Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிசாசைக் கடவுள் படைத்தாரா?

பிசாசைக் கடவுள் படைத்தாரா?

வாசகரின் கேள்வி

பிசாசைக் கடவுள் படைத்தாரா?

▪ ‘எல்லாவற்றையும் கடவுள் படைத்தார்’ என்று பைபிள் சொல்வதால், பிசாசையும் அவர்தான் படைத்திருக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள். (எபேசியர் 3:9; வெளிப்படுத்துதல் 4:11) ஆனால், பிசாசைக் கடவுள் படைக்கவில்லை என்று பைபிள் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.

யெகோவாவால் படைக்கப்பட்ட ஒருவன் பிற்காலத்தில் பிசாசாகவும் அவருடைய முக்கிய எதிரியாகவும் மாறினான். அவன் எப்படித் தோன்றினான் என்பதைத் தெரிந்துகொள்வதற்குமுன் படைப்பாளராகிய யெகோவாவைப் பற்றி பைபிள் சொல்வதைப் பார்ப்போம். “அவரது செயல்கள் பரிபூரணமானவை! ஏனென்றால், அவரது வழிகள் எல்லாம் சரியானவை! தேவன் உண்மையும் சத்தியமும் உள்ளவர். அவர் நீதியும் செம்மையுமானவர்.” (உபாகமம் 32:3-5, ERV) எனவே, பரிபூரணமானவற்றைப் படைத்த கடவுள் மோசமானவனான சாத்தானைப் படைத்திருப்பாரா? இந்த வசனத்திலிருந்து இன்னொன்றையும் தெரிந்துகொள்கிறோம்: சாத்தான் ஒரு காலத்தில் பரிபூரணமானவனாக, நீதிமானாக இருந்தான்; அதாவது, கடவுளுடைய பரலோகக் குமாரர்களில் ஒருவனாக, ஒரு தேவதூதனாக, இருந்தான். யோவான் 8:44-ல், “சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை” என்று இயேசு சொன்னபோது, ஒரு சமயத்தில் சாத்தான் உண்மையுள்ளவனாக, குற்றமற்றவனாக இருந்தான் என்று அர்த்தப்படுத்தினார்.

என்றாலும், யெகோவாவின் புத்திக்கூர்மையுள்ள மற்ற படைப்புகளுக்கு இருந்ததைப் போலவே, சாத்தானுக்கும் நல்லது கெட்டதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால், கடவுளுக்கு எதிரான ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்ததன் மூலமும், முதல் மனிதத் தம்பதியை தன்னோடு கூட்டுச் சேர்த்துக்கொண்டதன் மூலமும் அவன் தன்னையே சாத்தானாக, அதாவது ‘எதிரியாக’ மாற்றிக்கொண்டான்.—ஆதியாகமம் 3:1-5.

இந்தப் பொல்லாத தூதன் தன்னையே பிசாசாகவும், அதாவது ‘பழிதூற்றுபவனாகவும்’ மாற்றிக்கொண்டான். படைப்பாளர் தெளிவாகக் கொடுத்திருந்த சட்டத்தை மீறும்படி அந்தப் பாம்புக்குப் பின்னாலிருந்து பொய்சொல்லி, ஏவாளை வஞ்சகமாக ஏமாற்றியதும் சாத்தானே. அதனாலேயே சாத்தானை ‘பொய்க்குத் தகப்பன்’ என்று இயேசு அழைத்தார்.—யோவான் 8:44.

ஆனால், இந்தத் தேவதூதன் பரிபூரணமாக இருந்தான்; அதாவது, அவனிடம் எந்த பலவீனமும் இருக்கவில்லை, தவறு செய்ய யாருமே அவனைத் தூண்டவும் இல்லை, அப்படியிருக்க அவன் ஏன் தவறு செய்ய நினைத்தான்? கடவுளுக்கே உரிய வணக்கம் தனக்குக் கிடைக்க வேண்டும் என்ற பேராசை அவனுக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது; எனவே, யெகோவாவுடைய ஆட்சியின் கீழிருந்த மனிதர்களைத் தன்னுடைய ஆட்சியின்கீழ் கொண்டுவருவதற்கான வாய்ப்பு இருப்பதைப் புரிந்துகொண்டான். ஆட்சிசெய்ய வேண்டும் என்ற ஆசையை முளையிலேயே கிள்ளியெறிவதற்குப் பதிலாக அது விருட்சமாக வளரும்வரை அந்த ஆசையிலேயே திளைத்தான். கடைசியில் அதை அடைவதற்கான முயற்சியில் இறங்கினான். இப்படி மனதிற்குள் வேர்விடும் ஆசையைக் குறித்து யாக்கோபு புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “ஒவ்வொருவனுடைய கெட்ட ஆசைதான் அவனைக் கவர்ந்திழுத்து, சிக்க வைத்து, சோதிக்கிறது. பின்பு அந்த ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது; பாவம் கடைசியில் மரணத்தை விளைவிக்கிறது.”—யாக்கோபு 1:14, 15; 1 தீமோத்தேயு 3:6.

இதை நன்கு புரிந்துகொள்ள இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒரு கம்பெனியில் ஒருவர் வரவுசெலவு கணக்குகளைக் கவனிக்கும் ‘அக்கௌண்டன்டாக’ வேலை செய்கிறார். பொய் கணக்கு எழுதி பணத்தைக் கையாடல் செய்வதற்கான ஒரு வாய்ப்பு இருப்பதை அவர் பார்க்கிறார். அந்த எண்ணம் துளிர்விடும்போதே அவர் அதைக் கிள்ளியெறிந்திருக்கலாம். அதற்குப் பதிலாக, அந்தப் பணத்தை எப்படிக் கையாடலாம், அதை வைத்து எப்படிச் சொகுசாக வாழலாம் என்றே நினைத்துக்கொண்டிருந்தால் அந்தப் பணத்தை அவர் திருட வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை அவர் அப்படித் திருடிவிட்டால் அவர் தன்னையே திருடனாக ஆக்கிக்கொள்கிறார். அதோடு, அந்தத் திருட்டை அவர் மறுத்தால் பொய்யனாகவும் ஆகிறார். இப்படித்தான் அந்தத் தேவதூதனும் தவறான ஆசைகளைத் தனக்குள் வளரவிட்டு, அதன்படி செயல்பட்டான். சுயமாகத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தன் தகப்பனுக்கு எதிராகக் கலகம் செய்தான். அதனால், சாத்தானாகவும் பிசாசாகவும் தன்னை மாற்றிக்கொண்டான்.

ஆனால், பிசாசாகிய சாத்தானைக் கடவுள் குறித்த காலத்தில் அழிக்கப் போகிறார். (ரோமர் 16:20) இதற்கிடையில், தம்முடைய மக்களுக்குச் சாத்தானின் தந்திரங்களைத் தெரிவிப்பதோடு அவனுடைய சூழ்ச்சிகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கிறார். (2 கொரிந்தியர் 2:11; எபேசியர் 6:11) எனவே, “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.”—யாக்கோபு 4:7. (w11-E 03/01)

[பக்கம் 21-ன் சிறுகுறிப்பு]

ஒரு பரிபூரண தேவதூதன் கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டு தன்னையே சாத்தானாக மாற்றிக்கொண்டான்