Skip to content

குடும்ப ஸ்பெஷல் | கணவன்-மனைவிக்காக…

டெக்னாலஜி உங்கள் வாழ்க்கையில்

டெக்னாலஜி உங்கள் வாழ்க்கையில்

 டெக்னாலஜியால் உங்கள் திருமண வாழ்க்கையில் சந்தோஷம் பூக்கலாம் அல்லது சண்டையும் வெடிக்கலாம். இதற்கும் உங்கள் கல்யாண வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்?

 நீங்கள் என்ன தெரிந்துவைத்திருக்க வேண்டும்?

  •   டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தினால் உங்கள் கல்யாண வாழ்க்கை நன்றாக இருக்கும். உதாரணத்துக்கு, சில கணவன்-மனைவி, அவர்கள் வேலைக்காக வெளியே போகும்போது ஒருவரோடு ஒருவர் பேசுவதற்காக ஃபோனை பயன்படுத்துகிறார்கள்.

     ”ஐ லவ் யூ, உன்ன பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்னு அனுப்புற சின்ன மெசேஜ் கூட உங்க கணவன்/மனைவியை உங்களுக்கு எவ்ளோ பிடிக்கும்னு காட்டும்.“—ஜோனத்தான்.

  •   நீங்க டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் உங்கள் கல்யாண வாழ்க்கையில் பிரச்சினைகள் மட்டும்தான் இருக்கும். உதாரணத்துக்கு, சிலர் நாள் முழுவதும் ஃபோனும் கையுமாக இருப்பதால் தங்கள் கணவன்/மனைவி உடன் நேரம் செலவிட முடியாமல் போய்விடுகிறது.

     ”நிறைய நேரம் என் கணவர் என்கிட்ட பேச வருவாரு. ஆனா நான் ஃபோனே கதினு இருக்குறதுனால அவரு என்கிட்ட பேசாம போயிடுவாரு.“—ஜூலிசா.

  •   ”நான் என் ஃபோன பயன்படுத்துற அதே நேரத்துல என்னோட துணை கிட்டயும் ரொம்ப நல்லாவே பேச முடியும்” என்று சிலர் சொல்கிறார்கள். “‘ஒரே நேரத்துல நிறைய விஷயங்களை செய்ய முடியும்’ என்று சொல்லி சிலர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்“ நிறைய வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது நல்லது என்று இன்றைக்கு நிறையப்பேர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல, சொல்லப்போனால் செய்துகொண்டிருக்கிற வேலையைக்கூட சொதப்பிவிடுவார்கள்” என்று மனிதர்களின் சமூக வாழ்க்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்கிற ஷெரி டர்கிள் சொல்கிறார். a

     ”ஃபோன் நோண்டிக்கிட்டே என்னோட கணவர் என்கிட்ட பேசுனா எனக்கு சுத்தமா பிடிக்காது. அப்படி பேசுனா என்ன விட அந்த ஃபோனு தான் அவருக்கு ரொம்ப முக்கியம்னு எனக்குத் தோணும்.”—சாரா.

 என்ன கற்றுக்கொள்கிறோம்: டெக்னாலஜியை பயன்படுத்தும் விதத்தால் உங்கள் கல்யாண வாழ்க்கை வரமாகவும் மாறலாம், சாபமாகவும் ஆகிவிடலாம்.

 நீங்கள் என்ன செய்யலாம்?

 எது முக்கியம் என்று முடிவு செய்யுங்கள். பைபிள் இப்படி சொல்கிறது: “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.” (பிலிப்பியர் 1:10) உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள், ‘நானும் என்னோட துணையும் ஒன்னா இருக்குற நேரத்த என்னோட ஃபோன் பறிச்சிடுதா?’

 ”கணவனும் மனைவியும் ஹோட்டலுக்கு சாப்பிட போகும்போதுக்கூட ஃபோன நோண்டிக்கிட்டு இருக்குறத பாக்கும்போது கஷ்டமா இருக்கு. இப்படி டெக்னாலஜிக்கு அடிமையாகி வாழ்க்கையில ரொம்ப முக்கியமான உறவுகள இழந்துடுறாங்க.”—மேத்யூ.

