Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

பெருந்தொற்றுக்கு முன்பு வெற்றிகரமாக முடிந்த கட்டுமான வேலைகள்

பெருந்தொற்றுக்கு முன்பு வெற்றிகரமாக முடிந்த கட்டுமான வேலைகள்

நவம்பர் 1, 2020

 ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான பேர் ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சியாக ஆகிறார்கள். அதனால், வழிபாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகிற கட்டடங்களும் அதிகமாகத் தேவைப்படுகின்றன. இப்படியொரு தேவை இருப்பதால், உலகம் முழுவதும் இருக்கிற உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான இலாகாக்கள், 2020 ஊழிய ஆண்டில், 2,700-க்கும் அதிகமான கட்டடங்களைக் கட்டுவதற்கோ புதுப்பிப்பதற்கோ திட்டம் போட்டிருந்தன. a

 கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தத் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. சகோதர சகோதரிகளின் பாதுகாப்பு மற்றும் அரசாங்க சட்டங்கள் ஆகியவற்றை மனதில் வைத்து ஆளும் குழுவின் பிரசுரிக்கும் குழு, பெரும்பாலான கட்டுமான வேலைகளை நிறுத்திவைத்தது. ஆனாலும் 2020 ஊழிய ஆண்டில், பெருந்தொற்றுக்கு முன்பே, 1,700-க்கும் அதிகமான கட்டடங்களைக் கட்டும் அல்லது புதுப்பிக்கும் வேலை முடிக்கப்பட்டன. அதுமட்டுமல்ல, 100-க்கும் அதிகமான பெரிய பெரிய கட்டுமான வேலைகளும் முடிக்கப்பட்டன. இதனால் சகோதர சகோதரிகள் நன்மை அடைந்திருக்கிறார்கள். எப்படி என்று தெரிந்துகொள்ள இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.

 கேமரூன் கிளை அலுவலகம். டுவாலாவில் இருந்த பழைய கிளை அலுவலகம், ரொம்ப சிறியதாகவும் வசதிகள் குறைவாகவும் இருந்தது. அதைப் புதுப்பிக்கலாமா என்று பிரசுரிக்கும் குழு யோசித்தது. ஆனால், அந்தக் கட்டடத்தின் மதிப்பைவிட அதைப் புதுப்பிப்பதற்கு ஆகும் செலவு அதிகமாக இருந்தது. அதனால், நிலத்தை வாங்கி நாமே ஒரு புதிய கட்டடத்தை கட்டுவதா அல்லது ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடத்தை வாங்கி நமக்கு ஏற்றதுபோல் புதுப்பிப்பதா என்றெல்லாம் யோசித்தார்கள். ஆனால், இந்த யோசனைகள் எதுவும் சரிப்பட்டு வரவில்லை.

 இதற்கிடையே, வடக்கு டுவாலாவில் இருக்கிற மாநாட்டு மன்றத்துக்குப் பக்கத்தில் ஒரு பெரிய சாலை வரப்போவதாக சகோதரர்கள் கேள்விப்பட்டார்கள். அந்தச் சாலை வந்துவிட்டால், போக்குவரத்து ரொம்ப சுலபமாக இருக்கும். அதோடு, அலுவலகத்துக்குத் தேவையான மின்சாரம், தண்ணீர் வசதிகளும் சுலபமாக கிடைக்கும். இந்த மாதிரி வசதிகள்தான் கிளை அலுவலகத்துக்கு ரொம்பத் தேவை. அதனால், மாநாட்டு மன்ற வளாகத்திலேயே புதிய கிளை அலுவலகத்தைக் கட்டுவதற்கு ஆளும் குழு அனுமதி கொடுத்தது.

