Skip to content

குடும்ப ஸ்பெஷல் | திருமணம்

தம்பதிகளே, ஒன்றுசேர்ந்து நேரம் செலவிடுங்கள்

தம்பதிகளே, ஒன்றுசேர்ந்து நேரம் செலவிடுங்கள்

 கணவனும் மனைவியும் ஒன்றாக ஒரே ரூமில் இருந்தாலும்கூட ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்வதில்லை என்று நிறைய பேர் சொல்கிறார்கள். இதற்கு காரணம் என்ன?

 சேர்ந்திருந்தாலும் தனிமை—ஏன்?

  •   களைப்பாக இருப்பது

     “ஒன்றாக சேர்ந்து நேரம் செலவு செய்யலாம் என்று நினைக்கும்போதுதான் என் வீட்டுக்காரர் களைத்துப்போயிருப்பார். அல்லது, நான் களைத்துப்போயிருப்பேன்! நான் களைப்பாக உணரும்போது சின்னச்சின்ன விஷயங்கள்கூட என்னை எரிச்சல்படுத்தும். அதனால், இரண்டு பேரும் பேசாமல் உட்கார்ந்து டிவி பார்ப்பதே நல்லது என்று தோன்றும்.”—ஆனா.

  •   சோஷியல் மீடியா மற்றும் பொழுதுபோக்கு போன்ற தொல்லைகள்

     “சோஷியல் மீடியாவும் இன்டர்நெட்டில் வரும் பொழுதுபோக்குகளும் நேரத்தை எல்லாம் உறிஞ்சிவிடுகிறது. நமக்கே தெரியாமல் மணிக்கணக்காக நாம் அதிலேயே உட்கார்ந்துவிடுவோம். கணவரிடம் பேச வேண்டும் என்பதே மறந்துவிடும். ஒரே வீட்டில் இருந்தாலும் இரண்டு பேரும் தனித்தனி உலகத்தில் இருப்பதுபோல் ஆகிவிடும்.”—கேத்ரின்.

  •   வெவ்வேறு விஷயங்களில் ஆர்வம்

     “என் கணவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், தனக்கு பிடித்த சில விஷயங்களை செய்ய ஆரம்பித்துவிடுவார். அவர் கஷ்டப்பட்டு உழைப்பதால் அவருக்கு பிடித்த சில விஷயங்களை செய்வதில் தவறு இல்லைதான்! இருந்தாலும், நானும் அவரும் சேர்ந்து சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்படுவேன்.”—ஜேன்.

  •   வேலை

     “டெக்னாலஜி வளர்ந்திருப்பதால் வீட்டுக்கு திரும்பி வந்த பிறகும் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களை தொடர்ந்து செய்வதுபோல் ஆகிவிடுகிறது. என் மனைவியோடு சிரித்து சந்தோஷமாக செலவு செய்ய வேண்டிய நேரத்தில், வேலை சம்பந்தப்பட்ட ஈ-மெயில்களையும் மெசேஜ்களையும் அனுப்பிக்கொண்டிருப்பேன்.”—மாற்க்.

 நீங்கள் என்ன செய்யலாம்?

  •   துணையோடு நேரம் செலவு செய்வதை முக்கியமாக நினையுங்கள்.

     பைபிள் ஆலோசனை: “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.”—பிலிப்பியர் 1:10.

     யோசித்துப்பாருங்கள்: வேலையைவிட கல்யாண வாழ்க்கையைத்தான் முக்கியமாக நினைக்கிறீர்கள் என்பதை நீங்கள் நடந்துகொள்ளும் விதம் காட்டுகிறதா? உங்களுக்கு எது பிடிக்குமோ அதையேதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? வேலைகளையெல்லாம் செய்து முடித்துவிட்டு மிச்சம் மீதியாக இருக்கிற நேரத்தை மட்டுமே உங்கள் துணைக்கு கொடுக்கிறீர்களா?

     டிப்ஸ்: நேரம் கிடைத்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். எந்த கவனச்சிதறலும் இல்லாமல் உங்கள் துணையோடு நேரம் செலவு செய்வதற்காகவே நேரத்தை ‘பிளான்’ செய்து ஒதுக்குங்கள்.

     “நாங்கள் இரண்டு பேர் மட்டுமே சேர்ந்து செய்கிற மாதிரியான சில விஷயங்களை என்னுடைய கணவர் ‘பிளான்’ செய்வார். அவர் அப்படி செய்யும்போதெல்லாம் எனக்கு பிடிக்கும். ஏனென்றால், நான் ரொம்ப ஸ்பெஷலாக உணர்வேன். என்னோடு இருப்பது அவருக்கு பிடித்திருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. அவர் இப்படியெல்லாம் செய்யும்போது அவர்மேல் இருக்கிற காதல் இன்னும் அதிகமாகிறது.”—ஆனா.

  •   “கொஞ்ச நேரத்துக்கு என்னை தொந்தரவு பண்ணாதே” என்று உங்கள் எலெக்ட்ரானிக் சாதனங்களிடம் சொல்லுங்கள்.

     பைபிள் ஆலோசனை: “எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது.”—பிரசங்கி 3:1.

