Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

2017 கிலியட் பள்ளியின் ஒரு வகுப்பு

உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

கிலியட் பள்ளி—ஒரு சர்வதேச பள்ளி

கிலியட் பள்ளி—ஒரு சர்வதேச பள்ளி

டிசம்பர் 1, 2020

 ஒவ்வொரு வருஷமும் கிலியட் பள்ளியில் கலந்துகொள்வதற்காக நிறைய நாடுகளிலிருந்து விசேஷ முழுநேர ஊழியர்கள் வருகிறார்கள். a இந்தப் பள்ளி, நியு யார்க் பேட்டர்சனில் இருக்கிற உவாட்ச்டவர் கல்வி மையத்தில் நடக்கிறது. இந்தப் பள்ளியில் கலந்துகொள்கிறவர்கள் யெகோவாவின் அமைப்பில் தங்களுக்கு இருக்கிற நியமிப்புகளை இன்னும் நன்றாகச் செய்ய கற்றுக்கொள்கிறார்கள். தங்களுக்குக் கிடைத்த பயிற்சியை நன்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சபை வேலைகளும் கிளை அலுவலக வேலைகளும் சீராக, ஒழுங்காக நடக்க உதவுகிறார்கள்.

 கிலியட் பள்ளியை ஒரு சர்வதேச பள்ளி என்று சொல்லலாம். உதாரணத்துக்கு, 2019-ல் நடந்த 147-வது கிலியட் பள்ளியில் 29 நாடுகளிலிருந்து 56 மாணவர்கள் வந்திருந்தார்கள். இந்தப் பள்ளியில் கலந்துகொள்வதற்கு முன்பு இவர்கள் எல்லாரும் விசேஷ முழுநேர ஊழியர்களாக, அதாவது பெத்தேல் ஊழியர்களாக, வட்டாரக் கண்காணிகளாக, மிஷனரிகளாக அல்லது விசேஷ பயனியர்களாகச் சேவை செய்தார்கள்.

 வகுப்பு ஆரம்பிப்பதற்கு ரொம்ப நாட்களுக்கு முன்பே அதற்கான ஏற்பாடுகளைச் சகோதரர்கள் செய்ய ஆரம்பிக்கிறார்கள். உதாரணத்துக்கு, உலகத் தலைமை அலுவலகப் பயண இலாகா (WHQ பயணம்) மாணவர்களுடைய பயணத்துக்குத் தேவையான விமான டிக்கெட்டுகளை வாங்கிவிடுவார்கள். 147-வது கிலியட் பள்ளியில் கலந்துகொண்ட ஒவ்வொரு மாணவரும் பேட்டர்ஸனுக்கு வந்து போக சராசரியாக 79,000 ரூபாய் செலவானது. சாலமன் தீவுகளில் இருக்கிற மாணவர்கள் பேட்டர்ஸனுக்கு போவதற்கு நான்கு விமானங்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. அங்கிருந்து தங்கள் ஊருக்குத் திரும்பி போக மூன்று விமானங்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. மொத்தமாக, 35,400-க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் அவர்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இப்படிப் பயணம் செய்யும் ஒரு மாணவருடைய விமான டிக்கெட்டின் விலை ஏறக்குறைய 1,69,000 ரூபாய்! பயணச் செலவை குறைக்க உலகத் தலைமை அலுவலகப் பயண இலாகா ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமைப் பயன்படுத்தி குறைந்த விலையில் டிக்கெட்டுகள் கிடைக்குமா என்று பார்க்கிறார்கள். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பிறகும், அதன் விலை இன்னும் குறைகிறதா என்று அந்த புரோகிராமைப் பயன்படுத்தி பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்படி வாரக் கணக்காக, மாதக் கணக்காககூட செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, நன்கொடையாக கிடைக்கிற தள்ளுபடி கூப்பன்களையும் பயன்படுத்தி டிக்கெட்டுகளின் விலையை இன்னும் குறைக்க முடியுமா என்று பார்க்கிறார்கள்.

