Skip to content

வாழ்க்கையை எளிமையாக்க முடிவு செய்தோம்

வாழ்க்கையை எளிமையாக்க முடிவு செய்தோம்

 மாடியன், மார்செலா தம்பதி கொலம்பியாவிலுள்ள மெடலின் நகரத்தில் சவுகரியமாக வாழ்ந்துவந்தார்கள். மாடியன் கைநிறைய சம்பாதித்தார். அதனால், அவர்கள் ரொம்ப வசதியான வீட்டில் குடியிருந்தார்கள். ஆனால், ஒரு சம்பவம் அவர்களுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. கடவுளாகிய யெகோவாவை அவர்கள் வணங்கியதால், வாழ்க்கையில் எது ரொம்ப முக்கியம் என்று யோசித்துப் பார்ப்பது அவசியம் என்பதை அது அவர்களுக்குப் புரிய வைத்தது. அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்: “2006-ல, ‘உங்கள் கண்களை எளிமையாக வையுங்கள்’ அப்படிங்கற விசேஷ மாநாட்டுல கலந்துகிட்டோம். கடவுளுக்கு இன்னும் நல்லா சேவை செய்றதுக்கு நம்ம வாழ்க்கைய எளிமையாக்குறது எவ்வளவு அவசியம்னு அந்த மாநாட்டுல அடிக்கடி சொன்னாங்க. மாநாடு முடிஞ்சப்போ, நாங்க அதுக்கு நேர்மாறா வாழ்ந்துட்டு இருந்தது நல்லா புரிஞ்சுது. கண்ணுல பட்டதையெல்லாம் நாங்க வாங்கி குவிச்சிட்டே இருந்தோம், அதனால எக்கச்சக்க கடன்ல மாட்டியிருந்தோம்.”

 அந்த மாநாட்டுக்குப் பிறகு, அவர்கள் அதிரடி மாற்றங்களைச் செய்து வாழ்க்கையை எளிமையாக்க ஆரம்பித்தார்கள். “எங்க செலவுகள எல்லாம் குறைச்சுக்கிட்டோம். ஒரு சின்ன வீட்டுக்கு குடிமாறி போனோம், காரை வித்துட்டு பைக் வாங்குனோம்” என்று அவர்கள் சொல்கிறார்கள். ஷாப்பிங் மால்களுக்குப் போனால் எதையாவது வாங்க வேண்டுமென்ற ஆசை வரும் என்பதால் அங்கு போவதையே அவர்கள் நிறுத்திவிட்டார்கள். பைபிள் விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கு அதிக நேரம் செலவு செய்தார்கள். அதோடு, விசேஷப் பயனியர்களாக a யெகோவாவுக்கு அதிக நேரம் சேவை செய்துவந்தவர்களோடு நெருங்கிப் பழகினார்கள்.

 கொஞ்ச நாளில், யெகோவாவுக்கு இன்னும் நிறைய ஊழியம் செய்ய வேண்டுமென்று மாடியனும் மார்செலாவும் நினைத்தார்கள். அதனால், கிராமப்புறத்துக்குக் குடிமாறிப் போய் அங்கிருந்த ஒரு சின்ன சபைக்கு உதவி செய்ய முடிவு செய்தார்கள். அதற்காக மாடியன் தன் வேலையை விட்டுவிட்டார். ஆனால், அவருடைய சூப்பர்வைஸருக்கு அது பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தது. அதனால் மாடியன் அவரிடம், “நீங்க கைநிறைய சம்பாதிக்கிறீங்க, ஆனா சந்தோஷமா இருக்கீங்களா?” என்று கேட்டிருக்கிறார். அந்த சூப்பர்வைஸர் ஏகப்பட்ட பிரச்சினைகளோடு திணறிக்கொண்டிருந்ததால் ‘இல்லை’ என்று சொல்லியிருக்கிறார். “அதனால, எவ்ளோ சம்பாதிக்கிறோங்கறது முக்கியமில்ல, சந்தோஷமா இருக்கோமா அப்படீங்கறதுதான் முக்கியம். கடவுள பத்தி மத்தவங்களுக்கு சொல்லித்தர்றப்போ எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் நிறைய நேரம் ஊழியம் செஞ்சு இன்னும் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்குறோம்” என்று மாடியன் சொல்லியிருக்கிறார்.

 கடவுளுடைய சேவைக்கு முதலிடம் கொடுப்பதால் இப்போது மாடியனும் மார்செலாவும் ரொம்ப சந்தோஷத்தோடும் மனநிறைவோடும் இருக்கிறார்கள். கொலம்பியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள சபைகளுக்கு அதிக உதவி தேவைப்பட்டதால் அங்கே கடந்த 13 வருஷங்களாக அவர்கள் சேவை செய்துவருகிறார்கள். இப்போது விசேஷப் பயனியர்களாக சேவை செய்யும் பாக்கியமும் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

a விசேஷப் பயனியர்கள், பைபிள் சொல்லும் நல்ல செய்தியைப் பற்றி முழுநேரமாக மற்றவர்களிடம் பேசுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் கிளை அலுவலகம் அவர்களைக் குறிப்பிட்ட சில இடங்களில் நியமிக்கிறது. அன்றாடத் தேவைகளுக்காக ஒரு சிறிய தொகை அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.