     யோசித்துப்பாருங்கள்: துணையோடு நேரம் செலவு செய்யும்போது மெசேஜோ ஈ-மெயிலோ எத்தனை தடவை உங்களுடைய கவனத்தை சிதறடிக்கிறது?

     டிப்ஸ்: ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட முடியுமா என்று பாருங்கள். அந்த சமயத்தில், உங்கள் ஃபோனை வேறொரு ரூமில் வைத்துவிடுங்கள். இப்படி சாப்பிடுகிற நேரங்களில், அந்த நாள் முழுவதும் என்ன நடந்தது என்பதை ஒருவரிடம் ஒருவர் சொல்லிக்கொள்ள முடியும்.

  •   முடிந்தபோதெல்லாம் ஒன்றாக சேர்ந்து வீட்டு வேலைகளை செய்யுங்கள்; சேர்ந்தே கடைக்கு போங்கள்.

     பைபிள் ஆலோசனை: “தனியாக இருப்பதைவிட இரண்டு பேராகச் சேர்ந்திருப்பது நல்லது. அப்போது, அவர்களுடைய கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.”—பிரசங்கி 4:9.

     யோசித்துப்பாருங்கள்: வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு எப்போதுமே நீங்கள் தனியாகத்தான் போகிறீர்களா?

     டிப்ஸ்: ‘டீமாக’ வேலை செய்யுங்கள். ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். அது ஒருவரே செய்யும் வேலையாக இருந்தாலும், இரண்டு பேராக சேர்ந்து செய்யுங்கள்.

     “சாமான் வாங்க கடைக்கு போவது, பாத்திரம் கழுவுவது, துணிகளை மடித்து வைப்பது, தோட்டத்தை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை வெறுமனே வீட்டு வேலைகளாக பார்க்காமல் உங்கள் துணையோடு நேரம் செலவு செய்வதற்கான வாய்ப்புகளாக பாருங்கள்.”—நீனா.

  •    நியாயமான எதிர்பார்ப்புகளை வையுங்கள்.

     பைபிள் ஆலோசனை: “நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும்.”—பிலிப்பியர் 4:5.

     யோசித்துப்பாருங்கள்: உங்கள் துணையிடம் அதிகமாக எதிர்பார்க்காமல் எப்படி நியாயமாக நடந்துகொள்ளலாம்?

     டிப்ஸ்: இரண்டு பேரும் கலந்துபேசுங்கள். ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை மனம்விட்டு பேசி நன்றாக புரிந்துகொள்ளுங்கள். நீங்களும் சரி, உங்கள் துணையும் சரி, இரண்டு பேருமே சந்தோஷமாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி நேரம் செலவு செய்வதற்கு திட்டம் போடுங்கள்.

     “என் கணவர் ‘டயர்டே’ ஆக மாட்டார். அவர் பயங்கர சுறுசுறுப்பாக இருப்பார். ஆனால், நான் அப்படி இல்லை. எனக்கு உடம்பு முடியாததால் நிறைய ஓய்வு எடுக்க வேண்டும் என்று தோன்றும். அதனால், ‘நீங்கள் வெளியே போய் சந்தோஷமாக உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள்’ என்று அவரிடம் சொல்வேன். அவர் வெளியே போயிருக்கும் நேரத்தில் நான் ஓய்வு எடுத்துக்கொள்வேன். அவர் வீட்டுக்கு வந்ததற்கு பிறகு நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக நேரம் செலவு செய்வோம். எங்கள் இரண்டு பேருக்குமே என்ன முடியுமோ, என்ன பிடித்திருக்கிறதோ அதை செய்வதால் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.”—டானியலா.

 யோசித்துப்பார்க்க சில கேள்விகள்

 முதலில், இதில் இருக்கும் ஒவ்வொரு கேள்வியையும் நீங்கள் தனியாக யோசித்துப்பாருங்கள். பிறகு, கணவன் மனைவியாக சேர்ந்து கலந்துபேசுங்கள்.

  •    துணையோடு நேரம் செலவு செய்யும் விஷயத்தில் நீங்கள் உங்களுக்கு எவ்வளவு மார்க் கொடுப்பீர்கள்?

  •   நேரம் செலவு செய்வதற்காக உங்கள் துணை எடுக்கும் முயற்சிகளுக்காக அவரை பாராட்டுகிறீர்களா?

  •   உங்கள் துணை இன்னும் எப்படி முன்னேறலாம் என்று நினைக்கிறீர்கள்?

  •   நீங்கள் நேரம் செலவு செய்யும்போது மெசேஜோ ஈ-மெயிலோ அடிக்கடி வந்து உங்கள் கவனத்தை சிதறடிக்கிறதா?

  •   உங்கள் துணையிடமிருந்து எதிர்பார்க்கிற சில விஷயங்களில் நீங்கள் எப்படி நியாயமாக நடந்துகொள்ளலாம்?

  •   எந்த கவனச்சிதறலும் இல்லாமல், ஒருவரோடு ஒருவர் நன்றாக நேரம் செலவு செய்ய இந்த வாரம் நீங்கள் என்ன மாற்றம் செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?