புதிய கேமரூன் கிளை அலுவலகத்தைக் கட்டுவதற்கு சகோதர சகோதரிகள் உதவி செய்கிறார்கள்

 சகோதர சகோதரிகளும் கான்ட்ராக்ட் ஊழியர்களும் ஒன்றாகச் சேர்ந்து கட்டுமான வேலையைச் செய்தார்கள். அதனால், நிறைய நேரமும் பணமும் மிச்சமானது. நாம் எதிர்பார்த்ததைவிட ரொம்பக் குறைவாகத்தான் செலவானது. 14,73,00,000 ரூபாயைவிட அதிகமான பணத்தை நம்மால் மிச்சப்படுத்த முடிந்தது. இந்த வேலையை சீக்கிரமாக முடித்ததால், கோவிட்-19 பெருந்தொற்று ஆரம்பிப்பதற்கு முன்பே பெத்தேல் ஊழியர்களால் இந்தக் கட்டடத்துக்குக் குடிமாறிப் போக முடிந்தது.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பே கேமரூன் கிளை அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது

 இந்தப் புதிய கட்டடம், பெத்தேல் ஊழியர்கள் தங்குவதற்கும் வேலை செய்வதற்கும் ரொம்ப வசதியாக இருக்கிறது. இதை யெகோவா கொடுத்த பரிசாக அவர்கள் பார்க்கிறார்கள். “யெகோவா கொடுத்த இந்த பரிசை சாதாரணமா எடுத்துக்காம, இன்னும் நல்லா உழைக்கணும்னு நாங்க நினைக்கிறோம்” என்று அங்கு வேலை செய்யும் ஒரு தம்பதி சொல்கிறார்கள்.

பெருந்தொற்றுக்கு முன்பு சகோதர சகோதரிகள் தங்களுடைய புதிய அலுவலகத்திலிருந்து வேலை செய்கிறார்கள்

 தொஹோலபால் மொழிபெயர்ப்பு அலுவலகம், மெக்சிகோ. பல வருஷங்களாக, மெக்சிகோ நகரத்துக்குப் பக்கத்தில் இருந்த மத்திய அமெரிக்க கிளை அலுவலகத்திலிருந்து தொஹோலபால் மொழிபெயர்ப்பு குழு சேவை செய்தது. ஆனால் அந்த மொழியை, ஆல்ட்டாமிரானோ மற்றும் லாஸ் மார்காரிட்டாஸ் என்ற இடங்களில்தான் பேசினார்கள். அந்த இடங்கள் கிட்டத்தட்ட 1,000 கிலோமீட்டர் தள்ளி இருந்தன. அதனால், உள்ளூரில் இருக்கிறவர்கள் அந்த மொழியை எப்படிப் பேசுகிறார்கள் என்பதை மொழிபெயர்ப்பாளர்களால் அவ்வளவாக தெரிந்துகொள்ள முடியவில்லை. மொழிபெயர்ப்பு வேலையில் உதவி செய்வதற்கும் ஆடியோ பதிவுகளைத் தயாரிப்பதற்கும் தொஹோலபால் மொழி பேசுகிற சகோதர சகோதரிகள் தேவைப்பட்டார்கள். ஆனால், அவர்கள் கிளை அலுவலகத்துக்குப் பக்கத்தில் இல்லை.

மொழிபெயர்ப்பு அலுவலகத்தைக் கட்ட சகோதர சகோதரிகள் உதவி செய்கிறார்கள்

 இந்தக் காரணங்களால், ஆளும் குழுவின் எழுத்துக் குழு இந்த மொழிபெயர்ப்பு குழுவை தொஹோலபால் மொழி பேசுகிற ஊருக்கே மாற்ற வேண்டும் என்று நினைத்தது. அதனால், அந்த ஊரில் ஒரு கட்டடத்தை வாங்கி, அதைப் புதுப்பிக்கலாம் என்று கிளை அலுவலகம் முடிவு செய்தது. ஏனென்றால், புதிதாக ஒரு கட்டடத்தைக் கட்டுவதைவிட அல்லது ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுப்பதைவிட இதுதான் நிறைய பணத்தை மிச்சப்படுத்தும்.

 “கிளை அலுவலகத்துல 10 வருஷமா மொழிபெயர்ப்பு வேலைய நான் செஞ்சேன். ஆனா, இந்த மொழி பேசுற ஒரு குடும்பம்கூட கிளை அலுவலகத்துக்கு பக்கத்துல இல்ல. இப்போ மொழிபெயர்ப்பு அலுவலகம் இந்த மொழி பேசுற ஊருக்கே மாறி வந்திருக்கு. அதனால தொஹோலபால் மொழி பேசுற ஆட்கள தினமும் பார்க்க முடியுது. அவங்ககிட்ட நிறைய பேசவும் முடியுது. நிறைய புதுப் புது வார்த்தைகள கத்துக்கிட்டேன். மொழிபெயர்ப்பு வேலையயும் என்னால நல்லா செய்ய முடியுது” என்று ஒரு மொழிபெயர்ப்பாளர் சொன்னார்.