 அமெரிக்காவுக்குள் நுழைய நிறைய மாணவர்களுக்கு விசாக்கள் தேவைப்படுகின்றன. இவர்களுக்கு மாணவர் விசா வாங்குவதற்கு உலகத் தலைமை அலுவலக சட்ட இலாகா உதவி செய்கிறது. இந்த விசாக்களை வாங்குவதற்கு சராசரியாக ஒவ்வொரு மாணவருக்கும் சுமார் 37,000 ரூபாய் ஆகிறது.

 இந்த மாணவர்களுக்குக் கிடைக்கிற பயிற்சியால் நாம் எப்படி நன்மையடைகிறோம்? தென்கிழக்கு ஆசியாவில் மூப்பராக சேவை செய்கிற ஹென்றா குணாவான் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். அவருடைய சபையில் கிலியட் பள்ளியில் பட்டம் பெற்ற ஒரு தம்பதி இருக்கிறார்கள். “முன்னாடியெல்லாம் எங்க சபையில ஒழுங்கான பயனியர்களே இல்ல. ஆனா, இந்த தம்பதி வந்ததுக்கு அப்புறம் அவங்ககிட்ட இருக்கிற உற்சாகத்தையும், யெகோவாவுக்கு நிறைய செய்யணுங்குற ஆசையையும் பார்த்து நிறைய பேர் பயனியர் செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. எங்க சபையில இருந்து ஒரு சகோதரியும்கூட ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில கலந்துக்கிட்டாங்க” என்று அவர் சொல்கிறார்.

 சகோதரர் செர்கியோ பஞ்ஜாய்ட்டான் தென்கிழக்கு ஆசியாவில் இருக்கிற ஒரு பெத்தேலில் சேவை செய்கிறார். கிலியட் பள்ளியில் பட்டம் பெற்ற சகோதர சகோதரிகளோடு சேர்ந்து அவர் வேலை செய்கிறார். அவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: “இந்த மாணவர்களுக்கு கிடச்ச பயிற்சினால அவங்களுக்கு மட்டுமில்ல எங்களுக்கும் ஆசீர்வாதம்தான்! ஏன்னா, அவங்க அவ்ளோ விஷயங்கள கத்துகிட்டு வந்திருக்காங்க. கிடச்ச பயிற்சிய வெச்சு அவங்களயே அவங்க பெரிய ஆளா காட்டிக்கிறது இல்ல. கத்துக்கிட்டத மத்தவங்களுக்கும் சொல்லிக்கொடுக்குறாங்க. அதனால அவங்களோட உற்சாகம் எங்களுக்கும் தொத்திக்குது; நாங்களும் மத்தவங்கள உற்சாகபடுத்துறோம்.”

 இதுபோன்ற பள்ளிகளை நடத்துவதற்கு ஆகிற செலவுகளை எப்படிப் பார்த்துக்கொள்கிறோம்? நீங்கள் கொடுக்கிற நன்கொடைகள் மூலம்தான்! அவற்றில் நிறைய நன்கொடைகள் donate.jw.org மூலம் நமக்குக் கிடைக்கிறது. நீங்கள் தாராளமாக கொடுக்கிற நன்கொடைக்கு நாங்கள் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம்.

a தேவராஜ்ய பள்ளிகள் இலாகா இந்தப் பள்ளியின் பாடத்திட்டத்தைத் தயாரிக்கிறது; தேவையான மாற்றங்களையும் செய்கிறது. இந்த இலாகா, யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் போதனாக் குழுவுடைய வழிநடத்தலின் கீழ் செயல்படுகிறது. இந்த இலாகாவில் இருக்கிற சகோதரர்கள் இந்தப் பள்ளியின் போதகர்களாக இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஆளும் குழுவின் அங்கத்தினர்களும் சில சமயங்களில் இந்தப் பள்ளியில் சொல்லிக் கொடுப்பார்கள்.