Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகிலேயே மிகப் பரவலாக விநியோகிக்கப்படும் புத்தகம்

உலகிலேயே மிகப் பரவலாக விநியோகிக்கப்படும் புத்தகம்

உலகிலேயே மிகப் பரவலாக விநியோகிக்கப்படும் புத்தகம்

“மனித வரலாற்றில் மிகப் பரவலாக படிக்கப்படும் புத்தகம் பைபிளே. . . . வேறு எந்தப் புத்தகத்தைக் காட்டிலும் பைபிளின் அநேக பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வேறு எந்தப் புத்தகத்தைக் காட்டிலும் பைபிளே அநேக தடவை, அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.”—“தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா.1

ஒருவகையில் பார்த்தால், பெரும்பாலான புத்தகங்கள் மனிதர்களைப் போலவே இருக்கின்றன. அவை தோன்றி காட்சிக்கு வருகின்றன, புகழில் ஓங்கி வளருகின்றன. பிறகு ஒருசில சிறந்த இலக்கிய புத்தகங்களைத் தவிர மற்றவை காலம்கடந்து, படிப்படியாய் மறைந்து போகின்றன. இனிமேலும் உபயோகத்தில் இல்லாத, படிக்கப்படாத, வேறுவார்த்தையில் சொன்னால் செத்துப்போன எண்ணற்ற புத்தகங்களுக்கு பெரும்பாலும் நூலகங்களே கல்லறைகள்.

ஆனால், பைபிளோ சிறந்த இலக்கிய படைப்புகளிலிருந்தும்கூட தனித்து நிற்கிறது. 3,500 வருடங்களுக்குமுன் அது எழுதப்பட ஆரம்பித்திருந்தபோதிலும், இன்றும் அது வெற்றி நடைபோடுகிறது. இதுவரை பூமியில் விநியோகிக்கப்பட்ட புத்தகத்திலேயே மிக அதிகமாய் விநியோகிக்கப்பட்ட புத்தகமாக உள்ளது. a முழு பைபிளாகவோ அல்லது பகுதிகளாகவோ ஒவ்வொரு வருடமும் சுமார் ஆறு கோடி பிரதிகள் விநியோகிக்கப்படுகின்றன. முதல் பைபிள் பதிப்பு, சுமார் 1455-ல் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜெர்மன்நாட்டு ஜோஹனஸ் கூட்டன்பர்க்கின் அச்சகத்திலிருந்து அச்சு கோர்த்து, அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. அன்றுமுதல் இன்றுவரையாக 400 கோடி பைபிள்கள் (முழுமையாகவோ பகுதியாகவோ) அச்சடிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. எந்தவொரு புத்தகமும், அது மத புத்தகமாக இருந்தாலும் சரி வேறு புத்தகமாக இருந்தாலும் சரி, எண்ணிக்கையில் பைபிளை எட்ட முடியவில்லை.

வரலாற்றிலேயே, மிகவும் அதிகளவில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகமும் பைபிளே. முழு பைபிளாகவோ அல்லது அதன் பகுதிகளாகவோ 2,100-க்கும் அதிகமான மொழிகளிலும் கிளை மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. b 90 சதவிகிதத்துக்கும் அதிமானோருக்கு, பைபிளின் பகுதியாவது அவர்களுடைய சொந்த மொழியில் கிடைக்கிறது. 2இவ்விதமாய் தேசம், இனம், சமுதாயம் என்று எல்லாவற்றையும் கடந்து எல்லா இடங்களிலும் இந்தப் புத்தகம் பரவிக்கிடக்கிறது.

நீங்கள் பைபிளை ஆராய்ந்து பார்க்க அதன் புள்ளிவிவரம் மட்டும் போதுமான உந்துதலை ஒருவேளை அளிக்காது. இருந்தாலும், அதன் விநியோகிப்பும், மொழிபெயர்ப்பு எண்ணிக்கையும் திகைக்கவைக்கின்றன. இவை சர்வதேச அளவில் பைபிளுக்கு இருக்கும் மதிப்பை பறைசாற்றுகின்றன. மனித வரலாற்றிலேயே அதிகமாக விற்பனையாகும், அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் புத்தகம், நீங்கள் ஆராய்ந்து பார்க்க நிச்சயம் தகுதியானதே.

[அடிக்குறிப்புகள்]

a மா சே-துங்கின் இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் என்ற (Quotations From the Works of Mao Tse-tung) சிவப்பு நிற அட்டையைக் கொண்ட சிறுபுத்தகமே (ஆங்கிலம்) பைபிளுக்கு அடுத்து அதிக அளவில் விநியோகிக்கப்பட்ட புத்தகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் பிரதிகள் சுமார் 80 கோடி விற்கப்பட்டுள்ளன அல்லது விநியோகிக்கப்பட்டுள்ளன.

b மொழிகளின் எண்ணிக்கை, யுனைட்டெட் பைபிள் சொஸைட்டியால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

[பக்கம் 6-ன் படம்]

கூட்டன்பர்க்கின் லத்தீன் பைபிள்தான் அச்சு கோர்த்து அச்சடிக்கப்பட்டு முழுமையாக வெளிவந்த முதல் புத்தகம்