தொஹோலபால் மொழிபெயர்ப்பு அலுவலகம் புதுப்பிக்கப்பட்டதற்கு முன்பும் பின்பும்

2021 ஊழிய ஆண்டுக்கான கட்டுமானத் திட்டங்கள்

 2021 ஊழிய ஆண்டில், நிறைய கட்டுமான வேலைகளைச் செய்ய திட்டம் போடப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, சூழ்நிலை அனுமதித்தால், 75 மொழிபெயர்ப்பு அலுவலகங்களையும், பைபிள் பள்ளிகளுக்கான கட்டடங்களையும் கட்ட அல்லது புதுப்பிக்க திட்டம் போடப்பட்டிருக்கின்றன. எட்டு பெரிய பெரிய கட்டுமான வேலைகள் தொடர்ந்து நடக்கும். உதாரணத்துக்கு, நியு யார்க்கில் இருக்கும் ராமப்போவில் நடக்கிற கட்டுமான வேலை, அர்ஜென்டினா மற்றும் இத்தாலி கிளை அலுவலகங்களை இடமாற்றும் வேலை, மற்றும் இதுபோன்ற இன்னும் சில வேலைகளெல்லாம் நடக்கும். அதுமட்டுமல்ல, நமக்கு இன்னும் 1,000-க்கும் அதிகமான புது ராஜ்ய மன்றங்கள் தேவைப்படுகின்றன. கூட்டங்களுக்காக நாம் கூடிவரும் இடங்களில் 6,000-க்கும் அதிகமான இடங்கள் போதுமான வசதிகள் இல்லாமல் இருக்கின்றன; அதையெல்லாம் நாம் மாற்றீடு செய்ய வேண்டியிருக்கிறது. அதோடு, இன்னும் 4,000 ராஜ்ய மன்றங்கள் புதுப்பிக்கப்படவும் வேண்டியிருக்கின்றன.

 இந்த வேலைகளையெல்லாம் செய்வதற்கான பணம் எப்படிக் கிடைக்கிறது? இந்தக் கேள்விக்கான பதிலை மத்திய அமெரிக்க கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்யும் சகோதரர் லசாரோ கோன்சாலஸ் சொல்கிறார். “எங்களோட கிளை அலுவலக பகுதியில இருக்குற சகோதரர்கள் அவ்வளவா வசதி இல்லாதவங்கதான். உலகம் முழுசும் இருக்குற சகோதர சகோதரிகள் உதவி செய்யலனா, பழங்குடி இனத்த சேர்ந்த நம்ம சகோதர சகோதரிகளுக்காக மொழிபெயர்ப்பு அலுவலகத்த கட்டியிருக்கவே முடியாது. அவங்கெல்லாம் கொடுத்த நன்கொடையாலதான் மொழிபெயர்ப்பாளர்கள அந்தந்த மொழி பேசுற இடத்துக்கே மாத்த முடியுது. சகோதர சகோதரிகளோட தாராள குணத்துக்கு ரொம்ப நன்றியோட இருக்கோம்” என்று தொஹோலபால் மொழிபெயர்ப்பு அலுவலகத்தின் கட்டுமான திட்டங்களைப் பற்றிப் பேசியபோது சகோதரர் கோன்சாலஸ் சொன்னார். உலகளாவிய வேலைக்காக நீங்கள் கொடுக்கும் நன்கொடையால்தான் இதுபோன்ற கட்டுமான வேலைகளைச் செய்ய முடிகிறது. பெரும்பாலான நன்கொடைகள் donate.jw.org வழியாக நமக்குக் கிடைக்கின்றன.

a உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான இலாகாக்கள் கிளை அலுவலகப் பகுதியில் ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்குத் திட்டம் போடுகின்றன, அதைச் செயல்படுத்துகின்றன. உலகளாவிய வடிவமைப்பு/கட்டுமான இலாகா உலகத் தலைமை அலுவலகத்திலிருந்து செயல்படுகிறது. இது, உலகம் முழுவதும் நடக்கிற கட்டுமான வேலைகளுக்கான திட்டங்களைப் போடுகிறது, எதை முதலில் செய்ய வேண்டும் என்ற முடிவையும் எடுக்கிறது.