Skip to content

யெகோவாவின் சாட்சிகள் ஏன் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை?

 யெகோவாவின் சாட்சிகள் பிறந்த நாளைக் கொண்டாடாமல் இருப்பதற்கு காரணம், அது கடவுளுக்குப் பிடிக்காது என்று அவர்கள் நம்புவதால்தான். பிறந்த நாளைக் கொண்டாடக்கூடாது என்று பைபிள் நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும், கடவுள் அதை எப்படிப் பார்க்கிறார் என்று புரிந்துகொள்வதற்கு அது உதவுகிறது. அது சம்பந்தமாக நான்கு விஷயங்களை நாம் இப்போது பார்க்கலாம்.

  1.   பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பொய் மதங்களில் இருந்து வந்திருக்கின்றன. “ஒருவருடைய பிறந்த நாள் அன்று கெட்ட ஆவிகள் அவரைத் தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நல்ல நண்பர்களும் அவர்களுடைய வாழ்த்துக்களும் சுற்றி இருக்கும்போது அந்த நபர் பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் பிறந்த நாட்களைக் கொண்டாடுகிறார்கள்” என்று ஃபங்க் & வேக்நல்ஸ் ஸ்டான்டர்டு டிக்‍ஷனரி ஆஃப் ஃபோக்லோர், மித்தாலஜி அண்டு லெஜென்டு என்ற புத்தகம் சொல்கிறது. பூர்வ காலங்களில் பிறந்த நாள் பதிவுகளை வைத்திருப்பது முக்கியமாக இருந்தது. ஏனென்றால், “வான சாஸ்திரத்தின் அடிப்படையில் ஜாதகத்தைக் கணிப்பதற்கு இது அவர்களுக்கு உதவி செய்தது” என்று த லோர் ஆஃப் பர்த்டேஸ் என்ற புத்தகம் சொல்கிறது. “பிறந்த நாள் அன்று வைக்கப்படுகிற மெழுகுவர்த்திகளுக்கு விருப்பங்களை நிறைவேற்றுகிற மாய சக்தி இருப்பதாக மக்கள் நம்பினார்கள்” என்றும் இந்தப் புத்தகம் சொல்கிறது.

     மாயமந்திரம் செய்வது, குறி சொல்வது, ஆவிகளோடு தொடர்பு வைத்துக்கொள்வது “இப்படிப்பட்ட எதையும்” செய்யக்கூடாது என்று பைபிள் சொல்கிறது. (உபாகமம் 18:14; கலாத்தியர் 5:19-21) சொல்லப்போனால், அன்றிருந்த பாபிலோன் நகரத்தைக் கடவுள் அழித்ததற்கு ஒரு காரணம், அங்கிருந்த மக்கள் ஜோசியம் பார்ப்பது, குறி சொல்வது போன்ற விஷயங்களைச் செய்ததுதான். (ஏசாயா 47:11-15) ஒவ்வொரு பழக்கமும் எப்படி ஆரம்பித்தது என்பதைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் ரொம்ப ஆராய்ச்சி செய்வது இல்லை. ஆனால், பைபிள் சில தெளிவான ஆலோசனைகளைச் சொல்லும்போது அதை அவர்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கிறார்கள்.

  2.   ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. அந்தக் கிறிஸ்தவர்கள், “பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒரு பொய்மத பழக்கமாகப் பார்த்தார்கள்” என்று த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. இயேசுவிடம் நேரடியாகக் கற்றுக்கொண்ட அப்போஸ்தலர்களும் மற்றவர்களும், கிறிஸ்தவர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டினார்கள் என்று பைபிள் சொல்கிறது.—2 தெசலோனிக்கேயர் 3:6.

  3.   கிறிஸ்தவர்கள் வருஷா வருஷம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரே நாள், பிறந்த நாள் அல்ல, இறந்த நாள்தான்—அது, இயேசுவின் இறந்த நாள். (லூக்கா 22:17-20) இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால், பைபிளும்கூட “ஒருவருடைய பிறந்த நாளைவிட இறந்த நாள் நல்லது” என்று சொல்கிறது. (பிரசங்கி 7:1) இயேசு இறப்பதற்கு முன்பு கடவுளிடம் ஒரு நல்ல பெயரை சம்பாதித்திருந்தார். அதனால், அவருடைய பிறந்த நாளைவிட அவருடைய இறந்த நாள் ரொம்ப முக்கியமானதாக இருந்தது.—எபிரெயர் 1:4.

  4.   கடவுளுடைய ஊழியர்கள் பிறந்த நாளைக் கொண்டாடிய மாதிரி பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. பைபிளை எழுதியவர்கள் அந்தக் கொண்டாட்டங்களைப் பற்றி எழுத மறந்துவிட்டார்கள் என்று கிடையாது. ஏனென்றால், கடவுளை வணங்காத இரண்டு பேருடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. ஆனால், அந்த இரண்டு சம்பவங்களைப் பற்றியும் அது நல்ல விதத்தில் சொல்லவில்லை.—ஆதியாகமம் 40:20-22; மாற்கு 6:21-29.

யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் பிறந்த நாளைக் கொண்டாடாமல் இருப்பதால் எதையோ இழந்தது போல் உணருகிறார்களா?

 யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிற பெற்றோர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு வருஷத்தின் எல்லா நாட்களிலும் அன்பு காட்டுகிறார்கள். அவர்களுக்கு பரிசுகள் கொடுக்கிறார்கள், பார்ட்டிகளையும் ஏற்பாடு பண்ணுகிறார்கள். கடவுளைப் போல் நடந்துகொள்ள அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால், கடவுள் தன்னுடைய பிள்ளைகளுக்கு எப்போதும் நல்ல விஷயங்களைக் கொடுக்கிறார். (மத்தேயு 7:11) யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் எதையோ இழந்தது போல் உணரவில்லை என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன:

  •   “எதிர்பாக்காத சமயத்துல கிஃப்ட் கிடைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கும்.”​—ட்டேமி, 12 வயது.

  •   “என்னோட அப்பா அம்மா என் பிறந்த நாளுக்குனு எதும் கிஃப்ட் குடுக்கலனாலும், மத்த சமயங்கள்ல குடுப்பாங்க. எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு. ஏன்னா, அப்பதான் எனக்கு சர்ப்ரைஸா இருக்கும்.”​—கிரெகரி, 11 வயது.

  •   “கொஞ்சம் கப் கேக் வெச்சு, ஒரு பாட்டு போட்டு 10 நிமிஷம் ஆட்டம் போட்டா அதெல்லாம் பார்ட்டியா? எங்க வீட்டுக்கு வந்து பாருங்க! பார்ட்டினா என்னனு தெரியும்.”​—எரிக், 6 வயது.