Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கலிலேயாவில் உள்ள பிரியா காடு

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

பைபிளில் சொல்லியிருப்பது போல் பூர்வ இஸ்ரேலில் அடர்ந்த காடுகள் இருந்ததா?

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் இருந்த சில இடங்களில் அடர்ந்த காடுகளும் நிறைய மரங்களும் இருந்ததாக பைபிள் சொல்கிறது. (1 இரா. 10:27; யோசு. 17:15, 18) ஆனால், அங்கிருந்த காடுகளையும் மரங்களையும் மக்கள் இன்று அழித்துவிட்டார்கள். அதனால், பூர்வ இஸ்ரேலைப் பற்றி பைபிளில் சொல்லியிருக்கும் விஷயம் உண்மைதானா என்று சந்தேகவாதிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

கொத்துக் கொத்தாக இருக்கும் காட்டத்தி பழங்கள்

“இஸ்ரேலில், இன்று இருப்பதைவிட அன்று காடுகள் அதிகமாக படர்ந்து விரிந்து இருந்தன” என்று லைஃப் இன் பிப்ளிக்கல் இஸ்ரேல் (Life in Biblical Israel) என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. அங்கிருந்த உயரமான பகுதிகளில் நிறைய தேவதாரு மரங்களும் (பைனஸ் ஹலபென்ஸிஸ்) ஓக் மரங்களும் (க்யூர்கஸ் கல்லிப்ரைனோஸ்) கர்வாலி மரங்களும் (பிஸ்டாசியா பாலஸ்டீனா) இருந்தன. மத்திய மலைத்தொடருக்கும் மத்தியதரைக் கடலோர பகுதிக்கும் இடையில் இருந்த மலை அடிவாரத்தில் நிறைய காட்டத்தி மரங்களும் (ஃபிகஸ் சிகோமோரஸ்) இருந்தன.

இன்று, இஸ்ரேலில் இருக்கும் சில இடங்களில் காடுகள் முழுமையாக அழிக்கப்பட்டு இருப்பதாக ப்ளான்ட்ஸ் ஆஃப் தி பைபிள் (Plants of the Bible) என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. இதற்கு காரணம் என்ன? ‘விறகுக்காகவும், விவசாயத்துக்காகவும், மந்தைகளை மேய்ப்பதற்காகவும், கட்டிடங்களைக் கட்டுவதற்காகவும் மனிதன் அவற்றைப் படிப்படியாக அழித்துவிட்டான்’ என்று அந்தப் புத்தகம் சொல்கிறது.