 வரம்புகளை வையுங்கள். பைபிள் இப்படி சொல்கிறது: “நீங்கள் ஞானமில்லாதவர்களாக நடக்காமல், ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 5:15, 16) உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள், ‘எனக்கு வர எல்லா மெசேஜையும் உடனே படிக்கணும்னு நினைக்கிறேனா? இல்ல எனக்கு வர முக்கியமில்லாத மெசேஜ பொறுமையா அப்புறம் பாக்கலாம்னு நினைக்கிறேனா?’

 ”என்னோட ஃபோன சைலண்ட்ல போட்டு வைக்கிறதும் எனக்கு வசதியான நேரத்தில மெசேஜ்க்கு பதில் அனுப்புறதும் எனக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கு. உடனே பதில் கொடுக்குற மாதிரியான முக்கியமான ஃபோனோ இமெயிலோ நமக்கு அடிக்கடி வர்றது கிடையாது.“—ஜோனத்தான்.

 முடிந்தால், வேலையை வீட்டுக்குள் கொண்டு வராதீர்கள். பைபிள் இப்படி சொல்கிறது: “எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது.” (பிரசங்கி 3:1) உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய ஆபீஸை ஃபோன் மூலமா என்னோட வீட்டுக்குள்ள கொண்டு வரேனா? அப்படி கொண்டுவந்தேனா அது என்னோட குடும்பத்த எப்படி பாதிக்குது? என்னோட கல்யாண வாழ்கையை அது பாதிக்குமா? இந்த கேள்விய என்னோட கணவன்/மனைவி கிட்ட கேட்டா அவங்க என்ன சொல்லுவாங்க?’

 ”டெக்னாலஜி இருக்குறதுனால எப்போ எங்க வேணாலும் வேலை செய்ய முடியுது. நானும் என்னோட மனைவியும் ஒன்னா இருக்கும்போது அடிக்கடி ஃபோன பாக்காம இருக்குறதுக்கும் வேலை சம்பந்தமான விஷயங்கள செய்யாம இருக்குறதுக்கும் நான் ரொம்ப முயற்சி செய்ய வேண்டியிருந்தது.“—மேத்யூ.

 டெக்னாலஜியை பயன்படுத்துவதைப் பற்றி உங்கள் கணவன்/மனைவியிடம் பேசுங்கள். பைபிள் இப்படி சொல்கிறது: “ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்.” (1 கொரிந்தியர் 10:24) ஃபோனை பயன்படுத்துவதில் நீங்கள் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்று கணவன் மனைவி இரண்டு பேரும் கலந்துபேசுங்கள். இந்த கட்டுரையில் இருக்கிற, இதைப் பற்றி பேசுங்கள் பகுதியைக் கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

 ”என்னோட கணவரும் நானும் வெளிப்படையா பேசிப்போம். எங்கள்ல யாராவது ஒருத்தர் ஃபோனையோ டேப்லெட்டையோ அதிகமா பயன்படுத்துற மாதிரி தெரிஞ்சா உடனே சொல்லிடுவோம். ஏன்னா அப்படி பயன்படுத்துனா பெரிய பிரச்சனை வர்றதுக்கு வாய்ப்பிருக்குனு எங்களுக்கு தெரியும். அதனால ஒருத்தர் சொல்றத இன்னொருத்தர் கவனமா கேப்போம்.“—டேனியல்.

 என்ன கற்றுக்கொள்கிறோம்: டெக்னாலஜியை உங்கள் கைக்குள் வையுங்கள். நீங்கள் அதன் கையில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

a ரிக்லைமிங் கான்வெர்சேஷன்—தி பவர் ஆஃப் டாக் இன் டிஜிட்டல் ஏஜ் என்ற ஆங்கில புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.