து போய்விட்டேன். எனக்கு ஆறுதல் சொல்வதற்காக சகோதர சகோதரிகள் ஓடோடி வந்தார்கள். நினைவுநாள் பேச்சு கொடுக்கப்பட்டபோது நான் அழாமல் இருக்க ரொம்ப பாடுபட்டேன். அதற்காக பேச்சில் சொல்லப்படுகிற வசனங்களை புதிதாக வந்திருந்த ஒரு பெண்ணுக்கு எடுத்துக் காட்டினேன். ஃபுலோனுக்கு ரொம்ப பிடித்த வசனங்களில் ஒன்று, “யெகோவாவாகிய நான் உன்னுடைய வலது கையைப் பிடித்திருக்கிறேன். . . . ‘நான் உனக்கு உதவி செய்வேன்.’” (ஏசாயா 41:13) அந்த வார்த்தைகள் உடைந்து போயிருந்த எனக்கு புது தெம்பு கொடுத்தது.
ஃபுலோன் இறந்து ஏழு வருடங்களுக்கு பின்பு ஹாங்காங்கில் இருந்த சகோதரர்கள் என்னுடைய உடம்பை கவனித்துக்கொள்ள தேவையான வசதிகள் இருக்கிற பெரிய கிளை அலுவலகத்துக்குப் போகச் சொன்னார்கள். அதனால் 2015-ல் தென் ஆப்பிரிக்காவில் இருக்கிற கிளை அலுவலகத்துக்கு மாறிப்போனேன். அதற்கு கொஞ்சம் பக்கத்தில் இருக்கிற இடத்தில்தான் 1947-ல் நான் முதன்முதலில் சத்தியத்தை தெரிந்துகொண்டேன்.
இத்தனை வருடங்களாக யெகோவாவுடைய சேவையில் எனக்கு கிடைத்த சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. தயாராக இருந்த என்னை யெகோவா தாராளமாக ஆசீர்வதித்திருக்கிறார். என்னோடு பைபிள் படித்தவர்கள் இப்போது யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்வதை கேள்விப்படும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஊழிய வேலைக்காக நாம் செய்கிற சின்னச் சின்ன விஷயங்களைக் கூட அவர் எவ்வளவு பெரிதாக பார்க்கிறார், அதை எந்தளவு ஆசீர்வதிக்கிறார் என்பதையெல்லாம் நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். உதாரணத்துக்கு, பெருவில் 1958-ல் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 760 ஆக இருந்தது, ஆனால் 2021-ல் அது கிட்டத்தட்ட 1,33,000-ஆக அதிகரித்தது. ஹாங்காங்கில் 1965-ல் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை வெறும் 230 ஆக இருந்தது. ஆனால் 2021-ல் அது 5,565 ஆக அதிகரித்தது.
யெகோவாவுக்கு முன்பு சேவை செய்த மாதிரி என்னால் இப்போது செய்ய முடியவில்லை. ஏனென்றால் எனக்கு வயதாகிவிட்டது. ஆனால் என் ஆர்வம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. புதிய உலகத்தில் செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கும். அதற்கு நிறைய பேர் தேவைப்படுவார்கள். அப்போது ‘நான் தயார்’ என்று இதே ஆர்வத்தோடு சந்தோஷமாக சொல்வேன்.
a ஃபுலோன் லியாங் எப்படி சத்தியத்துக்கு வந்தார் என்று தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1974-ல் (ஆங்கிலம்) பக்கம் 51-ஐப் பாருங்கள்.
b குவன் டாங்கில் ஃபுலோனுக்கு கிடைத்த ஒரு அனுபவத்தை பற்றித் தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1974-ல் (ஆங்கிலம்) பக்கம் 63-ஐப் பாருங்கள்.